யாரையாவது நம்ப முடியுமா?
யாரையாவது நம்ப முடியுமா?
மயக்க மருந்து மருத்துவத்தில் முன்னோடியாகக் கருதப்பட்ட ஒரு மருத்துவர், பிரசித்திபெற்ற மருத்துவ இதழில் வெளிவந்த ஆய்வுகளின் முடிவுகளை பத்து வருடங்களுக்கும் மேலாகத் திரித்துக் கூறியிருந்தார். கடைசியில்தான் அவருடைய குட்டு வெளிப்பட்டது!
“இப்படிச் செய்ய அவருக்கு எப்படி மனசு வந்தது? என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி டாக்டர் ஸ்டீவன் எல். ஷேஃபர் ஆதங்கப்பட்டதாக அனெஸ்திஸ்யாலஜி நியூஸ் கூறியது.
மதிப்புக்குரிய பணியில் இருக்கும் ஒருவருக்கு சக மனிதரை ஏமாற்ற வேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்திருக்கும்? பின்வரும் நான்கு காரணிகளை இப்போது கவனிப்போம்...
● பேராசை. த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றில், டாக்டர் ஜெரோம் இவ்வாறு விளக்கம் அளித்தார்: “ஆய்வாளர்களுக்குப் பெருவாரியான வருமானம் [மருந்து] கம்பெனிகளிடமிருந்து கிடைப்பதால், அவற்றுக்குச் சாதகமான ஆய்வு முடிவுகளையே வெளியிடுவதற்காக பல்வேறு குளறுபடி வேலைகளில் ஈடுபடத் துணிகிறார்கள்.” இவர் த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.
● வெற்றிக்கான வெறி. ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெறுவதென்றால் வெற்றி ஏணியின் உச்சத்தை எட்டுவதுபோல்! அதனால் அந்நாட்டு அறிவியல் மாணவர்கள், டாக்டர் பட்டத்தை “வாங்க” ஆயிரக்கணக்கான யூரோக்களை ஆசிரியர்களின் கைகளில் திணிப்பதாகச் செய்தி அடிபடுகிறது. குறுக்கு வழியில் வெற்றிபெறத் துடித்த மாணவர்கள் பலர், தாங்கள் வெற்றி பெற்ற பின்பு “நேர் வழியில் நடப்போம்” என்று பேட்டி அளித்ததாக த நியூ யார்க் டைம்ஸில் வெளிவந்த ஓர் அறிக்கை காட்டியது.
● வழிகாட்டிகளுக்குப் பஞ்சம். “[மாணவர்களுடைய] தார்மீக உணர்வுகள் மழுங்கிப் போய்விட்டன என்று சொல்வதைவிட . . . அவர்களுடைய ஆசிரியர்களும் குருக்களும் சமுதாயமும் அவர்களுக்கென்று தார்மீக நெறிமுறைகளை வகுத்துக் கொடுக்கவில்லை என்று சொல்வதுதான் சரி!”—உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக்
குறித்து ஒரு பேராசிரியர் சொன்னதாக த நியூ யார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி.● முறைகேடுகள். கிட்டத்தட்ட 30,000 மாணவர்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; 98 சதவீதத்தினர், மற்றவர்களிடம் நேர்மையாய் நடந்துகொள்வது அத்தியாவசியமெனத் தெரிவித்தார்கள். இருந்தாலும், 80 சதவீதத்தினர் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லியிருந்ததை ஒத்துக்கொண்டார்கள்; 64 சதவீதத்தினர் முந்தின வருடத் தேர்வில் ‘காப்பி’ அடித்திருந்ததையும் ஒத்துக்கொண்டார்கள்.
உயர்ந்த நன்னெறிகள்
இந்தப் பக்கத்தில் உள்ள பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மனிதர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாய் இருக்கும் விதத்திலேயே படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) இப்படிப்பட்ட மனப்போக்கைத் தவிர்த்து, எங்கும் பரவியுள்ள நேர்மையின்மையை எதிர்த்துப் போராடுவது எப்படி? பின்வரும் பைபிள் நன்னெறிகள் அதற்கு உதவும்:
● “அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.”—நீதிமொழிகள் 3:29.
அயலார்மீது நமக்கு அன்பு இருந்தால் அவருடைய நலனை மனதில் வைத்துச் செயல்படுவோம், அவருக்குத் துரோகம் செய்வதைக் கனவிலும்கூட நினைக்க மாட்டோம். ஆம், இந்தத் தொடர்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போலி மருந்து விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்... ஏன், பேராசையால் விளையும் எல்லாவித சுரண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும்... அயலார் மீதுள்ள இந்த அன்பே உதவும்.
● “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.”—நீதிமொழிகள் 12:19.
‘நேர்மை, நேர்மை என்று சொல்லிக்கொண்டிருந்தால் மனிதன் பிழைக்க முடியாது!’ என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், எது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உடனடி லாபமா, அல்லது சுயமரியாதையுடன்கூடிய நீடித்த நன்மையா? ஒரு மாணவர், தேர்வின்போது குளறுபடிகள் செய்து அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம்; ஆனால், அதே மாணவர் ஒரு வேலையில் சேர்ந்த பிறகு என்ன செய்வார்?
● “நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.”—நீதிமொழிகள் 20:7.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால்... ‘உத்தமமாய் நடந்து’ உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வையுங்கள். நேர்வழியில் நடந்ததால் நீங்கள் எப்படியெல்லாம் நன்மை அடைந்திருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். பெற்றோர் நேர்வழியில் நடப்பதைப் பிள்ளைகள் பார்த்தார்கள் என்றால் அவர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாய் நடப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.—நீதிமொழிகள் 22:6.
இந்த பைபிள் நன்னெறிகளைக் கடைப்பிடித்தால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா? நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? (g10-E 10)
[பக்கம் 4-ன் சிறுகுறிப்பு]
“அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வட்டாரங்களில் முன்னணி வகிக்கும் முக்கியப் புள்ளிகள் ஒழுக்க சீலர்கள் கிடையாது; அதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது என்பதே [பிரெஞ்சு மக்கள் பெரும்பாலோரின்] கருத்து.”—லா ஃபிகாரோ செய்தித்தாள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
இது பிறவிக் குணமா?
பேராசிரியர் மைக்கேல் கோஸ்ஃபெல்ட், பல பரிசோதனைகளை நடத்தி, நம்பிக்கை என்பது “மனித ரத்தத்தில் கலந்திருக்கிற ஒரு குணம்” என்று கண்டுபிடித்தார்; இவர், ஜெர்மனியில் உள்ள ப்ராங்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழில் நிர்வாகத்துறையில் பணிபுரிகிறார். இரண்டு நபர்கள் பேசிக்கொள்ளும்போது, அவர்களுடைய மூளை, ஆக்சிடாஸின் என்ற ஹார்மோனை வெளிவிடுகிறது என்பதாகவும் இந்த ஹார்மோன்தான் அவர்கள் மத்தியில் நம்பிக்கையை மலரச் செய்கிறது என்பதாகவும் கோஸ்ஃபெல்ட் கண்டுபிடித்தார். “இது மனித இனத்திற்கே உரிய ஒரு விசேஷ குணம். . . . ஒருவன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளாவிட்டால் அவன் மனிதத் தன்மையையே இழந்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்!” என்று கோஸ்ஃபெல்ட் குறிப்பிட்டார்.