Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாரபட்சமும் பாகுபாடும் ஆணிவேரை அடையாளங்காணுதல்

பாரபட்சமும் பாகுபாடும் ஆணிவேரை அடையாளங்காணுதல்

பாரபட்சமும் பாகுபாடும் ஆணிவேரை அடையாளங்காணுதல்

“எல்லா மனிதர்களும் பிறப்பிலேயே சுதந்திரத்தையும், சம மதிப்பையும், சம உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் போல் பழக வேண்டும்.” —மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி, பிரிவு 1.

இப்படிப்பட்ட உயர்ந்த லட்சியம் இருந்தாலும், பாரபட்சமும் பாகுபாடும் மனிதகுலத்தைக் கூறுபோடுகின்றன. இந்த வருந்தத்தக்க நிலை, நாம் கொடிய காலத்தில் வாழ்வதை மட்டுமல்ல, பாவத்தன்மை உள்ளவர்களாய் இருப்பதையும் காட்டுகிறது. (சங்கீதம் 51:5) நம்மைச் சுற்றிக் காணப்படுகிற பாகுபாட்டை நம்மால் சரிசெய்ய முடியாமல் போகலாம் என்பது உண்மைதான்; ஆனால், பாரபட்சம் காட்டும் மனப்பான்மை ஒருவேளை நம்மிடம் இருந்தால் அதை வேரோடு பிடுங்கிப் போட நாம் பாடுபடலாம்.

அதற்கு முதற்படி, பாரபட்சம் காட்டுகிற குணம் நம் எல்லாரிடமுமே தலைதூக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதாகும். பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் புரிந்துகொள்ளுதல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பாரபட்சம் சம்பந்தமான ஆய்விலிருந்து பெற்ற மிக முக்கியமான முடிவுகள் இவை எனலாம்: (1சிந்திக்கும் திறனும் பேச்சுத் திறனும் உள்ள எந்த மனிதனுக்குமே பாரபட்சம் காட்டும் இயல்பு உண்டு, (2) பாரபட்சம் காட்டாதிருக்க, பெரும்பாலும் அதைப் பற்றிய உணர்வும் திட்டவட்டமான முயற்சியும் அவசியம், (3) உத்வேகம் இருந்தால் அதைச் செய்ய முடியும்.”

பாரபட்சத்தை விரட்டியடிக்க கல்வி “மிகச் சக்திவாய்ந்த கருவி” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, சரியான கல்வி பாரபட்சத்தின் ஆணிவேரை அடையாளம் காணவும், நம்முடைய மனப்பான்மைகளைப் பரந்த மனதுடன் ஆராயவும், பாரபட்சத்திற்கு நாம் பலியாகியிருந்தால் ஞானமாய் நடந்துகொள்ள நமக்கு உதவவும் முடியும்.

ஆணிவேரை அடையாளங்காணுதல்

பாரபட்சம் காட்டுகிறவர்கள் தங்களுக்கென சில கருத்துகளை உருவாக்கி வைத்துக்கொண்டு, உண்மைகளைத் திரித்துக்கூறுகிறார்கள், தவறாக விளக்குகிறார்கள், சொல்லப்போனால், புறக்கணிக்கிறார்கள். நல்லதாகத் தெரிந்தாலும் தவறாக இருக்கிற குடும்ப நெறிமுறைகளால் பாரபட்ச மனப்பான்மை தோன்றலாம்; அல்லது, பிறருடைய இனத்தையோ கலாச்சாரத்தையோ பற்றித் தவறான கருத்துகளை வேண்டுமென்றே பரப்புகிற ஆட்களால் அது தலைதூக்கலாம். நாட்டுப்பற்றாலும் பொய் மத போதனைகளாலும்கூட அது ஊக்குவிக்கப்படலாம். மட்டுக்குமீறிய தற்பெருமையாலும் அது விளையலாம். பின்வரும் குறிப்புகளையும் அதற்குரிய பைபிள் நியமங்களையும் நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் குணங்களை நீங்களே சோதித்துப் பார்த்து, ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என ஏன் சிந்திக்கக் கூடாது?

