Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் அம்மா அப்பாவைப் பற்றி நான் எப்படி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்?

என் அம்மா அப்பாவைப் பற்றி நான் எப்படி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்?

இளைஞர் கேட்கின்றனர்

என் அம்மா அப்பாவைப் பற்றி நான் எப்படி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்?

ஜெஸிக்காவும் அவளுடைய அம்மா அப்பாவும் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ஜெஸிக்காவின் அம்மாவிடம், “நான் யாரைப் பார்த்தேன் தெரியுமா? நீ ஸ்கூலில் படிக்கும்போது காதலித்துக் கொண்டிருந்தாயே, ரிச்சர்ட், அவனைத்தான்” என்று சொல்கிறார்.

ஜெஸிக்காவுக்கு ஒரே அதிர்ச்சி. ரிச்சர்ட்டைப் பற்றி அவள் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

“என்னது! அப்பாவைக் காதலிக்கும் முன்பு நீங்கள் வேறொருவரைக் காதலித்தீர்களா? அம்மா, இதைப் பற்றி நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே!”

உங்கள் அம்மா அப்பாவைப் பற்றிய ஏதாவது விஷயத்தைக் கேள்விப்பட்டு நீங்களும் ஜெஸிக்காவைப் போல அதிர்ச்சி அடைந்ததுண்டா? அப்படியென்றால், “இன்னும் எனக்குத் தெரியாதது என்னென்னவெல்லாம் இருக்கிறதோ?” என்று நீங்கள் யோசித்திருக்கலாம்.

உங்கள் அம்மா அப்பாவைப் பற்றி இன்னும் முழுமையாக உங்களுக்குத் தெரியாதென்று ஏன் சொல்லலாம்? அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதால் என்ன நன்மைகளைப் பெறலாம்? அவர்களைப் பற்றி எப்படி அதிகம் தெரிந்துகொள்ளலாம்?

தெரிந்துகொள்ள அதிகம் இருக்கிறது

உங்கள் அம்மா அப்பாவைப் பற்றிய சில விஷயங்கள் ஏன் உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்? சில சமயங்களில், அவர்கள் வேறொரு ஊரில் வசிக்கலாம். “எனக்கு எட்டு வயதாக இருந்தபோது என் அம்மா அப்பா விவாகரத்து செய்துகொண்டார்கள். அதன் பிறகு, என் அப்பாவை வருடத்தில் ஒருசில தடவைதான் பார்க்க முடிந்தது. அவரைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று 22 வயதான ஜேக்கப் * சொல்கிறான்.

உங்கள் அம்மா அப்பாவுடன் நீங்கள் நீண்ட காலம் வசித்து வந்தாலும் அவர்கள் தங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையுமே உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏன்? நம் எல்லாரையும் போலவே அவர்களும் தாங்கள் முன்பு செய்த தவறுகளைப் பற்றிச் சொல்ல சில சமயங்களில் தர்மசங்கடப்படலாம். (ரோமர் 3:23) அதோடு, அவர்களுடைய தவறுகளைப் பற்றி சொன்னால் எங்கே நீங்கள் அவர்களை மதிக்காமல் போய்விடுவீர்களோ என்று பயப்படலாம்; அல்லது, உங்கள் இஷ்டம்போல் நடக்கத் துணிந்துவிடுவீர்களோ என்று அஞ்சலாம்.

சில விஷயங்களைப் பெற்றோர் உங்களிடம் ஏன் சொல்லாமல் இருந்திருக்கலாம்? அதைப் பற்றிய பேச்சை எடுப்பதற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. காமரன் என்ற வாலிபன் இவ்வாறு சொல்கிறான்: “பெற்றோர்களுடன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் எத்தனையோ இருப்பது ஆச்சரியமான விஷயம்!” ஆகவே, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் ஏன் முயற்சி எடுக்கக் கூடாது? அதனால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்; அவற்றில் நான்கை இப்போது சிந்திப்போம்.

நன்மை #1: பெற்றோர்மீது நீங்கள் ஆர்வம் காட்டுவதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள நீங்கள் ஆசைப்படுவதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதன் பிறகு, உங்களையும் உங்கள் உணர்வுகளையும் அவர்கள் இன்னும் நன்கு புரிந்துகொள்ளவும் ஆரம்பிக்கலாம்.—மத்தேயு 7:12.

