Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஹெப்படைடிஸ்-‘பி’ அமைதியான ஆட்கொல்லி

ஹெப்படைடிஸ்-‘பி’ அமைதியான ஆட்கொல்லி

ஹெப்படைடிஸ்-‘பி’ அமைதியான ஆட்கொல்லி

“எனக்கு அப்போது 27 வயதுதான். கல்யாணமான புதிது. என்னைப் பார்த்தால் ஏதாவது குறை இருக்கிறதென்று யாருமே சொல்ல மாட்டார்கள், நானும் அப்படித்தான் நினைத்தேன். நான் வேலை பார்த்த இடத்தில் வேலைப் பளு அதிகம். அதே சமயம், யெகோவாவின் சாட்சிகளது சபையொன்றில் எனக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். இப்படி என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் எனக்கே தெரியாமல் ஹெப்படைடிஸ்-‘பி’ என் கல்லீரலை அமைதியாக அரிக்க ஆரம்பித்திருந்தது.”—டக் யூன்.

நமது கல்லீரல், நச்சுத்தன்மை வாய்ந்த... தேவையற்ற... ரசாயனப் பொருள்களை இரத்தத்திலிருந்து வடிகட்டுகிறது; அதோடு, இன்னும் பிற முக்கிய வேலைகளையும் செய்கிறது; குறைந்தபட்சம் 500 வேலைகளைச் செய்கிறது. அதனால்தான், ஹெப்படைடிஸ் எனப்படும் கல்லீரல் வீக்க நோய் ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தையே சூறையாடிவிடுகிறது. ஒருவர் மிதமிஞ்சிக் குடித்தாலோ நச்சுப்பொருள்கள் ஏதாவது அவருடைய உடலுக்குள் சென்றாலோ ஹெப்படைடிஸ் நோய் வரலாம். என்றாலும், இந்நோய்க்கு முக்கியக் காரணம் வைரஸ்தான் என்றால் அது மிகையாகாது. இந்நோய்க்குக் காரணமான ஐந்து வகை வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; இன்னும் மூன்று வகை வைரஸ்களாவது இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.— கீழேயுள்ள பெட்டியைக் காண்க.

இந்த ஐந்து வகை வைரஸ்களில் ஒன்றுதான் ஹெப்படைடிஸ்-‘பி’ வைரஸ் (HBV). இதுதான் ‘பி’ வகை கல்லீரல் அழற்சி நோய் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் வருடத்தில் 6 லட்சம் பேரையாவது பதம்பார்த்துவிடுகிறது. இந்த எண்ணிக்கை, மலேரியா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கைக்குச் சமம். உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு, அதாவது 200 கோடிக்கும் அதிகமானோருக்கு HBV தொற்றியிருக்கிறது; இவர்களில் பெரும்பாலோர் சில மாதங்களுக்குள் குணமாகியுள்ளனர். என்றாலும், சுமார் 35 கோடி பேர் குணமானபாடில்லை; அவர்களுக்கு அது நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. அவர்களுக்கு இந்நோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. *

நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோய்க்கு ஆளானோர், கால தாமதமின்றி தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், கல்லீரல் படுமோசமாகச் சேதமடைவதைப் பெரும்பாலும் தடுக்கலாம். ஆனால், தங்களுக்கு இந்நோய் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை; ஏனென்றால், அதற்கே உரிய இரத்தப் பரிசோதனை செய்தால் மட்டுமே இந்நோய் இருப்பதைக் கண்டறிய முடியும். கல்லீரல் சம்பந்தப்பட்ட வழக்கமான பரிசோதனைகளும்கூட இந்நோய் இருப்பதைக் காட்டுவதில்லை. ஆகவே, இந்த HBV அமைதியான ஆட்கொல்லி என அழைக்கப்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. இந்நோய் தொற்றிப் பல ஆண்டுகள் ஆகியும்கூட இதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதற்குள், கல்லீரல் கரணை நோயோ (cirrhosis) கல்லீரல் புற்றுநோயோ ஏற்பட்டுவிடலாம். இந்த நோய்களால், HBV தொற்றுக்கு ஆளானவர்களில் 25 சதவீதத்தினர் இறந்துவிடுகின்றனர்.

