Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அம்மாவின்/அப்பாவின் மரணத்தை எப்படிச் சமாளிப்பேன்?

அம்மாவின்/அப்பாவின் மரணத்தை எப்படிச் சமாளிப்பேன்?

இளைஞர் கேட்கின்றனர்

அம்மாவின்/அப்பாவின் மரணத்தை எப்படிச் சமாளிப்பேன்?

“அம்மா இறந்தபோது எல்லாவற்றையுமே இழந்துவிட்டு, நிர்க்கதியாய் நின்றதைப் போல உணர்ந்தேன். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டிருப்பதற்கு அவர்தான் முக்கியக் காரணமாய் இருந்தார்.”—காரண். *

அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுப்பதைப் போன்ற வேதனையான சம்பவம் வாழ்க்கையில் வேறெதுவும் இருக்க முடியாது. நீங்கள் அந்தக் கடும் வேதனையைச் சகிப்பதோடு, கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத வித்தியாசமான ஓர் எதிர்காலத்தைச் சந்திக்கவும் வேண்டியிருக்கலாம்.

பள்ளி இறுதியாண்டை முடிக்கும் சமயத்தில் அல்லது திருமணம் செய்யும் சமயத்தில் உங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்கள் பாசத்திற்குரிய அம்மாவோ அப்பாவோ இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்பட்டிருக்கலாம். இப்போது அந்த ஆசைகளெல்லாம் சுக்குநூறாகிவிட்டதால், நீங்கள் வருத்தத்திலும் விரக்தியிலும் கோபத்திலும்கூட ஆழ்ந்துவிட்டிருக்கலாம். அம்மாவையோ அப்பாவையோ மரணத்தில் பறிகொடுப்பதால் ஏற்படுகிற இதுபோன்ற உணர்ச்சிப் போராட்டங்களை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

‘நான் இயல்பாகத்தான் நடந்துகொள்கிறேனா?’

உங்கள் அம்மாவோ அப்பாவோ இனிமேலும் உயிரோடு இல்லை என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ளும்போது, இதுவரை எதிர்ப்பட்டிராத ஏதேதோ உணர்ச்சிகளால் நீங்கள் அலைக்கழிக்கப்படலாம். ப்ரையனுடைய அப்பா மாரடைப்பில் இறந்தபோது அவனுக்கு 13 வயதுதான்; “அவர் இறந்த அந்த ராத்திரியில் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அழுதோம், ஆறுதலாக ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டோம்” என்று அவன் சொல்கிறான். நேட்டலியின் அப்பா புற்றுநோயால் இறந்தபோது அவளுக்குப் பத்து வயது; “எனக்கு எதுவுமே தோன்றவில்லை. அதனால் எனக்கு எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஜடம்போல் இருந்தேன்” என்று அவள் சொல்கிறாள்.

அன்பானவரின் மரணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கிறது. சொல்லப்போனால், ஒவ்வொருவரும் ‘தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணருகிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 6:29) இதை மனதில் வைத்து, உங்களுடைய அம்மா அல்லது அப்பாவின் மரணம் உங்களை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், (1) உங்கள் அம்மா அல்லது அப்பா இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக எப்படி உணர்ந்தீர்கள், (2) இப்போது எப்படி உணருகிறீர்கள் என்பதை எழுதுங்கள். *

(1) .....

(2) .....

உங்களுடைய பதில்கள், உங்கள் உணர்ச்சிகள் ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பி வருவதைக் காட்டலாம். இது இயல்புதான். இது, உங்கள் அம்மா அல்லது அப்பாவை நீங்கள் மறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தாது. மறுபட்சத்தில், உங்கள் உணர்ச்சிகள் இன்னமும் மாறாதிருப்பதை அல்லது முன்பைவிட அதிகமாக உங்களை வாட்டியெடுப்பதை உங்களுடைய பதில்கள் காட்டலாம். ஒருவேளை, உங்கள் துயர அலைகள் மேலெழும்பி, இறங்கி, எதிர்பாராத சமயங்களில் திடீரென “கரையில் மோதுவதுபோல்” நீங்கள் உணரலாம். இதுவும்கூட இயல்புதான்; ஒருவேளை உங்கள் அம்மா அல்லது அப்பா இறந்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இது இயல்புதான். துயரம் உங்களை எந்த விதத்தில் வாட்டியெடுத்தாலும் அதை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம் என்பதே கேள்வி.

