Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் சோகத்திலிருந்து மீள்வது எப்படி?

என் சோகத்திலிருந்து மீள்வது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

என் சோகத்திலிருந்து மீள்வது எப்படி?

“என் ஃபிரெண்ட்ஸுக்கு இடையில் பிரச்சினை வந்து அதைத் தீர்க்க முடியாமல் அவர்கள் திணறும்போது நான்தான் தலையிட்டு தீர்த்துவைப்பேன். அதன்பின் அவர்கள் சமரசமாகிவிடுவார்கள். ஆனால் நான்... வீட்டுக்குப் போனதும் என் ரூம் கதவை அடைத்துவிட்டு முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுவேன்... என் மனசுக்குள் இவ்வளவு சோகம் இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்!”—கெல்லி. *

“நான் சோகமாக இருக்கும்போது யாருடனும் பேசமாட்டேன், என் சோகக் கூட்டுக்குள் அடைந்துவிடுவேன். எங்கேயாவது வரும்படி என்னை யாராவது கூப்பிட்டால்கூட ஏதாவது நொண்டிச் சாக்குச் சொல்லிச் சமாளித்துவிடுவேன். வீட்டில் உள்ளவர்களிடம் என் சோகத்தை மறைக்க சந்தோஷமாய் இருப்பதுபோல் காட்டிக்கொள்வேன்; அதைப் பார்த்து அவர்களும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வார்கள்.”—ரிக்.

கெல்லி சொல்வது போல்... அல்லது ரிக் சொல்வது போல்... நீங்களும் எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களிடம் ஏதோ குறை இருக்கிறதென்று முடிவு செய்துவிடாதீர்கள். சொல்லப்போனால், நம் எல்லாருடைய வாழ்க்கையிலுமே அவ்வப்போது சோகம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. ஏன், கடவுள்-பயமுள்ளவர்களாக பைபிளில் குறிப்பிடப்படுகிற நபர்களும்கூட சோகத்தில் ஆழ்ந்த தருணங்கள் உண்டு.

சில சமயங்களில், நீங்கள் ஏன் சோகமாய் இருக்கிறீர்கள் என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரியலாம்; பிற சமயங்களில் காரணமே இல்லாமல் நீங்கள் சோகமாயிருக்கலாம். “சோக சம்பவம் ஏதாவது நடந்தால்தான் சோகமாயிருப்பீர்கள் என்று சொல்ல முடியாது. அப்படி எதுவும் நடக்காமலேயேகூட சோகம் உங்களைக் கவ்விக்கொள்ளலாம். ‘விசித்திரமாக இருக்கிறதே’ என்கிறீர்களா..? ஆனால், அதுதான் உண்மை!” என்கிறார் 19 வயது ஆனா.

நீங்கள் சோகமாய் இருப்பதற்குக் காரணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, சோகத்தின் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

குறிப்பு #1: அதைப் பற்றிப் பேசுங்கள். “[உண்மை] நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் [பழமொழி ஆகமம்] 17:17, கத்தோலிக்க பைபிள்.

கெல்லி: “நான் படுகிற கஷ்டத்தை யாரிடமாவது சொன்ன பிறகு என் மனப் பாரமெல்லாம் குறைந்துவிடும். ஏனென்றால், அந்த நபர் என் நிலைமையைப் புரிந்துகொண்டு சோகக் குழியிலிருந்து என்னைத் தூக்கிவிடுவார்.”

ஆலோசனை: சோகம் உங்கள் மனதில் அப்பிக்கொள்ளும்போது யாரிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள்? அந்த ‘உண்மை நண்பரின்’ பெயரை இங்கே எழுதுங்கள்.

.....

குறிப்பு #2: அதைப் பற்றி எழுதுங்கள். சோக மேகங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்போது உங்கள் ஆதங்கத்தையெல்லாம் எழுத்தில் வடியுங்கள். தாவீது சில சமயங்களில் சோகப்பிடியில் சிக்கித் தவித்தபோது அதை எழுத்தில் வடித்தார்; பைபிளில் உள்ள சங்கீத புத்தகத்தில் நாம் அவற்றை வாசிக்கலாம். (சங்கீதம் 6:6) இப்படி நம் உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும்போது, “மெய் ஞானத்தையும் நல் ஆலோசனையையும் காத்துக்கொள்ள” முடியும்.—நீதிமொழிகள் 3:21.