“எங்கிருந்து எனக்கு இந்த HBV வந்தது?”

“30 வயதில்தான் இந்த நோய் எனக்கிருப்பதே தெரியவந்தது” என்கிறார் டக் யூன். “ஒரு சமயம் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் நவீன மருத்துவ சிகிச்சைபெற ஒரு டாக்டரிடம் போனேன். ஆனால், அப்போதைக்கு வயிற்றுப்போக்கு நிற்பதற்கு மட்டும் அவர் மருந்து கொடுத்தார். அதன்பிறகு பாரம்பரிய சிகிச்சைபெற வேறொரு மருத்துவரிடம் போனேன். அவர் என் வயிறு சரியாவதற்கு மருந்து கொடுத்தார். ஆனால் அந்த இரண்டு மருத்துவர்களுமே ஹெப்படைடிஸ் பரிசோதனை செய்யும்படி என்னிடம் சொல்லவில்லை. எனக்கு வயிற்றுப்போக்கு நிற்காததால் முதலில் சென்ற டாக்டரிடமே மீண்டும் சென்றேன். * அவர் என் அடிவயிற்றின் வலது பக்கத்தை மெதுவாகத் தட்டினார், எனக்கு வலித்தது. இரத்தப் பரிசோதனை செய்துபார்க்கச் சொன்னார்; என் இரத்தத்தில் ஹெப்படைடிஸ்-‘பி’ வைரஸ் இருப்பது உறுதியானது. என் தலையில் இடி இறங்கியது போலிருந்தது! இத்தனைக்கும் நான் இரத்தத்தை ஏற்றினதும் இல்லை, முறைகேடான வாழ்க்கை வாழ்ந்ததுமில்லை.”

டக் யூனுக்கு HBV தொற்றியிருப்பது தெரியவந்தவுடன், அவருடைய மனைவி, பெற்றோர், உடன்பிறப்புகள் அனைவருமே இரத்தப் பரிசோதனை செய்துகொண்டார்கள்; அவர்கள் அனைவருடைய இரத்தத்திலும் HBV எதிர்ப்பொருள்கள் காணப்பட்டன. என்றாலும், அவர்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தியால் இந்த வைரஸ்கள் முழுமையாக நீக்கப்பட்டிருந்தன. அப்படியென்றால், அவர்களில் யாரிடமிருந்தாவது டக் யூனுக்கு இந்த வைரஸ் தொற்றியிருந்திருக்குமா? ஒருவேளை அவர்கள் எல்லாருக்குமே ஏதோ ஓர் இடத்திலிருந்து இந்த வைரஸ் தொற்றியிருந்திருக்குமா? யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. சொல்லப்போனால், இந்த வைரஸ் தொற்றியிருப்பவர்களில் சுமார் 35 சதவீதத்தினருக்கு அது எப்படித் தொற்றியதென்றே சொல்ல முடிவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: ஹெப்படைடிஸ்-‘பி’ வைரஸ் பரம்பரை நோய் அல்ல; அதோடு, சாதாரணமாகப் பழகுவதன் மூலமாகவோ, உணவைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவருடைய இரத்தம், உடல் திரவங்களான விந்து, பெண்களின் பிறப்புறுப்புச் சுரப்புநீர், எச்சில் போன்றவை மற்றவர்களுடைய வெடிப்புற்ற தோல் வழியாகவோ சளிச்சவ்வுகள் வழியாகவோ அவர்களுடைய இரத்தத்தில் கலந்துவிடுவதன் மூலம் பரவுகிறது.

