Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாரபட்சத்தை வெல்லும் அன்பு

பாரபட்சத்தை வெல்லும் அன்பு

பாரபட்சத்தை வெல்லும் அன்பு

“புது விதமான ஒரு மதத் தொகுதியினர் சரித்திரத்தில் முதன்முறையாக உருவானார்கள்: அந்தத் தொகுதியினர் தேசாபிமானத்தை ஒரு மதம் போல் கருதுவதில்லை, மாறாக இந்தத் தன்னார்வத் தொகுதியினர் சமூக, இன, தேசிய வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளினார்கள்: ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தவிர மற்றெந்த வேறுபாடுமில்லாமல் தங்கள் கடவுளை வணங்க அவர்கள் கூடிவந்தார்கள்.”—பால் ஜான்சன் எழுதிய கிறிஸ்தவத்தின் சரித்திரம் (ஆங்கிலம்).

ரோமப் பேரரசு முழுவதும் உண்மைக் கிறிஸ்தவம் பரவியபோது வியப்பூட்டும் ஒன்றை மக்கள் பார்த்தார்கள்; உண்மையான சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் ஒரே குடும்பம்போல் வாழக் கற்றுக்கொண்ட ஒரு சர்வதேச மதத் தொகுதியினரை அவர்கள் பார்த்தார்கள். இந்தக் குடும்பத்தார் சமாதானமாய் இருந்ததற்குக் காரணம், அவர்கள் காட்டிய உண்மையான அன்பு; அந்த அன்பு, உணர்ச்சியின் அடிப்படையில் அமையாமல் கடவுள் கற்பித்த நியமங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

அந்த நியமங்களைச் சொல்லாலும் செயலாலும் கற்பித்த இயேசுவே பகைமைக்கும் பெரும் பாரபட்சத்திற்கும் ஆளானார். (1 பேதுரு 2:21-23) அதற்கு முதல் காரணம், அவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தார்; கலிலேயர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் இருந்தார்கள்; இவர்களை எருசலேமிலிருந்த யூத மதத் தலைவர்கள் ஏளனமாய்க் கருதினார்கள். (யோவான் 7:45-52) இரண்டாவது காரணம், பொது மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தலைசிறந்த போதகராய் இயேசு இருந்தார். அதனால், ரொம்பவே பொறாமைப்பட்ட மதத் தலைவர்கள், அவரைப் பற்றிய பொய்களைப் பரப்பி, அவரைக் கொலை செய்வதற்கும்கூட சதித்திட்டம் தீட்டினார்கள்!—மாற்கு 15:9, 10; யோவான் 9:16, 22; 11:45-53.

இருந்தாலும் இயேசு, ‘தீமைக்குத் தீமை செய்யவில்லை.’ (ரோமர் 12:17) உதாரணத்திற்கு, அவரை எதிர்த்த யூத மதத் தொகுதியினரான பரிசேயர்களில் சிலர் உண்மை மனதோடு அவரை அணுகி கேள்விகள் கேட்டபோது அவர் கனிவோடு பதிலளித்தார். (யோவான் 3:1-21) அவர் பரிசேயர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் செய்தார்; அதுவும் அவரிடம் ஓரளவு பாரபட்சம் காட்டிய ஒரு பரிசேயனோடு. அவன் எப்படிப் பாரபட்சம் காட்டினான்? அந்தக் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினரின் பாதங்களைக் கழுவுவது வழக்கமாய் இருந்தது; ஆனால், இயேசுவுக்கு அதைச் செய்ய அந்தப் பரிசேயன் தவறினான். அதற்காக இயேசு கோபித்துக்கொண்டாரா? இல்லை. சொல்லப்போனால், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கரிசனை காட்டுவதையும், மன்னிப்பதையும் பற்றிய ஓர் அருமையான பாடத்தைக் கற்பித்தார்.—லூக்கா 7:36-50; 11:37.

வெறுக்கப்பட்டவர்களை இயேசு நேசித்தார்

இயேசு சொன்ன உவமைகளில் மிகப் பிரபலமானது நல்ல சமாரியர் பற்றிய உவமையாகும்; அதில், திருடர்களால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட ஒரு யூதனுக்குத் தேவையானவற்றை அந்தச் சமாரியர் தன் சொந்த செலவில் செய்ததைப் பற்றி வாசிக்கிறோம். (லூக்கா 10:30-37) அந்தச் சமாரியரின் செயல் ஏன் மிகவும் மெச்சத்தக்கதாய் இருந்தது? நிஜ வாழ்க்கையில் யூதர்களும் சமாரியர்களும் ஒருவரையொருவர் வெறுத்தார்கள். சொல்லப்போனால், அவமதிப்பு காட்டுவதற்காகவே “சமாரியன்” என்ற வார்த்தையை யூதர்கள் அடிக்கடி பயன்படுத்தினார்கள்; ஒரு முறை அதை அவர்கள் இயேசுவுக்கே பயன்படுத்தினார்கள். (யோவான் 8:48) அந்தச் சூழ்நிலையில், சக மனிதரிடம் பாரபட்சமில்லாமல் அன்பு காட்டுவதன் அவசியத்தை விளக்க இதைவிட சக்திவாய்ந்த எந்த உவமையையும் இயேசு பயன்படுத்தியிருக்க முடியாது.

