உடன்பிறப்புகளோடு ஒத்துப்போவது எப்படி?
இளைஞர் கேட்கின்றனர்
உடன்பிறப்புகளோடு ஒத்துப்போவது எப்படி?
உங்கள் உடன்பிறப்புகளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது?
_____ நாங்கள் நெருங்கிய நண்பர்கள்
_____ பெரும்பாலும் ஒத்துப்போவோம்
_____ பொறுத்துக்கொள்வோம்
_____ சதா சண்டைதான்
“என்னுடைய 16-வயது தங்கச்சிதான் எனக்கு பெஸ்ட் ஃபிரெண்ட்!” என்கிறார் 19 வயது ஃபெலிஷா. * அதேபோல் கார்லியும் (17 வயது) தன் அண்ணன் எரிக்கை (20 வயது) குறித்து இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் இதுவரை சண்டையே வந்ததில்லை, அவ்வளவு ஒற்றுமையாக இருப்போம்!” ஆம், சில உடன்பிறப்புகள் நகமும் சதையுமாக இருக்கிறார்கள்.
ஆனால், நிறையப் பேர் லாரன்-மார்லா போலத்தான் இருக்கிறார்கள். “எடுத்ததற்கெல்லாம் நாங்கள் சண்டை போடுவோம்; சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் சண்டை போடுவோம்.”—லாரன். இன்னும் சில பேர் 12 வயது ஆலிஸைப் போல் சொல்லலாம்; தன் அண்ணன் டென்னிஸைக் குறித்து ஆலிஸ் சொல்வதாவது: “அவன் செய்வதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். கதவைத் தட்டாமலேயே என் ரூமுக்குள் நுழைந்து, கேட்காமல் கொள்ளாமல் என் பொருள்களை எடுத்துக்கொண்டு போவான். அவனைத் தட்டிக்கேட்டால், ‘தந்துவிடுவேன்’ என்பான். ஆளைப் பார்த்தால் வளர்ந்தவன் மாதிரி இருக்கிறான், அறிவு என்னவோ வளர்ந்தமாதிரியே தெரியல!”
‘எங்க வீட்டிலேயும் இதே நிலைமைதான்!’ என்கிறீர்களா? பிள்ளைகளாகிய உங்களுக்கு இடையே சமாதானத்தைக் கட்டிக்காப்பதில் உங்கள் அப்பா-அம்மாவுக்குப் பொறுப்பிருக்கிறது என்றாலும் மற்றவர்களுடன் ஒத்துப்போவதற்கு, இன்றைக்கு அல்லது நாளைக்கு நீங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏன் நீங்கள் இப்பொழுதே கற்றுக்கொள்ளக்கூடாது?
உங்கள் சகோதரனுடன்/சகோதரியுடன் நீங்கள் எதற்கெல்லாம் சண்டை போட்டிருக்கிறீர்கள்? கீழே உள்ளவற்றில் உங்களுக்குப் பொருந்துகிற காரணத்திற்குப் பக்கத்தில் ‘டிக்’ [✔] செய்யுங்கள். அல்லது உங்களைக் கொதிப்படையச் செய்யும் வேறு காரணம் ஏதாவது இருந்தால் அதையும் எழுதுங்கள்.
❑ உடமைகள். என் அண்ணன் கேட்காமல் கொள்ளாமல் என் பொருள்களை எடுத்துக்கொள்வான்; தட்டிக்கேட்டால், ‘தந்துவிடுவேன்’ என்பான்.
❑ ஒத்துப்போகாதிருப்பது. என் அண்ணன் சரியான சுயநலவாதி. எதையும் யோசித்துச் செய்ய மாட்டான். என்னை ஆட்டிப்படைப்பான்.
❑ பிறருடைய தனிமையை மதிப்பது. கதவைத் தட்டாமலே என் தங்கை என் ரூமுக்குள் வருவாள். எனக்கு வரும் ஈ-மெயில்களையும் எஸ்எம்எஸ்-களையும் என் அனுமதி இல்லாமல் வாசிப்பாள்.
❑ பிற காரணங்கள். .....