பாதிக்கப்பட்டவருடைய இரத்தம் மற்றவர்களுக்குச் செலுத்தப்படுவதாலும் நிறைய பேருக்கு இந்த வைரஸ் கடத்தப்படுகிறது; முக்கியமாக, HBV தொற்றுக்கான பரிசோதனை குறைவாகச் செய்யப்படுகிற நாடுகளில், அல்லது அப்படியொரு பரிசோதனையே செய்யப்படாத நாடுகளில் இந்த வைரஸ் நிறைய பேருக்குக் கடத்தப்படுகிறது. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான HIV-ஐவிட இந்த HBV 100 மடங்கு அதிகமாகத் தொற்றும் தன்மையுள்ளது. இந்த வைரஸைக் கொண்டுள்ள இரத்தம் துளியளவு இருந்தால் போதும், உதாரணத்திற்கு சவரக் கத்தியில் லேசாகப் படிந்திருந்தால்கூட போதும், HBV மற்றவர்களுக்குத் தொற்றிவிடும்! அதுமட்டுமல்ல, காய்ந்த இரத்தக்கறையிலும்கூட இந்த வைரஸ் ஒரு வார காலத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்திற்கு வீரியத்தோடு இருக்கும். *

உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்

“நான் வேலைபார்த்துவந்த கம்பெனியில், எனக்கு HBV இருப்பது தெரிந்தவுடன் மற்றவர்களிடமிருந்து என்னைப் பிரித்து எனக்கென்று ஒரு சிறிய அறையைக் கொடுத்தார்கள்” என்கிறார் டக் யூன். அப்படிச் செய்வது சகஜம்தான்; இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என்ற உண்மை தெரியாததே அதற்குக் காரணம். மறுபட்சத்தில், விவரம் தெரிந்த ஆட்களும்கூட ஹெப்படைடிஸ்-‘பி’ வகை வைரஸை, ஹெப்படைடிஸ்-‘ஏ’ வகை வைரஸோடு குழப்பிக்கொள்கிறார்கள். ஹெப்படைடிஸ்-‘ஏ’ வகை அதிவேகமாகத் தொற்றும் தன்மையுடையது, ஆனால் அது ஹெப்படைடிஸ்-‘பி’ அளவுக்கு ஆபத்தானதல்ல. அதோடு, செக்ஸ் மூலமாகவும் HBV பரவும் என்பதால் ஒழுக்கசீலர்களாக இருப்பவர்களும்கூட சிலசமயங்களில் சந்தேகப் பார்வைக்கு ஆளாகிறார்கள்.

மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் போகும்போது... பாதிக்கப்பட்டவரைச் சந்தேகத்துடன் பார்க்கும்போது... பிரச்சினை இன்னும் பெரிதாகலாம். உதாரணமாக, அநேக இடங்களில் HBV தொற்றுக்கு ஆளானவர்கள், அவர்கள் சிறியவர்களாய் இருந்தாலும் சரி பெரியவர்களாய் இருந்தாலும் சரி, சமுதாயத்திலிருந்து தேவையின்றி ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களோடு விளையாட விடுவதில்லை; பள்ளிகள் அவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை; யாரும் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. எனவே, தங்களைச் சமுதாயம் ஒதுக்கிவைத்துவிடுமோ எனப் பயந்து அநேகர் HBV பரிசோதனையே செய்துகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்; சிலர் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், உண்மையை வெளியே சொல்லாமல் தங்கள் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள், குடும்பத்தாரின் ஆரோக்கியத்திற்கும் உலைவைக்கிறார்கள். இவ்வாறு, இந்தக் கொடிய நோயைப் பின்வரும் தலைமுறைகளுக்கும் கடத்திவிடுகிறார்கள்.