நன்மை #2: உங்கள் பெற்றோரின் கண்ணோட்டத்தை நன்கு புரிந்துகொள்வீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் அம்மா அப்பா ஒருசமயம் பணக் கஷ்டத்தில் இருந்தார்களா? அவர்கள் ஏன் இப்போது சிக்கனமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவலாம். ‘அவசியமே இல்லாமல் ஏன்தான் இப்படிக் கஞ்சத்தனமாக இருக்கிறார்களோ’ என்ற உங்கள் எண்ணத்தையும் மாற்றிவிடலாம்.

இப்படி உங்கள் அம்மா அப்பாவின் மனதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாய் இருக்கலாம். கோடி என்ற இளைஞன் இவ்வாறு சொன்னான்: “என் அம்மா அப்பாவின் மனதைப் புரிந்துகொண்டிருப்பதால் நான் பேசுவது அவர்களை எப்படிப் பாதிக்கும் என்பதை யோசித்துப் பேச முடிகிறது.”—நீதிமொழிகள் 15:23.

நன்மை #3: நீங்களும் உங்களைப் பற்றி மனம்விட்டுப் பேச ஆரம்பிப்பீர்கள். 18 வயது ப்ரிஜெட் இவ்வாறு சொல்கிறாள்: “என் மனதுக்குப் பிடித்த ஒரு பையனைப் பற்றி என் அப்பாவிடம் பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், நான் பேச ஆரம்பித்ததும் அவர் தன்னுடைய முதல் காதல் அனுபவத்தைப் பற்றியும் அப்போது அவர் அடைந்த சந்தோஷத்தைப் பற்றியும் சொன்னார். பிறகு, தன் காதலியைவிட்டுப் பிரிந்த தினத்தைப் பற்றியும் அவர் மனம் சுக்குநூறான விதத்தைப் பற்றியும் சொன்னார். அதையெல்லாம் கேட்டபோது என் மனதிலிருந்ததை அவரிடம் பேசுவது சுலபமாகிவிட்டது.”

நன்மை #4: நீங்கள் பாடம் படிக்கலாம். உங்கள் அம்மா அப்பாவின் அனுபவங்களிலிருந்து நீங்கள் படிக்கும் பாடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் ஏமாற்றங்களையும் சவால்களையும் சமாளிக்க உதவலாம். 16 வயது ஜோஷூவா இவ்வாறு சொல்கிறான்: “எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்; எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருந்தன. ஆனாலும் என் அம்மா அப்பா எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள், எங்கள் மனதைப் புரிந்து நடந்துகொண்டார்கள், கடவுள் பக்தியையும் ஊட்டி வளர்த்தார்கள். இதையெல்லாம் எப்படித்தான் செய்தார்களோ என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவர்களிடமிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.” பைபிள் இவ்வாறு சொல்கிறது: “முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.”—யோபு 12:12.

முயற்சி எடுங்கள்

உங்கள் அம்மா அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் என்ன செய்யலாம்? இதோ சில ஆலோசனைகள்:

சரியான சூழலைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் அம்மா அப்பாவிடம் சீரியஸாக உட்கார்ந்து பேச வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரணமாக உரையாடும்போதுகூட அவர்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, அவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது, வேலை செய்யும்போது, நடக்கும்போது, அல்லது பயணம் செய்யும்போது பேசலாம். முன்னர் குறிப்பிடப்பட்ட கோடி இவ்வாறு சொல்கிறான்: “என் அம்மா அப்பாவுடன் சேர்ந்து தொலைதூரம் பயணம் செய்த சமயங்களில் அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பேச முடிந்தது. உண்மைதான், இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பதோ தூங்கிவிடுவதோ சௌகரியமாகத் தெரியலாம்; ஆனால், பேசுவதற்கு முயற்சி எடுத்தால் எப்போதுமே நல்ல பலன்கள் கிடைக்கும், இது என் அனுபவம்.”

கேள்விகளைக் கேளுங்கள். ஓர் உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்: சரியான சூழலில்கூட, உங்கள் அம்மா தன்னுடைய முதல் காதல் அனுபவத்தைப் பற்றித் திடீரென உங்களிடம் சொல்ல மாட்டார்; அதுபோல் உங்கள் அப்பாவும் தான் எப்படி காரைப் பாழ்ப்படுத்தினாரென தானாகவே சொல்ல மாட்டார். ஆனால், நீங்கள் அவர்களிடம் கேட்டால் அவர்கள் அதைப் பற்றியெல்லாம் சொல்லலாம்!—என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதற்கான ஆலோசனைகளுக்கு  பக்கம் 12-லுள்ள பெட்டியைப் பாருங்கள்.

