Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிளவுபட்ட குடும்பம் பாதிக்கப்படும் பருவ வயது பிள்ளைகள்

பிளவுபட்ட குடும்பம் பாதிக்கப்படும் பருவ வயது பிள்ளைகள்

பிளவுபட்ட குடும்பம் பாதிக்கப்படும் பருவ வயது பிள்ளைகள்

மணவாழ்வில் ஒத்துப்போகாத தம்பதியருக்குச் சிறந்த ஆலோசனை கொடுப்பதாகக் குடும்ப ஆலோசகர்கள் நினைத்தார்கள். அவர்களிடம், ‘உங்கள் சந்தோஷம்தான் முக்கியம். பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்கள் சுலபமாகச் சமாளித்துக்கொள்வார்கள். எந்நேரமும் சண்டை போடுகிற அம்மா அப்பாவுடன் வாழ்வதைவிட விவாகரத்து செய்துகொண்ட அம்மாவுடனோ அப்பாவுடனோ வாழ்வது அவர்களுக்கு எளிது!’ என்று சொன்னார்கள்.

ஆனால், ஒருகாலத்தில் விவாகரத்தைச் சிபாரிசு செய்துகொண்டிருந்த ஆலோசகர்கள் இப்போது தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘விவாகரத்து என்பது ஒரு போர், அதில் இரு சாராருமே காயங்கள் இல்லாமல் தப்பிக்க முடியாது, பிள்ளைகளும்கூடத்தான்’ என்று இப்போது அவர்கள் தலைகீழாகச் சொல்கிறார்கள்.

விவாகரத்தே விடிவு—கட்டுக்கதை

நீங்கள் டிவியில் ஒரு காமெடி சீரியல் பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்துவிடுகிறார்கள். பிள்ளைகளை அம்மா வைத்துக்கொள்கிறார்; பின்னர், மனைவியை இழந்த ஒருவரை அவர் கல்யாணம் செய்துகொள்கிறார், அவருக்கும் குழந்தை குட்டிகள் இருக்கின்றன. பொருத்தமில்லாமல் ஜோடி சேர்ந்த இந்தக் குடும்பத்தில் வாராவாரம் வினோதமான பிரச்சினைகள் தலைதூக்குகின்றன; ஆனால், அந்த ஒவ்வொரு பிரச்சினையும் முப்பதே நிமிடங்களில் தீர்க்கப்படுகிறது. அது எப்படிக் கெட்டிக்காரத்தனமாகத் தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை. அந்தக் கதை முழுவதிலும் ஒரே காமெடி.

இதுபோன்ற டிவி சீரியல்கள் சிரிக்க வைக்கலாம். ஆனால், நிஜவாழ்வில் நடக்கும் விவாகரத்துகள் சோகத்தில் ஆழ்த்தலாம். எமோஷனல் இன்ஃபிடிலிட்டி என்ற புத்தகத்தில் எம். காரி நியூமன் இவ்வாறு எழுதுகிறார்: “விவாகரத்து என்பது சட்டப்படி எடுக்கப்படுகிற நடவடிக்கை. ஒருவர் மற்றொருவர்மீது வழக்குத் தொடுக்கிறார். விவாகரத்து செய்ய நீங்கள் தீர்மானித்த மறுகணத்திலிருந்தே உங்கள் பிள்ளை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, உங்கள் பணமும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, எங்கே குடியிருப்பீர்கள் என்பதுகூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் பிரச்சினையை நீதிமன்றம் தீர்த்து வைக்கலாம்; ஆனால், தீர்த்து வைக்காமலும் போகலாம். அதுமட்டுமல்ல, உங்கள் பிள்ளையை நீங்கள் எவ்வளவு அடிக்கடி பார்க்கலாம், உங்கள் பணத்தை நீங்கள் எந்தளவு வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் மூன்றாவது நபரான நீதிபதி உங்களுக்குச் சொல்லலாம். அந்த மூன்றாவது நபர் உங்களைப் போலவே சிந்திக்க மாட்டார் என்பதுதான் வருத்தமான விஷயம்.”

பொதுவாக, விவாகரத்து என்பது ஒரு விதமான பிரச்சினையைக் கொடுத்துவிட்டு இன்னொரு விதமான பிரச்சினையை வாங்குவதுதான். சொல்லப்போனால், வீடு, வாசல், வசதி என எல்லாமே மாறிவிடலாம்; ஆனால், இந்த மாறுதல் எதுவும் தேறுதலாய் இருக்காது. அதுமட்டுமல்ல, விவாகரத்து பிள்ளைகளையும் பாதிக்கிறது.