இயேசு தாம் சொன்னதைச் செய்தும் காட்டினார்; தொழுநோயாளியாய் இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். (லூக்கா 17:11-19) அதோடு, ஆர்வம் காட்டிய மற்ற சமாரியர்களுக்கு அவர் போதித்தார்; ஒரு சமாரியப் பெண்ணிடம் அவர் நீண்ட நேரம் உரையாடியது மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவமாகும். (யோவான் 4:7-30, 39-42) ஏன் அப்படிச் சொல்கிறோம்? பொதுவிடங்களில் எந்தப் பெண்ணுடனும், நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுடனும்கூட, பேசக்கூடாது என்பதில் யூத ரபீக்கள் கறாராக இருந்தார்கள்; அப்படியிருக்கையில், சமாரியப் பெண்ணிடம் பேசுவதைப் பற்றி அவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்!

என்றாலும், பாரபட்ச மனப்பான்மையை மனதிலிருந்து அகற்ற போராடிக்கொண்டிருக்கிற ஒருவரைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? மீண்டும் பைபிள் இந்த விஷயத்தில் ஆறுதலளிக்கும் பதிலைத் தருகிறது.

கடவுள் நம்மிடம் பொறுமையோடு இருக்கிறார்

முதல் நூற்றாண்டில், யூதரல்லாத ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மாறி வந்தார்கள்; ஆனால், யூதர்களுக்கு யூதரல்லாதவர்களிடம் நீண்ட காலமாகவே தப்பெண்ணம் இருந்து வந்தது; இதன் காரணமாக, யூதக் கிறிஸ்தவர்கள் பலர் யூதரல்லாத கிறிஸ்தவர்களிடம் ஆரம்பத்தில் பாரபட்சம் காட்டினார்கள். பிரிவினை ஏற்படுத்தவிருந்த இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யெகோவா தேவன் என்ன செய்தார்? அவர் கிறிஸ்தவச் சபையில் இருந்தவர்களுக்குப் பொறுமையோடு கற்பித்தார். (அப்போஸ்தலர் 15:1-5) அவருடைய பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்தது; இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட விதமாக, அந்தக் கிறிஸ்தவர்கள், “சமூக, இன, தேசிய வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளினார்கள்.” இதனால், “சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தன, விசுவாசிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வந்தது.”—அப்போஸ்தலர் 16:5.

இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் சோர்ந்து போகாமல், எப்போதும் கடவுளைச் சார்ந்திருக்க வேண்டும்; அவர், ‘விசுவாசத்தோடு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு’ ஞானத்தையும் மன பலத்தையும் தாராளமாய்க் கொடுக்கிறார். (யாக்கோபு 1:5, 6) முதல் கட்டுரையில், ஜெனீஃபர், தீமோத்தி, ஜான், ஆல்கா ஆகியோரைப் பற்றி வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஜெனீஃபர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒரு கிறிஸ்தவளாகப் பக்குவப்பட்டிருந்தாள்; அவளுடைய இனத்தையும் உயரத்தையும் மற்றவர்கள் கேலிகிண்டல் செய்தபோது அவற்றைப் பொருட்படுத்தாதிருக்கக் கற்றிருந்தாள். சீக்கிரத்திலேயே, வேறொரு பெண்ணை அவளுடைய சக மாணவர்கள் கேலிகிண்டல் செய்தபோது, அவளுக்காக ஜெனீஃபர் பரிந்துபேசி, அவளை ஆறுதல்படுத்தினாள்.

தீமோத்தியின் இனத்தை சக மாணவர்கள் ஏளனம் செய்தபோது, கோபப்படாமலிருக்க எது அவனுக்கு உதவியது? அவன் இவ்வாறு சொல்கிறான்: “யெகோவா தேவனின் பெயருக்கு எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் கவனமாய் இருந்தேன். அதோடு, தீமை நம்மை வெல்லும்படி விடாமல் ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்ல’ வேண்டும் என்பதையும் மனதில் வைத்திருந்தேன்.”—ரோமர் 12:21.

ஹௌசா இனத்தைச் சேர்ந்த சக மாணவனிடம் பாரபட்சம் காட்டுவதை ஜான் நிறுத்திக்கொண்டான். அவன் இவ்வாறு சொல்கிறான்: “டீனேஜராக இருந்தபோது ஹௌசா இன மாணவர்கள் சிலரைச் சந்தித்தேன்; அவர்கள் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களில் ஒரு மாணவனுடன் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்தேன்; எங்களுக்கு நன்றாக ஒத்துப்போனது. இப்போது நான் மற்றவர்களை வேறு இனத்தாராகப் பார்க்காமல் சக மனிதராகப் பார்க்க முயற்சி செய்கிறேன்.”