ஓய்வு அவசியம்

“டாக்டர் என்னை வேலை எதுவும் செய்யாமல் முற்றிலுமாய் ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தார்; நானோ இரண்டே இரண்டு மாதம் ஓய்வெடுத்த பின் மறுபடியும் வேலைக்குப் போய்விட்டேன். இரத்தப் பரிசோதனையும் சரி சிடி ஸ்கேனும் சரி, எனக்குக் கல்லீரல் கரணை நோய் இருந்ததற்கான அறிகுறி எதையும் காட்டாததால் நான் நன்றாக இருப்பதாகவே நினைத்தேன்” என்கிறார் டக் யூன். மூன்று வருடம் கழித்து டக் யூனை அவருடைய கம்பெனி ஒரு பெருநகரத்திற்கு மாற்றியது. அங்கே அவருக்கு வாழ்க்கை பம்பரமாகச் சுழன்றது, வேலைப் பளு இன்னும் கூடியது. குடும்பத்தையும் பார்க்க வேண்டும்... செலவுகளையும் ஈடுகட்ட வேண்டும்... என்ற நிலையில் டக் யூன் ஓய்வின்றி உழைத்தார்.

இப்படி ஓரிரு மாதங்கள்தான் சென்றிருக்கும்... டக் யூனின் இரத்தத்தில் HBV கிடுகிடுவென்று பெருகிவிட்டது; இதனால் அவருடைய உடம்பில் தெம்பே இல்லாமல் போய்விட்டது. “என் வேலையை விடவேண்டியதாயிற்று” என்று சொன்ன டக் யூன், “நான் இப்படி ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை பார்த்ததை நினைத்து இப்போது வருந்துகிறேன். அன்றைக்கே என் வேகத்தைக் குறைத்து, கொஞ்சம் ஓய்வெடுத்திருந்தால், இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன், என் கல்லீரலும் இந்தளவு கெட்டுப்போயிருக்காது” என்றும் சொல்லி வருத்தப்பட்டார். ஆம், டக் யூன் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். இவ்வளவெல்லாம் ஆன பிறகு அவருடைய வேலையைக் குறைத்துக்கொண்டார், செலவுகளையும் குறைத்துக்கொண்டார். அதோடு, அவருடைய குடும்பத்தார் அனைவருமே அவரோடு ஒத்துழைத்தார்கள், செலவுகளைச் சமாளிப்பதற்காக அவருடைய மனைவியும்கூட வேலை பார்க்க ஆரம்பித்தார்.

ஹெப்படைடிஸ்-‘பி’ வைரஸோடு போராடுதல்

டக் யூனின் உடல்நலம் சற்றுச் சீரடைந்தது; ஆனால், அவருடைய கல்லீரலில் ஏற்பட்ட இரத்த ஓட்டத் தடை மேன்மேலும் அதிகரித்தது. இதனால், இரத்த அழுத்தம் உயர ஆரம்பித்தது. 11 வருடங்களுக்குப் பிறகு, அவருடைய உணவுக் குழலிலுள்ள ஓர் இரத்தக் குழாய் வெடித்து அவருடைய தொண்டை வழியாக இரத்தம் பீறிட்டது. இதனால், சிகிச்சைக்காக அவர் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியதாயிற்று. நான்கு வருடங்களுக்குப் பிறகு, அவருக்கு மனக் குழப்பம் ஏற்பட்டது. காரணம்? அம்மோனியாவை அவருடைய கல்லீரல் முழுமையாக வடிகட்ட முடியாததால் அது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மூளையில் சேர்ந்துவிட்டது. என்றாலும், சில நாள் சிகிச்சைக்குப் பிறகு அது சரியாகிவிட்டது.