சமாளிக்க வழிகள்

அழுகையை அடக்காதீர்கள்! அழுவது துயரத்தைத் தணிக்கும். என்றாலும், நீங்கள் அலிஷியாவைப் போல் உணரலாம்; அவளுக்கு 19 வயதாக இருக்கையில் அவளுடைய அம்மா இறந்துவிட்டார். “நான் எந்நேரமும் அழுதுகொண்டிருந்தால் எங்கே எனக்குக் கடவுள்மீது விசுவாசம் இல்லையென மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று பயந்தேன்” என்பதாக அவள் சொல்கிறாள். ஆனால் இதை யோசித்துப் பாருங்கள்: பரிபூரணரான இயேசு கிறிஸ்து கடவுள்மீது பலமான விசுவாசம் வைத்திருந்தார். ஆனாலும், தம்முடைய நெருங்கிய நண்பன் லாசரு இறந்தபோது, அவர் “கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:35) எனவே, அழுவதற்குப் பயப்படாதீர்கள். அது உங்களுக்கு விசுவாசம் இல்லையென அர்த்தப்படுத்தாது! “கடைசியில், நான் அழுதேன். ரொம்பவே அழுதேன். தினந்தினம் அழுதேன்” என்று அலிஷியா சொல்கிறாள். *

உங்கள் குற்ற உணர்வுகளைப் பற்றிப் பேசுங்கள். 13 வயதில் அம்மாவைப் பறிகொடுத்த காரண் இவ்வாறு சொல்கிறாள்: “ராத்திரி படுக்கப் போவதற்கு முன்பாக மாடிக்குப் போய் அம்மாவுக்கு முத்தம் கொடுப்பது என் வழக்கம். ஒரு நாள் நான் அதைச் செய்யவில்லை. மறுநாள் காலை அம்மா இறந்துவிட்டார். அதற்காக என்மீதே பழிபோட்டுக்கொள்ள அவசியமில்லைதான்; ஆனாலும், முந்தின நாள் இரவு அவரைப் போய்ப் பார்க்காததையும் மறுநாள் அடுத்தடுத்து நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்துக் குற்ற உணர்வால் தவிக்கிறேன். என்னிடமும் அக்காவிடமும் அம்மாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அப்பா வியாபார விஷயமாக வெளியூர் போய்விட்டார். ஆனால், நாங்கள் ரொம்ப நேரம் தூங்கிவிட்டோம். பிறகு, நான் போய் அம்மாவைப் பார்த்தபோது அவர் மூச்சு நின்றிருந்தது. எனக்குத் தாங்க முடியவில்லை, ஏனென்றால் அப்பா புறப்பட்டுச் சென்றபோது அம்மா நன்றாகத்தான் இருந்தார்!”

காரணைப் போல, நீங்களும் எதையோ செய்யத் தவறியதை நினைத்துக் குற்ற உணர்வில் தவிக்கலாம். உதாரணத்திற்கு, ‘நான் மட்டும் அப்பாவிடம் டாக்டரைப் போய்ப் பார்க்கும்படி சொல்லியிருந்தால் . . .’ என்றோ ‘நான் மட்டும் அம்மாவை முன்னமே போய் பார்த்திருந்தால் . . .’ என்றோ சதா யோசித்து உங்களையே சித்திரவதை செய்துகொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட எண்ணங்களால் நீங்கள் புழுங்கிக்கொண்டிருந்தால், இதை நினைவில் வையுங்கள்: ‘அப்படிச் செய்திருக்கலாமோ’ என்று நினைத்து வருந்துவது இயல்புதான். உண்மையில், என்ன நடக்குமென உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை. எனவே, நீங்கள் குற்ற உணர்வில் தவிக்கத் தேவையில்லை. உங்கள் அம்மா அல்லது அப்பா இறந்து போனதற்கு நீங்கள் காரணம் அல்ல! *

உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ‘நல்வார்த்தை [உங்களை] மகிழ்ச்சியாக்கும்’ என்று நீதிமொழிகள் 12:25 சொல்கிறது. உங்கள் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்தால், உங்கள் துயரத்தைச் சமாளிப்பது கஷ்டமாகலாம். மறுபட்சத்தில், நம்பகமான ஒருவரிடம் உங்கள் மனதிலுள்ளவற்றைக் கொட்டுவது, தக்க சமயத்தில் உற்சாகமளிக்கும் ‘நல்வார்த்தையைக்’ கேட்க வழிசெய்யலாம். அப்படியென்றால், பின்வரும் ஆலோசனைகளில் ஓரிரண்டைப் பின்பற்ற நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது?