பெற்றோரின் பிரிவும் பருவ வயது பிள்ளைகளும்

விவாகரத்து எல்லா வயது பிள்ளைகளுடைய மனதையுமே சுக்குநூறாக்கிவிடலாம். சிறுபிள்ளைகளைவிட பருவ வயது பிள்ளைகள் நன்கு சமாளித்துக்கொள்வார்கள் என சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால், இவர்களுக்கு அவர்களைவிடவும் முதிர்ச்சி அதிகம் என்றும், சீக்கிரத்திலேயே பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனியாக வாழ்வதற்குத் தயாராகி வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இதன் மறுபக்கத்தையும் பார்க்கிறார்கள். அதே காரணங்களால்தான் பருவ வயது பிள்ளைகள் படுமோசமாகப் பாதிக்கப்படுவதாக அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். * இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்:

பருவ வயதின்போது பிள்ளைகளின் பாதுகாப்பு உணர்வு பெருமளவு குறைந்துவிடுகிறது; பிள்ளைப் பருவத்தில் இருந்ததைவிடவும் குறைந்துவிடுகிறது. அதிக சுதந்திரம் தேவை என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்; எப்போதையும்விட இப்போதுதான், அம்மா அப்பா ஒன்றுபட்டிருந்து அவர்களைத் தாங்கி நிறுத்த வேண்டும்.

பருவ வயது, மற்றவர்களுடன் பக்குவமாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்கிற வயது; இந்தச் சமயத்தில் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டால், நம்பிக்கை, பற்று, அன்பு போன்ற குணங்களைப் பிள்ளைகள் மதிக்காமல் போய்விடலாம். பின்னர் வாலிபர்களாக ஆகும்போது மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதை அவர்கள் அடியோடு தவிர்த்துவிடலாம்.

பொதுவாக, எல்லா வயது பிள்ளைகளும் தங்கள் வேதனைகளை வெளிக்காட்டுகிறார்கள்; பருவ வயது பிள்ளைகளோ, குற்றச்செயலில் ஈடுபடுவது, குடித்து வெறிப்பது, போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற ஆபத்தான வழிகளில் அவற்றைப் பெரும்பாலும் வெளிக்காட்டுகிறார்கள்.

விவாகரத்தான பெற்றோரின் பருவ வயது பிள்ளைகள் யாரிடமும் நெருங்கிப் பழக முடியாது என்றோ வாழ்வில் வெற்றி காண முடியாது என்றோ அர்த்தமாகாது. பெற்றோர் இருவரிடமும் நல்ல பந்தத்தை வைத்திருந்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி காண முடியும். * ஆனால், சிலர் சொல்கிறபடி விவாகரத்து செய்வது எப்போதுமே ‘பிள்ளைகளுக்கு நல்லது’ என்றோ, தம்பதியர் மத்தியில் நிலவும் எல்லாப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்றோ நினைப்பது பேதைத்தனம். சொல்லப்போனால், விவாகரத்துக்கு முன்பைவிட அதற்குப் பின்பே அநேக பிரச்சினைகளை மணத்துணையோடு கையாள வேண்டியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்; உதாரணத்திற்கு, ஜீவனாம்சம், பிள்ளைப் பராமரிப்பு போன்ற பிரச்சினைகளைக் கையாள வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விவாகரத்து குடும்பப் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்கிறதே தவிர தீர்த்து வைப்பதில்லை.

மூன்றாவது வழி

உங்களுடைய மணவாழ்வில் பிரச்சினைகள் நிறைந்திருப்பதால், விவாகரத்து செய்வதைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அதை மறுபரிசீலனை செய்வதற்கான நல்ல காரணங்கள் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கின்றன. மணவாழ்க்கையின் பிரச்சினைகள் அனைத்துக்கும் விவாகரத்து “சர்வரோக நிவாரணி” அல்ல.

அதற்காக, மணவாழ்வில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சகித்துக்கொள்ள வேண்டுமென்று அர்த்தமல்ல. மூன்றாவது வழி இதோ: உங்கள் மணவாழ்வில் பிரச்சினைகள் என்றால் அவற்றைச் சரிசெய்து இல்லறத்தை நல்லறமாக்க ஏன் முயற்சி எடுக்கக்கூடாது? “அதற்கு வாய்ப்பே இல்லை, எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது” என்று சட்டென முடிவுகட்டிவிடாதீர்கள். பின்வரும் கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

‘ஆரம்பத்தில் என்ன குணங்களைப் பார்த்து என் மணத்துணையிடம் கவரப்பட்டேன்? அந்தக் குணங்கள் இன்னும் அவரிடம் ஓரளவு இருக்கின்றனதானே?’—நீதிமொழிகள் 31:10, 29.

