Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழி 3 ஒன்றுசேர்ந்து உழைத்தல்

வழி 3 ஒன்றுசேர்ந்து உழைத்தல்

வழி 3 ஒன்றுசேர்ந்து உழைத்தல்

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”—பிரசங்கி 4:9, 10.

இதன் அர்த்தம். இனிய இல்லற வாழ்வில் இன்பம் காணும் தம்பதியர், யாருக்கு யார் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிறாரோ அதை மதித்து நடப்பார்கள். (எபேசியர் 5:22-24) கணவன், மனைவி இருவருமே, “நான், எனக்கு” என்று நினைப்பதற்குப் பதிலாக, “நாம், நமக்கு” என்றே நினைப்பார்கள். கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது, இனி தாங்கள் தனி ஆளாக இல்லையென்பதை உணருவார்கள். அவர்கள் “ஒரே உடலாக” இருப்பார்கள் என பைபிள் சொல்கிறது; இது, அவர்கள் என்றுமே பிரியாமல் இருப்பார்கள் என்பதை மட்டுமல்ல, மிக அன்னியோன்னியமாக இருப்பார்கள் என்பதையும் குறிக்கிறது.—மத்தேயு 19:5, 6.

இதன் முக்கியத்துவம். நீங்களும் உங்கள் துணையும் எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்யாவிட்டால், உப்புச்சப்பில்லாத விஷயங்கள்கூட பெரிய பிரச்சினைகளாக வெடிக்கலாம். பிரச்சினையைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, ‘உன்மேல்தான் தப்பு,’ ‘நீதான் காரணம்’ என நீங்கள் ஒருவரையொருவர் தாக்கலாம். ஆனால், நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கையில், எதிர் எதிர்த் திசையில் வந்து மோதிக்கொள்ளும் இரு விமானங்களின் விமானிகளாக இருக்க மாட்டீர்கள்; மாறாக, ஒரே விமானத்தில் ஒருமனதாக செயல்படும் விமானியாகவும் சக விமானியாகவும் இருப்பீர்கள். கருத்து வேறுபாடு எழும்போது, பழிபோடுவதிலும் குற்றப்படுத்துவதிலுமே நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி சோர்ந்துபோக மாட்டீர்கள்; அதற்குப் பதிலாக, நடைமுறையாக யோசித்து அந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க வழி கண்டுபிடிப்பீர்கள்.

இதைச் செய்து பாருங்கள். ஒன்றுசேர்ந்து உழைப்பதை எந்தளவுக்கு முக்கியமாகக் கருதுகிறீர்களென உங்களையே சோதித்துப் பாருங்கள். அதற்காக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

◼ நான்தான் சம்பாதிக்கிறேன் என்பதற்காக, “எல்லாம் என் பணம்” என்று நினைக்கிறேனா?

◼ என் கணவர்/மனைவி தன் சொந்தபந்தங்களிடம் நெருங்கியிருந்தாலும், நான் அவர்களிடம் ஒட்டாமல் ஒதுங்கி இருக்கிறேனா?

◼ என் கணவரைவிட்டு/மனைவியைவிட்டு எங்காவது தனியாக போனால்தான் என்னால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடிகிறதா?

தீர்மானம் எடுங்கள். உங்கள் துணையோடு ஒன்றுசேர்ந்து உழைக்கவே விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கான ஓரிரண்டு வழிகளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் துணையிடம் ஏன் ஆலோசனை கேட்கக் கூடாது? (g09 10)

[பக்கம் 5-ன் படம்]

நீங்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கையில், ஒரே விமானத்தில் ஒருமனதாகச் செயல்படும் விமானியையும் சக விமானியையும் போல் இருப்பீர்கள்