உங்கள் அண்ணனோ அக்காவோ எப்போது பார்த்தாலும் உங்களுக்கு எரிச்சலூட்டினால்—உங்களை அதிகாரம் பண்ணினால் அல்லது உங்கள் தனிமையை மதிக்காமல் நடந்தால்—நிச்சயம் அவர்கள்மீது உங்களுக்குக் கோபம்தான் வரும். ஆனால், பைபிளிலுள்ள ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.” (நீதிமொழிகள் 30:33) மூக்கைப் பிசைந்துகொண்டே இருந்தால் இரத்தம் வந்துவிடுவதுபோல், மனதில் கோபத்தை அடைகாத்தால் ஒருநாள் இல்லை ஒரு நாள் அது எரிமலையாய் வெடித்துவிடலாம்! அதனால் பிரச்சினை இன்னும் பெரிதாகவே உருவெடுக்கும். (நீதிமொழிகள் 26:21) அப்படியானால் சின்னச் சின்ன உரசல்கள் அனல் கக்கும் விவாதத்தில் முடிவடைவதை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்? முதலில், பிரச்சினைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.
பிரச்சினைக்கான உண்மைக் காரணம்
உடன்பிறப்புகளுக்கு இடையே வரும் பிரச்சினைகள் முகப் பருக்கள் போன்றவை. சலம் கோர்த்த முகப் பருவை மேலோட்டமாகப் பார்த்தால் அது கோரமாக இருக்கும். ஆனால், உள்ளுக்குள் ஏதாவது தொற்று இருக்கும். அதுபோலவே, அக்கா-தங்கை அல்லது அண்ணன்-தம்பி மத்தியில் ஏற்படுகிற கடும் மோதல்களுக்குப் பின்னே வேறெதாவது காரணம் இருக்கும்.
முகப் பருவைப் பிதுக்கி அதை அமுங்கச் செய்துவிடலாம். ஆனால், அப்படிச் செய்தால் அது மேலோட்டமாகத்தான் சரியாகும். அதனால் அந்த இடத்தில் சில சமயம் தழும்பு ஏற்பட்டுவிடலாம் அல்லது உள்ளுக்குள் இருக்கிற தொற்று இன்னும் கடுமையாகிவிடலாம். ஆகவே, உள்ளுக்குள் இருக்கிற தொற்றை நீக்கி, மேன்மேலும் பருக்கள் வராதபடி செய்வதே சிறந்தது. அவ்வாறே, உங்கள் உடன்பிறப்புகளுடன் வரும் மோதல்களுக்குப் பின் உள்ள காரணங்களைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஞானியான சாலொமோன்-ராஜாவின் அறிவுரையும் உங்களுக்குக் கைகொடுக்கலாம். “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்” என்று அவர் சொன்னார்.—நீதிமொழிகள் 19:11.
முன்பு குறிப்பிடப்பட்ட ஆலிஸ் தன் அண்ணனைப் பற்றிக் குறைபட்டுக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும்: “கதவைத் தட்டாமலேயே என் ரூமுக்குள் வந்து கேட்காமல் கொள்ளாமல் என் பொருள்களை எடுத்துக்கொண்டு போவான். அவனைத் தட்டிக்கேட்டால், ‘தந்துவிடுவேன்’ என்பான்.” அது மேலோட்டமாகத் தெரிந்த பிரச்சினை. ஆனால், அந்தப் பிரச்சினைக்கான உண்மைக் காரணம் என்ன..? ஆலிஸை டென்னிஸ் மதிக்காததே. *
ஆலிஸ் வேண்டுமானால் தன் பிரச்சினையை இவ்வாறு தீர்த்திருக்கலாம். “நீ இனிமேல் என் ரூமுக்குள் கால் வைக்கக் கூடாது, என்னுடைய பொருள்கள் எதையும் தொடக் கூடாது” என்று டென்னிஸுக்குச் சட்டம் போட்டிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால் பிரச்சினை மேலோட்டமாகத்தான் சரியாகியிருக்கும்; உள்ளுக்குள்ளேயோ புகைந்துகொண்டு இருந்திருக்கும். மறுபட்சத்தில், தன்னுடைய தனிமைக்கும் உடமைக்கும் மதிப்புக் கொடுக்கும்படி டென்னிஸிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லியிருந்தால்... அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இருந்த உறவு நிச்சயம் மேம்பட்டிருக்கும்.
