Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழி 7 ஆட்டங்காணாத அஸ்திவாரம் அமைத்தல்

வழி 7 ஆட்டங்காணாத அஸ்திவாரம் அமைத்தல்

வழி 7 ஆட்டங்காணாத அஸ்திவாரம் அமைத்தல்

இதன் அர்த்தம். ஒரு வீடு தானாகவே வருடக்கணக்காக நிலைத்திருக்காது; அதுபோலத்தான் குடும்பங்களும். ஒரு வீடு ஸ்திரமாயிருக்க எப்படி உறுதியான அஸ்திவாரம் தேவையோ, அப்படித்தான் ஒரு குடும்பம் ஸ்திரமாயிருக்கவும் உறுதியான அஸ்திவாரம் தேவை. நல்லதொரு குடும்பத்திற்கு உறுதியான அஸ்திவாரமாக அமைவது, தலைசிறந்த ஒரு வழிகாட்டி நூலாகும்.

இதன் முக்கியத்துவம். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான கணக்குவழக்கில்லாத அறிவுரைகளைப் புத்தகங்களும் பத்திரிகைகளும் டிவி நிகழ்ச்சிகளும் அள்ளித் தருகின்றன. ஒத்துப்போகாத தம்பதிகள் சேர்ந்தே வாழ வேண்டுமென குடும்பநல ஆலோசகர்கள் சிலர் சொல்கிறார்கள், மற்றவர்களோ அந்தத் தம்பதிகள் பிரிந்தே வாழ வேண்டுமென சொல்கிறார்கள். இது சம்பந்தமாக இன்று ஒரு கருத்தைச் சொல்லும் நிபுணர்கள் நாளை இன்னொரு கருத்தைச் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு 1994-ல், டீனேஜ் பிரச்சினைகளைக் கையாளும் பிரபல வல்லுநர் ஒருவர், தன் பணியைத் தொடங்கிய சமயத்தில் தான் உணர்ந்ததைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “சந்தோஷமில்லாத பெற்றோர் இருவருடனும் வாழும் பிள்ளைகளைவிட, சந்தோஷமான ஒற்றைப் பெற்றோருடன் வாழும் பிள்ளைகள் நல்லபடியாக வளர்ந்தார்கள். ஒத்துப்போகாத ஒருவரோடு குடும்பம் நடத்தி கஷ்டப்படுவதைவிட விவாகரத்து செய்துவிடுவதுதான் நல்லதென எனக்குத் தோன்றியது.” ஆனால், 20 வருட அனுபவத்திற்குப் பிறகு அவர் தன் மனதை மாற்றிக்கொண்டார். “விவாகரத்து அநேக பிள்ளைகளின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் மாறலாம்; ஆனால், கடவுளுடைய புத்தகமாகிய பைபிளிலுள்ள நியமங்களோடு ஏதாவது ஒருவிதத்தில் ஒத்திருக்கும் கருத்துகளே எப்போதும் மிகச் சிறந்தவை. இந்தத் தொடர் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கையில், பக்கங்கள் 3-8-ல் ஒரு பைபிள் நியமம் மேலே கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நியமங்கள், இல்லறத்தை நல்லறமாக்க அநேக குடும்பத்தாருக்கு உதவியிருக்கின்றன. மற்ற குடும்பத்தாரைப் போலவே அவர்களும் பிரச்சினைகளைச் சந்திக்காமல் இல்லை. ஆனால், பைபிள் அவர்களுடைய மணவாழ்வுக்கும் குடும்ப வாழ்வுக்கும் தேவையான உறுதியான அஸ்திவாரமாக அமைந்திருப்பதுதான் வித்தியாசம். பைபிள் அப்படிப்பட்ட உறுதியான அஸ்திவாரமாக இருக்கும் என நம்புவது நியாயமே, ஏனென்றால் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனே அதன் எழுத்தாளர்.—2 தீமோத்தேயு 3:16, 17.

இதைச் செய்து பாருங்கள். பக்கங்கள் 3-8-ன் மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் பட்டியலிடுங்கள். உங்களுக்கு உதவிய வேறு பைபிள் வசனங்களையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பட்டியலை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டு, அடிக்கடி எடுத்துப் பாருங்கள்.

தீர்மானம் எடுங்கள். உங்களுடைய குடும்ப வாழ்வில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க முடிவு செய்யுங்கள். (g09 10)

[பக்கம் 9-ன் படம்]

உங்கள் இல்லறம் பைபிளென்ற உறுதியான அஸ்திவாரத்தின்மீது அமைந்திருந்தால், பிரச்சினைகளென்ற புயல்காற்றுகளைத் தாக்குப்பிடிக்கும்