இளைஞர் கேட்கின்றனர்
ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் சொல்வதை நான் எப்படி விளக்குவேன்?
விருது வழங்கும் விழா விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது; பிரபல நடிகைகள் இருவர் மேடையேறி காம உணர்வோடு முத்தமிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்! பார்வையாளர்கள் ஒரு நிமிடம் வாயடைத்துப் போகிறார்கள், மறுநிமிடமே அதை ஆமோதிக்கும் வண்ணம் ஆரவாரம் செய்கிறார்கள். ஓரினச்சேர்க்கைக்காரர்கள் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். விமர்சகர்களோ இதை ஒரு விளம்பர உத்தியாகக் கருதுகிறார்கள். எதுவாக இருந்தாலும், அந்த முத்தக் காட்சி டிவி செய்திகளில் பல நாட்களுக்குத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும்; இன்டர்நெட் வெப் சைட்டை ‘விசிட்’ செய்ய லட்சக்கணக்கானோரைத் தூண்டும்.
பிரபலங்கள் சிலர் தங்களை ஓரினச்சேர்க்கைக்காரர்களாக, இருபாலாரோடும் உறவுகொள்கிறவர்களாகப் பகிரங்கப்படுத்திக் கொள்கிற இதுபோன்ற சில சம்பவங்கள் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. சிலர் இவர்களுடைய துணிவைப் பார்த்துப் புகழ்கிறார்கள்; மற்ற சிலரோ இவர்களுடைய இழிவான வாழ்க்கையைப் பார்த்து இகழ்கிறார்கள். பெரும்பாலோர், இவர்களை மாறுபட்ட வாழ்க்கை வாழ்பவர்களாகக் கருதுகிறார்கள். 21 வயதான டானியல் இவ்வாறு சொல்கிறார்: “நான் பள்ளியில் படித்த காலத்தில்... எதிர்பாலாரிடம் மட்டும் ஈர்க்கப்பட்ட பிள்ளைகள்கூட, ஓரினச்சேர்க்கை பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவரை பாரபட்சம் காட்டுகிறவர், குறைகாண்பவர் என்று நினைத்தார்கள்.” *
ஓரினச்சேர்க்கை பற்றிய கண்ணோட்டம் தலைமுறைக்குத் தலைமுறை அல்லது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால், கிறிஸ்தவர்கள் மனிதருடைய ‘போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகிறவர்கள்’ அல்ல. (எபேசியர் 4:14, பொது மொழிபெயர்ப்பு) மாறாக, அவர்கள் பைபிளின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஓரினச்சேர்க்கை பற்றிய பைபிளின் கருத்து என்ன? பைபிளின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கிற நபராக நீங்கள் இருந்தால் ஓரினச்சேர்க்கைக்காரர்களிடம் பாரபட்சம் காட்டுவதாக, குறைகாண்பதாக, வெறுப்பு காட்டுவதாக மற்றவர்கள் குற்றம்சாட்டும்போது என்ன சொல்வீர்கள்? பின்வரும் கேள்விகளையும் அவற்றுக்கு எப்படிப் பதிலளிக்கலாம் என்பதையும் கவனியுங்கள்.
ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
ஆணும் பெண்ணும் மட்டுமே, அதுவும் மணவாழ்வில் இணைந்த ஆணும் பெண்ணும் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27, 28; லேவியராகம் 18:22; நீதிமொழிகள் 5:18, 19) பாலியல் முறைகேட்டை பைபிள் கண்டனம் செய்கிறது; அதில் ஓரினச்சேர்க்கையும் எதிர்பாலாரோடு உறவு கொள்வதும் உட்பட்டுள்ளது. *—கலாத்தியர் 5:19-21.
யாராவது இப்படிக் கேட்டால்: “ஓரினச்சேர்க்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
இவ்வாறு பதிலளிக்கலாம்: “ஓரினச்சேர்க்கைக்காரர்களை நான் வெறுப்பதில்லை, அவர்களுடைய அந்தப் பழக்கத்தை நான் வெறுக்கிறேன்.”
யோசுவா 24:15) உங்கள் கருத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள்.—சங்கீதம் 119:46.