‘திருமணத்திற்கு முன்பிருந்த அதே காதல் உணர்வை மறுபடியும் எனக்குள் தூண்டியெழுப்ப முடியுமா?’—உன்னதப்பாட்டு 2:2; 4:7.

‘என் மணத்துணை எப்படி நடந்துகொண்டாலும் இந்தப் பத்திரிகையில் பக்கங்கள் 3 முதல் 9 வரையுள்ள ஆலோசனைகளை நான் எப்படிப் பின்பற்றலாம்?’—ரோமர் 12:18.

‘இருவரும் மறுபடியும் சந்தோஷமாக வாழ்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன் என்பதை மணத்துணையிடம் (நேரடியாகவோ எழுத்திலோ) என்னால் விளக்க முடியுமா?’—யோபு 10:1.

‘இருவரும் மறுபடியும் சந்தோஷமாக வாழ்வதற்கு, நியாயமான இலக்குகளை வைக்க உதவும் அனுபவமிக்க நண்பரோடு கலந்துபேச முடியுமா?’—நீதிமொழிகள் 27:17.

‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) அந்த நியமம், மணத்துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திற்கு மட்டுமல்ல, பிரச்சினை நிறைந்த மணவாழ்வைக் குறித்து என்ன செய்வதென தீர்மானிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும். ஆம், இந்தப் பத்திரிகையில் பக்கம் 9-ல் சொல்லப்பட்டுள்ளபடி, வாழ்வில் வெற்றிகாணும் குடும்பங்களிலும் பிரச்சினைகள் எழத்தான் செய்கின்றன; ஆனால், அவர்கள் அவற்றைச் சமாளிக்கத் தெரிந்திருப்பதில்தான் அந்த வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

உதாரணத்திற்கு: நீங்கள் காரில் தொலைதூரம் பயணம் செல்ல ஆரம்பித்திருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். போகும் வழியில், மோசமான வானிலை, போக்குவரத்து நெரிசல், சாலை மறிப்பு போன்ற பிரச்சினைகளை நீங்கள் தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நீங்கள் பாதை மாறி தொலைந்தும் போய்விடலாம். அப்போது என்ன செய்வீர்கள்? வீட்டுக்கே திரும்பிப் போய்விடுவீர்களா அல்லது இந்த எல்லா பிரச்சினைகளையும் சமாளித்துத் தொடர்ந்து பயணம் செய்வீர்களா? உங்கள் திருமண நாளன்று, நீங்கள் ஒரு பயணத்தைத் தொடங்கினீர்கள் என்று சொல்லலாம்; அந்தப் பயணத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை; ஏனென்றால், “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28) பிரச்சினைகள் வருமா என்பது கேள்வி அல்ல, ஆனால் பிரச்சினைகள் வரும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதே கேள்வி. பிரச்சினைகளைச் சமாளித்துத் தொடர்ந்து பயணம் செய்ய வழி காண்பீர்களா? உங்கள் மணவாழ்க்கை “தொலைந்துவிட்டதாக” நீங்கள் நினைத்தால் மற்றவர்களுடைய உதவியைப் பெற முயற்சி செய்வீர்களா?—யாக்கோபு 5:14.

கடவுள் செய்த ஏற்பாடு

திருமணத்தைக் கடவுள் ஏற்பாடு செய்திருப்பதால் அதை உயர்வாய் மதிக்க வேண்டும். (ஆதியாகமம் 2:24) பிரச்சினைகளைச் சரிசெய்யவே முடியாதுபோல் தோன்றினால் இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட குறிப்புகளை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

1. திருமணத்திற்கு முன்பிருந்த அதே காதல் உணர்வை மறுபடியும் தூண்டியெழுப்ப முயற்சி செய்யுங்கள்.உன்னதப்பாட்டு 8:6.

2. மணவாழ்வுக்கு மெருகூட்ட நீங்கள் என்ன செய்யலாமென தீர்மானியுங்கள், பின்பு அதன்படி நடங்கள்.—யாக்கோபு 1:22.

3. இருவரும் மறுபடியும் சந்தோஷமாக வாழ்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்பதை மணத்துணையிடம் (நேரடியாகவோ எழுத்திலோ) தெளிவாக, அதே சமயத்தில் மரியாதையாகச் சொல்லுங்கள்.யோபு 7:11.

