கடவுள் நம்பிக்கை நியாயமானதா?
கடவுள் நம்பிக்கை நியாயமானதா?
சின்னஞ்சிறிய அணுக்கள் முதல் பிரமாண்டமான நட்சத்திர மண்டலங்கள் வரை எல்லாமே ஏன் கச்சிதமான கனித விதிகளின் அடைப்படையில் இயங்குகின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உயிரையே எடுத்துக்கொள்ளுங்களேன்: அதன் பல்வகைமையையும், சிக்கலான தன்மையையும், வியப்பூட்டும் வடிவமைப்பையும் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? அநேகர் இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள உயிரினங்களும் தற்செயலாக அல்லது பரிணாமத்தின் விளைவாக உருவானது என்கிறார்கள். சிலரோ ஞானமுள்ள ஒரு படைப்பாளர்தான் இதையெல்லாம் படைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த இரு சாராரில் யாருடைய கருத்து உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறது?
சொல்லப்போனால், இந்த இரு சாராருடைய கருத்துகளுமே நம்பிக்கையின் பேரில்தான் சார்ந்திருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்ற கருத்து, நம்பிக்கை அடிப்படையில் உருவானதே. ஏனென்றால், “கடவுளை ஒருவனும் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 1:18) அதேபோல், இந்த அண்டம் உருவானதையோ உயிர் தோன்றியதையோ எந்த மனிதனும் பார்த்ததில்லை. அதுமட்டுமல்ல, ஒரு வகையான உயிரினம் உயர்வகை உயிரினமாகவோ வேறுவகை உயிரினமாகவோ பரிணமித்ததையும் யாரும் பார்த்ததில்லை. முக்கிய வகை விலங்கினங்கள் திடீரென தோன்றி இன்றுவரை இனம் மாறாமல் அப்படியே இருப்பதாக புதைபடிவ ஆய்வுகள் காட்டுகின்றன. * எனவே, இப்போது கேள்வி என்னவென்றால், எந்த நம்பிக்கைக்கு பலமான ஆதாரம் இருக்கிறது? பரிணாம நம்பிக்கைக்கா, படைப்பாளர் இருக்கிறார் என்ற நம்பிக்கைக்கா?
உங்கள் நம்பிக்கைக்கு பலமான ஆதாரம் இருக்கிறதா?
உண்மையான “விசுவாசம் என்பது . . . பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.” (எபிரெயர் 11:1) இதே வசனத்தை ஈஸி டு ரீட் வர்ஷன் இவ்வாறு வாசிக்கிறது: “நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும்கூட உண்மையான ஒன்றை நம்புவதுதான் விசுவாசம்.” இப்போது, நீங்களே சொல்லுங்கள், எத்தனையோ விஷயங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவை உண்மையிலேயே இருப்பதை நீங்கள் நம்புகிறீர்கள்தானே?
உதாரணத்திற்கு: மகா அலெக்ஸாண்டர், ஜூலியஸ் சீஸர், இயேசு கிறிஸ்து போன்றவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதை மதிப்புக்குரிய அநேக சரித்திராசிரியர்கள் நம்புகிறார்கள். இவர்களுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் இருக்கிறதா? ஆம் இருக்கிறது; அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சரித்திர ஏடுகள் நம்பகமான சாட்சியம் கூறுகின்றன.
பார்க்க முடியாத காரியங்களாக இருந்தாலும் அவை நிஜமாகவே இருக்கின்றன என்பதற்கு “தெளிவான அத்தாட்சி” இருப்பதால் அவற்றை விஞ்ஞானிகளும் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, 19-வது நூற்றாண்டில் ரஷ்ய வேதியியல் அறிஞரான டிமிட்ரய் மென்டலெயஃப் என்பவர் தனிமங்களுக்கு இடையே உள்ள சம்பந்தத்தைக் கண்டு அசந்துபோனார்; இந்த அண்டத்தின் முக்கிய மூலப்பொருள்களே தனிமங்களாகும். அவற்றுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை டிமிட்ரய் கண்டார்; அணு எடை மற்றும் ரசாயண தன்மைகள் அடிப்படையில் அவற்றை தொகுதி தொகுதியாகப் பிரிக்க முடியும் என்பதையும் உணர்ந்தார். தனிம தொகுதிகளின் வரிசைக் கிரமத்தில் அவருக்கு அசாதாரண நம்பிக்கை இருந்ததால் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கினார். அதுமட்டுமல்ல, அதுவரை யாருமே கேள்விப்பட்டிராத பற்பல தனிமங்கள் இருப்பதையும் மிகச் சரியாக முன்கணித்தார்.