டக் யூனுக்கு இப்போது வயது 54. அவருடைய கல்லீரல் இன்னும் சேதமடைந்தால், நிலைமை கவலைக்கிடம்தான். வைரஸ் எதிர்ப்புச் சிகிச்சைகள் மூலமாகவும் ஹெப்படைடிஸ்-‘பி’ வைரஸை முற்றிலும் நீக்க முடியாது; அப்படி முயன்றாலும் ஏகப்பட்ட பக்க விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேறு வழி எதுவும் இல்லையென்றால், மாற்றுக் கல்லீரல் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையைவிட அதற்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். டக் யூன் சொல்கிறார்: “நான் ஒரு ‘டைம்-பாம்’; எப்போது வெடித்துச் சிதறுவேன் என்று எனக்கே தெரியாது. அதை நினைத்துக் கவலைப்பட்டுப் பிரயோஜனமில்லை. எனக்கு இன்னும் உயிர் இருக்கிறது... தலைசாய்க்க ஓர் இடம் இருக்கிறது... அன்பாய்க் கவனிக்க ஒரு குடும்பம் இருக்கிறது... எனக்கு வந்த தீமையிலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது என்றுதான் சொல்வேன். இப்போதெல்லாம் பைபிள் படிப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது; என் மனைவி மக்களோடு சேர்ந்து பொழுதைக் கழிக்க முடிகிறது. இதனால், என்மீது நிழலாகப் படரும் மரண பயத்தைச் சற்று மறந்து, வியாதியில்லாத காலத்தை ஆசை ஆசையாய் நினைத்துப் பார்க்க முடிகிறது.” *

டக் யூனின் குடும்பத்தார் இன்று சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றால்... அதற்கு டக் யூனின் நம்பிக்கையான மனநிலையும் ஒரு காரணம். அவர், அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் என குடும்ப சகிதமாக அவர்கள் முழுநேர ஊழியம் செய்கிறார்கள். (g10-E 08)

[அடிக்குறிப்புகள்]

^ ஒருவரது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியால் இந்த வைரஸ் ஆறு மாதங்களுக்குள் வெளியேற்றப்படவில்லையென்றால் அவருக்கு இருப்பது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோய்.

^ குறிப்பிட்ட எந்தவொரு சிகிச்சையையும் விழித்தெழு! பரிந்துரைப்பதில்லை.

^ இந்த வைரஸ் தொற்று உள்ளவருடைய இரத்தம் எங்காவது சிந்தியிருந்தால்... அதை, கையுறைகளை அணிந்துகொண்டு உடனே அகற்றிவிட வேண்டும்; பின்பு அந்த இடம் முழுவதையும் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்; வீட்டு உபயோகத்திற்கான பிளீச்சில் ஒரு பங்கை எடுத்து அதை 10 பங்கு நீரில் கலந்து அந்த இடத்தைத் துடைத்தெடுக்க வேண்டும்.

^ வியாதியெல்லாம் பறந்துவிடுகிற காலத்தைப் பற்றி பைபிள் தரும் வாக்குறுதியைத் தெரிந்துகொள்ள, வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தையும் காண்க.

[பக்கம் 15-ன் சிறுகுறிப்பு]

தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்தால் கல்லீரல் மேன்மேலும் சேதமடைவதைத் தடுக்கலாம்

[பக்கம் 16-ன் சிறுகுறிப்பு]

தங்களைச் சமுதாயம் ஒதுக்கிவிடுமோ எனப் பயந்து அநேகர் HBV பரிசோதனையே செய்துகொள்வதில்லை; அல்லது தங்களுக்கு அந்த நோய் இருப்பதை வெளியே சொல்லிக்கொள்வதில்லை

[பக்கம் 14, 15-ன் பெட்டி]

 இது என்ன வகை?

ஹெப்படைடிஸ் வர ஐந்து வகை வைரஸ்கள் காரணமாய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ‘ஏ,’ ‘பி,’ ‘சி’ ஆகிய மூன்று வகைகளே பெரும்பாலும் காரணமாய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் சில வைரஸ்களின் மூலமாகவும் ஹெப்படைடிஸ் நோய் தொற்றுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. எல்லா வகை ஹெப்படைடிஸ் நோய்களுக்குமே, ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறி இருக்கும்; மஞ்சள் காமாலை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அநேகருக்கு, குறிப்பாகப் பிள்ளைகளுக்கு, இதுபோன்ற எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஹெப்படைடிஸ்-‘பி’ மற்றும் ‘சி’ வகைகளில், அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் சமயத்திற்குள் கல்லீரல் ஏற்கெனவே கடுமையாகச் சேதமடைந்திருக்கலாம்.

