யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் என்னென்ன?
யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் எதுவுமே இரகசியமானவை அல்ல. ஏனென்றால், அவர்களுடைய பிரசுரங்கள் நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கின்றன. அவர்களுடைய முக்கிய நம்பிக்கைகளில் சில பின்வருமாறு...
1. பைபிள்
“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன” என்று சாட்சிகள் நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) மத ஆய்வுத் துறைத் துணைப் பேராசிரியர் ஜேசன் டி. பேடூன் இவ்வாறு எழுதினார்: “[யெகோவாவின் சாட்சிகள்] பைபிள் சொல்வதைத் தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளாமல், பைபிளில் உள்ளதை உள்ளபடியே நம்புகிறார்கள்; அதைத் தங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறார்கள்.” பைபிள் போதனைகளுக்கு இசைவாகத் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்கிறார்களே தவிர தங்கள் நம்பிக்கைகளுக்கு வசதியாக பைபிள் வசனங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதேசமயம், பைபிளிலுள்ள எல்லா வார்த்தைகளையும் அவர்கள் நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதில்லை. உதாரணத்திற்கு, ஏழு நாட்களில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்று பைபிள் சொல்கையில், இருபத்து நான்கு மணிநேரம் கொண்ட ஏழு நாட்களை அல்ல, ஒரு நீண்ட காலப்பகுதியை அது குறிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.—ஆதியாகமம் 1:31; 2:4.
2. படைப்பாளர்
உண்மைக் கடவுள் தனக்கென்று ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டார். அந்தப் பெயர் யெகோவா (அல்லது யாவே; ரோமன் கத்தோலிக்க ஜெருசலேம் பைபிள் அந்தப் பெயரை இப்படித்தான் குறிப்பிடுகிறது; தற்கால அறிஞர்கள் சிலரும் இப்படித்தான் அழைக்கிறார்கள்); அது பொய்த் தெய்வங்களிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. * (சங்கீதம் 83:17) பரிசுத்த வேதாகமத்தின் மூலப் பிரதியில் கடவுளுடைய பெயர் சுமார் 7,000 முறை எபிரெய எழுத்துக்களில் காணப்படுகிறது. அந்தப் பெயர் அதிமுக்கியமான பெயர் என்பதால் “உம்முடைய நாமம் [அதாவது, பெயர்] பரிசுத்தப்படுவதாக” என்று மாதிரி ஜெபத்தில் இயேசு சொன்னார். (மத்தேயு 6:9, BSI) ஆகவே, மக்கள் தம்மை மட்டுமே வணங்க வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். அதனால்தான் சாட்சிகள் எந்தச் சொரூபத்தையும் உருவச்சிலைகளையும் வைத்து வழிபடுவதில்லை.—1 யோவான் 5:21.
3. இயேசு கிறிஸ்து
இவர்தான் மீட்பர், “கடவுளுடைய மகன்,” ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு.’ (யோவான் 1:34; கொலோசெயர் 1:15; அப்போஸ்தலர் 5:31) இயேசு, கடவுளால் படைக்கப்பட்டவர் என்பதால் திரித்துவத்தின் பாகமானவர் அல்ல. “என் தகப்பன் என்னைவிடப் பெரியவர்” என்று அவரே சொன்னார். (யோவான் 14:28) இயேசு பூமிக்கு வருமுன் பரலோகத்தில் வாழ்ந்தார், தியாக மரணம் அடைந்த பின்பு உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றார். “[அவர்] மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.”—யோவான் 14:6.
4. கடவுளுடைய ராஜ்யம்
இது பரலோகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிஜமான அரசாங்கம். இதன் அரசர் இயேசு கிறிஸ்து. இயேசுவுக்குத் துணை அரசர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மொத்தம் 1,44,000 பேர்; இவர்கள் ‘பூமியிலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3, 4; தானியேல் 2:44; 7:13, 14) இவர்கள் பூமியை அரசாளுவார்கள்; அப்போது அக்கிரமமும் அநியாயமும் தடம் தெரியாமல் துடைக்கப்பட்டிருக்கும்; கடவுள் பயமுள்ள லட்சோப லட்சம் மக்கள் பூமியில் வசிப்பார்கள்.—நீதிமொழிகள் 2:21, 22.
5. பூமி
‘பூமி என்றைக்கும் நிலைத்திருக்கும்’ என்று பிரசங்கி 1:4 சொல்கிறது. தீயோர் அழிக்கப்பட்ட பின் பூமி பசுஞ்சோலையாக மாற்றியமைக்கப்படும், அதில் நல்மனமுள்ள ஆட்கள் காலங்காலமாய்க் குடியிருப்பார்கள். (சங்கீதம் 37:10, 11, 29) ‘உம்முடைய சித்தம் . . . பூமியிலே செய்யப்படுவதாக’ என்று ஜெபத்தில் இயேசு கூறிய வார்த்தைகள் அப்போது நிஜமாகும்.—மத்தேயு 6:10.
6. பைபிள் தீர்க்கதரிசனம்
கடவுளால் ‘பொய் சொல்ல முடியாது.’ (தீத்து 1:3) எனவே, அவர் சொல்வதெல்லாம் பலிக்கும். இந்தப் பொல்லாத உலகின் முடிவைக் குறித்து பைபிளில் அவர் முன்னுரைத்திருக்கும் தீர்க்கதரிசனங்களும் அதில் சேர்த்தி. (ஏசாயா 55:11; மத்தேயு 24:3-14) வரப்போகும் அந்த அழிவிலிருந்து யார்தான் தப்பிப்பிழைப்பார்கள்? ‘கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனே என்றென்றும் நிலைத்திருப்பான்’ என்று 1 யோவான் 2:17 சொல்கிறது.
7. அரசதிகாரிகள்
“அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:17) எனவே, தங்கள் நாட்டுச் சட்டங்கள் கடவுளுடைய சட்டங்களுடன் முரண்படாதவரை யெகோவாவின் சாட்சிகள் அவற்றுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29; ரோமர் 13:1-3.
8. ஊழியம்
இந்தப் பொல்லாத உலகம் முடிவுக்கு வருமுன், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி’ உலகெங்கும் அறிவிக்கப்படும் என இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) உயிர்காக்கும் இந்த வேலையை யெகோவாவின் சாட்சிகள் கௌரவமிக்க வேலையாகக் கருதுகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பதும் கேட்காததும் அவரவர் இஷ்டம். “விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்” என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 22:17.
9. ஞானஸ்நானம்
பைபிளைத் திருத்தமாகப் படித்த பின், சாட்சிகளில் ஒருவராகி கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புவோருக்கே யெகோவாவின் சாட்சிகள் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். (எபிரெயர் 12:1) இவர்கள், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.—மத்தேயு 3:13, 16; 28:19.
10. குரு-பாமரர் வேறுபாடு
“நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:8) பைபிள் எழுத்தாளர்கள் உட்பட ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில் குரு வர்க்கத்தினர் என்ற பிரிவினை இருக்கவில்லை. இவர்களுடைய மாதிரியையே யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள். (g10-E 08)
^ “யெகோவா” என்ற பெயர் யெகோவாவின் சாட்சிகளே உருவாக்கின பெயர் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் கடவுளுடைய பெயர் “ஜெஹோவா” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன மொழிபெயர்ப்புகள் சில கடவுளுடைய பெயர் வருகிற இடங்களிலெல்லாம் “கடவுள்” அல்லது “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்துவதுதான் சோகமான விஷயம்; இப்படிச் செய்வதன் மூலம் பைபிளின் நூலாசிரியரை அவர்கள் அவமதிக்கிறார்கள்.