சகவாசம். மனிதர்கள் கூடிப் பழகும் இயல்புள்ளவர்கள்; அது நல்ல குணம்தான். சொல்லப்போனால், “பிறரோடு ஒத்து வாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்,” நடைமுறை ஞானத்தைக்கூட அலட்சியம் செய்கின்றார் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 18:1, பொது மொழிபெயர்ப்பு) என்றாலும், நம்முடைய நண்பர்களை ஞானமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டும்; ஏனெனில், நம்மீது அவர்கள் பலத்த செல்வாக்கு செலுத்தலாம். எனவே, ஞானமுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அதிக அக்கறை எடுக்கிறார்கள். மூன்று வயதுள்ள பிள்ளைகள்கூட இனப் பாகுபாட்டைக் காட்ட ஆரம்பிக்கலாம் என ஆய்வுகள் காட்டுகின்றன; அவர்கள் மற்றவர்களுடைய மனப்பான்மைகள், வார்த்தைகள், செய்கைகள் ஆகியவற்றைக் கவனித்து அப்படிப் பாகுபாட்டைக் காட்டக் கற்றுக்கொள்ளலாம். நல்ல குணங்களைப் பிள்ளையிடம் வளர்ப்பதில் பொதுவாகப் பெற்றோருக்குத்தான் மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து, பிள்ளைகள்மீது நல்ல செல்வாக்கு செலுத்த அரும்பாடுபட வேண்டும்.

◼ பைபிள் என்ன சொல்கிறது? “ஒரு பிள்ளை இளமையாக இருக்கும் போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்த பிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.” (நீதிமொழிகள் 22:6, ஈஸி டு ரீட் வர்ஷன்) “ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவார்; மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.” (நீதிமொழிகள் 13:20, பொ.மொ.) நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியானால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய பார்வையில் சரியானதும் நேரானதுமான பாதையில் என் பிள்ளைகளை நான் நடத்துகிறேனா? நல்லது செய்ய என்னைத் தூண்டுகிறவர்களுடன் நான் சகவாசம் வைக்கிறேனா? மற்றவர்கள்மீது நான் நல்ல செல்வாக்கு செலுத்துகிறேனா?’—நீதிமொழிகள் 2:1-9.

நாட்டுப்பற்று. நாட்டுப்பற்றை ஓர் அகராதி இவ்வாறு விளக்குகிறது: “ஒரு நாட்டைவிட மற்றொரு நாடு மேலானது என்ற தேசிய உணர்வு; பிற நாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், சொந்த நாட்டின் கலாச்சாரத்தையும் நலனையும் முன்னேற்றுவிப்பதில் குறியாக இருப்பது.” ஆட்சியியல் பேராசிரியரான ஈவோ டியூகாசெக் என்பவர் நாடுகளுக்கு இடையே மோதலும் ஒற்றுமையும் என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “நாட்டுப்பற்று, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத தொகுதிகளாக மனிதகுலத்தைக் கூறுபோட்டிருக்கிறது. அதனால், மக்கள் தங்களை அமெரிக்கர், ரஷ்யர், சீனர், எகிப்தியர், அல்லது பெரு நாட்டவர் என்றே முதலாவது நினைக்கிறார்களே தவிர, தாங்கள் மனிதர்கள் என்பதை முதலாவது நினைப்பது இல்லை.” ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் இவ்வாறு எழுதினார்: “இன்று நாம் எதிர்ப்படுகிற பெரும்பாலான பிரச்சினைகள், தவறான மனப்பான்மைகளால் விளைகின்றன; பெரும்பாலும் நம்மை அறியாமலேயே அவற்றை நாம் வளர்த்துக்கொள்கிறோம். அவற்றில் ஒன்றே, ‘சரியோ தவறோ, என் நாடு என் நாடுதான்’ என்ற குறுகிய கண்ணோட்டமுடைய நாட்டுப்பற்று.”