பழங்கால நாகரிகங்களைக் குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் புதுப் புது விஷயங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். எப்படி? பெரும்பாலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக பூமிக்கடியில் புதைந்திருக்கும் பொருள்களை வைத்து கண்டுபிடிக்கிறார்கள். உதாரணத்திற்கு, பூமிக்கடியில் ஒரே அளவிலான பல கற்கள் ஒரே வடிவில் வெட்டப்பட்டு ஒன்றன்மேல் ஒன்று மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, இயற்கையாக காணப்படாத வடிவியல் அமைப்புகளில் அவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர் என்ன முடிவுக்கு வருவார்? அவை எல்லாமே தானாக வந்துவிட்டன என்று நினைப்பாரா? இல்லை, அப்படி நினைக்கவே மாட்டார். அதற்குப் பதிலாக, பழங்காலத்தில் யாரோ ஒருவர் அப்படிச் செய்துவைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வருவார். அப்படி நினைப்பதுதானே நியாயம்!
அப்படியானால், நம்மைச் சுற்றி இயற்கையில் உள்ள வடிவங்களையும் யாரோ ஒருவர் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதுதானே நியாயம்? அநேகர் அந்த முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள், பிரசித்தி பெற்ற அறிவியலாளர்கள் உட்பட.
தானாகத் தோன்றியதா, திட்டமிட்டுப் படைக்கப்பட்டதா?
பல வருடங்களுக்கு முன்பு, கனிதவியல், இயற்பியல், வானாராய்ச்சியியல் துறைகளில் வல்லுநரான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவர், வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளை வைத்து பார்த்தால், ‘இந்த அண்டத்தை புலமை பெற்ற ஒரு கணிதவியலாளரே படைத்திருக்க வேண்டுமென தெரிகிறது’ என்றார். அவருடைய திறமைகளும் குணங்களும் நம்மிடமும் கொஞ்சம் காணப்படுகின்றன.
ஜீன்ஸ் அந்த வார்த்தைகளை எழுதிய பின் வேறு பல விஞ்ஞானிகளும் அவர் சொன்னதை ஒத்துக்கொண்டார்கள். “இந்த அண்டத்திலுள்ள ஒவ்வொன்றும் ஒழுங்காக இயங்கும் விதத்தைப் பார்த்து, அது நிச்சயம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நவீனநாளைய வானாராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்” என்று எழுதினார் இயற்பியலாளர் பால் டேவிஸ். “நம்மால் [இந்த இயற்கை உலகை] புரிந்துகொள்ள முடிவதே ஓர் அற்புதம்தான்” என்று எழுதினார் உலகிலேயே மிகப் பிரபலமான இயற்பியல் மற்றும் கணிதவியல் வல்லுநர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அப்படிப் புரிந்துகொள்ள முடிகிற அற்புதங்களில் உயிரும் ஒன்று என அநேகர் சொல்கிறார்கள்; அதன் அடிப்படை மூலக்கூறுகள் முதல் வியப்பூட்டும் மனித மூளை வரை எல்லாமே அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
டிஎன்ஏ-வும் மனித மூளையும்
டிஎன்ஏ என்பது செல்கள் உள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் மரபு சமாச்சாரம்; பரம்பரை குணாதிசயங்கள் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதற்கான செய்திகள் அனைத்தும் இந்த டிஎன்ஏ-வில் பதிவு செய்யப்பட்டுள்ளன. * சிக்கலான வடிவமைப்பைக் கொண்ட இந்த டிஎன்ஏ ஒரு திட்ட வரைபடத்திற்கு அல்லது சமையல் குறிப்புக்கு ஒப்பிடப்படுகிறது. ஏனென்றால், டிஎன்ஏ-வில் ஏராளமான செய்திகள் ரசாயண வடிவில் பொதிந்துள்ளன. இந்தச் செய்திகளை கிரகித்துக்கொண்டு செயல்படும் திறமை படைத்த மூலக்கூறுகள் நிறைந்த சூழலில் டிஎன்ஏ-க்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. டிஎன்ஏ-வில் எவ்வளவு விஷயங்கள் பதிவாகியுள்ளன? டிஎன்ஏ-வின் அடிப்படைக் கூறுகளான நியூக்கிளியோடைடுகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தால் “ஒரு சாதாரண புத்தகத்தின் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்களைப் பிடிக்கும்” என்கிறது ஒரு வெப் சைட்.