உயிரோடிருக்கும் உங்கள் அம்மாவிடமோ அப்பாவிடமோ பேசுங்கள். உயிரோடிருக்கும் உங்கள் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ இது வேதனைமிக்க காலமாக இருந்தாலும் உங்களுக்குத் தேவையான உதவியை அளிக்க அவர் நிச்சயம் விரும்பலாம். எனவே, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். அது உங்கள் துயரத்தை ஓரளவு தணித்து, உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பந்தத்தைப் பலப்படுத்தும் என்பது நிச்சயம்.

அவரோடு உரையாட ஆரம்பிப்பதற்கு இப்படிச் செய்து பாருங்கள்: இறந்துபோன உங்கள் அம்மாவை அல்லது அப்பாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிற இரண்டு அல்லது மூன்று காரியங்களை எழுதுங்கள்; பிறகு, அவற்றில் ஒன்றைப் பற்றிச் சொல்லும்படி உயிரோடிருக்கும் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள். *

.....

நெருங்கிய நண்பர்களிடம் பேசுங்கள். உண்மையான நண்பர்கள், ‘இடுக்கணில் உதவவே . . . பிறந்திருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) “நீங்கள் துளியும் எதிர்பார்க்காத ஒருவர் உங்களுக்கு உதவலாம். எனவே, அதைப் பற்றிப் பேசத் தயங்காதீர்கள்” என்று அலிஷியா சொல்கிறாள். ஆரம்பத்தில், நீங்களும் உங்கள் நண்பரும் மனதிலுள்ளதை வார்த்தைகளில் வடிக்கத் தெரியாமல் திண்டாடுவது உங்கள் இருவருக்குமே சற்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பது உண்மைதான். ஆனால், உங்கள் துயரத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசுவது போகப் போக உங்களுக்கு நன்மை அளிக்கலாம். ஒன்பதே வயதில் தன் அப்பாவை மாரடைப்பால் இழந்த டேவிட் இவ்வாறு சொல்கிறான்: “என் உணர்ச்சிகளை எல்லாம் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்துவிட்டேன். அதைப் பற்றி நான் அதிகம் பேசியிருந்தால் மனதும் உடம்பும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். என் துக்கத்தையும் நன்கு சமாளித்திருப்பேன்.”

கடவுளிடம் பேசுங்கள். ஒருவேளை, யெகோவா தேவனிடம் ஜெபத்தில் ‘உங்கள் இருதயத்தை ஊற்றிய’ பிறகு உங்கள் மனம் லேசாவதை உணருவீர்கள். (சங்கீதம் 62:8) இது வெறுமனே ‘மன ஆறுதலுக்கான நிவாரணி’ அல்ல. நீங்கள் ஜெபம் செய்யும்போது, ‘எல்லா உபத்திரவங்களிலும் ஆறுதல் அளிக்கிற’ ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளிடம்’ முறையிடுகிறீர்கள்.—2 கொரிந்தியர் 1:3, 4.

கடவுள் ஆறுதல் அளிக்கிற வழிகளில் ஒன்று, அவருடைய சக்தியை அருளுவதாகும். உங்கள் துயரத்தைச் சகிப்பதற்குத் தேவையான ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ அது உங்களுக்குக் கொடுக்கலாம். (2 கொரிந்தியர் 4:7) ‘வேதவசனங்களின் மூலம் உண்டாகிற . . . ஆறுதலையும்’ கடவுள் அளிக்கிறார். (ரோமர் 15:4) எனவே, அவருடைய சக்திக்காகக் கேளுங்கள், அவருடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள உற்சாகமூட்டும் வசனங்களை வாசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். (2 தெசலோனிக்கேயர் 2:16, 17) குறிப்பாக உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வசனங்களின் பட்டியலை ஏன் எப்போதும் கைவசம் வைத்திருக்கக் கூடாது? *

வேதனைக்கு விடிவுகாலம் வருமா?