சண்டைகளைத் தீர்க்க அல்லது தவிர்க்க கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுக்கும் உங்கள் உடன் பிறப்புக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தால் மட்டும் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. அப்படியானால், பிரச்சினையைத் தீர்த்து, மேன்மேலும் சண்டை
வருவதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் ஆறு படிகளை எடுக்க முயற்சி செய்யுங்கள்.1. சில அடிப்படை விதிகளைப் பரஸ்பரம் வகுத்துக்கொள்ளுங்கள் “எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்” என்று சொல்லிவைத்தார் சாலொமோன் ராஜா. (நீதிமொழிகள் 15:22) உங்கள் முயற்சியில் தோல்வியடைவதைத் தவிர்க்க வேண்டுமா..? அப்படியானால், உங்களுக்கும் உங்கள் உடன் பிறப்புக்கும் இடையே சண்டை வெடித்ததற்கு என்ன காரணமென்று நீங்கள் மேலே குறிப்பிட்டீர்களோ அதை மீண்டும் சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து உங்களுக்கென்று சில அடிப்படை விதிகளை வகுத்துக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். அப்படிச் செய்தால் பிரச்சினை அடியோடு அகன்றுவிடும். உதாரணமாக, உங்கள் மத்தியில் உள்ள பிரச்சினைக்கு உடமை காரணமாக இருந்தால், “மற்றவர்களுடைய பொருளை எடுப்பதற்கு முன் அனுமதி கேட்க வேண்டும்!” என்ற விதியை முதல் விதியாக வகுத்துக்கொள்ளலாம். “‘எடுக்கக் கூடாது!’ என்று சொன்னாலும் அந்தப் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்!”—இதை இரண்டாவது விதியாக வகுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற விதிகளை வகுக்கும்போது, இயேசு கொடுத்த கட்டளையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” (மத்தேயு 7:12) இந்த விதத்தில் நீங்களும் உங்கள் உடன்பிறப்புகளும் பரஸ்பரம் சில விதிகளை வகுத்துக்கொள்ளலாம். பின்பு நீங்கள் போட்ட விதிகள் சரிதானா என்று அப்பா-அம்மாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.—எபேசியர் 6:1.
2. வகுத்த விதிகளை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள். “மற்றவர்களுக்குக் கற்பிக்கிற நீங்களே உங்களுக்குக் கற்பிக்காமல் இருக்கலாமா? ‘திருடாதே’ என்று பிரசங்கிக்கிற நீங்களே திருடலாமா?” என்று கேட்டார் அப்போஸ்தலன் பவுல். (ரோமர் 2:21) இந்த நியதியின்படி நடக்க நீங்கள் என்ன செய்யலாம்? உதாரணமாக, உங்கள் தம்பியோ தங்கையோ உங்கள் தனிமையை மதிக்க வேண்டுமானால், அவர்களுடைய ரூமுக்குள் கால் வைப்பதற்கு முன் அல்லது அவர்களுக்கு வந்த ஈ-மெயில்களையோ எஸ்எம்எஸ்-களையோ வாசிப்பதற்கு முன் நீங்களும் அனுமதி கேட்க வேண்டும்.
3. முன்கோபம் வேண்டாம். இதை ஏன் பொன்னான ஆலோசனை எனலாம்? ஏனென்றால், “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது. (பிரசங்கி 7:9) எடுத்ததற்கெல்லாம் நீங்கள் கோபப்பட்டால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். இன்னொரு பக்கத்தில், உங்கள் கூடப்பிறந்தவர்கள் நிச்சயம் உங்களைக் கோபப்படுத்துகிற விதத்தில் நடந்துகொள்வார்கள். ஆனால், அந்த மாதிரியான சமயங்களில், முன்பு நீங்களும் அப்படி நடந்திருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (மத்தேயு 7:1-5) “எனக்கு 13 வயதாய் இருந்தபோது, ‘நான் சொல்வதை மற்றவர்கள் கேட்டே ஆகவேண்டும்!’ என்று நினைத்தேன். இப்போது என் குட்டித் தங்கை அப்படியே நடந்துகொள்கிறாள். அதனால் அவள் எதையாவது அடித்துச் சொன்னாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார் ஜென்னி.