ஹெதர்: “நம் மனதில் முட்டி மோதும் கவலைகளையெல்லாம் எழுத்தில் வடிக்கும்போது அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்க்க முடியும். உங்கள் கவலைகளை வரிசைப்படுத்தி அதைத் தீர்ப்பதற்கு வழி கண்டுபிடியுங்கள், அப்புறம் பாருங்கள், உங்க சோகம் தானாகக் குறைந்துவிடும்.”

ஆலோசனை: சிலருக்கு ‘டைரி’ எழுதுகிற பழக்கம் உண்டு. உங்களுக்கும் அந்தப் பழக்கம் இருந்தால் நீங்கள் என்னவெல்லாம் எழுதலாம்? சோகமாயிருக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை எழுதுங்கள்; உங்கள் சோகத்திற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்பதையும் எழுதுங்கள். எழுதி வைத்ததை ஒரு மாதத்திற்குப் பிறகு எடுத்து வாசித்துப் பாருங்கள். அன்று எழுதின விஷயம் இன்று உங்களுக்கு அற்பமாகத் தோன்றுகிறதா? அப்படியென்றால், இந்த மாற்றம் எப்படி வந்தது என்பதையும் எழுதுங்கள்.

குறிப்பு #3: அதைப் பற்றி ஜெபியுங்கள். உங்கள் மன சஞ்சலங்களைக் கடவுளிடம் கொட்டினால், “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் . . . காத்துக்கொள்ளும்” என்று பைபிள் சொல்கிறது.—பிலிப்பியர் 4:7.

எஸ்தர்: “நான் ஏன் அப்படிச் சோகமாய் இருந்தேன் என யோசித்து யோசித்துப் பார்த்தேன். அதற்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் சந்தோஷமாய் இருக்க உதவும்படி யெகோவாவிடம் மன்றாடினேன். ஏனென்றால், காரணமில்லாமல் சோகமாய் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் ஒருவழியாக சோகத்தின் பிடியிலிருந்து மீண்டேன். அதனால், நான் உங்களுக்குச் சொல்கிற ஒரு விஷயம் என்னவென்றால்... ஜெபத்துக்கு இருக்கிற வலிமையை என்றைக்குமே குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள்!”

ஆலோசனை: சங்கீதம் 139:23, 24-ல் உள்ள வார்த்தைகளை உதாரணமாக வைத்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஆழ்மனதின் ஆதங்கங்களை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் சோகத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க அவரிடம் உதவி கேளுங்கள்.

மேற்சொன்ன ஆலோசனைகள் போக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் உங்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலை அளிக்கிறது. (சங்கீதம் 119:105) பைபிள் பதிவுகளை வாசித்து, மனதிற்கு உரம் சேர்க்கும் விஷயங்களால் உங்கள் மனதை நிரப்பிக்கொள்ளுங்கள். அவை உங்கள் சிந்தனையையும் செயலையும் செதுக்கிச் சீராக்கும். (சங்கீதம் 1:1-3) உதாரணத்திற்கு, பைபிளிலுள்ள அப்போஸ்தலரின் செயல்கள் என்ற புத்தகத்தில் நம்மைச் செயல்படத் தூண்டும் விறுவிறுப்பான பதிவுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 2 (ஆங்கிலம்) புத்தகத்தில் ஒன்பது “ரோல் மாடல்கள்” பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பக்கங்களில் காணப்படும் விஷயங்களைச் சிந்தித்துப் பார்த்து, உங்கள் பைபிள் வாசிப்பைச் சுவாரஸ்யமாக்குங்கள். அந்தப் பகுதியில் இடம்பெறும் பைபிள் கதாபாத்திரங்கள் சில... யோசேப்பு, எசேக்கியா, லீதியாள், தாவீது. அதே புத்தகத்தை பக்கம் 227-க்குத் திருப்பினால், சோகத்திலிருந்து மீண்டு வந்த அப்போஸ்தலன் பவுலின் அனுபவத்தைக் காண்பீர்கள். தன்னுடைய பாவ இயல்பு காரணமாக இவர் சில சமயம் சோகத்தில் ஆழ்ந்ததையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் பற்றி அங்கு சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், சோகத்திலிருந்து மீள முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம்; அப்போது என்ன செய்வது?

சோகத்திலிருந்து மீள...

“சில சமயம் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது. எழுந்து என்னத்தைச் சாதித்துவிடப் போகிறேன் எனத் தோன்றும்” என்கிறார் ரையன். இவருக்கு இருப்பது, மனச்சோர்வு நோய். ரையன் மாதிரி நிறைய பேர் இந்த வியாதியினால் அவதிப்படுகிறார்கள். பருவ வயதுப் பிள்ளைகள் வாலிபப் பருவத்தை எட்டும் முன் அவர்களில் சுமார் நான்கில் ஒருவர் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.

