Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் லட்சியங்களை அடைவது எப்படி?

என் லட்சியங்களை அடைவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

என் லட்சியங்களை அடைவது எப்படி?

இவற்றில் எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

● அதிக தன்னம்பிக்கை

● நிறைய நண்பர்கள்

● கூடுதல் சந்தோஷம்

சொல்லப்போனால், இந்த மூன்றையுமே நீங்கள் அடைய முடியும்! ஆனால் எப்படி? லட்சியம் வையுங்கள், பின்பு அதை அடையுங்கள். கீழ்க்காணும் ஆலோசனைகளைக் கவனியுங்கள்.

அதிக தன்னம்பிக்கை முதலில் சின்னச் சின்ன லட்சியங்களை வைத்து அவற்றை எட்டுங்கள். அப்போது பெரிய பெரிய லட்சியங்களை வைக்க உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அதுமட்டுமல்ல, தினம் தினம் நீங்கள் எதிர்ப்படும் சவால்களைச் சந்திக்க, உதாரணத்திற்கு சகாக்களிடமிருந்து வரும் தொந்தரவுகளைச் சமாளிக்க, உங்களுக்குள் தைரியம் பிறக்கும். இப்படி நீங்கள் தன்னம்பிக்கையோடு இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். தங்கள் வழிக்கு வரவேண்டுமென்று உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உங்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.—மத்தேயு 5:14-16-ஐ ஒப்பிடுங்கள்.

நிறைய நண்பர்கள் லட்சியவாதிகளுக்கு, அதாவது வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை வைத்து அதை எட்ட கடினமாய் உழைப்பவர்களுக்கு நண்பர்களாய் இருக்க பொதுவாக எல்லாருமே ஆசைப்படுவார்கள். உங்கள் லட்சியங்களைப் பார்த்து உங்களோடு நட்பு வைத்துக்கொள்ளும் நபர்கள், லட்சியங்களை அடைவதில் பெரும்பாலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.—பிரசங்கி 4:9, 10.

கூடுதல் சந்தோஷம் வாழ்க்கையில் ஒரு லட்சியமே இல்லாமல், ‘என்ன நடக்குதோ நடக்கட்டும்’ என்று உட்கார்ந்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. மறுபட்சத்தில், லட்சியங்களை வைத்து அவற்றை அடையும்போது, வாழ்க்கையில் சாதனை புரிந்த திருப்தி கிடைக்கும். அதனால்தான், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலன் பவுல் என்ற ஒரு கிறிஸ்தவர், “நான் குறிக்கோளின்றி . . . ஓடமாட்டேன்” என்று ஒருமுறை சொன்னார். (1 கொரிந்தியர் 9:26, பொது மொழிபெயர்ப்பு) அதோடு, இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் பெரிய லட்சியம் வைத்தால், பெரியளவில் சாதனை படைத்த சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவீர்கள்!

என்ன லட்சியம் வைப்பதென்று யோசித்துவிட்டீர்களா? அடுத்த பக்கத்தில் உள்ள தாளை வெட்டி அதை இரண்டாக மடியுங்கள். அதிலுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். * (g10-E 10)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வேறு சில கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ சின்னச் சின்ன லட்சியங்களை (ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில்) எட்ட இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். பெரிய பெரிய லட்சியங்களுக்கும் இவை பொருந்தும்.

சிந்தனைக்கு

● ஒரே சமயத்தில் நிறைய லட்சியங்களை வைப்பது சரியா?—பிலிப்பியர் 1:10.

● லட்சியம் வைப்பதென்றால்... வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிடுவது என்று அர்த்தமா?—பிலிப்பியர் 4:5.

[பக்கம் 21, 22-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் லட்சியத்தை எப்படி எட்டலாம்

தீர்மானியுங்கள் நீதிமொழிகள் 4:25, 26

”பெரிய பெரிய லட்சியங்களை வைக்க பயப்படாதீர்கள். மற்றவர்கள் ஏற்கெனவே எட்டியிருக்கிறார்கள் என்றால் உங்களாலும் அவற்றை எட்ட முடியும்.”—ராபின்.