4. மன்னித்து மறந்திடுங்கள். பிரச்சினை பெரிதாக இருந்தால் அதைக் கட்டாயம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக, உங்கள் தம்பியோ தங்கையோ செய்கிற ஒவ்வொரு தவறையும் பூதக் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டியதில்லை. பெருந்தன்மையோடு அந்தக் ‘குற்றத்தை மன்னித்துவிடுங்கள்.’ அப்படி மன்னித்தீர்களென்றால் கடவுளாகிய யெகோவா மிகவும் சந்தோஷப்படுவார். (நீதிமொழிகள் 19:11) 19 வயது அலிஸன் சொல்வதைக் கேளுங்கள்: “எனக்கும் என் தங்கச்சி ரேச்சலுக்கும் ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டால் நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். உடனே ‘சாரி’ சொல்லிக்கொள்வோம்; அதன் பின், எந்தக் காரணத்தினால் அந்த மனஸ்தாபம் வந்திருக்கலாம் என்று நாங்களே பேசிக்கொள்வோம். சில சமயங்களில், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். அடுத்த நாள் பார்த்தால் அந்த மாதிரி ஒன்று நடந்ததாகவே எனக்கு ஞாபகம் இருக்காது. அதனால், அதைப் பற்றிப் பேச்செடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.”
5. உங்கள் பெற்றோரை நடுவராக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் உடன்பிறப்புக்கும் இடையே உள்ள ஒரு பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியாவிட்டால் உங்கள் பெற்றோரின் உதவியை நாடுங்கள்; அவர்கள் சமரசம் செய்து வைப்பார்கள். (ரோமர் 14:19) ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: பெற்றோரின் உதவியில்லாமல் நீங்களாகவே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதுதான் முதிர்ச்சிக்கு அடையாளம்!
6. உங்கள் உடன்பிறப்புகளின் நல்ல குணங்களைப் பாராட்டுங்கள். உங்கள் உடன்பிறப்புகளிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள் நிச்சயம் இருக்கும். அப்படி அவர்கள் ஒவ்வொருவரிடமும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு குணத்தைக் கீழே எழுதுங்கள்.
பெயர் எனக்குப் பிடித்த குணம்
.....
உங்கள் உடன்பிறப்புகளின் குறைகளைப் பற்றியே சதா யோசித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த குணம் ஏதாவது இருக்கிறதாவென்று பாருங்கள்; அதைச் சந்தர்ப்பம் பார்த்து அவர்களிடம் சொல்லுங்கள்.—சங்கீதம் 130:3; நீதிமொழிகள் 15:23.
வாழ்க்கையின் நிஜம்: அம்மா-அப்பா கையைவிட்டுப் போய் பொறுப்புள்ளவர்களாக வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கும்போது நீங்கள் அன்றாடம் சந்திக்கும் ஜனங்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும் விதத்தில் நடந்துகொள்ளலாம். ஒருவேளை, உங்கள் சக பணியாளர்களும் மற்றவர்களும் உங்கள்மீது சிடுசிடுவென விழலாம், உங்களைப் புரிந்துகொள்ளாமல் நடக்கலாம், சுயநலமாகச் செயல்படலாம். இப்படிப்பட்ட சவால்களை வெற்றிகரமாய்ச் சமாளிக்கக் கற்றுக்கொள்வதற்கு வீடுதான் மிகச் சிறந்த இடம். உங்கள் உடன்பிறப்புகள் உங்களோடு ஒத்துப்போகாமல் இருந்தால், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள அவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்!
