Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழி 4 மதிப்புமரியாதை கொடுத்தல்

வழி 4 மதிப்புமரியாதை கொடுத்தல்

வழி 4 மதிப்புமரியாதை கொடுத்தல்

“எல்லா விதமான . . . கூச்சலையும், பழிப்பேச்சையும் . . . உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.”—எபேசியர் 4:31.

இதன் அர்த்தம். இனிமையான இல்லற வாழ்விலும்சரி, இம்சையான இல்லற வாழ்விலும்சரி, கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம்தான். ஆனால், இனிய இல்லற வாழ்வில் தம்பதியர் இந்தக் கருத்து வேறுபாடுகளைச் சுமுகமாகப் பேசித் தீர்ப்பார்கள்; நக்கலாகவோ குத்தலாகவோ பேச மாட்டார்கள்; மனம் புண்படும்படி எதையும் சொல்ல மாட்டார்கள். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும், தாங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென விரும்புகிறார்களோ அப்படியே மற்றவர்களை நடத்துவார்கள்.மத்தேயு 7:12.

இதன் முக்கியத்துவம். சொற்கள் அம்புகளாகப் பாய்ந்து மனதை ரணமாக்கலாம். “சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்” என்று பைபிளிலுள்ள ஒரு நீதிமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 21:19) சண்டைக்கார கணவனுக்கும் இது பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை. பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.” (கொலோசெயர் 3:21) தொட்டதற்கெல்லாம் பிள்ளைகளைக் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அம்மா அப்பாவைத் திருப்தி செய்யவே முடியாதென்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடலாம். என்ன செய்தாலும் பயனில்லை என்று நினைத்து, முயற்சி எடுப்பதைக்கூட அவர்கள் விட்டுவிடலாம்.

இதைச் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் எந்தளவு மதிப்புமரியாதை காட்டுகிறீர்களென சோதித்துப் பாருங்கள். அதற்காக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

◼ என் குடும்பத்தில் வாக்குவாதம் வந்துவிட்டால், கடைசியில் யாராவது ஒருவர் ஆவேசமாக அங்கிருந்து வெளியேறுகிறாரா?

◼ என் மனைவியை/கணவரை அல்லது பிள்ளைகளை, “முட்டாள்,” “மரமண்டை” போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறேனா?

◼ கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் பேசப்பட்ட ஓர் இடத்தில் நான் வளர்ந்தேனா?

தீர்மானம் எடுங்கள். மதிப்புமரியாதையுடன் பேசும் விஷயத்தில் உங்களுக்கென ஓரிரண்டு லட்சியங்களை யோசித்து வையுங்கள். (ஆலோசனை: “நீ, உனக்கு” என்பதற்குப் பதிலாக “நான், எனக்கு” என்று பேசத் தீர்மானியுங்கள். உதாரணத்திற்கு, “நீ(ங்கள்) எப்போதுமே இப்படித்தான்” என்று சொல்வதற்குப் பதிலாக, “எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லுங்கள்.

உங்கள் லட்சியங்களைப் பற்றி உங்கள் துணையிடம் ஏன் சொல்லக் கூடாது? மூன்று மாதங்களுக்குப்பின், நீங்கள் எந்தளவுக்கு உங்கள் லட்சியங்களை அடைந்திருக்கிறீர்களென உங்கள் துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிள்ளைகளிடம் பேசும்போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதிருக்க என்னென்ன விதங்களில் உங்கள் வாய்க்குப் பூட்டு போடலாமென சிந்தித்துப் பாருங்கள்.

சிலசமயங்களில் கடுகடுவென அல்லது நக்கலாகப் பேசியதற்காக உங்கள் பிள்ளைகளிடம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? (g09 10)

[பக்கம் 6-ன் படம்]

கடலலைகள் எப்படிக் கற்பாறையை அரித்துவிடுமோ, அப்படித்தான் அமில வார்த்தைகள் குடும்பப் பிணைப்பை அரித்துவிடும்