✔ நினைவில் வையுங்கள்: பைபிளுடைய ஒழுக்க நெறிகளுக்கு இசைய வாழ்கிறீர்கள் என்றால், அது நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாணி, அப்படி வாழ உங்களுக்கு உரிமை இருக்கிறது. (மக்கள் எப்படிப்பட்ட பாலியல் பழக்கமுள்ளவர்களாக இருந்தாலும்சரி, எல்லாரிடமும் கிறிஸ்தவர்கள் மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும், அல்லவா?
ஆம். “எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதியுங்கள்” அல்லது டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்படி “எல்லாருக்கும் மதிப்புக்கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:17) எனவே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களிடம் கிறிஸ்தவர்கள் வெறுப்புக் காட்டுவதில்லை. மாறாக, இவர்களிடமும் மற்றவர்களிடமும் கருணையோடு நடந்துகொள்கிறார்கள்.—மத்தேயு 7:12.
யாராவது இப்படிக் கேட்டால்: “ஓரினச்சேர்க்கையைக் குறித்த உங்கள் கண்ணோட்டம் அந்தப் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளத் தூண்டவில்லையா?”
இவ்வாறு பதிலளிக்கலாம்: “இல்லவே இல்லை. நான் ஓரினச்சேர்க்கை பழக்கத்தை வெறுக்கிறேன், அதில் ஈடுபடுகிறவர்களை அல்ல.”
✔ மேலும் இவ்வாறு சொல்லலாம்: “உதாரணத்திற்கு, புகைபிடிக்கவும் எனக்குப் பிடிக்காது. சொல்லப்போனால், அந்த எண்ணத்தையே அடியோடு வெறுக்கிறேன். ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், உங்கள் கருத்து வித்தியாசமாக இருக்கும். உங்களுடைய கருத்துக்காக நான் உங்களை வெறுக்காததைப் போலவே, என்னுடைய கருத்துக்காக நீங்களும் என்னை வெறுக்க மாட்டீர்கள்—நான் சொல்வது சரிதானே? அதே நியதி ஓரினச்சேர்க்கையைக் குறித்த நம்முடைய வித்தியாசப்பட்ட கருத்துகளுக்கும் பொருந்துகிறது.”
பரந்த மனப்பான்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டுமென இயேசு கற்பித்தார், அல்லவா? அப்படியிருக்க, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களைக் கிறிஸ்தவர்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லவா?
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்ளும்படி இயேசு தம் சீடர்களை ஊக்கப்படுத்தவில்லை. மாறாக, தம்மீது ‘விசுவாசம் வைக்கிற எவருக்கும்’ மீட்புக்கான வழி திறந்திருப்பதாக அவர் கற்பித்தார். (யோவான் 3:16) இயேசுமீது விசுவாசம் வைப்பது என்பது, கடவுளுடைய ஒழுக்க நெறிகளுக்கு இசைய வாழ்வதைக் குறிக்கிறது; அந்த ஒழுக்க நெறிகள், ஓரினச்சேர்க்கை உட்பட சில வகை நடத்தையைத் தடை செய்கிறது.—ரோமர் 1:26, 27.
யாராவது இப்படிச் சொன்னால்: “ஓரினச்சேர்க்கைக்காரர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாது; அவர்களுடைய பிறப்பு அப்படி.”
இவ்வாறு பதிலளிக்கலாம்: “ஓரினச்சேர்க்கைக்காரர்களின் இயல்பைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனாலும், சில குணாம்சங்கள் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் என்று அது குறிப்பிடுகிறது. (2 கொரிந்தியர் 10:4, 5) சிலருக்கு ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரிடம் மட்டுமே ஈர்ப்பு இருந்தாலும்கூட, ஓரினச்சேர்க்கை பழக்கத்தைத் தவிர்க்கும்படி அது கிறிஸ்தவர்களுக்குச் சொல்கிறது.”
✔ ஆலோசனை: ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான ஆசை ஏன் வருகிறது என்பதைக் குறித்து விவாதிக்காமல், அந்தப் பழக்கத்தை பைபிள் தடைசெய்கிறது என்பதை வலியுறுத்துங்கள். இதை ஓர் உதாரணத்தோடு இவ்வாறு விளக்கலாம்: “மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது பிறவி குணம்; அதனால்தான் சிலர் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நிறையப் பேர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். (நீதிமொழிகள் 29:22) அது நிஜமாக இருந்தால்? கடுங்கோபத்தை பைபிள் கண்டனம் செய்வது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். (சங்கீதம் 37:8; எபேசியர் 4:31) சிலருக்கு இயல்பாகவே மூர்க்க குணம் இருக்கிறது என்பதற்காக பைபிள் நெறி நியாயமற்றதாக ஆகிவிடுமா?”
