பைபிளின் கருத்து
கடவுள் ஏன் பிசாசை அழிக்காமல் விட்டுவைத்திருக்கிறார்?
உங்களால் ஒருவருடைய துயரைத் துடைக்க முடியுமென்றால் அப்படிச் செய்வீர்கள், அல்லவா? நிவாரணப் பணியாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஓடோடிச் செல்கிறார்கள்; முன்பின் தெரியாத மக்களின் துயரைத் துடைக்கிறார்கள், உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அப்படியிருக்க... ‘மனிதர் படுகிற எத்தனை எத்தனையோ துயரங்களுக்குப் பொறுப்புள்ளவனாய் இருக்கிற பிசாசை ஒழித்துக்கட்ட கடவுள் மட்டும் ஏன் அவசர நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று ஒருவர் கேட்கலாம்.
இக்கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால்... ஒரு முக்கியமான வழக்கு விசாரணை நடப்பதை உங்கள் மனக்கண்ணில் ஓடவிடுங்கள். குற்றம் சுமத்தப்பட்ட கொலையாளி, விசாரணையை எப்படியாவது தடுத்து நிறுத்த நினைக்கிறான்; அதனால், நீதிபதி மேலேயே சரமாரியாகக் குற்றங்களை வீசுகிறான். அவர் நேர்மையற்றவர்... அவர் நியாயம் விசாரிக்கிற முறையே சரியில்லை... என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறான். ஆகவே, யார் பக்கம் தவறிருக்கிறது என்பதைத் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க எண்ணற்ற சாட்சிகளுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
இந்த வழக்கு பல்லாண்டுகளுக்கு நீடித்தால் நிறையப் பிரச்சினைகள் வரும் என்பது நீதிபதிக்குத் தெரியும்; அதனால், வழக்கை தேவையின்றி இழுத்தடிக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதற்குத் தீர்ப்பளிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அதே சமயத்தில், நியாயமாகத் தீர்ப்பு வழங்கவும், பிற்காலத்தில் இதுபோன்ற ஏதாவது வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழவும் வேண்டுமென்றால், தங்களுடைய சாட்சியை அளிக்க இரு தரப்பினருக்குமே போதிய காலத்தை அனுமதிக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.
எக்காலத்துக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் விதத்தில் தீர்ப்பளிக்க வேண்டுமென்றால், தங்கள் சாட்சியை அளிக்க இரு தரப்பினருக்குமே போதிய காலத்தை அனுமதிக்க வேண்டும்
இந்த உதாரணம்... ‘பூமியனைத்தின் மேலும் உன்னதமானவரான’ யெகோவாமீது “ராட்சதப் பாம்பு” என்றும் “சாத்தான்” என்றும் அழைக்கப்படுகிற பிசாசு சுமத்திய குற்றச்சாட்டுக்கு எப்படிப் பொருந்துகிறது? (வெளிப்படுத்துதல் 12:9; சங்கீதம் 83:17) இந்தப் பிசாசு உண்மையில் யார்? யெகோவா தேவன்மீது அவன் என்னென்ன குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறான்? அவனை அவர் எப்போது ஒழித்துக்கட்டுவார்?
எடுத்துக்காட்டாய் இருப்பதன் அவசியம்
பிசாசாக மாறிய இவன் முதலில் ஒரு பரிபூரண தேவ தூதனாக இருந்தான். (யோபு 1:6, 7) மனிதர் தன்னை வழிபட வேண்டுமென்ற சுயநல ஆசையை அவனால் அடக்க முடியாமல் போனபோது அவன் தன்னையே பிசாசாக ஆக்கிக்கொண்டான். அதனால், மனிதர்களை ஆள கடவுளுக்கு உரிமை இருக்கிறதா என அவன் சவால்விட்டான்; மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றும்கூட சொல்லாமல் சொன்னான். மக்களுக்குக் கடவுள் பல ஆசீர்வாதங்களை லஞ்சமாகப் பொழியும்போது மட்டுமே அவரை அவர்கள் வழிபடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினான். வாழ்க்கையில் கஷ்டம் வந்தால்... மக்கள் எல்லாரும் அவரைத் ‘தூஷித்துவிடுவார்கள்’ என்றும் சாத்தான் அறைகூவல் விட்டான்.—யோபு 1:8-11; 2:4, 5.
