உதறித்தள்ள உறுதியாயிருங்கள்
உதறித்தள்ள உறுதியாயிருங்கள்
“புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தவர்கள் வெற்றி அடைந்ததற்கான ஒரே முக்கியக் காரணம்? நிறுத்துவதற்கான முயற்சியில் உறுதியாக இருந்ததே.”—“புகைப்பதை இப்போதே நிறுத்துங்கள்!” என்ற புத்தகம்.
நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறீர்களா? அப்படியென்றால், அதை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்ற ஆர்வத் தீ உங்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். அந்த ஆர்வத் தீயை எப்படி மூட்டுவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம், புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் வரும் நன்மைகளை யோசித்துப் பார்ப்பதே.
பணத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை காலி செய்கிறவர், ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான ரூபாயைக் கரியாக்குகிறார். “சிகரெட்டிற்காக நான் எவ்வளவு பணத்தை வீணாக்கியிருக்கிறேன் என்று அப்போது எனக்கு உறைக்கவே இல்லை.”—கியானு, நேபால்.
வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தைப் பெறுவீர்கள். “புகைப்பழக்கத்தை நான் நிறுத்தியபோதுதான் என் வாழ்க்கையே தொடங்கியது. அப்போதிருந்து என் வாழ்க்கை படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது.” (ரெஜினா, தென் ஆப்பிரிக்கா) ஒருவர் புகைப்பதை நிறுத்தும்போது அவருடைய சுவை உணர்வும் வாசனை உணர்வும் மேம்படும்; உடலுக்கு அதிக சக்தி கிடைப்பதோடு உடலின் தோற்றமும் அழகாகும்.
உடல்நலம் முன்னேற்றமடையும். “ஒருவர் ஆணாகவோ, பெண்ணாகவோ, எந்த வயதினராகவோ இருந்தாலும், புகைப்பதை நிறுத்தும்போது அவருடைய உடல் நிலையில் உடனடியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது.”—நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்.
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். “புகையிலை என்னை ஆட்டிப்படைக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இந்தப் பழக்கத்தை நிறுத்தினேன். என் உடலை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்.”—ஹெனிங், டென்மார்க்.
உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் நன்மையடைவார்கள். “புகைப்பது . . . உங்களுடன் இருப்பவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் . . . புகைப்பவர்களுக்குப் பக்கத்தில் இருக்கிற ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் புற்றுநோயாலும் இருதய நோயாலும் பாதிக்கப்பட்டு இறப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.”—அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம்.
கடவுளைப் பிரியப்படுத்துவீர்கள். “அன்புக் கண்மணிகளே . . . உடலிலிருந்து . . . எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.” (2 கொரிந்தியர் 7:1) “உங்களுடைய உடலை . . . பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்.”—ரோமர் 12:1.
“உடலைக் கெடுக்கிற எல்லாப் பழக்கங்களையும் கடவுள் வெறுக்கிறார் என நான் தெரிந்துகொண்டவுடன் புகைப்பதை நிறுத்த முடிவு செய்தேன்.”—சில்வியா, ஸ்பெயின்.
புகைப்பழக்கத்தை உதறித்தள்ள நாம் உறுதியாயிருந்தால் மட்டுமே போதாது. குடும்பத்தார், நண்பர்கள் என மற்றவர்களின் உதவியும் நமக்குத் தேவை. அவர்களால் நமக்கு எப்படி உதவ முடியும்? (g10-E 05)