1. என்னென்ன லட்சியங்கள் வைக்கலாமென யோசியுங்கள். சும்மா இப்படிச் செய்து பாருங்கள். ‘எப்படி எட்டுவது?’ என்றெல்லாம் ரொம்ப யோசிக்காதீர்கள். உங்கள் மனதுக்கு வரும் லட்சியங்களை வரிசையாக எழுதுங்கள். குறைந்தபட்சம் 10 அல்லது 20 லட்சியங்களையாவது எழுதுங்கள்.

2. உங்கள் லட்சியங்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். எந்த லட்சியத்தை அடைவது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்? எது ரொம்ப சவாலானதாக இருக்கும்? எது உங்களுக்குப் பெருமை தேடித் தரும்? என யோசியுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வையுங்கள்: உங்களுக்குப் பிரயோஜனம் தரும் லட்சியத்தைத்தான் சிறந்த லட்சியம் என்று சொல்ல முடியும்.

3. வரிசைப்படுத்துங்கள். சின்னச் சின்ன லட்சியங்களை முதலில் வையுங்கள் (ஒரு சில நாட்களில் அடையக்கூடியவை). அதற்குப் பிறகு பெரிய பெரிய லட்சியங்களை வையுங்கள் (சில வாரங்கள் அல்லது மாதங்களில் எட்டக்கூடியவை). எந்த லட்சியத்தை முதலில் எட்ட விரும்புகிறீர்களோ, அதன்படி உங்கள் லட்சியங்களை வரிசைப்படுத்துங்கள்.

இதோ சில லட்சியங்கள்

நட்பு வயதில் என்னைவிட மூத்தவராய் இருக்கும் ஒருவரையாவது என்னுடைய நண்பராக வைத்துக்கொள்ள வேண்டும். முறிந்துபோன நட்பைப் புதுப்பிக்க வேண்டும்.

ஆரோக்கியம் வாரத்தில் ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும்.

பள்ளி கணக்கில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். என்ன வந்தாலும் சரி, பரீட்சையில் நான் கோல்மால் செய்யக் கூடாது.

ஆன்மீகம் தினமும் 15 நிமிடத்திற்கு பைபிள் வாசிக்க வேண்டும். இந்த வாரத்தில் என் வகுப்பில் ஒருவரிடமாவது சத்தியத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

திட்டமிடுங்கள் நீதிமொழிகள் 21:5 2

“லட்சியங்களை வைத்தால் மட்டும் போதாது, அவற்றை எட்டுவதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால், அவை உங்கள் மனதுக்குள்ளேயே உறங்கிவிடும்.”—டெரிக்.

உங்கள் மனதுக்குள் இருக்கிற ஒவ்வொரு லட்சியத்தையும் அடைய இப்படிச் செய்து பாருங்கள்:

1. லட்சியங்களை வரிசையாக எழுதி வையுங்கள்.

2. லட்சியத்தை எட்ட கெடு வையுங்கள். கெடு இல்லாத லட்சியம் நனவாகாது!

3. லட்சியத்தை அடைய என்ன செய்யலாமெனத் திட்டமிடுங்கள்.

4. என்ன சவால்கள் வரலாமென யோசியுங்கள். அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் யோசியுங்கள்.

5. உறுதிகொள்ளுங்கள். உங்கள் லட்சியத்தை அடைய உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வீர்களென உறுதிகொள்ளுங்கள். இப்போது தேதியிட்டுக் கையொப்பம் வையுங்கள்.

பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் பாண்டிச்சேரி செல்ல ஜூலை 1

படிகள்

1. பிரெஞ்சு மொழிப் பயிற்சிப் புத்தகத்தைப் பெற வேண்டும்.

2. வாரத்தில் 10 புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. பிரெஞ்சு மொழியில் மற்றவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும்.

4. இலக்கணத்திலும் உச்சரிப்பிலும் நான் என்ன தவறு செய்கிறேன் என்று யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சவால்கள்

அக்கம்பக்கத்தில் பிரெஞ்சு பேசுவோர் யாருமே இல்லை

என்ன செய்யலாம்?

www.pr418.com. என்ற முகவரியில் பிரெஞ்சு மொழி ஆடியோ பதிவுகளை டௌன்லோடு செய்து கேளுங்கள்

...... ......