4. உதவியை நாடுங்கள். நீங்கள் தனியாக நின்று உங்கள் மணவாழ்வைத் தூக்கிநிறுத்த நினைக்காதீர்கள்! (g09 10)

[அடிக்குறிப்புகள்]

^ இந்தக் கட்டுரை பருவ வயது பிள்ளைகளைப் பற்றியே முக்கியமாகக் குறிப்பிட்டாலும் சிறுபிள்ளைகளும் விவாகரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கூடுதல் தகவலுக்கு, டிசம்பர் 8, 1997 தேதியிட்ட தமிழ் விழித்தெழு!-வில் பக்கங்கள் 3-12-ஐயும் ஏப்ரல் 22, 1991 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 3-11-ஐயும் பாருங்கள்.

^ பெற்றோர் இருவரிடமும் நல்ல பந்தத்தை வைத்திருப்பது எல்லா சந்தர்ப்பங்களிலுமே முடியுமென சொல்ல முடியாதுதான். ஏனெனில், பெற்றோரில் ஒருவர் குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டுப் போயிருக்கலாம், அல்லது வேறு விதத்தில் துளியும் பொறுப்பற்றவராக இருக்கலாம், சொல்லப்போனால் ஆபத்தானவராகக்கூட இருக்கலாம்.—1 தீமோத்தேயு 5:8.

[பக்கம் 19-ன் பெட்டி/படம்]

‘இந்த முறை மணவாழ்வில் வெற்றி பெறுவேன்’

முதல் கல்யாணத்தைவிட இரண்டாம் கல்யாணம் பெருமளவு தோல்வியடைகிறது; மூன்றாம் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இதற்கான ஒரு காரணத்தைப் பற்றி, எமோஷனல் இன்ஃபிடிலிட்டி என்ற புத்தகத்தில் எம். காரி நியூமன் இவ்வாறு எழுதினார்: “உங்கள் முதல் கல்யாணத்தில் பிரச்சினைகள் எழுந்தால் அதற்குக் காரணம் நீங்கள் பொருத்தமில்லாத மணத்துணையைத் தேர்ந்தெடுத்தது அல்ல. ஆனால், அதற்குக் காரணம் நீங்களே. உங்கள் மணத்துணையை நீங்கள்தான் விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ இல்லாதிருக்கிறதோ எல்லாமே நீங்கள் அவருடன் சேர்ந்து பாடுபட்டதன் பலன்தான்.” நியூமனின் முடிவு? “மணத்துணையை விலக்கிவிட்டு பிரச்சினைகளை வைத்துக்கொள்வதைவிட பிரச்சினைகளை விலக்கிவிட்டு மணத்துணையை வைத்துக்கொள்வது நல்லது.”

[பக்கம் 21-ன் படம்]

மணமுறிவே உங்கள் முடிவானால் . . .

மணத்துணை எல்லையை மீறும்போது அவரை விவாகரத்து செய்யலாமென பைபிள் சொல்கிறது. * அப்படி நீங்கள் விவாகரத்து செய்வதாக இருந்தால், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க உங்கள் பருவ வயது பிள்ளைக்கு எப்படி உதவலாம்?

என்ன நடக்கிறதென்பதை உங்கள் பருவ வயது பிள்ளையிடம் சொல்லுங்கள். முடிந்தால், இதை பெற்றோர் இருவருமே செய்ய வேண்டும். விவாகரத்து செய்ய இருவருமே தீர்மானித்துவிட்டதை உங்கள் பிள்ளையிடம் சொல்லுங்கள். அதற்கு உங்கள் பிள்ளை காரணமல்லவென்றும் நீங்கள் இருவருமே பிள்ளையை எப்போதும் நேசிப்பீர்களென்றும் உறுதியளியுங்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது, இனி சண்டை போடாதீர்கள். விவாகரத்து நடந்து வருடங்கள் பல ஓடியும் சில பெற்றோர் சண்டை போடுவதை நிறுத்துவதில்லை. அதைக் குறித்து ஒரு நிபுணர் இவ்வாறு சொன்னார்: அவர்கள் “சட்டரீதியில் பிரிந்தாலும், உணர்ச்சிரீதியில் பிரியாமல் மோதிக்கொண்டே இருக்கிறார்கள்; சமரசம் செய்துகொள்ள முடியாத எதிரிகளைப் போல் இருக்கிறார்கள்.” இப்படி அம்மாவும் அப்பாவும் எப்போது பார்த்தாலும் சண்டை போடுவதால், பருவ வயது பிள்ளைகள் பெற்றோரை இழந்து தவிக்கிறார்கள்; அதோடு, அவர்கள் இருவருக்கும் இடையே கலகத்தை மூட்டிவிட்டு தங்களுக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ளவும் தூண்டப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, “எவ்வளவு லேட்டாக வந்தாலும் அப்பா ஒன்றும் சொல்வதில்லை. நீங்கள் மட்டும் ஏன் திட்டுகிறீர்கள்?” என்று பிள்ளை தன் அம்மாவிடம் கேட்கலாம். எங்கே மகன் அந்த “எதிரியின்” பக்கம் சேர்ந்துவிடுவானோ என்ற பயத்தில் அவனை அவன் போக்கில் அம்மா விட்டுவிடலாம்.