ஹெப்படைடிஸ்-‘ஏ’ வகை வைரஸ் (HAV)

பாதிக்கப்பட்டவருடைய மலத்தில் HAV வைரஸ் இருக்கும். உப்பு நீரையும், நன்னீரையும், ஐஸ் படிகங்களையும்கூட இந்த வைரஸ் தாக்குப்பிடிக்கும். ஒரு நபருக்கு இந்த வைரஸ் பின்வரும் வழிகளில் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது

மனிதக் கழிவினால் மாசடைந்த நீரில் கிடைக்கும் மீன்வகைகளைச் சமைக்காமல் சாப்பிடுவதால், அல்லது மாசுபட்ட அந்த நீர் வயிற்றுக்குள் சென்றுவிடுவதால்

இந்நோயால் பாதிக்கப்பட்ட நபரோடு நெருக்கமாகப் பழகுவதால், அல்லது உணவு, பானம் ஆகியவற்றையும், சாப்பிடப் பயன்படுத்தும் தட்டுமுட்டுச் சாமான்களையும் அவரோடு பகிர்ந்துகொள்வதால்

கழிவறைக்குச் சென்றுவந்த பின் கைகளை நன்றாகக் கழுவாமல் இருப்பதால்; இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஈரத் துணிகளை மாற்றிய பின் அல்லது சமைப்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவாமல் இருப்பதால்

பொதுவாக HAV நாள்பட்ட (chronic) நோயை ஏற்படுத்துவதில்லை, தீவிர நோயையே (acute) ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் இந்நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு, சில வாரங்களுக்குள் அல்லது மாதங்களுக்குள் இயல்பாகவே அவர்களுடைய உடல் இந்த வைரஸை வெளியேற்றிவிடும். போதிய ஓய்வு மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவைத் தவிர இந்த நோய்க்கென்று குறிப்பிட்ட சிகிச்சைமுறைகள் இல்லை. கல்லீரல் முற்றிலும் குணமாகிவிட்டதாக டாக்டர் சொல்கிறவரை, மதுவகைகளையும் கல்லீரலைப் பாதிக்கக்கூடிய அசிட்டமினோஃபென் போன்ற மருந்துகளையும் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு HAV ஒருமுறை வந்திருந்தால், மறுபடியும் வர வாய்ப்பில்லை; ஆனால், வேறு வகை ஹெப்படைடிஸ் வர வாய்ப்பிருக்கிறது. தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் ஹெப்படைடிஸ்- வருவதைத் தடுக்கலாம்.

ஹெப்படைடிஸ்-‘பி’ வகை வைரஸ் (HBV)

பாதிக்கப்பட்டவர்களுடைய இரத்தம், விந்து, பெண்களின் பிறப்புறுப்புச் சுரப்புநீர் ஆகியவற்றில் HBV இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களின் உடலுக்குள் இத்திரவங்கள் சென்றால், அவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிவிடும். இந்த வைரஸ் தொற்றிக்கொள்கிற வழிகள் பின்வருமாறு:

பிறவியிலேயே (பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு)

மருத்துவத்திலும், பல் பராமரிப்பிலும், பச்சைக் குத்துவதிலும், உடலின் பாகங்களைக் குத்துவதிலும் பயன்படுத்தப்படும் கருவிகள், கொதிநீரினால் சரியாகச் சுத்தப்படுத்தப்படாவிட்டால்

மருந்து ஊசி, சவரக்கத்தி, நகம் தேய்க்கிற அரம், நக வெட்டி, பல் துலக்கும் பிரஷ், இன்னும் இதுபோன்ற பொருள்களை ஒருவர் பயன்படுத்திய பின் மற்றவர்கள் பயன்படுத்தும்போது... அதில் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் துளியளவு இருந்தாலும், அது மற்றவர்களுடைய தோலில் உள்ள வெடிப்புகளின் வழியாக உடலுக்குள் சென்றால், அவர்களுடைய இரத்தத்தில் இந்த வைரஸ் பரவிவிடும்

