Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் உடல்நலத்தை நான் ஏன் கவனிக்க வேண்டும்?

என் உடல்நலத்தை நான் ஏன் கவனிக்க வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர்

என் உடல்நலத்தை நான் ஏன் கவனிக்க வேண்டும்?

நீங்கள் எட்ட விரும்புகிற லட்சியத்திற்குப் பக்கத்தில் ✔ இடுங்கள்.

❍ எடையைக் குறைப்பது

❍ சருமத்தைப் பொலிவாக்குவது

❍ அதிக சக்தியைப் பெறுவது

❍ அதிக உன்னிப்போடு செயல்படுவது

❍ கவலையைக் குறைப்பது

❍ கோபத்தைக் கட்டுப்படுத்துவது

❍ தன்னம்பிக்கையை அதிகரிப்பது

வாழ்க்கையில் சில காரியங்களை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது; ஆம், உங்களுடைய பெற்றோர், உங்கள் கூடப்பிறந்தவர்கள், நீங்கள் வசிக்கிற ஊர் போன்றவற்றை இளைஞரான உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், உங்களுடைய உடல்நலம் ஓரளவு உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையைச் சார்ந்திருக்கிறது. *

‘ஆனால், எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லையே, நான் ஏன் என் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?’ என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பாருங்கள். எத்தனை வட்டங்களில் நீங்கள் ‘டிக்’ போட்டீர்கள்? நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, இந்த லட்சியங்கள் ஒவ்வொன்றையும் அடைவதற்கு உடல்நலம் மிகவும் அவசியம்.

ஒருவேளை, 17 வயது ஆம்பெரை * போலவே நீங்களும் உணரலாம். “முழு கோதுமையில் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், கொழுப்போ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் எனக்கு ஒத்துவராது!” என்று அவன் சொல்கிறான். அப்படித்தான் நீங்களும் நினைக்கிறீர்கள் என்றால், கவலைப்படாதீர்கள்; நல்ல உடல்வாகு வேண்டுமென்பதற்காக இனிப்பு சாப்பிடுவதையே நிறுத்திவிடுவது அல்லது வாராவாரம் அளவுக்கதிகமான தூரம் ஓடுவது என்றெல்லாம் நீங்கள் மிதமிஞ்சிப் போக வேண்டிய அவசியமில்லை. உண்மையில், அழகாகத் தோற்றமளிப்பதற்கும், உற்சாகமாக இருப்பதற்கும், சிறப்பாகச் செயல்படுவதற்கும் சின்னச் சின்ன மாற்றங்கள் சிலவற்றைச் செய்தாலே போதும். உங்களைப் போன்ற சிலர் இந்த மாற்றங்களை எப்படிச் செய்திருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

சத்தான உணவைச் சாப்பிடுங்கள் —அழகாகத் தோற்றமளியுங்கள்!

நம்முடைய பழக்கவழக்கங்களில் மிதமிஞ்சிப் போகக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. “உங்கள் வயிற்றுக்குள் அளவுக்குமீறி உணவைத் திணிக்க . . . வேண்டாம்” என்று நீதிமொழிகள் 23:20-ல் (கண்டெம்பரரி இங்கிலிஷ் வெர்ஷன்) அது குறிப்பிடுகிறது. இந்த அறிவுரையைப் பின்பற்றுவது எப்போதுமே சுலபமல்ல.

● “நிறைய இளைஞர்களைப் போல, எனக்கும் எப்போது பார்த்தாலும் பசித்துக்கொண்டுதான் இருக்கும். ‘உன்னுடைய வயிறு என்ன பானையா?’ என்று என் பெற்றோர் என்னிடம் கேட்பார்கள்.”—ஆண்ட்ரு, 15.

● “சில உணவுப்பண்டங்கள் எனக்கு இப்போது கெடுதல் செய்வதுபோலத் தெரிவதில்லை; அதனால் நான் எதையும் ஒதுக்க மாட்டேன்.”—டேனியெல், 19.

உணவு விஷயத்தில் உங்களுக்கு இன்னும் அதிக சுயக்கட்டுப்பாடு தேவை என்று நினைக்கிறீர்களா? சில இளைஞர்களுக்கு உதவுகிற குறிப்புகள் இதோ:

உங்கள் வயிறு சொல்வதைக் கேளுங்கள். “முன்பெல்லாம் நான் எவ்வளவு கலோரி உணவு சாப்பிடுகிறேன் என்று கணக்கு வைத்திருப்பேன்; ஆனால், இப்போது என் வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறேன்” என்று 19 வயது ஜூலியா சொல்கிறாள்.