கையொப்பம் தேதி

செயலில் இறங்குங்கள்! யோவான் 13:17 3

“வைத்த லட்சியங்களை எட்டுவதில் நீங்கள் குறியாக இருக்க வேண்டும். அவற்றை அடைய முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன லட்சியம் வைத்தோம் என்பதைக்கூட மறந்துவிடுவோம்.”—எரிக்கா.

உடனடியாக ஆரம்பியுங்கள். ‘என் குறிக்கோளை எட்டுவதற்கு முதல் படியாக நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் நீங்கள் திட்டவட்டமாக யோசித்து வைக்காமல் இருக்கலாம், அதற்காக முதல் படியை எடுக்காமல் அப்படியே இருந்துவிடாதீர்கள். பைபிள் சொல்கிறபடி பார்த்தால், ‘சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் உங்களால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சினால் ஒருபோதும் அறுவடை செய்ய முடியாது.’ (பிரசங்கி 11:4, ஈஸி டு ரீட் வர்ஷன்) அதனால், இன்றைக்கே நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள், அது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, ஆரம்பித்துவிடுங்கள்.

தினமும் உங்கள் லட்சியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் லட்சியங்களை அடைய நீங்கள் எழுதிவைத்திருக்கும் ஒவ்வொரு படியுமே ரொம்ப முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படியையும் முடிக்க முடிக்க அதற்குப் பக்கத்தில் ‘டிக்’ [] செய்யுங்கள் (அல்லது முடித்த தேதியைக் குறிப்பிடுங்கள்)

வளைந்துகொடுங்கள். நீங்கள் எவ்வளவுதான் யோசித்துத் திட்டமிட்டாலும் நாட்கள் நகரும்போது அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் போட்ட திட்டத்தின்படியேதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று எதுவுமில்லை. குறிக்கோளை எட்டுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டே இருங்கள், அதுபோதும்.

கற்பனை செய்து பாருங்கள். இப்போது “ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டனை” தட்டிவிட்டு, உங்கள் லட்சியத்தை எட்டிவிட்டதுபோல் கற்பனை செய்து பாருங்கள். சிகரத்தைத் தொட்டுவிட்ட திருப்தி கிடைக்கிறதா? அடுத்ததாக, “ரிவைண்டு பட்டனை” தட்டிவிட்டு, நீங்கள் திட்டமிட்ட ஒவ்வொரு படியையும் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக, “ப்ளே பட்டனை” அழுத்துங்கள். ஒவ்வொரு படியையும் நீங்கள் செய்து முடிப்பதாகவும், கடைசியில் உங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டதாகவும், சந்தோஷ வானில் சிறகடிப்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். இன்னும் என்ன தாமதம்... ஆரம்பியுங்கள்!

[படம்]

லட்சியம் என்பது வரைபடம் போன்றது; அது உருப்பெற... உழைப்பு தேவை!

[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் சகாக்கள் சொல்வது 4

”வாழ்க்கையில் ஒரு குறிக்கோளோ எதிர்பார்ப்போ இல்லையென்றால் நீங்கள் நிச்சயம் சோர்ந்து விடுவீர்கள். ஆனால், உங்களுக்கென லட்சியங்கள் வைத்து அவற்றை எட்டும்போது உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படுவீர்கள்.”—ரீட்.

”நீங்கள் நினைத்த மாதிரி அல்லது நினைத்த நேரத்திற்குள் உங்களுடைய லட்சியத்தை எட்ட முடியவில்லை என்றால் உங்களையே நொந்துகொள்ளாதீர்கள். அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதற்குப் பதிலாக முயற்சி செய்துகொண்டே இருங்கள்.”—கோரி.

”நீங்கள் வைத்திருக்கிற லட்சியங்களை ஏற்கெனவே வைத்து அவற்றை எட்டியிருக்கும் நபர்களிடம் பேசுங்கள். அவர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிக்கலாம், உங்கள் லட்சியத்தை எட்ட நடைமுறை ஆலோசனைகளையும் கொடுக்கலாம். உங்கள் லட்சியத்தைப் பற்றி உங்கள் குடும்பத்தினரிடமும் பேசுங்கள். அவர்கள் பங்கில் முடிந்தளவு உங்களுக்கு உதவி செய்வார்கள்.”—ஜூலியா.

[பக்கம் 20-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வெட்டுங்கள்

மடியுங்கள்