Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஃப்ளூ காய்ச்சல் உங்கள் குடும்பத்தை அண்டாமல் இருக்க . . .

ஃப்ளூ காய்ச்சல் உங்கள் குடும்பத்தை அண்டாமல் இருக்க . . .

ஃப்ளூ காய்ச்சல் உங்கள் குடும்பத்தை அண்டாமல் இருக்க . . .

இயேசு இந்த உலகத்தின் முடிவைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்னால் சொன்னபோது, ‘அடுத்தடுத்து பல இடங்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்று குறிப்பிட்டார். (லூக்கா 21:11) அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றுதான் ஃப்ளூ காய்ச்சல், அதாவது இன்ஃப்ளூயன்ஸா என்ற சளிக்காய்ச்சல்.

ஒரு வைரஸ் கிருமியினால்தான் ஃப்ளூ காய்ச்சல் உண்டாகிறது; கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் உயிரணுக்களை ஆக்கிரமித்துக்கொண்டு இன்னும் அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. ஒருவரின் சுவாச மண்டலத்தைத் தாக்குகிற ஃப்ளூ வைரஸ், அவர் தும்மும்போதோ இருமும்போதோ பேசும்போதோ தெறிக்கிற சளி அல்லது எச்சில் மூலம் இன்னொருவருக்குக் கடத்தப்படுகிறது. இந்த வைரஸ் பரந்த அளவில் மக்களைத் தாக்கும்போது அது ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது.

வைரஸ்கள் மனிதர்களை மட்டுமல்லாமல், மிருகங்களையும் பறவைகளையும்கூடத் தாக்குகின்றன. ஃப்ளூ வைரஸ்கள் ஏ, பி, அல்லது சி என்று வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஏ வகை வைரஸால்தான் இன்ஃப்ளூயன்ஸா ஏற்படுகிறது. வைரஸின் மேற்பரப்பில் ஹீமாக்லட்டினின் (H) என்ற புரதம் இருக்கிறதா அல்லது நியூரமினிடேஸ் (N) என்ற புரதம் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே அது வகைப்படுத்தப்படுகிறது.

ஃப்ளூ வைரஸ்கள் மனிதர்களை மிரள வைக்கின்றன. ஏனென்றால், ஃப்ளூ வைரஸ்கள் மிக விரைவாகப் பெருகுவதோடு ஓயாமல் உருமாறுகின்றன. அதுமட்டுமல்லாமல், வித்தியாசமான ஃப்ளூ வைரஸ்கள் ஒன்றுசேர்ந்து ஒரு புது வகை ஃப்ளூ வைரஸை உருவாக்குகின்றன; அந்தப் புது வகை வைரஸ் பெருமளவு வித்தியாசப்படுகையில், அதை நம் உடலால் எதிர்க்க முடிவதில்லை.

பொதுவாக, குளிர்க் காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் மிக அதிகளவில் பரவுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, குளிர்ந்த தட்பவெட்பத்தில் வைரஸின் வெளிப்புற ஜவ்வு ஒரு கவசம்போல் ஆகிவிடுகிறது; எனவே, காற்றில் உள்ள அந்த வைரஸ் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ்கிறது; ஆனால், மனித சுவாச மண்டலத்தில் நுழைந்ததும் அங்கு தட்பவெட்பம் அதிகமாக இருப்பதால் அந்த ஜவ்வு கரைந்துவிடுகிறது; இவ்வாறு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. குளிர்ந்த காற்று, வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்துவதில்லை; ஆனால், அவை பரவுவதற்கு வசதியான சூழலை அளிக்கிறது.

பாதுகாப்பு வழிமுறைகள்

அநேக அரசாங்கங்கள், எதற்கும் தயாராக இருக்க வேண்டிய தேவையை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை ஏற்கனவே எடுத்திருக்கின்றன. ஆனால், உங்கள் பங்கில் நீங்கள் என்ன செய்யலாம்? பாதுகாப்புக்கான மூன்று அடிப்படை வழிகளைக் கவனியுங்கள்:

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்: உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் தேவை; ஆகவே, நன்றாகத் தூங்குவதும் சத்தான உணவைச் சாப்பிடுவதும் அவசியம். தளதளவென்ற காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்புச்சத்து இல்லாத புரதங்கள் ஆகியவற்றை முக்கியமாகச் சாப்பிடுங்கள்; ஏனென்றால், எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் இவற்றில் உள்ளன.

கிருமிகளை அண்டவிடாதீர்கள்: தினமும் சமையல் திட்டுக்களையும் மேஜைகளையும் முடிந்த அளவுக்கு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். சமைக்கவும் சாப்பிடவும் உபயோகிக்கிற பாத்திரங்களை அப்போதைக்கு அப்போது கழுவுங்கள்; படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி துவையுங்கள். கதவின் கைப்பிடிகள், தொலைபேசிகள், ரிமோட் கன்ட்ரோல்கள் ஆகியவற்றில் பலருடைய கை படும் என்பதால் கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தப்படுத்துங்கள். கூடுமானால், உங்களுடைய வீட்டைக் காற்றோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்.

உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்: உங்களுடைய கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவுங்கள் அல்லது கிருமிநாசினியினால் நன்றாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். (முடிந்தால், அதை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.) முகம் துடைக்கும் துண்டையோ கை துடைக்கும் துண்டையோ உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடையதைப் பயன்படுத்தாதீர்கள், உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடையதாக இருந்தாலும்கூட.

