‘ஒருகாலத்தில் நாத்திகனாக இருந்தேன்’
‘ஒருகாலத்தில் நாத்திகனாக இருந்தேன்’
பேராசிரியர் ஃப்ரான்டீஷெக் விஸ்கோசில், ப்ராக் நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். நரம்பு இயங்கு இயலில் இவர் செய்த ஆராய்ச்சி உலகளவில் பேசப்பட்டது. ஒருகாலத்தில் இவர் நாத்திகராக இருந்தார். இப்போது கடவுள் நம்பிக்கையுள்ளவராக மாறிவிட்டார். ஏன் இவ்வாறு அடியோடு மாறிவிட்டார்? அதைப் பற்றி விழித்தெழு! பத்திரிகைக்கு அவர் பின்வருமாறு பேட்டி அளித்தார்:
விஞ்ஞானத்தில் கால்பதிப்பதற்கு முன்பு மதத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்னவாக இருந்தது?
நாத்திக நம்பிக்கை சிறு வயதிலிருந்தே எனக்குப் புகட்டப்பட்டது; மத குருமார்களை என் அப்பா எப்போதும் கேலி செய்வார். 1963-ல் உயிரியலிலும் வேதியியலிலும் நான் பட்டம் பெற்றேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது... ‘பல்வகை உயிர்கள் எப்படி வந்தன?’ என்ற கேள்விக்கு பரிணாமக் கோட்பாடு விளக்கம் அளிக்கிறதென்று நினைத்தேன்.
விஞ்ஞானியாக உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, நரம்பு இணைப்புகளின் (synapses) ரசாயன மற்றும் மின்சாரத் தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அதோடு, நரம்பு உயிரணுக்கள் பற்றியும்... அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள் ஆகியவை செல் சவ்வின் வழியாகக் கடத்தப்படுகிற உயிரியல் முறை பற்றியும்... தசைகள், நரம்புகள் உட்பட திசுக்களை மாற்றிப் பொருத்துவது பற்றியும்... ஒவ்வாமையைக் குறைப்பது அல்லது நீக்குவது பற்றியும்... ஆய்வு செய்தேன். இந்த ஆய்வுக்கட்டுரைகள் பல வெளியிடப்பட்டிருக்கின்றன; சில கட்டுரைகள் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. காலப்போக்கில், நான் செக் குடியரசிலுள்ள விஞ்ஞானிகள் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்; இந்தச் சங்கத்தில் சக விஞ்ஞானிகள் சேர்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். 1989 நவம்பரிலிருந்து டிசம்பர் வரை நடைபெற்ற “வெல்வெட் புரட்சி”-க்குப் பிறகு, சார்லஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன்; சக பணியாளர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக அந்தப் பல்கலைக்கழகம் மேற்கத்திய நாடுகளுக்கு என்னை அனுப்பியது; அங்கே, நான் சந்தித்துப் பேசியவர்களில் சிலர் நோபல் பரிசு பெற்றவர்கள்.
கடவுளைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஒரு விதத்தில்... யோசித்திருக்கிறேன்! என்னுடைய பேராசிரியர்கள் சிலர் உட்பட பெரிய படிப்புப் படித்த பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள்; ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பயந்து அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ‘இவர்கள்கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்களே!’ என நான் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், கடவுள் என்பது மனிதனுடைய கண்டுபிடிப்பு என நான் நினைத்தேன். அதோடு, மதத்தின் பெயரில் செய்யப்படுகிற அட்டூழியங்களைப் பார்த்து மனதிற்குள் குமுறினேன்.
பரிணாமக் கொள்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் எப்படி மாறியது?
நரம்பு இணைப்புகளைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் பரிணாமக் கோட்பாடு பற்றிப் பல கேள்விகள் என் மனதில் எழுந்தன. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிகிற நரம்பு செல் இணைப்புகளின் படுசிக்கலான அமைப்பைக் கண்டு நான் பிரமித்துப்போனேன். ‘இந்த இணைப்புகளும் இவற்றின் மரபியல் திட்டங்களும் குருட்டாம்போக்கில் வந்திருக்க
முடியுமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயம் அப்படி வந்திருக்க முடியாது!1970-களின் ஆரம்பத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான விஞ்ஞானியின் சொற்பொழிவில் கலந்துகொண்டேன்; அவர் ஒரு பேராசிரியரும்கூட! அந்தச் சொற்பொழிவின்போது, திடீர் மாற்றத்தாலும் இயற்கைத் தெரிவாலும் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ‘அப்படியென்றால், அது எப்படித் தோன்றியிருக்கும்?’ என்று அங்கிருந்த ஒருவர் கேள்வி கேட்டார். உடனே அந்தப் பேராசிரியர் தன்னுடைய ‘கோட்’-டில் வைத்திருந்த ஒரு சிறிய ரஷ்ய மொழி பைபிளை வெளியே எடுத்தார். அதைக் காட்டி, ‘இதற்கான பதில் தெரிய வேண்டுமானால், பைபிளைப் படியுங்கள்; முக்கியமாக, ஆதியாகமத்தில் படைப்பைப் பற்றிச் சொல்லியிருக்கிற தகவலைப் படியுங்கள்!” என்று சொன்னார்.