◼ பைபிள் என்ன சொல்கிறது? “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது [எல்லா மனிதர்கள் மீதும்] அன்பு காட்டினார்.” (யோவான் 3:16) “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.” (அப்போஸ்தலர் 10:34, 35) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் என்னையும் சேர்த்து எல்லா தேசத்தாரிடமும் பாரபட்சமில்லாமல் அன்பு காட்டுகிறார் என்றால், நானும் அவரைப் போல் இருக்க முயற்சி செய்ய வேண்டாமா? அதுவும், அவர்மீது உண்மையிலேயே பயபக்தி இருந்தால் நான் அப்படி முயற்சி செய்ய வேண்டாமா?’

இனப்பற்று. “மனித இயல்பில் அல்லது திறமையில் வேறுபாடுகள் இருப்பதற்கு இனமே காரணம் என்றும் ஓர் இனத்தைவிட மற்றொன்று உயர்ந்தது என்றும்” இனப்பற்று உள்ளவர்கள் நம்புவதாக ஓர் அகராதி குறிப்பிடுகிறது. இருப்பினும், “அப்படி [இனத்தை] உயர்வாகப் பேசுவதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதையும் [ஆராய்ச்சியாளர்கள்] கண்டுபிடிக்கவில்லை” என்று த உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. இனப்பற்று, சக மனிதர்களுடைய உரிமைகளை மறுப்பது போன்ற மிகப் பெரிய கொடுமைகளை இழைக்கிறது; இனப்பற்று பொய்களையே அஸ்திவாரமாகக் கொண்டிருப்பதற்கு இந்தக் கொடுமைகள் வேதனைக்குரிய அத்தாட்சியாய் இருக்கின்றன.

◼ பைபிள் என்ன சொல்கிறது? “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) கடவுள் ‘ஒரே மனிதனிலிருந்து எல்லாத் தேசத்தாரையும் உண்டு பண்ணினார்.’ (அப்போஸ்தலர் 17:26) “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எல்லா மனிதர்களையும் கடவுள் கருதுவது போல் நானும் கருதுகிறேனா? வேறு இனத்தையோ கலாச்சாரத்தையோ சேர்ந்தவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களில் சிலரிடம் நெருங்கிப் பழக நான் முயற்சி செய்கிறேனா?’ தனிப்பட்ட விதத்தில் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, அவர்களைப் பற்றிய தவறான கருத்துகளை நம் மனதைவிட்டு அகற்ற ஆரம்பிப்போம்.

மதம். பாரபட்சத்தின் இயல்பு என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மனிதர்கள் தங்கள் [தன்னல நாட்டங்களையும்], இனம் சார்ந்த தன்னல ஆசைகளையும் நியாயப்படுத்த தங்கள் மதத்தைக் காரணம் காட்டும்போது கடைசியில் அட்டூழியங்கள்தான் நிகழ்கின்றன. அப்போது மதமும் பாரபட்சமும் கைகோர்க்கின்றன.” முக்கியமாய், மதப்பற்றுள்ள ஆட்கள் பலர் வெகு சீக்கிரத்தில் “கடவுள் மீதுள்ள பக்தியை விட்டுவிட்டு பாரபட்சம் காட்டுகிறவர்களாக மாறுவதுபோல் தெரிவது” ஆச்சரியத்தை அளிக்கிறது என்றும் அதே புத்தகம் சொல்கிறது. இந்த வார்த்தைகளுக்கு அத்தாட்சி அளிக்கும் விதத்தில், ஒவ்வொரு இனத்தாருக்கும் தனித்தனி சர்ச்சுகள் இருக்கின்றன, மதத் தொகுதிகளுக்கு இடையே பகைமையும் வன்முறையும் நிலவுகின்றன, மதம் தூண்டுவிக்கிற பயங்கரமான செயல்கள் நடக்கின்றன.