உங்கள் சகோதரனோ சகோதரியோ எப்போதுமே உங்கள் உயிர் நண்பராய் இருக்க வாய்ப்பில்லை என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:24) உங்கள் சகோதரன் அல்லது சகோதரிமீது ‘ஏதாவது மனக்குறை இருந்தாலும்,’ அது நியாயமானதாகவே இருந்தாலும், நீங்கள் அதை ‘பொறுத்துக்கொள்ளுங்கள்.’ அப்படிச் செய்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நட்பு பலப்படும். (கொலோசெயர் 3:13) அப்போது, உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு அந்தளவு எரிச்சலூட்டுகிறவர்களாகத் தெரிய மாட்டார்கள்; நீங்களும் அவர்களை அடிக்கடி கோபப்படுத்துகிறவர்களாக இருக்க மாட்டீர்கள். (g10-E 08)
“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வேறு சில கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype
[அடிக்குறிப்புகள்]
^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
^ இன்னொரு உதாரணத்திற்கு, கீழே உள்ள பெட்டியைக் காண்க.
சிந்தனைக்கு
● பிரச்சினையைவிட அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஏன் முக்கியம்?
● மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு படிகளில் எந்தப் படியை எடுக்க நீங்கள் முக்கியமாக உழைக்க வேண்டும்?
[பக்கம் 27-ன் பெட்டி]
பிரச்சினைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடியுங்கள்
பிரச்சினைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பதில் திறமையை வளர்த்துக்கொள்ள விருப்பமா? அப்படியென்றால், இயேசுவின் உவமையில் வரும் ஊதாரி மகனைப் பற்றி வாசியுங்கள்.—லூக்கா 15:11-32.
தம்பி வீட்டுக்கு வந்தபோது அண்ணன் எப்படி நடந்துகொண்டான் என்பதைக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
எதனால் அண்ணன் அப்படி நடந்துகொண்டான்?
ஆனால் அவன் அப்படி நடந்துகொண்டதற்கு உண்மைக் காரணம் என்ன?
அந்தப் பிரச்சினையைத் தீர்க்க அப்பா எப்படி முயற்சி செய்தார்?
பிரச்சினையைத் தீர்க்க அண்ணன் என்ன செய்ய வேண்டியிருந்தது?
இப்போது உங்கள் சகோதரனோடு அல்லது சகோதரியோடு சமீபத்தில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பின்னர், கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பக்கத்தில் உங்கள் பதில்களை எழுதுங்கள்.
எதனால் நீங்கள் அப்படி நடந்துகொண்டீர்கள்?
ஆனால் நீங்கள் அப்படி நடந்துகொண்டதற்கு உண்மைக் காரணம் என்ன?
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இனிமேல் இந்த மாதிரி பிரச்சினை உங்களுக்கிடையே வராதிருப்பதற்கும் நீங்கள் இருவருமாய் சேர்ந்து என்ன விதிகளை வகுத்துக்கொள்ளலாம்?
[பக்கம் 28, 29-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் சகாக்கள் சொல்வது
“இனிமேல் என் தங்கச்சிகளோடு ஒரு ஃபிரெண்ட் மாதிரிதான் பழகப் போகிறேன்! இது ஒரு பெரிய புராஜெக்ட்; அதனால் இன்றைக்கே ஆரம்பிக்கப் போகிறேன்.”
“இப்போதெல்லாம் நாங்கள் எதைச் செய்தாலும் குடும்பமாகச் செய்கிறோம். அதனால், எங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது. முன்புபோல் சண்டை வருவதில்லை.”
“சில விஷயங்களில் நாங்கள் இரண்டு பேரும் எதிரும் புதிருமாக இருப்போம். என்னதான் இருந்தாலும்... என் தங்கச்சி மாதிரி வராது! அவளுடைய இடத்தில் வேறு யாரையும் என்னால் வைத்துப் பார்க்க முடியாது.”
“என் தம்பி-தங்கச்சி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உங்களுக்குக் கூடப்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களை ஒருநாளும் அற்பமாக நினைத்துவிடாதீர்கள்!”
[படங்கள்]
டீயா
பியங்கா
சமந்தா
மெர்லின்
[பக்கம் 27-ன் படம்]
உடன்பிறப்புகளுக்கு இடையே வரும் பிரச்சினைகள் முகப் பருக்கள் போன்றவை! அவற்றை மேலோட்டமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அடியோடு அகற்ற வேண்டும்