உங்களுக்கு ஒருவேளை மனச்சோர்வு நோய் இருந்தால் அதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அதற்கு சில அறிகுறிகள் இதோ... அந்த நோய் இருப்பவர்களுக்கு மனநிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறும், ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள்; யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருப்பார்கள், எந்த விஷயத்திலுமே ஆர்வம் காட்ட மாட்டார்கள், சரிவர சாப்பிடவோ தூங்கவோ மாட்டார்கள், தாங்கள் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பார்கள், தாங்கள் செய்யாத குற்றத்திற்கும் தங்களை நொந்துகொள்வார்கள்.

சொல்லப்போனால், நம் எல்லாரிடமும் இந்த அறிகுறிகளில் சில அவ்வப்போது தென்படுகின்றன. ஆனால், இந்த அறிகுறிகள் ஓரிரு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உங்கள் பெற்றோரிடம் சொல்லி, மருத்துவரை நாடுங்கள். அப்படி உங்களுக்கு மனச்சோர்வு நோய் இருந்தால் அதை மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். *

உங்களுக்கு மனச்சோர்வு நோய் இருப்பதாக மருத்துவர் சொன்னால் அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். சிகிச்சைக்குப் பிறகு நிறையப் பேர் இந்த நோயிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறார்கள்; காலப்போக்கில் முழுவதுமாகவே மீண்டு வந்திருக்கிறார்கள்! உங்களுடைய சோகத்திற்குக் காரணம், மனச்சோர்வாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி, சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18-ல் (பொது மொழிபெயர்ப்பு) உள்ள இதமான வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். அது சொல்வதாவது: “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.” (g10-E 09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வேறு சில கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ சோகத்தின் கோரப் பிடியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்திருந்தால் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம்—வயதில் மூத்தவரிடம்—உடனடியாகப் பேசுங்கள்.—ஜூலை – செப்டம்பர் 2008 தேதியிட்ட விழித்தெழு! இதழில் பக்கங்கள் 25-29-ஐப் பாருங்கள்.

^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிந்தனைக்கு

மனம்விட்டு அழுவதால் பயன் உண்டா?

“சீக்கிரத்தில் நான் அழ மாட்டேன், ஆனால், சோகமாய் இருக்கும்போது அழுதுவிடுவேன். அழுது தீர்ப்பது ‘ரீசெட் பட்டனை’ அழுத்துவதற்குச் சமம். அப்படிச் செய்யும்போது, நின்றுபோயிருந்த “எந்திரம்” ஓட ஆரம்பித்துவிடும். அதன் பின் நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிடுவேன். அப்போதுதான் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கையே பிறக்கும்.”—லீயான்.

சோகத்திலிருந்து மீண்டு வர மற்றவர்களுடைய உதவி ஏன் தேவை?

“சோகமாக இருக்கும்போது தனியாக இருக்கக்கூடாதென்று புரிந்துகொண்டேன். மனதார அழுது தீர்க்கவும், என் சோகத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் நான் கொஞ்சம் நேரம் தனியாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு என் கவனத்தை வேறு பக்கம் திருப்ப நான் மற்றவர்களோடு சேர்ந்திருந்தால்தான் முடியும்.”—கிறிஸ்டீன்.

[பக்கம் 31-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் சகாக்கள் சொல்வது

“எப்போதெல்லாம் நான் என்னைப் பற்றியே ரொம்ப யோசிக்கிறேனோ அப்போதெல்லாம் சோகம் என்னைத் தொற்றிக்கொள்ளும். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யப் பார்க்கிறேன். அப்படிச் செய்வதால் என் கவனம் வேறு பக்கம் திரும்பிவிடும், போன சந்தோஷமும் வந்துவிடும்.”

“தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் என் சுயமதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. அதனால் நான் அடிக்கடி சோகத்திற்குப் பலியாகிவிடுவதில்லை. உடற்பயிற்சி செய்வதிலேயே என் சக்தியெல்லாம் போய்விடும், என் சோகத்தைப் பற்றி நினைக்கக்கூட எனக்குத் தெம்பு இருக்காது.”

[படங்கள்]

டிரனெல்

ரெபேக்கா

[பக்கம் 32-ன் படம்]

சுய முயற்சியாலும் மற்றவர்களுடைய உதவியாலும் சோகமெனும் குழியிலிருந்து நீங்கள் வெளியே வரலாம்