முதியோரின் கவனத்திற்கு...
முதியோரின் கவனத்திற்கு...
வீட்டிற்கு வெளியே ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற ஒரு சிறுமி திடீரென தடுக்கி கீழே விழுந்துவிடுகிறாள். அடுத்த நிமிடமே எழுந்துவிடுகிறாள்; தான் கீழே விழுந்ததை யாராவது பார்த்துவிட்டார்களா என்ற தர்மசங்கடத்தைத் தவிர வேற எந்தப் பிரச்சினையும் அவளுக்கு இல்லை. ஆனால், முதியவர்களின் கதையே வேறு. வயதான பாட்டி ஒருவர், வீட்டில் கால் தவறி விழுந்துவிடுகிறார்; அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிடுகிறது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் குணமாகி வீடு திரும்புவதற்கு பல மாதங்கள் எடுக்கின்றன. இப்போதெல்லாம் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்துதான் வைக்கிறார்; முன்புபோல் அதிகம் நடமாடாமல் இருப்பதால், ரொம்ப பலவீனமாக ஆகிவிடுகிறார்.
ஒரு மேற்கத்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் கீழே விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இவ்வாறு விழுகிறவர்கள் காயப்பட்டு, மரணத்தையும் தழுவுகிறார்கள். நல்ல காரணத்தோடுதான் முதியோரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய்.”—பிரசங்கி 12:5, ஈஸி டு ரீட் வர்ஷன்.
பொதுவாக, வயதாகிவிட்டால் உங்கள் உடல் தளர்ந்து சோர்ந்து பலவீனமாகிவிடும் என்பது உண்மைதான்; என்றாலும், நீங்களாகவே எந்த ஆபத்தையும் வருவித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு நடைமுறையான சில பாதுகாப்பு முறைகளைக் கையாளலாம், அதனால், உங்கள் வாழ்நாளையும் நீட்டிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது... ஒன்று, ஆரோக்கியத்தையும் பலத்தையும் முடிந்தளவு காத்துக்கொள்ள முயற்சி செய்வது; இரண்டு, உங்கள் வீட்டை ஆபத்து ஏற்படாதவாறு அமைத்துக்கொள்வது.
ஆரோக்கியத்தையும் பலத்தையும் காத்துக்கொள்ளுங்கள்
வயதாக ஆக, நம் உடல் உறுப்புகள் அந்தளவு ஒத்துழைக்காமல் போகலாம், பார்வை மங்கலாம், நிற்கும்போதோ, நடக்கும்போதோ தடுமாற்றம் ஏற்படலாம். அதுமட்டுமல்ல, நம் தசைகளும் எலும்புகளும் பலவீனமாவதால் நாம் தளர்ந்து போய்விடலாம். என்றாலும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தால், நல்ல உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் இவற்றை நாம் தள்ளிப்போடலாம். பிஸியோதெரபி மருத்துவரான நீட்டா சொல்கிறபடி “தடுமாற்றத்தைக் குறைக்கவும் சரியான நிலையில் உட்காரவும் அல்லது நிற்கவும், உடலின் பலத்தைக் கூட்டவும், தசையின் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிற உடற்பயிற்சிகளைச் செய்வது முக்கியம்.”
ஐ.மா. சுகாதார மற்றும் மனித சேவை இலாகா வெளியிட்ட ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “வயதானவர்களின் உடல்நிலை எப்படியிருந்தாலும் சரி அவர்களால் அதிகமாக வேலை செய்ய முடியாவிட்டாலும் சரி, அவர்கள் கொஞ்சம் நடமாடி வந்தால் நல்ல பலன் கிடைக்கலாம். நிற்கவோ நடக்கவோ கஷ்டப்பட்டாலும்கூட, அவர்களால் உடற்பயிற்சி செய்ய முடியும், அதிலிருந்து பயனும் அடைய முடியும். சொல்லப்போனால் ஒன்றுமே செய்யாமல் முடங்கிக் கிடந்தால்தான் அவர்கள் ஆரோக்கியத்தை இழந்துவிடுவார்கள்.” இப்படி நடமாடி வருவதால் இதய நோய், மூட்டு வலி, எலும்பின் திடம் குறைதல் (osteoporosis), மனச்சோர்வு போன்றவற்றைக்கூட தடுக்க முடியும். உடலின் ரத்த ஓட்டமும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும், நன்றாகத் தூங்க முடியும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், உடலும் மனதும் உற்சாகமடையும்.