வளைந்துகொடுங்கள். பொதுவாக, அவர்கள் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். “சுத்திவளைக்காமல் விஷயத்துக்கு வாங்க” என்று சொல்ல உங்களுக்கு வாய் வரலாம்; ஆனால், அப்படிச் சொல்லிவிடாதீர்கள்! இதை நினைவில் வையுங்கள்: தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் அல்ல; மாறாக, உங்கள் அம்மா அப்பாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே உங்கள் குறிக்கோள். இதற்கு, அவர்கள் பேச விரும்பும் விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பேசுவது ஒரு சிறந்த வழியாகும்.—பிலிப்பியர் 2:4.

விவேகமாகப் பேசுங்கள். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.” (நீதிமொழிகள் 20:5) உங்கள் அம்மா அப்பா பேசத் தயங்கும் விஷயங்களைப் பற்றி அவர்களைப் பேச வைப்பதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவை புத்தி, அதாவது விவேகம். உதாரணத்திற்கு, உங்களுடைய அப்பா உங்கள் வயதில் இருந்தபோது என்ன தவறுகளைச் செய்து அவமானப்பட்டாரென்றும், அதே சூழ்நிலைகளைத் திரும்பவும் எதிர்ப்பட நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பாரென்றும் கேட்டுத் தெரிந்துகொள்ள நீங்கள் துடிக்கலாம். ஆனால் முதலில், “நீங்கள் தப்பாக நினைக்க மாட்டீர்களென்றால், உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா?” என்று ஆரம்பியுங்கள்.

சாதுரியமாய் நடந்துகொள்ளுங்கள். உங்கள் அம்மா அப்பா மனந்திறந்து பேசுகையில், “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும்” இருங்கள். (யாக்கோபு 1:19) ஆனால், எக்காரணத்தைக் கொண்டும், அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்டுவிட்டு அவர்களைக் கிண்டல் செய்யாதீர்கள் அல்லது நோகடிக்காதீர்கள். “நீங்களா அப்படிச் செய்தீர்கள், என்னால் நம்பவே முடியவில்லை” என்றோ “ஓ, அதனால்தான் என்னிடம் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறீர்களா?” என்றோ சொல்லாதீர்கள். அதோடு, உங்கள் அம்மா அப்பா சொல்கிற விஷயங்களை மூன்றாவது நபரிடம் சொல்லாதீர்கள். இப்படியெல்லாம் செய்தீர்களென்றால், அதற்குமேல் அவர்கள் மனந்திறந்து பேசவே மாட்டார்கள்.

காலம் கடந்துவிட்டதென நினைக்காதீர்கள்!

உங்கள் அம்மா அப்பாவுடன் வசிக்கும் காலத்தில் அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம். ஆனால், இப்போது நீங்கள் அவர்களுடன் வசிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அதே நியமங்கள், மீண்டும் அவர்களுடன் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவலாம்; ஒருவேளை, இதுவரை அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே இல்லையென்றால் இனி தெரிந்துகொள்ள ஆரம்பிப்பதற்கும் உதவலாம். முன்பு குறிப்பிடப்பட்ட ஜேக்கப் அதைத்தான் அனுபவத்தில் கண்டிருக்கிறான். இப்போது அவன் தனியாக வசிக்கிறபோதிலும், “சமீப காலத்தில் என் அப்பாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன், எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது” என்று சொல்கிறான்.

நீங்கள் அம்மா அப்பாவுடன் வசித்தாலும் சரி தனியாக வசித்தாலும் சரி, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள காலம் கடந்துவிட்டதென நினைக்காதீர்கள். அதைச் செய்வதற்கு, இந்தக் கட்டுரையிலுள்ள ஆலோசனைகளை நீங்கள் ஏன் முயன்று பார்க்கக்கூடாது? (g09 10)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிந்திப்பதற்கு

◼ இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள என்ன விஷயங்களைப் பற்றி உங்கள் அம்மா அப்பாவிடம் கேட்க விரும்புகிறீர்கள்?

◼ உங்கள் அம்மா அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது எப்படி உங்களையே நன்றாகப் புரிந்துகொள்ள உதவலாம்?