சத்தில்லாத உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். “சோடா குடிப்பதை நிறுத்தியதால் ஒரே மாதத்தில் [5 கிலோ] எடை குறைந்துவிட்டேன்!” என்று 21 வயது பீட்டர் சொல்கிறான்.

மோசமான உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள். “தட்டு நிறையச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் எடுத்துச் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்கிறேன்” என்று 19 வயது எரின் சொல்கிறாள்.

வெற்றியின் ரகசியம்: ஒரேவொரு வேளை சாப்பிடாமல் இருந்தால்கூட, பசி அதிகமாகி அளவுக்குமீறி சாப்பிடத் தோன்றும். அதனால், மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.

நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள் —உற்சாகமாக இருங்கள்!

‘உடற்பயிற்சி நன்மை தரும்’ என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) ஆனால், நிறைய இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஆர்வமே இருப்பதில்லை.

● “நான் உயர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, எத்தனை பிள்ளைகள் உடற்பயிற்சிப் பரீட்சையில் தோல்வி அடைந்தார்கள் தெரியுமா! என்னைப் பொறுத்தவரை, சாப்பிடுவதில் எப்படி எந்தக் கஷ்டமும் இல்லையோ அப்படியே இந்த வகுப்பிலும் எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை.”—ரிச்சர்ட், 21.

● “உச்சி வெயிலில் வியர்த்துக் களைத்து விளையாடுவதற்குப் பதிலாக, உங்களை வேறு நபராகக் கற்பனை செய்துகொண்டு விளையாடுகிற வீடியோ கேமை விளையாடலாமே எனச் சிலர் சொல்கிறார்கள்.”—ரூத், 22.

“உடற்பயிற்சி” என்ற வார்த்தையைக் கேட்டாலே உங்களுக்குக் களைப்பாக இருக்கிறதா? அப்படியென்றால், நல்ல உடற்பயிற்சிப் பழக்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் மூன்று பயன்களைக் கவனியுங்கள்.

பயன் #1. உடற்பயிற்சி உங்கள் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. “‘உடற்பயிற்சி செய்ய உனக்கு நேரம் இல்லையென்று நீ நினைத்தால், பின்பு நோய்க்கு வைத்தியம் பார்ப்பதிலேயே உன் நேரமெல்லாம் போய்விடும்’ என்று என் அப்பா எப்போதும் என்னிடம் சொல்வார்” என 19 வயது ரேச்சல் சொல்கிறாள்.

பயன் #2. உடற்பயிற்சி செய்யும்போது மன அமைதி தருகிற ரசாயனங்கள் மூளையில் சுரக்கின்றன. “எனக்குள் பல யோசனைகள் அலைமோதும்போது, ஓட்டப் பயிற்சி செய்வது என் மனதை அமைதிப்படுத்துகிறது. அதோடு, என் உடல் புத்துணர்ச்சி அடைகிறது, மனமும் லேசாகிவிடுகிறது” என்று 16 வயது எமிலி சொல்கிறாள்.

பயன் #3. உடற்பயிற்சி குதூகலம் அளிக்கிறது. “வீட்டுக்குள் அடைந்து கிடக்கவே எனக்குப் பிடிக்காது; அதனால், நீண்ட தூரம் நடப்பது, நீந்துவது, பனிச்சறுக்கு விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன்” என்று 22 வயது ரூத் சொல்கிறாள்.

வெற்றியின் ரகசியம்: வாரத்தில் மூன்று தடவை குறைந்தது 20 நிமிடம் உங்களுக்குப் பிடித்த விறுவிறுப்பான உடற்பயிற்சியைச் செய்யுங்கள்.

நன்றாகத் தூங்குங்கள்—சிறப்பாகச் செயல்படுங்கள்!

“வீணாக வெகு நேரம் உழைப்பதைவிட கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பது நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 4:6, NW) போதுமான தூக்கம் இல்லாவிட்டால், நீங்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது.