கை கழுவாமல் உங்கள் கண்களையோ மூக்கையோ வாயையோ தொடாதீர்கள். முடிந்தால், இருமும்போதோ தும்மும்போதோ உங்கள் வாயையும் மூக்கையும் டிஷ்யூ பேப்பரைக் கொண்டு மூடிக்கொள்ளுங்கள்; அதை உடனடியாகத் தூக்கியெறிந்துவிடுங்கள். மற்றவர்களுடைய செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள்; ஏனென்றால், இப்படிப்பட்ட சாதனங்களின் மூலம் கிருமிகள் உடனடியாகப் பரவும். இதுபோன்ற பழக்கங்களைப் பிள்ளைகளுக்கு நன்கு கற்றுக்கொடுங்கள். அவை எல்லாச் சமயத்திலும் நன்மை அளிக்கும், முக்கியமாக, ஃப்ளூ காய்ச்சல் பரவுகிற சமயத்தில் ரொம்பவே நன்மை அளிக்கும்.

மற்றவர்கள்மீது கரிசனை காட்டுங்கள்

உங்களுக்கு ஃப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதற்கு ஒருநாள் முன்பிருந்து, அவை தென்படுகிற ஐந்தாவது நாள்வரை, உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம். ஃப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் சாதாரண சளிக்குரிய அறிகுறிகளைப் போலத்தான் இருக்கும், ஆனால் அதைவிடக் கடுமையாக இருக்கும். காய்ச்சல் (பொதுவாக, நெருப்பாய்க் கொதிக்கும் காய்ச்சல்), தலைவலி, பயங்கரமான சோர்வு, வறட்டு இருமல், தசை வலி போன்றவை இதன் அறிகுறிகள். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் மூக்கு ஒழுகுதலும் பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் அதிகம் ஏற்படுகின்றன. உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், முடிந்தவரை வீட்டிலேயே தங்கிவிடுங்கள்; அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளாமல் இருக்கும்.

நன்றாக ஓய்வெடுங்கள்; திரவ ஆகாரத்தை அதிகமாக உட்கொள்ளுங்கள். வைரஸைக் கொல்லும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஃப்ளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் மருந்துகளை (அசிடைல்சாலிசிலிக் அமிலம்) கொடுக்கக் கூடாது. நிமோனியாவுக்கான அறிகுறிகள், அதாவது சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, விடாத பயங்கரத் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவசர மருத்துவச் சிகிச்சையை நாடுங்கள்.

ஃப்ளூ காய்ச்சல் வந்துவிட்டால் கவலையும் வந்துவிடும்தான். ஆனால், அதைச் சமாளிக்கத் தயாராக இருந்தீர்களென்றால் சீக்கிரத்தில் குணமடையலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, பைபிளிலுள்ள இந்த வாக்குறுதி நிறைவேறப்போகும் காலத்தை நீங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கலாம்: “வாழ்கிற எவரும் ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24, ஈஸி டு ரீட் வர்ஷன். (g10-E 06)

[பக்கம் 13-ன் பெட்டி]

கொடிய வகை ஃப்ளூ காய்ச்சல்

2009-ல் மெக்சிக்கோவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஃப்ளூ காய்ச்சல் H1N1 வகையைச் சேர்ந்தது; இது 1918-ல் லட்சக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஸ்பானிஷ் ஃப்ளூவைப் போன்றது. எனினும், பன்றிகளையும் பறவைகளையும் தாக்குகிற வைரஸுகளில் உள்ள சில கூறுகள் இதிலும்கூட இருக்கின்றன.

[பக்கம் 14, 15-ன் பெட்டி/படங்கள்]

6 உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான வழிகள்

1. இருமும்போது வாயைப் பொத்திக்கொள்ளுங்கள்

2. கைகளைக் கழுவுங்கள்

3. உங்களுடைய வீட்டைக் காற்றோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்

4. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

5. வியாதிப்பட்டிருக்கையில் வீட்டிலேயே இருக்க முயலுங்கள்

6. வியாதிப்பட்டிருக்கையில் மற்றவர்களைத் தொடாதீர்கள்

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

அவசரநிலை ஏற்பட்டால்

முதலில், உடல்நலப் பராமரிப்பு அதிகாரிகள் கொடுக்கும் ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். பதறாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளபடி, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடியுங்கள். முடிந்தால், சந்தடி நிறைந்த இடங்களைத் தவிருங்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், பொருத்தமான ஒரு முகமூடியை அணிந்துகொள்வது நன்மை அளிக்கலாம். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். உங்களால் கடைக்குச் செல்ல முடியாமல் போகலாம் என்பதால், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குத் தேவையான, சீக்கிரத்தில் கெடாத உணவுப் பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்; ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் தேவையான பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வேலை செய்யும் இடத்திலும், வணக்கத்திற்காகக் கூடும் இடங்களிலும், சந்தடி நிறைந்த வேறெந்த இடத்திலும் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். அதோடு, உங்கள் சுற்றுப்புறம் நன்கு காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

[பக்கம் 13-ன் படம்]

H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (பெரிதாக்கப்பட்டது)

[படத்திற்கான நன்றி]

CDC/Cynthia Goldsmith