◼ பைபிள் என்ன சொல்கிறது? “பரலோகத்திலிருந்து [கடவுளிடமிருந்து] வருகிற ஞானமோ . . . சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், . . . பாரபட்சமற்றதாகவும், . . . இருக்கிறது.” (யாக்கோபு 3:17) ‘உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் [மத] சத்தியத்தோடும் வணங்குவார்கள்.’ (யோவான் 4:23) “உங்கள் எதிரிகளிடம் . . . அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக . . . ஜெபம் செய்யுங்கள்.” (மத்தேயு 5:44) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னைப் புண்படுத்த விரும்புகிறவர்கள் உட்பட எல்லாரிடமும் உண்மையான அன்பு காட்ட என்னுடைய மதம் ஊக்குவிக்கிறதா? நாடு, நிறம், பாலினம், வருமானம், அல்லது அந்தஸ்து என எதையும் பார்க்காமல், எல்லா விதமான ஆட்களையும் என்னுடைய சர்ச் ஏற்றுக்கொள்கிறதா?’

பெருமை. பெருமையின் காரணமாக, மிதமிஞ்சிய தன்மானம் அல்லது தலைக்கனம் உள்ளவர்கள் எளிதில் தப்பெண்ணத்தோடு நடந்துகொள்ள ஆரம்பிக்கலாம். உதாரணமாக, பெருமை உள்ளவர், ‘நான் எல்லாரையும்விட உயர்ந்தவன்/ள்’ என்று நினைக்கலாம் அல்லது அதிகம் படிக்காதவர்களையோ ஏழ்மையில் வாடுகிறவர்களையோ ஏளனமாகப் பார்க்கலாம். அதோடு, தன்னுடைய நாட்டை அல்லது இனத் தொகுதியை உயர்த்திப் பேசும் பிரச்சாரங்களை நம்பும்படி தூண்டப்படலாம். நாசி சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் போன்ற சாமர்த்தியமான பிரச்சாரகர்கள், தேசப் பெருமையையும் இனப் பெருமையையும் வேண்டுமென்றே ஊக்குவித்தார்கள்; மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் வித்தியாசமானவர்களாகவோ விரும்பத்தகாதவர்களாகவோ கருதப்பட்டவர்களுக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவும் அவ்வாறு ஊக்குவித்தார்கள்.

◼ பைபிள் என்ன சொல்கிறது? “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (நீதிமொழிகள் 16:5) “எதையும் பகைமையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள்; மற்றவர்களை உங்களைவிட மேலானவர்களாகக் கருதுங்கள்.” (பிலிப்பியர் 2:3) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சொந்த இனத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசப்படுவதைக் கேட்டாலோ மற்ற இனங்களைப் பற்றி இகழ்ந்து பேசப்படுவதைக் கேட்டாலோ நான் உள்ளூர சந்தோஷப்படுகிறேனா? என்னிடமில்லாத திறமைகள் மற்றவர்களிடமிருந்தால் நான் பொறாமைப்படுகிறேனா, அல்லது அவர்களுடைய திறமைகளைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேனா?’

பைபிள் சரியான காரணத்துடனேயே பின்வருமாறு எச்சரிக்கிறது: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) எனவே, உங்கள் இருதயத்தை விலைமதிப்புமிக்க பொக்கிஷமாய்க் கருதுங்கள், எதுவும் அதைக் கெடுக்க இடமளிக்காதீர்கள்! மாறாக, கடவுள் தரும் ஞானத்தால் அதை நிரப்புங்கள். அப்போது மட்டுமே, ‘நல்யோசனையும் புத்தியும் உங்களைப் பாதுகாக்கும். அதினால் நீங்கள் துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும் [தப்புவிக்கப்படுவீர்கள்].’—நீதிமொழிகள் 2:10-12.

ஒருவேளை, நீங்கள் பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் பலியாகியிருந்தால் என்ன செய்வது? இதை அடுத்த கட்டுரை சிந்திக்கும். (g09-E 08)

[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]

தனிப்பட்ட விதத்தில் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, அவர்களைப் பற்றிய தவறான கருத்துகளை நம் மனதைவிட்டு அகற்ற ஆரம்பிப்போம்