கொஞ்ச நேரம் கழித்து, வராந்தாவில் நான் அவரைப் பார்த்தபோது, ‘பைபிளைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதானா?’ என்று கேட்டேன். மொத்தத்தில் அவர் சொன்ன பதில் இதுதான்: “சாதாரண பாக்டீரியா சுமார் 20 நிமிடத்திற்கு ஒரு முறை பிரிகிறது; அவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான புரோட்டீன்கள் இருக்கின்றன; அந்த ஒவ்வொரு புரோட்டீனிலும் 20 வகை அமினோ அமிலங்கள் உள்ளன; இவை சங்கிலித் தொடர்போல் நூற்றுக்கணக்கில் நீண்டிருக்கின்றன. அப்படியிருக்க, ஒவ்வொரு சாதகமான திடீர் மாற்றங்களாலும் பாக்டீரியா பரிணமித்து வர வேண்டுமென்றால், முந்நூறு கோடி அல்லது நானூறு கோடி ஆண்டுகளுக்கும் மேலாகவே எடுக்கும். ஆனால், இத்தனை ஆண்டுகளில் பூமியில் உயிர் ஏற்கெனவே இருந்துவந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.” அதனால், ஆதியாகமப் புத்தகத்திலுள்ள விவரங்கள் இன்னுமதிக அர்த்தமுள்ளதாக அவருக்குத் தோன்றியிருக்கிறது.
அந்தப் பேராசிரியர் சொன்ன வார்த்தைகள் உங்களை எப்படிப் பாதித்தன?
ஏற்கெனவே எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தன... அதோடு அவர் சொன்ன விஷயத்தையும் யோசித்துப் பார்த்தேன்... அதன் பிறகு, இந்த விஷயத்தைப் பற்றி மத நம்பிக்கையுள்ள சக பணியாளர்களிடமும் நண்பர்களிடமும் கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவர்கள் சொன்ன பதில் எதுவும் என் சந்தேகத்தைத் தீர்க்கவில்லை. பின்பு, ஒரு மருந்தியல் நிபுணரிடம் பேசிப் பார்த்தேன்; அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவர், எனக்கும் என் மனைவி எம்மாவுக்கும் பைபிள் விஷயங்களை மூன்று வருஷங்களாக விளக்கிச் சொன்னார். நாங்கள் தெரிந்துகொண்ட இரண்டு விஷயங்கள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒரு விஷயம்... பாரம்பரிய “கிறிஸ்தவ” மதம் சொல்வதற்கும் பைபிள் சொல்வதற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பது. இன்னொரு விஷயம்... பைபிள் ஒரு விஞ்ஞான புத்தகமாக இல்லாவிட்டாலும் அது விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவது.
உங்கள் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் உங்களது விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறதா?
இல்லவே இல்லை. ஒரு நல்ல விஞ்ஞானி, அவருடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரி உணர்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க மாட்டார், உண்மைகளின் அடிப்படையிலேயே சிந்திப்பார். அதனால், என்னுடைய நம்பிக்கை என்னைத்தான் மாற்றியிருக்கிறது. ஒரு மாற்றம் என்னவென்றால், நான் இப்போதெல்லாம் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருப்பதில்லை, மற்றவர்களுடன் போட்டாபோட்டி போடுவதில்லை; என்னுடைய விஞ்ஞான சாதனைகளை நினைத்து கர்வமாக நடந்துகொள்வதில்லை; அதற்குப் பதிலாக, என்னுடைய திறமைகளுக்காக நான் கடவுளுக்கே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதோடு, படைப்பில் மிளிர்கிற வியப்பூட்டும் வடிவமைப்புகளைப் பார்க்கும்போது, ‘இவையெல்லாம் குருட்டாம்போக்கில் வந்தன’ என்று சொல்வதற்குப் பதிலாக, நானும் சரி மற்ற சில விஞ்ஞானிகளும் சரி, ‘கடவுள் இதை எப்படி வடிவமைத்திருப்பார்?’ என்று எங்களையே கேட்டுக்கொள்கிறோம். (g10-E 11)
[பக்கம் 9-ன் சிறுகுறிப்பு]
நானும் சரி மற்ற சில விஞ்ஞானிகளும் சரி, ‘கடவுள் இதை எப்படி வடிவமைத்திருப்பார்?’ என்று எங்களையே கேட்டுக்கொள்கிறோம்