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

  இதுபோன்ற கேள்விகளை உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்:

திருமணம்: நீங்கள் முதன்முதலில் அம்மாவை (அல்லது அப்பாவை) எப்படிச் சந்தித்தீர்கள்? எதனால் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தீர்கள்? கல்யாணமான புதிதில் நீங்கள் எங்கே குடியிருந்தீர்கள்?

பிள்ளைப் பருவம்: நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? கூடப்பிறந்தவர்களுடன் எந்தளவுக்கு ஒத்துப்போனீர்கள்? உங்கள் அம்மா அப்பா உங்களை ரொம்ப கண்டித்தார்களா அல்லது உங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுத்தார்களா?

படிப்பு: பள்ளியில் எந்தப் பாடம் உங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது? எந்தப் பாடம் உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை? உங்களுக்கு ரொம்பப் பிடித்த டீச்சர் யார்? ஏன் அவர்களை உங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது?

வேலை: முதன்முதலில் என்ன வேலை பார்த்தீர்கள்? அது உங்களுக்குப் பிடித்திருந்ததா? எந்த வேலையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

விருப்பங்கள்: உலகில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் போவதற்கு வாய்ப்பு கிடைத்தால் எங்கே போவீர்கள்? எதை ஹாபியாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்? என்ன திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஆன்மீக சரிதை: நீங்கள் சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவரா? இல்லாவிட்டால், எப்போது பைபிளிடம் ஆர்வம் வந்தது? பைபிளின்படி நடக்க முயற்சி செய்தபோது என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டீர்கள்?

நன்நெறிகள்: நல்ல நண்பர்களாக இருப்பதற்கு, சந்தோஷமாக வாழ்வதற்கு, கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்னென்னவெல்லாம் முக்கியமென நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அறிவுரை எது?

இதை முயன்று பாருங்கள்: மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுங்கள்; அவற்றிற்கு உங்கள் அம்மா அப்பா என்ன பதில்களைச் சொல்வார்களென நீங்கள் யோசித்து வையுங்கள். பிறகு அந்தக் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் சொல்கிற பதில்களை நீங்கள் யோசித்து வைத்த பதில்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

[பக்கம் 13-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

நீங்கள் உங்கள் கணவரோடும் மகளோடும் சில நண்பர்களோடும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உரையாடலின்போது நண்பர் ஒருவர், நீங்கள் முன்பு காதலித்து கைவிட்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறார். இதைப் பற்றி உங்கள் மகளிடம் நீங்கள் சொன்னதே இல்லை. இப்போது அவள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

பொதுவாக, உங்கள் பிள்ளையின் கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதிலளிப்பதே நல்லது. சொல்லப்போனால், பிள்ளை கேள்விகள் கேட்கும்போதும் நீங்கள் பதில்கள் சொல்லும்போதும் உண்மையில் நீங்கள் இருவரும் உரையாடுகிறீர்கள்; இதைச் செய்யவே பெரும்பாலான பெற்றோர் விரும்புகிறார்கள்.

உங்கள் கடந்த காலத்தைப் பற்றி உங்கள் பிள்ளையிடம் எந்தளவு நீங்கள் சொல்ல வேண்டும்? பொதுவாக, தர்மசங்கடமான விஷயங்களைப் பிள்ளையிடம் சொல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், பொருத்தமான சந்தர்ப்பங்களில், நீங்கள் செய்த தவறுகளையும் எதிர்ப்பட்ட போராட்டங்களையும் பற்றிய சில விஷயங்களை உங்கள் பிள்ளையிடம் சொல்வது உதவியாய் இருக்கலாம். எப்படி?

ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு சமயம் அப்போஸ்தலன் பவுல் தன்னைப் பற்றிச் சொல்லுகையில், “நன்மை செய்ய விரும்புகிற எனக்குள் தீமை இருக்கிறது . . . எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கிறேன்!” என்றார். (ரோமர் 7:​21-⁠24) யெகோவா தேவன் தம் சக்தியின் தூண்டுதலால் இந்த வார்த்தைகள் எழுதப்படும்படியும், நம்முடைய நன்மைக்காக பைபிளில் பாதுகாக்கப்படும்படியும் பார்த்துக்கொண்டார். (2 தீமோத்தேயு 3:16) அதிலிருந்து நாம் நிச்சயமாகவே நன்மையடைகிறோம்; ஏனென்றால், நாம் எல்லாருமே பவுலைப் போல் உணருகிறோம், அல்லவா?

