Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தூள்பறக்கும் தொழில்நுட்பம்

தூள்பறக்கும் தொழில்நுட்பம்

தூள்பறக்கும் தொழில்நுட்பம்

அல்பேனியாவில், ஒரு கிழவர் கழுதைமீது சவாரி செய்வார்; ஆனால், செல்ஃபோனில் அரட்டை அடித்துக்கொண்டு செல்வார். இந்தியாவில், ஒரு பிச்சைக்காரன் கைநீட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருப்பான்; ஆனால், இடையிடையே செல்ஃபோனில் பந்தாவாகப் பேசிக்கொண்டிருப்பான். ஆம், செல்ஃபோன், கம்ப்யூட்டர், டிவி என தொழில்நுட்பம் எட்டுத்திக்கும் தூள்பறக்கிறது; சொல்லப்போனால், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி அது அநேகருடைய வாழ்க்கையின் அங்கமாகவே ஆகியிருக்கிறது.

உலகில் எக்கச்சக்கமாக வலம்வருகிற செல்ஃபோன்கள், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய அதிநவீன செல்ஃபோன்களின் சேவையை அடுக்கிக்கொண்டே போகலாம்; அவற்றில், இன்டர்நெட்டை அலச முடியும், ஈ-மெயில்களையும் மெஸேஜ்களையும் பெறவோ அனுப்பவோ முடியும், டிவி பார்க்க முடியும், இசையைக் கேட்க முடியும், ஃபோட்டோ பிடிக்க முடியும், உலகளாவிய இடமறிதல் முறையை (GPS) பயன்படுத்தி இடங்களைக் கண்டுபிடிக்க முடியும், முக்கியமாக, மற்றவர்களிடம் பேசவும் முடியும்!!

வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான அறிக்கையின்படி, ஒரு மல்டிமீடியா ஸ்மார்ட்ஃபோன் “1965-ல், வட அமெரிக்க விமானப்படை பயன்படுத்திய கம்ப்யூட்டரைவிட அதிக திறன் படைத்ததாய் இருக்கிறது.” அதோடு, “இப்போது உலகில் இருவருக்கு ஒன்று என்ற விகிதத்தில் செல்ஃபோன்கள் இருப்பதாக” அது குறிப்பிடுகிறது; அதுமட்டுமல்ல, குறைந்தபட்சம் 30 நாடுகளிலாவது ஃபோன்களின் எண்ணிக்கை மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. ஆம், “தொழில்நுட்பம் சரித்திரம் காணாதளவுக்குப் பாரெங்கும் படுவேகமாகப் பரவிவருவதை” நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.

உலகெங்கும் செல்ஃபோனைப் பயன்படுத்துகிறவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் வளரும் நாடுகளில் இருக்கிறார்கள்; இவ்வாறு, அந்நாடுகளில் பெரும்பாலோர் பயன்படுத்துகிற அதிநவீன பேச்சுத்தொடர்பு சாதனங்களில் செல்ஃபோன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. உதாரணமாக, 2008-ன்போது ஆப்கானிஸ்தானில் சுமார் 1,40,000 பேர் ஒரு மாதத்தில் செல்ஃபோன் வாடிக்கையாளர்களாக ஆனார்கள்; அதேபோல், சமீப வருடங்களில் ஆப்பிரிக்காவில் செல்ஃபோனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏறத்தாழ 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

பேச்சுத்தொடர்பு புரட்சியால் சில தீய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. செல்ஃபோன், பேஜர், லாப்டாப் ஆகியவற்றை எங்கும் எச்சமயத்திலும் பயன்படுத்த முடிந்தாலும், ஓர் எலக்ட்ரானிக் வலைக்குள் மாட்டிக்கொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இன்னும் சிலர், மற்றவர்களைத் தொடர்புகொள்ளவும் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஆலாய்ப் பறப்பதால் இப்படிப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள்.

“அடிமைப்படுதல்,” கவனச்சிதறல், தடங்கல் யாவும் நவீன பேச்சுத்தொடர்பு சாதனங்களாலும் மீடியா தொழில்நுட்பத்தாலும் வருகிற பிரச்சினைகள் என்பதை எல்லாரும் அறிந்திருக்கலாம். * ஆனால், இந்தச் சாதனங்களால் பெருமளவு பயன்களும் விளைவடையலாம். அப்படியானால், இவற்றை எப்படிச் சமநிலையாகவும் ஞானமாகவும் பயன்படுத்தலாம்? அடுத்துவரும் கட்டுரைகள் அதற்குப் பதிலளிக்கும். (g09-E 11)

[அடிக்குறிப்பு]

^ செல்ஃபோன், கம்ப்யூட்டர், டிவி போன்ற சாதனங்களைப் பற்றியே இந்தத் தொடர்கட்டுரைகளில் சிந்திக்கப்படுகின்றன.