Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் திருமணத்தைக் காப்பாற்ற முடியுமா?

உங்கள் திருமணத்தைக் காப்பாற்ற முடியுமா?

வீடு மோசமான நிலையில் இருப்பதை அதன் சொந்தக்காரர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்; இருந்தாலும், அதை மீண்டும் எடுத்துக் கட்ட அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

உங்கள் திருமணத்தையும் மீண்டும் எடுத்துக் கட்ட நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் எங்கிருந்து ஆரம்பிப்பது? பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்.

1 ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள்.

மணவாழ்வில் காணாமல் போன மகிழ்ச்சியை மீண்டும் கொண்டுவர இருவருமாக சேர்ந்து ஒத்துழைக்க முடிவு செய்யுங்கள். உங்கள் தீர்மானங்களை ஒரு பேப்பரில் எழுதிவையுங்கள். நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து உழைப்பதாக தீர்மானிக்கையில் அது ஒரு கூட்டு முயற்சி ஆகிவிடுகிறது.—பிரசங்கி 4:9, 10.

2 பிரச்சினையைக் கண்டுபிடியுங்கள்.

உங்கள் திருமணத்தின் சந்தோஷத்தை எது பறித்துவிட்டது? உங்கள் மணவாழ்வில் குறைவுபடுவது என்ன அல்லது என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை ஒரே வரியில் எழுதுங்கள். (எபேசியர் 4:22-24) நீங்கள் எழுதும் பிரச்சினையும் உங்கள் துணை எழுதும் பிரச்சினையும் வேறுபடலாம், அதில் தவறில்லை.

3 ஓர் இலக்கு வையுங்கள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்கள் மணவாழ்வு எப்படி இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்? முக்கியமாக என்ன முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் இலக்குகளை ஒரு பேப்பரில் எழுதுங்கள். உங்கள் மணவாழ்வில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், உங்கள் இலக்குகளை அடைவது சுலபமாகிவிடும்.—1 கொரிந்தியர் 9:26.

4 பைபிள் தரும் ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் பிரச்சினை என்னவென்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள், என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துவிட்டீர்கள்; இப்போது ஆலோசனைக்காக பைபிளை திறந்து பாருங்கள். அதிலுள்ள நெறிமுறைகள் காலத்தால் அழியாதவை, பலன் தருபவை. (ஏசாயா 48:17; 2 தீமோத்தேயு 3:17) உதாரணத்திற்கு, நீங்களும் உங்கள் துணையும் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டுமென பைபிள் ஊக்கப்படுத்துகிறது. சொல்லப்போனால், “தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது” என்றும் சொல்கிறது.—நீதிமொழிகள் 19:11, ஈஸி டு ரீட் வர்ஷன்; எபேசியர் 4:32.

ஆரம்பத்தில் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்காதது போல் தோன்றினாலும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! மணவாழ்வை ஆதரித்து என்ற புத்தகம், ஓர் ஆய்வில் கிடைத்த நம்பிக்கையூட்டும் புள்ளிவிவரங்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஆச்சரியம் ஆனால் உண்மை: சந்தோஷமே இல்லாமல் குடும்பம் நடத்தினவர்களில் 86 சதவீதத்தினர் பிரிந்துபோகாமல் சேர்ந்தே வாழ்ந்ததன் விளைவாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு தங்கள் மணவாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறினார்கள்.” துளியும் சந்தோஷமின்றி வாழ்ந்துவந்ததாக சொன்ன தம்பதிகளும் பின்னர் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை உங்களுடைய விஷயத்திலும் அப்படி நடக்கலாம். தம்பதிகளுக்குத் தேவையான பயனுள்ள ஆலோசனைகளை பைபிள் வழங்குவதாக இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களான யெகோவாவின் சாட்சிகள் கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, கணவனும் மனைவியும் கனிவாக, மென்மையாக, பாசமாக நடந்துகொள்ளும்போதும் ஒருவரையொருவர் தாராளமாய் மன்னிக்கும்போதும் புயல் வீசிய திருமணங்களிலும் மகிழ்ச்சி தென்றல் வீச ஆரம்பித்திருக்கிறது. ‘அமைதியாகவும் சாந்தமாகவும்’ இருப்பதன் முக்கியத்துவத்தை மனைவிகள் கற்றிருக்கிறார்கள். ‘மனைவிமீது மனக்கசப்படையாமல்’ இருப்பதால் வரும் பலன்களை கணவன்மார்கள் கண்டிருக்கிறார்கள்.—1 பேதுரு 3:4; கொலோசெயர் 3:19.

பைபிளின் இந்த நியமங்களைக் கடைப்பிடிக்கையில் நல்ல பலன்கள் கிடைக்கின்றன; அதற்குக் காரணமும் இருக்கிறது. திருமண ஏற்பாட்டை ஆரம்பித்துவைத்த யெகோவா தேவனல்லவா பைபிளின் ஆசிரியர்? உங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பதற்கு பைபிள் தரும் ஆலோசனைகளைப் பெற யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் தாராளமாக அனுகலாம். * (g10-E 02)

^ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192 பக்க புத்தகத்தை விசேஷமாய் குடும்பங்களுக்காகவே யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். கூடுதல் தகவல் பெற இந்தப் பத்திரிகையின் பக்கம் ஐந்தில் உள்ள பொருத்தமான விலாசத்தில் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதி அனுப்புங்கள்.