செக்ஸ் தொடர்பு

ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொள்வது, ஒருவரையொருவர் கட்டியணைப்பது, கன்னத்தில் முத்தமிடுவது, தாய்ப்பால் ஊட்டுவது மூலமாகவோ; உணவு, பானம், சாப்ஸ்டிக்ஸ், சாப்பிட பயன்படுத்தும் பிற தட்டுமுட்டுச் சாமான்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ; பூச்சிகள் மூலமாகவோ, இருமல் மூலமாகவோ HBV மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பெரியவர்களுக்கு தீவிர HBV நோய் (acute HBV) வரும்போது பெரும்பாலும் அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடுகிறார்கள்; அதனால் மீண்டும் இந்நோய்க்கு ஆளாவதில்லை. சிறு பிள்ளைகளுக்கு நாள்பட்ட நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நாள்பட்ட ஹெப்படைடிஸ்-பி நோய்க்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், கல்லீரல் செயலிழந்துவிடுவதோடு, உயிரிழப்பும் ஏற்படலாம். தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் ஹெப்படைடிஸ்-பி வருவதைத் தடுக்கலாம்.

ஹெப்படைடிஸ்-‘சி’ வகை வைரஸ் (HCV)

HBV எப்படிப் பரவுகிறதோ அப்படியே HCV-யும் பரவுகிறது. ஆனால், மாசுபட்ட ஊசிகளைப் பயன்படுத்தி மருந்துகளை ஏற்றிக்கொள்வதாலேயே இது பெரும்பாலும் பரவுகிறது. ஹெப்படைடிஸ்-சி நோய்க்கு தடுப்பு மருந்து இல்லை. *

[அடிக்குறிப்பு]

^ உலக சுகாதார நிறுவனம், ஹெப்படைடிஸ் நோய் பற்றிய கூடுதலான தகவலை www.who.int என்ற முகவரியில் பல மொழிகளில் அளிக்கிறது.

[பக்கம் 16-ன் பெட்டி]

Hbv-ஐ முறியடிக்க...

HBV-யால் பாதிக்கப்பட்ட மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது உண்மையே; என்றாலும் அவர்களில் சுமார் 78 சதவீதத்தினர் ஆசியாவிலும் பசிபிக் தீவுகளிலுமே வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில், பத்துப் பேரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலோருக்கு, இந்த நோய்க்கான வைரஸ் தாயிடமிருந்து பிறப்பிலேயே தொற்றியிருக்கும்; அல்லது இந்நோயால் பாதிக்கப்பட்ட மற்ற பிள்ளைகளின் இரத்தத்திலிருந்து சிறுவயதிலேயே தொற்றியிருக்கும். பிறந்த குழந்தைகளுக்கும், இந்நோய் தொற்றக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கும் சரியான தடுப்பு மருந்து அளித்தால் இந்நோயை முறியடிக்கலாம். * இவ்வாறு தடுப்பு மருந்து கொடுத்ததால் சில இடங்களில், இந்நோய் பரவுவதை பெருமளவு குறைக்க முடிந்திருக்கிறது.

[அடிக்குறிப்பு]

^ இந்தத் தடுப்பு மருந்து இரத்தக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்படலாம். இது சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் ஜூன் 15, 2000 மற்றும் அக்டோபர் 1, 1994 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைச் சிந்தித்துப் பார்க்கலாம். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, ‘கடவுளது அன்புக்குப் பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கம் 246-ல் உள்ள தகவலையும் பார்க்கலாம்.

[பக்கம் 17-ன் படம்]

மனைவி மக்களோடு டக் யூன்

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

© Sebastian Kaulitzki/Alamy