கடவுள் நினைத்திருந்தால் சாத்தானை அந்நொடியே அழித்திருக்கலாம். ஆனால், அவன் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அது தகுந்த பதில் அளித்திருக்காது. சொல்லப்போனால், பிசாசை ஏதேன் தோட்டத்திலேயே அழித்திருந்தால், அவன் சொன்னதெல்லாம் சரிதானோ என்ற சந்தேகம் சிலருக்கு வந்திருக்கும். ஆகவே, சகல அதிகாரத்தையும் பெற்ற கடவுள், யாருக்குமே அப்படியொரு சந்தேகம் எழாத விதத்தில் இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார்... அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுத்தார்.
தாம் வகுத்த நெறிகளுக்கும் தமது பரிபூரண நீதிக்கும் கட்டுப்பட்டு நடக்கிற யெகோவா தேவன், வழக்கு விசாரணைக்கு இரு தரப்பினருமே சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்துவார்கள் என்பதைக் குறிப்பிட்டார். அவர் காலத்தை அனுமதித்ததால் ஆதாமின் வழி வந்தவர்களுக்கு வாழவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதோடு எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் கடவுள் மீதுள்ள அன்பினால் அவருக்கு உண்மையாக இருந்து அவருக்கு ஆதரவாகச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எவ்வளவு காலம் நீடிக்கும்?
இந்த வழக்கு நீடிக்கும் வரை... மனிதர் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது யெகோவா தேவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், முடிந்தவரை சீக்கிரத்திலேயே இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர அவர் தீர்மானமாய் இருக்கிறார். ‘அவர் கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’ என்று பைபிள் அவரை விவரிக்கிறது. (2 கொரிந்தியர் 1:3) ஆகவே, “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” இன்னும் ரொம்ப காலத்திற்குப் பிசாசை விட்டுவைக்கவும் மாட்டார், அவனுடைய தீய செல்வாக்கினால் மனிதர் தொடர்ந்து கஷ்டப்படவும் விடமாட்டார். அதே சமயத்தில் உரிய காலத்திற்கு முன்பே, அதாவது பிரபஞ்சத்தையே உட்படுத்திய இந்த வழக்கு முழுமையாய் முடிவடைவதற்கு முன்பே, பிசாசைக் கடவுள் அழிக்க மாட்டார்.
கடைசியில் இந்த வழக்கு முடிவுக்கு வரும்போது, யெகோவாவே ஆட்சி செய்ய உரிமையுள்ளவர் என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கும். சாத்தானுக்கு எதிரான இந்த வழக்கு சதா காலத்துக்கும் ஒரு சட்டப்பூர்வ தராதரமாக இருக்கும். இதுபோன்ற சர்ச்சை மீண்டும் எழுந்தால், சாத்தானுக்குக் கிடைத்த தீர்ப்பே தகுந்த எடுத்துக்காட்டாய் விளங்கும்; மீண்டும் ஒரு வழக்கைத் தொடர அவசியம் இருக்காது.
தாம் குறித்துள்ள காலத்தில், சாத்தானை ஒழித்துக்கட்டவும் அவனுடைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் யெகோவா தேவன் தமது மகன் இயேசு கிறிஸ்துவுக்குக் கட்டளையிடுவார். கிறிஸ்து இதை எப்படிச் செய்வார் என பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் ஒழித்துவிட்டு, கடவுளும் தகப்பனுமானவரிடமே ஆட்சியை ஒப்படைத்துவிடுவார். ஆனால், எல்லா எதிரிகளையும் அவரது காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாய் ஆட்சி செய்தாக வேண்டும். ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.”—1 கொரிந்தியர் 15:24-26.
சந்தோஷத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அப்போது பூமி பூஞ்சோலையாய் மாறும் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. கடவுளுடைய ஆதி நோக்கத்தின்படியே மக்கள் சமாதானம் நிலவுகிற பூஞ்சோலையில் வாழ்வார்கள்! “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” ஆம், “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.
கடவுளுடைய ஊழியர்களுக்கு முன் இருக்கிற மகத்தான எதிர்பார்ப்பைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g10-E 12)