ஆல்காவும் அவரோடு சேர்ந்து மிஷனரி ஊழியம் செய்தவரும், வெறுப்போடு தங்களைத் துன்புறுத்திய எதிரிகளைக் கண்டு பயந்து போகவில்லை; மாறாக, சிலராவது பைபிள் செய்திக்குச் செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஆனால், பலர் செவிசாய்த்தார்கள். ஆல்கா இவ்வாறு சொல்கிறார்: “சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, ஒருவர் என்னிடம் வந்து அழகான பை ஒன்றைக் கொடுத்தார். அதனுள் சிறிய கற்கள் இருந்தன; அவற்றில், நல்மனம், கருணை, அன்பு, சமாதானம் போன்ற கிறிஸ்தவ குணங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவர் அந்தப் பையைக் கொடுத்துவிட்டு, என்மீது கற்களை வீசிய மாணவர்களில் தான் ஒருவன் என்றும் இப்போது ஒரு கிறிஸ்தவச் சகோதரன் என்றும் என்னிடம் சொன்னார். அவரும் அவருடைய மனைவியும் அந்தப் பையோடு சேர்த்து இரண்டு டஜன் வெள்ளை ரோஜாக்களையும் எனக்குக் கொடுத்தார்கள்.”

பாரபட்சமும் பாகுபாடும் இல்லாத காலம்!

விரைவில், பாரபட்சமும் பாகுபாடும் சுவடுதெரியாமல் மறைந்துவிடும். எப்படி? முதலாவதாக, ‘கண் கண்டபடி நியாயந்தீர்க்காதவர்’ என்பதை நிரூபித்துக் காட்டிய இயேசு கிறிஸ்து மட்டுமே இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்வார். (ஏசாயா 11:1-5) இரண்டாவதாக, இயேசுவின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கப்போகிறவர்கள் அவருடைய குணத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே வெளிக்காட்டுவார்கள்; ஏனென்றால், அவர்கள் எல்லாரும் இயேசுவாலும் அவருடைய தகப்பனாகிய யெகோவா தேவனாலும் போதிக்கப்பட்டிருப்பார்கள்.—ஏசாயா 11:9.

ஆகவே, கடவுளுடைய மக்கள் புத்தம் புதிய பூமியில் வாழ்வதற்குத் தயாராகும்படி இப்போதிருந்தே போதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த இலவச போதனையிலிருந்து பயனடைவதற்கு நீங்களும் ஏன் பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கக் கூடாது? * கடவுள் பாரபட்சம் காட்டாதவர்; பலதரப்பட்ட ஆட்களும், “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” அவருடைய சித்தம்.—1 தீமோத்தேயு 2:3, 4. (g09-E 08)

[அடிக்குறிப்பு]

^ உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் பைபிளை இலவசமாய்க் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபையையோ 5-ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிளை அலுவலகங்களில் ஒன்றையோ தொடர்புகொள்ளுங்கள். அல்லது www.watchtower.org. என்ற வெப்சைட்டில் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.

[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]

மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் பாரபட்சமும் பாகுபாடும் விரைவில் சுவடுதெரியாமல் மறைந்துபோகும்

[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]

வாழ்க்கைக்கு உதவும் தெய்வீக நியமங்கள்

“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; . . . தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.” (ரோமர் 12:17-21) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்கள் நம்மிடம் மோசமாக நடந்துகொண்டாலும் நாம் அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டும். “[அவர்கள்] காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். ஆனால், அவர்களை அவர் வெறுக்கவில்லை.—யோவான் 15:25.

“வறட்டு கௌரவம் பார்க்காமலும், . . . ஒருவர்மீது ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.” (கலாத்தியர் 5:26) வயிற்றெரிச்சலும் பெருமையும் ஆன்மீக ரீதியில் தீங்கிழைத்து, பெரும்பாலும் பகைமைக்கும் பாரபட்சத்திற்கும் வழிநடத்தும்.—மாற்கு 7:20-23.

“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” (மத்தேயு 7:12) ‘நான் எப்படி நடத்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். வயது, நிறம், மொழி, கலாச்சாரம் என எதையும் பார்க்காமல் மற்றவர்களையும் அப்படியே நடத்துங்கள்.

“கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல் நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.” (ரோமர் 15:7) வித்தியாசப்பட்ட பின்னணிகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்தவர்களை, முக்கியமாக அப்படிப்பட்ட சக வணக்கத்தாரை, பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்களா?—2 கொரிந்தியர் 6:11.

“என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் நீங்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் நிலைத்திருந்தால் அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.

[பக்கம் 7-ன் படம்]

கொள்ளையடிக்கப்பட்ட ஒரு யூதனுக்கு உதவ நல்ல சமாரியர் ஒருவர் முன்வருகிறார்