உடற்பயிற்சி செய்கிற பழக்கம் உங்களுக்கு இல்லையென்றால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். அதோடு, உடற்பயிற்சி செய்யும்போது மயக்கம் வந்தாலோ நெஞ்சு வலி வந்தாலோ அவரைப் போய் பாருங்கள். சொல்லப்போனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்,
அவசர உதவி எண்ணுக்கு ஃபோன் செய்வது நல்லது. இப்படிப்பட்ட ஆபத்தான அறிகுறிகளை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! வருடா வருடம் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.சாப்பாட்டைப் பொருத்தவரை, வைட்டமின்கள், மினரல்கள் இல்லாத உணவுகளை—சுலபமாக, விரைவாகத் தயாரிக்கக்கூடியதாய் இருந்தாலும்—தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக, வயதானவர்களுக்கு வைட்டமின் டி (D), கால்சியம் அதிகமுள்ள உணவு அவசியம்; இவை இரண்டுமே எலும்பின் திடம் குறைவதைத் தடுக்கும் அல்லது தள்ளிப்போடும். சாப்பாட்டில் முழு தானியங்கள், கொழுப்புக் குறைவான பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்களுடைய உடல்நிலையை மனதில் வைத்து, எந்த உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் பரிந்துரை செய்வார்.
அதோடு, நிறையத் தண்ணீர் குடியுங்கள். பொதுவாக, வயதானவர்கள் அதுவும் முதியோர்-இல்லத்திலோ தனியாகவோ வசிப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை; அதனால், கீழே விழுவது, மனக் குழப்பம், மலச்சிக்கல், தோல் சுருக்கம், தொற்று நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்; சில சமயம் மரணத்தைக்கூட சந்திக்கிறார்கள்.
உங்கள் வீட்டை ஆபத்து ஏற்படாதவாறு அமைத்துக்கொள்ளுங்கள்
வயதானவர்கள் பெரும்பாலும் தங்களுடைய வீடுகளில்தான் கீழே விழுகிறார்கள். அதனால் நீங்கள் முன்ஜாக்கிரதையாக சில படிகளை எடுத்தால் அதை ஓரளவு தவிர்க்க முடியும். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை வாசிக்கும்போது உங்கள் வீட்டில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டியிருக்கிறதா என யோசித்துப்பாருங்கள்.
குளியலறை:
● தரை, ஈரமாக இருந்தாலும் வழுக்காதபடி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
● குளியல் ஷவருக்குக் கீழே சொரசொரப்பான மிதியடிகளை வைத்துக்கொள்ளுங்கள் அல்லது குளியல் தொட்டி வழுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ‘ஷவர் சேர்’ (shower chair) இருந்தால், அதில் உட்கார்ந்தபடி தண்ணீர் பைப்பை, அதாவது ‘ஃபாஸெட்டை,’ எளிதாக எடுக்க முடிகிறதா எனப் பாருங்கள். உட்கார்ந்தபடியே குளிப்பதற்கு வசதியாக கையில் பிடித்துக்கொள்கிற ஷவரையும் உபயோகிக்கலாம்.
● குளியல் தொட்டியை அல்லது கழிவறையைப் பயன்படுத்தும்போது பிடித்துக்கொள்வதற்கு வசதியாக சுவர்களில் கைப்பிடிகளை வைத்திருப்பது நல்லது. இவை உறுதியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதோடு, ‘டாய்லெட் சீட்’ சரியான உயரத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள்; அப்போதுதான் நீங்கள் சிரமப்படாமல் உட்காரவோ எழவோ முடியும்.
● இரவில் ஓரளவு வெளிச்சம் தருகிற ‘லைட்டை’ போட்டு வைத்திருங்கள், அல்லது ‘டார்ச் லைட்டை’ பயன்படுத்துங்கள்.
படிக்கட்டுகள்:
● படிக்கட்டுகளில் பொருட்களை இறைத்து வைக்காதீர்கள்; படிக்கட்டுகளை நல்ல நிலையில் வைத்திருங்கள், அங்கே போதுமான வெளிச்சம் இருக்கிறதா எனப் பாருங்கள்.