பெரும்பாலான உயிரினங்களில், இனக்கூற்றின் கம்பியிழைகளான குரோமோஸோம்களுக்குள் டிஎன்ஏ குவிந்திருக்கிறது. இந்த குரோமோஸோம்கள் ஒவ்வொரு செல்லின் மையக்கருவிலும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையக்கருவின் சராசரி விட்டம் சுமார் 0.005 மில்லிமீட்டர். அப்படியென்றால், யோசித்துப் பாருங்கள்: உங்களுக்கே உரிய உருவ அமைப்பை உருவாக்க தேவையான தகவல்கள் அனைத்தும் மைக்ரோஸ்கோப் அடியில் வைத்து பார்க்க வேண்டிய இந்தச் சின்னஞ்சிறிய செல்களுக்குள் புதைந்திருக்கின்றன! “மிகச் சிறிய இடத்தில் பெருமளவு செய்திகளை பதிவு/மீட்டல் செய்யும் படுகச்சிதமான அமைப்புமுறை உயிரினங்களில் மட்டும்தான்” *
இருப்பதாக ஒரு விஞ்ஞானி சரியாகவே சொன்னார். அப்படியென்றால், கம்ப்யூட்டர் சிப்புகள், டிவிடி-க்கள் போன்ற சாதனங்களின் பதிவு/மீட்டல் திறன் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தெரிகிறது. சொல்லப்போனால், டிஎன்ஏ-வின் அருமை பெருமைகள் பற்றி நமக்கு இன்னும் முழுமையாகத் தெரியாது. “ஒவ்வொரு முறை ஆராய்ச்சி செய்கையிலும் அது எவ்வளவு சிக்கலானது என்பது புரியவருகிறது” என்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை.இந்தளவு கச்சிதமான வடிவமைப்பும் சிக்கலான செயலமைப்பும் கொண்ட டிஎன்ஏ தானாக வந்துவிட்டது என்று சொன்னால் நியாயமா? 10 லட்சம் பக்கங்கள் கொண்ட சிக்கலான ஒரு தொழில்நுட்ப புத்தகத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அது, படுநுட்பமான முறையில், சாமர்த்தியமான வகையில், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு புத்தகம் தானாக வந்துவிட்டது என்று நினைப்பீர்களா? அதுவும், அந்தப் புத்தகம் மைக்ரோஸ்கோப் வழியாக படிக்க வேண்டிய அளவுக்கு மிக மிகச் சிறியதாக இருந்தால்..? பல கோடி பாகங்களைக் கொண்ட திறமையான ஓர் இயந்திரத்தை வடிவமைக்க தேவையான எல்லா நுட்பமான விவரங்களும் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்றால்..? அதுமட்டுமல்ல, பழுதானாலும் தானாகவே சரிப்படுத்திக்கொள்ளும் அந்த இயந்திரம் தன்னைப் போன்ற பல இயந்திரங்களை உருவாக்கும் திறமை படைத்தது என்றால்..? அதன் பாகங்களையெல்லாம் சரியான விதத்தில் சரியான சமயத்தில் பொருத்தினால்தான் இயந்திரமே வேலை செய்யும் என்றால்..? இப்பேர்ப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகம் தானாகவே வந்துவிட்டது என்று கனவிலும் நினைக்க மாட்டீர்கள், அல்லவா?
செல்லின் செயல்பாடுகள் சம்பந்தமாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஆராய்ந்தபின், முன்னர் தீவிர நாத்திகவாதியாயிருந்த ஆன்டனி ஃப்ளூ என்ற பிரிட்டன் நாட்டு தத்துவ ஞானி இவ்வாறு சொன்னார்: “ஓர் (உயிர்) உருவாவதில் உட்பட்டுள்ள விஷயங்கள் நம்பமுடியாதளவு சிக்கலானவை; இதைப் பார்க்கும்போது மகா ஞானம் படைத்த ஒருவர்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று [தெரிகிறது].” ‘ஆராய்ச்சியின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதில் ஃப்ளூ உறுதியாக இருந்தார். அவருடைய விஷயத்தில் அது தலைகீழ் மாற்றத்திற்கு வழிநடத்தியது. இப்போது அவர் கடவுளை நம்புகிறார்.