துயரம் தணிவதற்குக் காலமெடுக்கலாம். ப்ரியனுக்கு 16 வயதாக இருக்கையில் அவளுடைய அம்மா இறந்துவிட்டார். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “‘இனி நான் கவலைப்படப் போவதில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இப்போதும் சில சமயங்களில் நான் அழுதுகொண்டுதான் தூங்குகிறேன். மற்ற சமயங்களில், அம்மாவைப் பறிகொடுத்ததைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல், நான் அம்மாவுடன் பூஞ்சோலையில் சந்தோஷமாய் இருப்பதற்கு வழிசெய்யும் யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி நினைக்கிறேன்.”

ப்ரியன் குறிப்பிடுகிற பூஞ்சோலையில், “இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) நீங்களும் இத்தகைய வாக்குறுதிகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், உங்கள் அம்மாவின் அல்லது அப்பாவின் இழப்பைச் சமாளிக்க முடியும். (g09-E 08)

இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ இந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவது இப்போது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், வேறொரு சமயத்தில் எழுத முயற்சி செய்யலாம்.

^ உங்கள் துயரத்தை வெளிக்காட்ட நீங்கள் கண்டிப்பாக அழ வேண்டுமென நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் துயரத்தை வெளிக்காட்டுகிறார்கள். ஆனால், முக்கியமான விஷயம் இதுதான்: உங்கள் கண்கள் குளமானால், அது ‘அழுவதற்கான காலம்’ எனப் புரிந்துகொள்ளுங்கள்.—பிரசங்கி 3:4.

^ அப்படிப்பட்ட எண்ணங்களால் நீங்கள் இன்னமும் புழுங்கிக்கொண்டிருந்தால், உங்கள் உணர்ச்சிகளை உயிரோடிருக்கும் அம்மாவிடமோ அப்பாவிடமோ பெரியவர்கள் யாரிடமோ சொல்லுங்கள். காலப்போக்கில், அதிக சமநிலையான கண்ணோட்டத்தைப் பெறுவீர்கள்.

^ ஒற்றைப் பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டிருந்தால் அல்லது உயிரோடிருக்கும் உங்கள் அம்மாவோ அப்பாவோ தற்போது உங்களோடு வசிக்காதிருந்தால், அதைப் பற்றிப் பெரியவர்கள் யாரிடமாவது நீங்கள் பேசலாம்.

^ பின்வரும் வசனங்களால் சிலர் ஆறுதலைப் பெற்றிருக்கிறார்கள்: சங்கீதம் 34:18; 102:16; 147:3; ஏசாயா 25:8; யோவான் 5:28, 29.

சிந்திப்பதற்கு

◼ இந்தக் கட்டுரையிலுள்ள எந்த ஆலோசனைகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?

◼ தாங்க முடியாத துயரத்தில் உங்களுக்கு ஆறுதல் அளிக்குமென நீங்கள் நினைக்கும் சில வசனங்களைக் கீழே எழுதுங்கள்.

[பக்கம் 11-ன் பெட்டி]

அழுவதில் தவறில்லை . . . அவர்கள் அழுதார்கள்!

ஆபிரகாம்—ஆதியாகமம் 23:2.

யோசேப்பு—ஆதியாகமம் 50:1.

தாவீது—2 சாமுவேல் 1:11, 12; 18:33.

மரியாள் (லாசருவின் சகோதரி) —யோவான் 11:32, 33.

இயேசு—யோவான் 11:35.

மகதலேனா மரியாள்—யோவான் 20:11.

[பக்கம் 12-ன் பெட்டி]

டைரியில் எழுதுங்கள்

உங்களுடைய பெற்றோரில் ஒருவரைப் பறிகொடுத்ததால் அனுபவிக்கும் துக்கத்தைச் சமாளிக்க, அவரைப் பற்றி நீங்கள் நினைப்பவற்றை டைரியில் எழுதி வைப்பது பேருதவியாய் இருக்கும். அப்படி எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம். இதோ சில ஆலோசனைகள்:

◼ உங்கள் பெற்றோரைப் பற்றிய இனிய நினைவுகள் சிலவற்றைப் பட்டியலிடுங்கள்.

◼ அவர் இன்னமும் உயிரோடிருந்திருந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்ல ஆசைப்பட்டிருப்பீர்கள் என்பதை எழுதுங்கள்.