● படிக்கட்டுகளில் முடிந்தால், இரண்டு பக்கத்திலும் கைப்பிடிகளை வையுங்கள்; அதோடு, வழுக்காத மிதியடிகளைப் பயன்படுத்துங்கள், மேலேயும் சரி கீழேயும் சரி, லைட் சுவிட்ச்சுகளை பொருத்துங்கள்.
● படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், உங்கள் கால்கள் வலிமை அடையும். ஆனால், நீங்கள் நடக்கும்போது தடுமாறுகிறீர்கள் என்றால், படிக்கட்டுகளில் தனியாக ஏறுவதையோ இறங்குவதையோ தவிர்த்துவிடுங்கள்.
படுக்கையறை:
● நீங்கள் புழங்குவதற்கு வசதியாக கட்டில், ஃபர்னிச்சர்களைச் சுற்றி போதுமான இடத்தை விடுங்கள்.
● நீங்கள் உட்கார்ந்து உடை உடுத்துவதற்காக ஒரு நாற்காலியைப் பயன்படுத்துங்கள்.
● உங்கள் படுக்கைக்கு அருகே, கைக்கெட்டும் தூரத்தில் ‘நைட் லாம்ப்பை’ அல்லது ‘டார்ச் லைட்டை’ வைத்திருங்கள்.
சமையலறை:
● அடுப்படி மேடைகளில் சாமான்களை இறைத்து வைக்காதீர்கள்; அப்போதுதான் சமையலுக்குத் தேவையான பொருள்களை வசதியாக வைத்துக்கொள்ள முடியும்.
● சமையலறையின் தரை வழுக்காமலும், கண்ணைக் கூசாமலும் இருக்க வேண்டும்.
● அலமாரி அதிக உயரமாகவோ தாழ்வாகவோ இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் பொருட்களை உங்களால் எடுக்க முடியும். ஏணியையோ, படிக்கட்டுள்ள ‘ஸ்டூல்களையோ’ பயன்படுத்தாதீர்கள்; ஒருபோதும் நாற்காலி மேல் ஏறி நின்று பொருட்களை எடுக்காதீர்கள்.
மற்ற இடங்கள்:
● இரவில், கழிவறைக்குப் போகும் வழியிலும் நீங்கள் நடமாடுகிற மற்ற இடங்களிலும் ஓரளவுக்கு வெளிச்சம் தருகிற ‘பல்புகளை’ போட்டு வையுங்கள்.
● தூக்கக் கலக்கமாக இருக்கும்போது, நடப்பதற்குக் கைத்தடியையோ ‘வாக்கரையோ’ பயன்படுத்துங்கள்.
● உங்கள் நாற்காலியின் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும் (சக்கரங்கள் இருக்கக்கூடாது). அதில் கைப்பிடிகள் இருக்க வேண்டும், நீங்கள் உட்காருவதற்கும் எழுவதற்கும் வசதியான உயரத்தில் இருக்க வேண்டும்.
● நைந்துபோன தரைவிரிப்புகளையும் பெயர்ந்து வந்திருக்கிற ப்ளாஸ்டிக் தரைவிரிப்புகளையும் (லினோலியம்) உடைந்துபோன டைல்ஸ்களையும் உடனடியாக சரி செய்யுங்கள், அல்லது மாற்றிவிடுங்கள். அப்போதுதான் தடுக்கி விழமாட்டீர்கள். நீங்கள் நடக்கும் இடத்தில், குறுக்கே வயர்கள்
கிடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவை சுவர் ஓரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.● பெரிய தரைவிரிப்புகளுக்கு மேலே போடப்பட்ட சிறிய மிதியடிகள் உங்களை தடுக்கி விழ வைக்கலாம்; எனவே, அவற்றை அங்கிருந்து அகற்றிவிடுங்கள். டைல்ஸ், மரம் போன்ற வழுவழுப்பான தரைகளில் அவற்றைப் போடுகிறீர்கள் என்றால், அந்த மிதியடியின் கீழ்ப்பகுதி வழுக்காத விதத்தில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.
● காலுக்குக் கச்சிதமற்ற, பிய்ந்துபோன, தேய்ந்துபோன, வழுக்கிவிடுகிற செருப்புகளை அணியாதீர்கள். உயரமான ஹீல்ஸ் உள்ள செருப்புகளையோ ஷூக்களையோ அணியாதீர்கள்,
● சில மருந்துகளைச் சாப்பிட்ட பிறகு மயக்கம் வரலாம், தள்ளாட்டம் ஏற்படலாம். உங்களுக்கும் அப்படி ஏற்பாட்டால், அதை டாக்டரிடம் மறக்காமல் சொல்லுங்கள். அப்போதுதான், மருந்தையோ மருந்தின் அளவையோ அவரால் மாற்றித்தர முடியும்.