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரிடம் மட்டுமே ஒருவர் ஈர்க்கப்பட்டால் அவரிடம் ஓரினச்சேர்க்கையைத் தவிர்க்கும்படி கடவுள் எப்படிச் சொல்ல முடியும்? அது இரக்கமற்ற செயல்.
அப்படிச் சொல்வது தவறு; அது, மனிதர்கள் தங்களுடைய பாலியல் ஆசைகளுக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கருத்தின் அடிப்படையிலானது. தகாத பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த ஒருவர் உண்மையிலேயே விரும்பினால் அவரால் அதைக் கட்டுப்படுத்த முடியுமென பைபிள் உறுதியளிக்கிறது, இதன்மூலம் மனிதரைக் கௌரவிக்கிறது.—கொலோசெயர் 3:5.
யாராவது இப்படிச் சொன்னால்: “நீங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடாவிட்டாலும், அதைக் குறித்த உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.”
இவ்வாறு பதிலளிக்கலாம்: “எனக்குச் சூதாட்டம் என்றால் பிடிக்காது, உங்களுக்குப் பிடிக்கும் என்று
வைத்துக்கொள்ளுங்கள். லட்சக்கணக்கானோர் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக என் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென நீங்கள் வற்புறுத்துவது நியாயமாக இருக்குமா?”✔ இதை நினைவில் வையுங்கள்: (ஓரினச்சேர்க்கைக்காரர்கள் உட்பட) பெரும்பாலோர் சில நன்நெறிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்; அதனால், மோசடி, அநீதி, போர் போன்ற சில காரியங்களை அவர்கள் வெறுக்கிறார்கள். இத்தகைய செயல்களை பைபிள் தடைசெய்கிறது; அதே சமயம் ஓரினச்சேர்க்கை உட்பட சில பாலியல் பழக்கங்களையும் அது தடைசெய்கிறது.—1 கொரிந்தியர் 6:9-11.
பைபிள் நியாயமற்ற ஆலோசனைகளைத் தருவதுமில்லை, பாரபட்சம் காட்டுவதை ஊக்குவிப்பதுமில்லை. எதிர்பாலாரிடம் ஈர்க்கப்படுகிறவர்கள் எதைத் தவிர்க்க வேண்டுமோ அதைத்தான் ஒரே பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுகிறவர்களும் தவிர்க்க வேண்டுமென பைபிள் சொல்கிறது; அதாவது, ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடும்படி’ சொல்கிறது.—1 கொரிந்தியர் 6:18.
கும்பலோடு ஒத்துப்போகாதிருக்க கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை
எதிர்பாலாரிடம் ஈர்க்கப்படுகிற லட்சக்கணக்கானோர் பைபிளின் நெறிக்கு இசைய வாழ விரும்புவதால், எப்படிப்பட்ட சபலத்தைச் சந்தித்தாலும் தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறார்கள். இவர்களில் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லாத பலரும்... செக்ஸ் குறைபாடுள்ள ஒருவரை மணந்ததால் உறவுகொள்ள முடியாதிருக்கும் பலரும்... உட்படுகிறார்கள். அவர்களால் தங்களுடைய பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு சந்தோஷமாய் வாழ முடிகிறது. கடவுளை உண்மையிலேயே பிரியப்படுத்த விரும்பினால், ஒரே பாலினத்தவரிடம் ஈர்ப்பு உள்ளவர்களாலும் இதே போல் வாழ முடியும்.—உபாகமம் 30:19. (g10-E 12)
^ இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
^ “பாலியல் முறைகேடு” என பைபிள் குறிப்பிடும்போது அது உடலுறவை மட்டுமல்ல, இன்னொருவரின் பாலுறுப்புகளைக் கிளர்ச்சியடையச் செய்தல், வாய்வழி அல்லது ஆசனவழி செக்ஸ் போன்றவற்றையும் அர்த்தப்படுத்துகிறது.
சிந்திப்பதற்கு
-
கடவுள் ஏன் மனிதருக்கு ஒழுக்க நெறிகளைக் கொடுத்திருக்கிறார்?
-
பைபிளின் ஒழுக்க நெறிகளை உறுதியாய்க் கடைப்பிடிப்பதால் நீங்கள் எப்படி நன்மையடைகிறீர்கள்?