● “நான் ஒழுங்காகத் தூங்கவில்லை என்றால், எதையுமே சரியாகச் செய்ய மாட்டேன். என்னால் எதிலுமே கவனம் செலுத்த முடியாது!”—ரேச்சல், 19.

● “மத்தியானம் இரண்டு மணிவாக்கில், தூக்கம் கண்ணைச் சொக்கும். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவேன்!”—கிறிஸ்டீன், 19.

உங்களுக்கு இன்னும் அதிகத் தூக்கம் தேவையா? உங்களைப் போன்ற சில இளைஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள் எனக் கவனியுங்கள்.

முடிந்தவரை சீக்கிரமாகப் படுத்துவிடுங்கள். “நேரத்தோடு தூங்குவதற்கு நான் முயற்சி எடுக்கிறேன்” என்று 18 வயது கேத்தரின் சொல்கிறாள்.

அரட்டை அடிப்பதைத் தவிருங்கள். “சில சமயங்களில் என்னுடைய நண்பர்கள் ரொம்ப லேட்டாக போன் செய்வார்கள் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவார்கள்; இப்போதெல்லாம் நான் அவற்றைச் சட்டென்று முடித்துக்கொண்டு தூங்கச் சென்றுவிடுகிறேன்” என்று 21 வயது ரிச்சர்ட் சொல்கிறான்.

தினமும் ஒரே நேரம் தூங்கச் செல்லுங்கள். “கொஞ்ச நாளாக, தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும் எழவும் முயற்சி செய்கிறேன்” என்று 20 வயது ஜெனிபர் சொல்கிறாள்.

வெற்றியின் ரகசியம்: ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட எட்டுமுதல் பத்து மணிநேரம்வரை தூங்குவதற்கு முயலுங்கள்.

இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட மூன்று அம்சங்களில் எந்த அம்சத்தில் நீங்கள் உழைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

உணவுஉடற்பயிற்சிஉறக்கம்

நீங்கள் உழைக்க வேண்டிய அம்சத்தில் என்ன இலக்கை வைக்கலாம் எனக் கீழே எழுதுங்கள்.

.....

எனவே, உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ள சின்னச் சின்னப் படிகளை எடுத்தாலே நீங்கள் பெரிய பெரிய நன்மைகளை அடையலாம். நல்ல உடல்நலத்தோடு இருப்பது அழகாகத் தோற்றமளிக்கவும் உற்சாகமாக உணரவும் சிறப்பாகச் செயல்படவும் உங்களுக்கு உதவும். வாழ்க்கையின் சில காரியங்கள் உங்கள் கையில் இல்லை என்றாலும், உங்கள் உடல்நலம் ஓரளவு உங்கள் கையில்தான் இருக்கிறது. “உங்கள் உடல்நலம் ஒரேவொரு நபர்மீதே சார்ந்திருக்கிறது; ஆம், உங்கள்மீதே சார்ந்திருக்கிறது” என்று 19 வயது எரின் சொல்கிறாள். (g10-E 06)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ பலரைப் பொறுத்தவரை உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுடைய கையில் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். இதற்குப் பரம்பரை நோய் அல்லது அதுபோன்ற ஏதோவொன்று காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் தங்களால் முடிந்தளவு உடல்நலத்தைப் பெற என்ன செய்ய வேண்டுமென்று இந்தக் கட்டுரை காட்டும்.

^ இக்கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிந்திப்பதற்கு

● உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்வது எவ்வாறு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்?

● உடல்நலம் என்று வரும்போது நீங்கள் நியாயமானவரென எப்படிக் காட்டலாம்?பிலிப்பியர் 4:5.

[பக்கம் 23-ன் பெட்டி/ படங்கள்]

மற்ற இளைஞர்கள் சொல்வது

மனித உடல் காரைப் போல் இருக்கிறது; அதன் சொந்தக்காரர்தான் அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனால்தான் நான் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறேன்.

மற்றொருவருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அதைத் தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும்; ஏனென்றால், அந்த நபருக்கு ஏமாற்றமளிக்க நாம் விரும்ப மாட்டோம்.

உடற்பயிற்சி செய்யும்போது ஒருவித சந்தோஷம் கிடைக்கிறது. உடற்பயிற்சி செய்து நல்ல உடல்வாகைப் பெறும்போது என்னுடைய தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது.

[படங்கள்]

ஈத்தன்

ப்ரியானா

எமிலி