மேலே சொல்லப்பட்ட குறிப்புகளில் ஏதோவொன்றில் உங்களுக்கு உதவி தேவையென நீங்கள் நினைத்தால், உங்களுடைய குடும்பத்தாரையோ, நண்பர்களையோ அல்லது உங்கள் குடியிருப்பு கட்டிடத்தின் பராமரிப்பாளரையோ அணுகி உதவி கேளுங்கள். அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செய்யுங்கள்.
மற்றவர்கள் எப்படி உதவலாம்
உங்களுக்கு வயதான பெற்றோரோ, தாத்தா பாட்டியோ, நண்பரோ இருந்தால், அவர் கீழே விழுந்து காயப்படுவதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? முதலில், மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பக்குவமாக அவர்களோடு கலந்துபேசுங்கள்; பின்பு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். தேவைப்பட்டால், வாரத்தில் ஓரிரு தடவை ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சமைத்துக்கொடுங்கள். வயதானவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். அதனால், நீங்கள் பக்கத்தில் ஏதாவது வேலையாகப் போகும்போது அவர்களையும் அழைத்துச் செல்லலாம், அல்லவா? உங்களுக்கு வேலையும் முடியும், அவர்களுக்குக் காலார நடந்ததுபோலவும் இருக்கும். நம்பகமான ஒருவர் தங்களோடு வந்தால் வெளியே போக வயதானவர்கள் பலர் ரொம்பவே சந்தோஷப்படுவார்கள். சில நாடுகளில், நர்ஸ்கள் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு, பிஸியோதெரபி செய்வதற்கு, முதியவர்கள் தங்களுடைய வேலையை தாங்களாகவே செய்துகொள்வதற்கான சிகிச்சை அளிப்பதற்கு (ஆக்குபேஷனல் தெரபி), வீட்டை பாதுகாப்பான இடமாக ஆக்குவதற்கு... எனப் பல விஷயங்களில் அரசாங்கம் அவர்களுக்குச் சலுகைகளைச் செய்துகொடுக்கிறது. உங்களுக்கு எப்படிப்பட்ட சலுகைகள் தேவை என உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்வார்.
நம்முடைய படைப்பாளரை, “நீண்ட ஆயுசுள்ளவர்” என பைபிள் அழைக்கிறது. வயதானவர்களை, குறிப்பாக வயதான பெற்றோரை, நாம் மதிப்புமரியாதையோடு நடத்த வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். (தானியேல் 7:9) “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்று அவர் கட்டளை கொடுத்திருக்கிறார். (யாத்திராகமம் 20:12) “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக” என்றும் அவர் சொல்கிறார். (லேவியராகமம் 19:32) ஆம், நமக்குக் கடவுள்மீது ஆரோக்கியமான பயம் இருந்தால் முதியோருக்கு மதிப்புமரியாதை காட்டுவோம். முதியோரே, மற்றவர்கள் உங்களுக்கு வலிய வந்து உதவிகள் செய்யும்போது, அதற்கு மனதார நன்றி சொல்லுங்கள்; உங்கள்மீது அவர்கள் வைத்திருக்கிற அன்பும் மரியாதையும் இன்னும் பெருகும். வயதானவர்களுக்கு உதவி செய்வோரே, நீங்கள் அதைக் கடமையாகச் செய்யாதீர்கள், சந்தோஷமாகச் செய்யுங்கள்! (g11-E 02)
[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]
அவசரத்திற்குக் கைகொடுக்கும் கருவி
சில நாடுகளில், முதியவர்களுக்கு ஒரு சிறிய எலெக்ட்ரானிக் கருவி கிடைக்கிறது. கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலோ எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்தாலோ அதிலுள்ள ஒரு பட்டனை அழுத்தினால் போதும், உதவிக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். இதை கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்ளலாம் அல்லது மணிக்கட்டில் கட்டிக்கொள்ளலாம். நீங்கள் வசிக்கிற பகுதியில் இந்த கருவி கிடைக்கிறது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் தனியாக வசித்து வந்தால் இது உங்களுக்கு அவசியம் தேவை.