அதேபோல், நீங்கள் செய்த நல்ல காரியங்களை மட்டுமல்லாமல் தவறுகளையும்கூட பிள்ளை தெரிந்துகொள்வது, உங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவும். நீங்கள் வளர்ந்த காலம் வேறு என்பது உண்மைதான். ஆனால், காலம் மாறினாலும் மனித சுபாவம் மாறவில்லை, பைபிள் நியமங்களும் மாறவில்லை. (சங்கீதம் 119:144) நீங்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டீர்கள், அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள் என்பதைப் பற்றியெல்லாம் உங்கள் பருவ வயது பிள்ளைகளிடம் சொல்வது அவர்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும். காமரன் என்ற வாலிபன் இவ்வாறு சொல்கிறான்: “நீங்கள் சந்திக்கிற பிரச்சினைகளையே உங்கள் பெற்றோரும் சந்தித்தார்கள் என்பதை அறிந்துகொள்ளும்போது, அவர்களும் உங்களைப் போல குறைபாடு உள்ளவர்கள்தான் என்பதை உணருவீர்கள். நீங்கள் அடுத்த முறை ஒரு பிரச்சினையை எதிர்ப்படும்போது இதையும்கூட அவர்கள் எதிர்ப்பட்டிருப்பார்களோ என யோசிப்பீர்கள்.”

எச்சரிக்கை: ஒவ்வொரு முறை உங்கள் அனுபவங்களைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளும்போதும் புத்திமதி சொல்லி முடிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் வாலிப பிள்ளை தவறான முடிவுக்கு வந்துவிடுவானோ, அதே போன்ற தவறுகளை அவன் செய்வதில் தவறில்லை என்று நினைத்துவிடுவானோ என்று நீங்கள் பயப்படலாம் என்பது உண்மைதான். ஆனால், உங்கள் உரையாடலிலிருந்து பிள்ளை என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைச் சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் எப்படி உணருகிறீர்களென சுருக்கமாகச் சொல்லுங்கள். (உதாரணமாக, “அதனால்தான் நீ அதைச் செய்யவே கூடாது” என்று சொல்வதற்குப் பதிலாக “அதை நான் செய்திருக்கவே கூடாது என்று இப்போது நினைக்கிறேன், ஏனென்றால் . . .” என்று சொல்லலாம்.) இவ்வாறு, உங்கள் பிள்ளை நீங்கள் ஏதோ அறிவுரை கூறுவதாக நினைக்காமல், உங்கள் அனுபவத்திலிருந்து மதிப்புமிக்க பாடத்தைப் படிக்கலாம்.​—⁠எபேசியர் 6:⁠4.

[பக்கம் 13-ன் பெட்டி]

சபையிலுள்ள கிறிஸ்தவர்களுடன் பழகுவதைவிட பள்ளி மாணவர்களுடன் பழகுவது சுலபமாக இருப்பதாய் ஒருமுறை என் அம்மாவிடம் சொன்னேன். மறுநாள் என் மேஜைமீது அம்மா ஒரு கடிதத்தை வைத்திருந்தார். அதில், சபையில் தனக்கு நண்பர்களே இல்லாததுபோல் தானும் ஒருகாலத்தில் உணர்ந்ததாக எழுதியிருந்தார். சில பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்; அவர்களை உற்சாகப்படுத்த யாருமே இல்லாதபோதிலும்கூட அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்ததை விளக்கியிருந்தார். நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க நான் முயற்சிகள் எடுத்ததைக் குறித்தும் அவர் பாராட்டி எழுதியிருந்தார். என் பிரச்சினையை மற்றவர்களும் எதிர்ப்படுகிறார்கள் என்பதை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். என் அம்மாவும்கூட அதே பிரச்சினையை எதிர்ப்பட்டிருந்தார்; அதை அறிந்தபோது எனக்குச் சந்தோஷமாக இருந்தது, அழுதேவிட்டேன். என் அம்மா சொன்னதைக் கேட்டு அதிக உற்சாகம் அடைந்தேன், சரியானதைச் செய்வதற்குப் பலத்தைப் பெற்றேன். ​​—⁠ஜூன்கோ, 17, ஜப்பான். 

[பக்கம் 11-ன் படம்]

உங்கள் பெற்றோருடைய பழைய புகைப்படங்களையோ வேறு பொருள்களையோ காட்டும்படி அவர்களிடம் கேளுங்கள். இது சுவாரஸ்யமாகப் பேசி மகிழ வாய்ப்பளிக்கலாம்