உங்கள் பருவ வயது பிள்ளையைப் பேசவிடுங்கள். ‘அம்மா அப்பாவுக்கு அன்பில்லாமல் போய்விட்டது, இனிமேல் என்மீதும் அன்பில்லாமல் போய்விடலாம்’ என்றோ ‘என் அம்மா அப்பாவே ஒழுங்காக நடக்காதபோது நான் மட்டும் ஏன் ஒழுங்காக நடக்க வேண்டும்?’ என்றோ பிள்ளைகள் பொதுவாக நினைக்கலாம். உங்கள் பிள்ளையின் பயத்தைப் போக்குவதற்கும், அவனுடைய எண்ணத்தைச் சரிப்படுத்துவதற்கும், அவனை எப்போதும் பேச விடுங்கள். ஆனால் ஓர் எச்சரிக்கை: உங்கள் பிள்ளையைப் பெரிய மனிதன்போல் நினைத்துக்கொண்டு உங்கள் மனச்சுமையையெல்லாம் அவன்மீது இறக்கி வைக்க முயற்சி செய்யாதீர்கள். அவன் உங்கள் பிள்ளை, உங்கள் “சுமைதாங்கி” அல்ல.

உங்கள் முன்னாள் மணத்துணையுடன் நன்கு பழகும்படி உங்கள் பருவ வயது பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் விவாகரத்து செய்தவர் உங்களுடைய முன்னாள் மணத்துணை, ஆனால் அவர் உங்கள் பிள்ளையுடைய முன்னாள் பெற்றோர் அல்ல. அவரைப் பற்றி பிள்ளையிடம் மோசமாகப் பேசுவது நல்லதல்ல. தத்தளிக்கும் டீனேஜர்கள்—பெற்றோர்களும் பருவ வயது பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பங்களும் மாற்றிக்கொள்ள வேண்டிய பாதை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “விவாகரத்து என்ற போர்க்களத்தில் பிள்ளைகளை ஏவுகணைகளாகப் பயன்படுத்த பெற்றோர்கள் தீர்மானித்தால் விபரீத விளைவுகளையே எதிர்ப்பட வேண்டியிருக்கும்.”

உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்கள் எதையும் சமாளிக்க முடியாமல் திணறிப்போய்விடுவீர்கள். ஆனால், சோர்ந்துபோகாதீர்கள். உடல் நலனைப் பாதுகாக்கும் பழக்கங்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் ஆன்மீகக் காரியங்களில் தவறாமல் ஈடுபடுங்கள். இது நீங்களும் உங்கள் பிள்ளையும் சமநிலையோடிருக்க உதவும்.—சங்கீதம் 18:2; மத்தேயு 28:19, 20; எபிரெயர் 10:24, 25.

[அடிக்குறிப்பு]

^ பைபிளின்படி, மணத்துணை துரோகம் செய்யும்போது மட்டுமே அவரை விவாகரத்து செய்யலாம், அதன்பின் மறுமணமும் செய்யலாம். (மத்தேயு 19:9) ஆனால், அப்படி விவாகரத்து செய்வதா வேண்டாமா என்பதைப் பாதிக்கப்பட்ட மணத்துணையே தீர்மானிக்க முடியும்; குடும்பத்தாரோ மற்றவர்களோ தீர்மானிக்க முடியாது.—கலாத்தியர் 6:5.

[பக்கம் 20-ன் படம்]

உங்கள் திருமண நாளன்று கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற பாடுபடுங்கள்

[பக்கம் 21-ன் படம்]

பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்றால், உங்கள் முன்னாள் மணத்துணையுடன் நன்கு பழகும்படி உங்கள் பருவ வயது பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள்