Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிரிகளிடம் அன்பு காட்ட முடியுமா?

எதிரிகளிடம் அன்பு காட்ட முடியுமா?

பைபிளின் கருத்து

எதிரிகளிடம் அன்பு காட்ட முடியுமா?

“நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தகப்பனின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்” என்று இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார்.—மத்தேயு 5:44, 45.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மதம் அன்புக்கும் சமாதானத்துக்கும் வழிவகுக்கிறதா அல்லது பகைமைக்கும் வன்முறைக்கும் வழிவகுக்கிறதா? பகைமைக்கும் வன்முறைக்கும் வழிவகுப்பதாகவே இன்று அநேகர் நினைக்கிறார்கள்; முக்கியமாக அரசியல், இனம், தேசம் ஆகியவற்றோடு மதம் கைகோர்க்கும்போது அப்படி நினைக்கிறார்கள். ஆனாலும், இயேசுவின் வார்த்தைகள் காட்டுகிறபடி, உண்மையிலேயே ‘கடவுளின் பிள்ளைகளாக’ இருப்பவர்கள் கடவுளைப்போல் அன்பு காட்டுகிறார்கள்; தங்களுடைய எதிரிகளிடமும்கூட அப்படி அன்பு காட்டுகிறார்கள்.

“உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; . . . தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று கடவுளுடைய மற்றொரு ஊழியர் குறிப்பிட்டார். (ரோமர் 12:20, 21) ஆனால், பிளவுபட்ட இந்த உலகில் இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவது முடிகிற காரியம்தானா? இதற்கு யெகோவாவின் சாட்சிகள் ‘ஆம்!’ என ஆணித்தரமாகப் பதிலளிக்கிறார்கள். இந்த விஷயத்தில் இயேசுவும் அவருடைய ஆரம்பகால சீடர்களும் எப்படி எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.

எதிரிகளிடம் அன்பு காட்டினார்கள்

கடவுளைப் பற்றிய உண்மையை இயேசு போதித்தபோது, அநேகர் ஆர்வத்தோடு கேட்டார்கள். என்றாலும், மற்றவர்கள் அவரை எதிர்த்தார்கள்; அவர்களில் சிலர் அறியாமையால் அப்படிச் செய்தார்கள். (யோவான் 7:12, 13; அப்போஸ்தலர் 2:36-38; 3:15, 17) ஆனாலும், உயிர்காக்கும் செய்தியை எதிரிகள் உட்பட எல்லாருக்கும் இயேசு அறிவித்துக்கொண்டே இருந்தார். (மாற்கு 12:13-34) ஏன்? சிலர் மனந்திருந்தி, தம்மை மேசியாவாக, அதாவது கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களுக்கு இசைவாக வாழ ஆரம்பிப்பார்கள் என்று அவர் அறிந்திருந்தார்.—யோவான் 7:1, 37-46; 17:17.

எதிரிகள் ஆயுதங்களுடன் வந்து இயேசுவை அநியாயமாகக் கைதுசெய்த அந்த இரவிலும்கூட அவர்கள்மீது அவர் அன்பு காட்டினார். சொல்லப்போனால், அவரைக் கைதுசெய்ய வந்தவர்களில் ஒருவனை அப்போஸ்தலன் பேதுரு வாளால் தாக்கியபோது அவனைக் குணப்படுத்தினார். அந்தச் சமயத்தில், “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்ற ஒரு முக்கிய நியமத்தை அவர் குறிப்பிட்டார்; அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அந்த நியமம் இன்றுவரை ஒரு வழிகாட்டியாக இருந்துவருகிறது. (மத்தேயு 26:48-52; யோவான் 18:10, 11) சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பேதுரு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார். . . . [அவர்] துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, [கடவுளிடம்] தம்மையே ஒப்படைத்தார்.” (1 பேதுரு 2:21, 23) தெளிவாகவே, பழிக்குப் பழி வாங்குவது அல்ல, அன்பு காட்டுவதுதான் கிறிஸ்துவின் உண்மை சீடர்களுக்கு அடையாளம் என்பதை பேதுரு கற்றிருந்தார்.—மத்தேயு 5:9.

‘இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுகிற’ அனைவரும் அவருடைய அன்பான, கனிவான சுபாவத்தை வெளிக்காட்டுகிறார்கள். ‘நம் எஜமானரின் ஊழியக்காரன் சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்கிறவனாகவும், . . . தீங்கைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும்’ இருக்க வேண்டும் என 2 தீமோத்தேயு 2:24 சொல்கிறது. சமாதானமும் சமரசமும் நிலவுகிற கிறிஸ்தவ வாழ்க்கையில் இந்தக் குணங்கள் பளிச்சிடும்.

சமாதானம் பண்ணுகிற ‘கிறிஸ்துவின் தூதுவர்கள்’

அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சக கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாய் இருக்கிறோம்; அதனால், ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ எனக் கிறிஸ்துவின் சார்பில் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:20) தூதுவர்கள், தாங்கள் எந்த நாட்டில் சேவை செய்கிறார்களோ அந்த நாட்டின் அரசியல், ராணுவ விவகாரங்களில் தலையிடுவதில்லை. மாறாக, அவற்றில் நடுநிலை வகிக்கிறார்கள். தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதும் அதன் சார்பாகப் பேசுவதுமே அவர்களுடைய வேலை.

கிறிஸ்துவின் தூதுவர்களாயும் பிரதிநிதிகளாயும் இருப்பவர்கள் இதையே செய்கிறார்கள். அவர்கள் இயேசுவைத் தங்கள் ராஜாவாகக் கருதி, அவருடைய அரசாங்கத்தின் சார்பாகப் பேசுகிறார்கள்; ஆம், அந்தப் பரலோக அரசாங்கத்தின் நற்செய்தியைச் சமாதானத்தோடு அறிவிக்கிறார்கள். (மத்தேயு 24:14; யோவான் 18:36) அதனால்தான், பவுல் தன் காலத்துக் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்தாரைப் போல் போர் செய்வதில்லை. எங்களுடைய போராயுதங்கள் இந்த உலகத்தார் பயன்படுத்துவதைப் போன்ற போராயுதங்கள் அல்ல; ஆனால், அவை கடவுளால் கொடுக்கப்பட்டவை; . . . தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற மேட்டிமையான எல்லாவற்றையும்” “தகர்த்தெறிவதற்கு வல்லமை பெற்றவை.”—2 கொரிந்தியர் 10:3-5; எபேசியர் 6:13-20.

பவுல் இந்த வார்த்தைகளை எழுதிய சமயத்தில், அநேக நாடுகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால், பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டினார்கள்; அதோடு, கேட்க மனமுள்ள எல்லாருக்கும் கடவுளோடு சமரசமாவதைக் குறித்த செய்தியைத் தொடர்ந்து அறிவித்தார்கள். மதம் மற்றும் போர் சம்பந்தமான தகவல் களஞ்சியம் (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “இயேசுவைப் பின்பற்றிய ஆரம்பகால சீடர்கள் போரிலும் ராணுவத்திலும் ஈடுபட மறுத்தார்கள்; இவற்றில் ஈடுபடுவது, “அன்பு காட்டும்படி இயேசு கற்றுக்கொடுத்த நெறிமுறைக்கும் எதிரிகளை நேசிக்கும்படி அவர் கொடுத்த கட்டளைக்கும் எதிரானது” என்பதை அறிந்து அவ்வாறு செய்தார்கள். *

ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே யெகோவாவின் சாட்சிகளும் இயேசுவைத் தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொள்கிறார்கள். சீக்கிரத்திலேயே பூமியில் நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரவிருக்கும் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ராஜாவாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) ஆகவே, தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் போல அவர்கள் அந்த அரசாங்கத்தின் மகத்துவங்களை அறிவிக்கிறார்கள். அதே சமயத்தில், தாங்கள் வசிக்கிற நாட்டில் நல்ல குடிமக்களாய் இருக்க முயலுகிறார்கள், அந்நாட்டு வரிகளைச் செலுத்துகிறார்கள், கடவுளுடைய சட்டங்களுக்கு முரண்படாத அரசாங்கச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29; ரோமர் 13:1, 7.

ஆனால் வருத்தகரமாக, ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போல யெகோவாவின் சாட்சிகளும் சில சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள், அவதூறாகப் பேசப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். அப்படியிருந்தும், அவர்கள் பழிக்குப் பழி வாங்குவதே இல்லை. மாறாக, எதிரிகளில் சிலர் ‘கடவுளோடு சமரசமாகி’ முடிவில்லா வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ‘எல்லாரோடும் சமாதானமாயிருக்க’ முயலுகிறார்கள். *ரோமர் 12:18; யோவான் 17:3. (g09-E 11)

[அடிக்குறிப்புகள்]

^ “கான்ஸ்டன்டைனின் [ரோமப் பேரரசர் கி.பி. 306-337] காலத்திற்கு முன் வாழ்ந்த கிறிஸ்தவ எழுத்தாளர்கள், போரில் இரத்தம் சிந்துவதை ஒருமனதாய்க் கண்டனம் செய்தார்கள்” என்று மதம் மற்றும் போர் சம்பந்தமான தகவல் களஞ்சியம் சொல்கிறது. பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட விசுவாசதுரோகம் எங்கும் தலைதூக்கியபோது இந்தக் கருத்து மாறியது.—அப்போஸ்தலர் 20:29, 30; 1 தீமோத்தேயு 4:1.

^ முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல யெகோவாவின் சாட்சிகளும் தேவைப்படும் சமயங்களில் மத சுதந்திரத்திற்காகச் சட்டப்பூர்வமாய் வழக்காடுகிறார்கள்.—அப்போஸ்தலர் 25:11; பிலிப்பியர் 1:7.

நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

◼ கிறிஸ்தவர்கள் தங்களுடைய எதிரிகளை எப்படி நடத்த வேண்டும்?—மத்தேயு 5:43-45; ரோமர் 12:20, 21.

◼ துன்புறுத்தப்பட்டபோது இயேசு எப்படி நடந்துகொண்டார்?—1 பேதுரு 2:21, 23.

◼ ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஏன் போரில் ஈடுபடவில்லை?—2 கொரிந்தியர் 5:20; 10:3-5.