Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதார்த்தமான லட்சியங்களை வைத்திருக்கிறீர்களா?

எதார்த்தமான லட்சியங்களை வைத்திருக்கிறீர்களா?

எதார்த்தமான லட்சியங்களை வைத்திருக்கிறீர்களா?

● வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கனவுகள் என்ன? உங்களுக்கு எதார்த்தமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றனவா, அல்லது உங்கள் வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை கோட்டை கட்டியிருக்கிறீர்களா? மனித இயல்புகளை உற்றுக் கவனித்த ஒரு ஞானியின் புத்திமதியைக் கேளுங்கள்: “இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதைவிட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.”—பிரசங்கி 6:9, பொது மொழிபெயர்ப்பு.

‘[நம்மிடம்] உள்ளது’ என்பது நம்முடைய தற்போதைய நிலையை, நிஜ வாழ்க்கையைக் குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயற்சி எடுப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். இருந்தாலும், பைபிள் சொல்லவரும் குறிப்பு என்னவென்றால், ஞானமான நபர் தன் வாழ்க்கையில் எதார்த்தமற்ற லட்சியங்களை வைக்கமாட்டார். ஒருவேளை, அது பணம், புகழ், பூர்ண ஆரோக்கியம், சர்வ லட்சணங்களும் உள்ள வாழ்க்கைத் துணை என எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால், சிலர் தங்களுடைய லட்சியங்களை அடைந்த பின்பும் திருப்தி அடைவதில்லை; உதாரணத்திற்கு, ஒருவர் பணக்காரராக ஆன பிறகும் ‘பணம், பணம்’ என்று அலையலாம். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே” என்று பைபிள் வெளிப்படையாகச் சொல்கிறது. (பிரசங்கி 5:10) ஆன்மீக ஞானம் நிறைந்தவர்கள், ‘[தங்களிடம்] உள்ளதை’ வைத்து திருப்தியாக இருப்பார்கள். ஆம், அவர்கள் இந்த உண்மையை ஒத்துக்கொள்கிறார்கள்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.”—1 தீமோத்தேயு 6:7.

ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்தால்தான் அளவில்லா ஆனந்தத்தை அடைய முடியும். மனிதனுக்கு இந்த ஆர்வப்பசி இயல்பாகவே இருக்கிறது. (மத்தேயு 5:3) அப்படியென்றால், அதை நாம் எப்படித் திருப்தி செய்துகொள்ளலாம்? “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 4:4) இதுபோன்ற வைர வரிகள் பைபிளில் உள்ளன; விரும்புகிறவர்கள் இவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மற்றொரு வைர வரி சங்கீதம் 37:4-ல் உள்ளது. அது சொல்வதாவது: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” எந்த மனிதனாலும் கொடுக்க முடியாத வரங்களை, எல்லாம் வல்ல கடவுளான யெகோவா தம்முடைய பக்தர்களுக்கு அருளுவார். ஆம், பூர்ண ஆரோக்கியம் அருளுவார், பொருட்செல்வங்கள் கொடுப்பார், அதுமட்டுமா, அழகுகொஞ்சும் பூஞ்சோலையில் சாவில்லா வாழ்க்கையைக் கொடுப்பார். (லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த வாக்குறுதிகளை நீங்கள் நூற்றுக்கு நூறு நம்பலாம்; ஏனென்றால், இவை வெறும் கனவல்ல, நிஜம். (g11-E 02)