மனித மூளையும் அநேக விஞ்ஞானிகளை மலைத்துப் போக வைத்திருக்கிறது. “இந்த அண்டத்திலேயே படுசிக்கலான பொருள்” எது என்றால், டிஎன்ஏ-க்களால் உருவாக்கப்பட்ட நம் மூளையே என்று அவர்கள் சொல்கிறார்கள். சுமார் 1.36 கிலோ எடையே உள்ள இளஞ்சிவப்பு-சாம்பல் நிற மூளையுடன் ஒப்பிட உலகின் திறம்பெற்ற சூப்பர் கம்ப்யூட்டர்கள்
எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த மூளைக்குள் இருப்பதெல்லாம், கோடிக்கணக்கான நியூரான்களும், மற்ற கூறுகளுமே. மூளையையும் மனதையும் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யச் செய்ய, “அதிசயித்துப் போகிறார்கள், எந்தளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரிகிறது” என்கிறார் ஒரு நரம்பியல் வல்லுநர்.சிந்தனைக்கு: சுவாசிக்கவும், சிரிக்கவும், அழவும், கஷ்டமான பிரச்சினைகளைத் தீர்க்கவும், கம்ப்யூட்டர்களை உருவாக்கவும், சைக்கிள் ஓட்டவும், கவிதை எழுதவும், இரவு நேரத்தில் ஆச்சரியத்துடனும் பயபக்தியுடனும் வானத்தை அண்ணாந்துப் பார்க்கவும் மூளை நமக்கு உதவுகிறது. இந்தத் திறமைகள் எல்லாம் பரிணாமத்தினால் வந்தது என்று சொன்னால் அது எப்படி நியாயமாக இருக்கும், முரண்பாடாகத்தானே இருக்கும்?
அத்தாட்சிகள் அடிப்படையில் நம்பிக்கை
நம்மைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பரிணாமவாதிகள் செய்வது போல் நம்மைவிட தாழ்ந்த நிலையில் உள்ள விலங்கினங்களைப் பார்க்க வேண்டுமா? அல்லது, நம்மைவிட உயர்ந்த நிலையில் உள்ள கடவுளிடம் உதவி கேட்க வேண்டுமா? விலங்குகளுக்கும் நமக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதென்னவோ உண்மைதான். உதாரணத்திற்கு உண்பது, குடிப்பது, உறங்குவது, சந்ததியைப் பிறப்பிப்பது போன்றவை மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள ஒற்றுமைகள். இருந்தாலும், பல விதங்களில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். நம்மிடம் உள்ள குணாதிசயங்கள் நம்மைவிட உயர்ந்த ஒருவரிடமிருந்து, ஆம், கடவுளிடமிருந்து வந்திருப்பதுதான் அதற்குக் காரணம். அதனால்தான், மனிதனை ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ‘தம்முடைய சாயலில்’ கடவுள் படைத்தார் என்று பைபிள் ரத்தினச் சுருக்கமாக சொல்கிறது. (ஆதியாகமம் 1:27) கடவுளுடைய குணங்களைக் குறித்து உபாகமம் 32:4; யாக்கோபு 3:17, 18; 1 யோவான் 4:7, 8 ஆகிய வசனங்கள் சொல்வதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகை ஆராய்ந்து பார்க்கவும், மனதைக் குடையும் கேள்விகளுக்குப் பதில் காணவும் நம் படைப்பாளர் நமக்கு புத்திக்கூர்மையைக் கொடுத்திருக்கிறார். இதைக் குறித்து இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் டி. ஃபிலிப்ஸ் இவ்வாறு எழுதினார்: “இந்த அண்டத்தின் ஒழுங்கையும் எளிமையையும் அழகையும் ஆராயும்போது பெரும் அறிவாற்றலுள்ள ஒருவர்தான் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஒரு விஞ்ஞானியாக இயற்பியலின் கோர்வையையும், எளிமையையும் எண்ணி நான் வியப்பதால் கடவுள்மீது உள்ள என் நம்பிக்கை இன்னும் பலப்பட்டிருக்கிறது.”
சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு, அறிவுக் கண்களோடு இயற்கையை உற்று நோக்கிய ஒருவர் இவ்வாறு எழுதினார்: “காணமுடியாத [கடவுளுடைய] பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.” (ரோமர் 1:20) இந்த வார்த்தைகளை எழுதிய கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ஒரு மேதை, கடவுளுடைய சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர். அவருடைய நம்பிக்கை ஆதாரங்களின் பேரில் சார்ந்திருந்ததால் கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதை அவரால் ஒத்துக்கொள்ள முடிந்தது; அதேசமயம் காரியங்களை நியாயமாகச் சிந்தித்துப் பார்த்த பவுல், படைப்புகளுக்காக கடவுளையே புகழ்ந்தார்.
கடவுள் இருக்கிறார் என நம்புவது முழுக்க முழுக்க நியாயமானதே என்பதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதேசமயம், கடவுள் இருக்கிறார் என நம்புவதோடு நிறுத்திக்கொள்ளாமல் பவுலைப்போல் கடவுளைப் புகழ்வீர்களாக. ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் செய்து வருவதுபோல் நீங்களும் யெகோவா தேவன் காணமுடியாத நபராக இருக்கிறார் என்பதையும், அவரிடமுள்ள அருமையான குணங்கள் நம்மிடமும் கொஞ்சம் இருக்கின்றன என்பதையும், அதனால்தான் நாம் அவரிடம் ஈர்க்கப்படுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்வீர்களாக.—சங்கீதம் 83:17; யோவான் 6:44; யாக்கோபு 4:8. (g10-E 02)
[அடிக்குறிப்புகள்]
^ செப்டம்பர் 2006 விழித்தெழு! இதழில் வெளியான “பரிணாமக் கோட்பாடு உண்மையா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ டிஎன்ஏ என்பது டீயாக்ஸிரைபோநியூக்களிக் ஆசிட் ஆகும்.
^ பரிணாமக் கோட்பாட்டை சார்ல்ஸ் டார்வின் அறிமுகப்படுத்தியபோது செல்லின் சிக்கலான தன்மை பற்றி அவருக்கு ஏ, பி, சி, டி-கூட தெரியாது.
[பக்கம் 20-ன் பெட்டி]
மதங்களின் அட்டூழியங்களால் கடவுளையே நம்பாமல் இருப்பது நியாயமா?
ஏராளமான அட்டூழியங்களையும் ஊழல்களையும் செய்து அநேக மதங்கள் தங்கள் பெயரை கெடுத்துக்கொண்டதால் பலர் படைப்பாளர்மீது நம்பிக்கை வைக்க மறுக்கிறார்கள். ஆனால், அது நியாயமா? இல்லை. “அணு ஆயுத குவிப்பைக் கண்டு E=mc2 * சூத்திரத்தை கேள்வி கேட்பது எப்படி நியாயமில்லையோ அதேபோல் மதங்களின் அடாவடி செயல்களையும் அட்டூழியங்களையும் பார்த்துவிட்டு கடவுள் இல்லை என்று சொல்வதும் நியாயமில்லை” என்கிறார் ராய் ஏப்ரஹாம் வர்கீஸ் என்பவர். கடவுள் இருக்கிறார் என்ற தலைப்பில் ஆன்டனி ஃப்ளூ எழுதிய ஆங்கில புத்தகத்தின் முகவுரையில் இப்படிக் குறிப்பிட்டார்.
[அடிக்குறிப்பு]
^ E=mc2 என்ற சூத்திரத்தில் E என்பது ஆற்றல்; m என்பது பருப்பொருள்; c என்பது ஒளியின் வேகம்.
[பக்கம் 19-ன் படங்கள்]
பழங்கால கல் வடிவமைப்புகளை உருவாக்கிய பெருமை மனிதனைச் சேரும் என்றால் இயற்கையின் வடிவமைப்புகளை உருவாக்கிய பெருமை யாரைச் சேர வேண்டும்?
[பக்கம் 19-ன் படம்]
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
புத்திக்கூர்மையுள்ள உயிர் உருவாவதற்குத் தேவையான எல்லா தகவல்களும் அடங்கிய மிக மிகச் சிறிய புத்தகத்திற்கு டிஎன்ஏ-வை ஒப்பிடலாம்
[பக்கம் 21-ன் படங்கள்]
மனித மூளைதான் “இந்த அண்டத்திலேயே படுசிக்கலான பொருள்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
© The Print Collector/age fotostock