◼ உங்கள் பெற்றோர் ஒருவர் இறந்துவிட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வைச் சமாளிக்க முடியாமல் உங்கள் தம்பியோ தங்கையோ போராடுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவனுக்கு/அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வீர்களென எழுதுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குற்ற உணர்வைச் சமாளிக்க இது உதவலாம்.

[பக்கம் 13-ன் பெட்டி]

உயிரோடிருக்கும் அம்மாவுக்கு/அப்பாவுக்குக் குறிப்பு

மணத்துணையை மரணத்தில் பறிகொடுப்பது மிகுந்த துக்கத்தைத் தரும் விஷயம். ஆனால், அந்தச் சமயத்தில் உங்கள் பருவ வயதுப் பிள்ளைக்கு உதவி தேவைப்படுகிறது. உங்களுடைய துக்கத்தைச் சமாளித்துக்கொண்டு, அதே சமயத்தில் அவனுடைய துக்கத்தை அவன் சமாளிக்க நீங்கள் எப்படி உதவலாம்? *

உங்களுடைய உணர்ச்சிகளை மூடிமறைக்க முயலாதீர்கள். உங்களைப் பார்த்துத்தான் உங்கள் பிள்ளை மதிப்புமிக்க பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறான். துக்கத்தைச் சமாளிக்கும் விஷயத்திலும் அவன் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்வான். எனவே, உங்கள் துக்கத்தையெல்லாம் மூடி மறைத்துக்கொண்டு நீங்கள் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் பருவ வயதுப் பிள்ளையும் அதைச் செய்யவே முயலுவான். மாறாக, உங்கள் வேதனையை வெளிக்காட்டும்போது, பொதுவாக உணர்ச்சிகளை அடக்குவதைவிட வெளிப்படுத்துவது நல்லதுதான் என்பதையும், வருத்தமடைவதோ விரக்தியடைவதோ கோபமடைவதோகூட இயல்புதான் என்பதையும் அவன் கற்றுக்கொள்வான்.

பேசுவதற்கு உங்கள் பருவ வயதுப் பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள். மனந்திறந்து பேச உங்கள் பருவ வயதுப் பிள்ளையை உற்சாகப்படுத்துகையில், ஏதோ கட்டாயப்படுத்துவதுபோல் அவனை உணர வைக்காதீர்கள். அவன் பேசுவதற்குத் தயங்குவது போல் தெரிந்தால், இந்தக் கட்டுரையை அவனுடன் சேர்ந்து நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? அதோடு, இறந்துபோன உங்கள் துணையைப் பற்றிய பல இனிய நினைவுகளை அவனிடம் சொல்லுங்கள். இனி தனியாகக் காலத்தைக் கழிப்பது உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதையும் சொல்லுங்கள். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி நீங்கள் சொல்லும்போது உங்கள் பருவ வயதுப் பிள்ளையும் தன் உணர்ச்சிகளைப் பற்றிச் சொல்லக் கற்றுக்கொள்வான்.

உங்கள் வரம்புகளை அறிந்திருங்கள். வேதனைமிக்க இந்தச் சமயத்தில் உங்கள் பருவ வயதுப் பிள்ளைக்கு உறுதுணையாய் இருக்க விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உங்கள் உயிருக்கு உயிரான துணையை இழந்து நீங்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, கொஞ்ச நாட்களுக்கு உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் நீங்கள் ஓரளவு பலவீனமாய் இருக்கலாம். (நீதிமொழிகள் 24:10) ஆகவே, உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் முதிர்ச்சி வாய்ந்த நண்பர்களையும் உதவிக்கு அழைக்க வேண்டியிருக்கலாம். உதவி கேட்பது ஞானமான செயலாகும். “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என்று நீதிமொழிகள் 11:2 சொல்கிறது.

யெகோவா தேவனே உங்களுக்கு மிகச் சிறந்த உதவி அளிப்பவர்; “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என்பதாக அவரே தம் வணக்கத்தாருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 41:13.

[அடிக்குறிப்பு]

^ குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, பிள்ளையை நாங்கள் ஆண்பாலில் குறிப்பிட்டிருந்தாலும், இதில் சிந்திக்கப்படுகிற நியமங்கள் இருபாலாருக்கும் பொருந்தும்.

[பக்கம் 11-ன் படம்]

உங்கள் துயரம், எதிர்பாராத சமயங்களில் திடீரென கரையில் மோதும் அலைகளைப் போல் இருக்கலாம்