Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் செல்லக்குட்டி...! இனி வெல்லக்கட்டி...!!

உங்கள் செல்லக்குட்டி...! இனி வெல்லக்கட்டி...!!

உங்கள் செல்லக்குட்டி...! இனி வெல்லக்கட்டி...!!

“உங்க அன்பு செல்வங்கள் 5 வயசு வரைக்கும் உங்க கண்முன்னாலேயே வளர்வாங்க. அவங்கள பொத்தி, பாதுகாத்து வளர்ப்பீங்க. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்க்கிறது உங்களுக்குச் சுலபமா இருக்கும். ஆனா ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும்போது, நாலு செவுத்துக்குள்ள இருந்த உங்க பிள்ளைங்க நாலு பேர பார்த்து பழக ஆரம்பிக்கிறாங்க. அவர்களோட பேச்சிலயும் நடவடிக்கையிலயும் நிறைய மாற்றம் தெரியவரும்.” —வால்டர், இத்தாலி.

பிள்ளைகள் வளர வளர அவர்களுடைய உலகம் விரிந்துகொண்டே போகிறது. புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். புதுப்புது ஆட்களைப் பார்க்கிறார்கள். அக்கம்பக்க வாண்டுகள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள்... என அவர்களுடைய நட்பு வட்டம் பெரிதாகிறது. வால்டர் சொன்னபடி, உங்களுடைய செல்லக்குட்டி பிஞ்சுக் குழந்தையாக இருந்தபோது அதற்கு நீங்கள் மட்டுமே உலகமாக இருந்தீர்கள், நீங்கள் மட்டுமே அவன்மீது ஏகபோக உரிமை செலுத்தி வந்தீர்கள். ஆனால், இப்போது நிலைமை மாற ஆரம்பிக்கிறது. அதனால், கீழ்ப்படிவதன் அவசியத்தையும் இங்கிதத்தையும் பிஞ்சுப் பருவத்திலேயே கற்றுக்கொடுப்பது அவசியம். நல்லது-கெட்டதைப் பிரித்து பார்க்கக் கற்றுக்கொடுப்பதும் ரொம்ப முக்கியம்.

இந்த விஷயங்களையெல்லாம் பிள்ளைகள் ஒரே இராத்திரியில் கற்றுக்கொள்ள மாட்டார்கள், நீங்கள் சொல்லிக்கொடுக்காமல் தானாகவும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நீங்கள், ‘கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி நீடிய பொறுமையோடு கடிந்துகொண்டு, கண்டித்துப் பேசி, அறிவுரை கூற’ வேண்டியிருக்கும். (2 தீமோத்தேயு 4:2) இஸ்ரவேல் தேசத்து மக்கள் கடவுளுடைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. ‘நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு’ என்று கடவுள் கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 6:6, 7) இந்த பைபிள் வசனம் சொல்கிறபடி, பிள்ளைகளுக்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொடுப்பது அவசியம்.

உங்கள் செல்ல மொட்டுகளை பொறுப்பாக வளர்த்தெடுப்பது ஒன்றும் லேசுபட்ட விஷயமல்ல. அதில் நிறைய சவால்கள் உட்பட்டுள்ளன. அவற்றில் சில கீழே...

கேட்க ஒரு காலமுண்டு

பைபிள் சொல்கிறபடி, ‘பேச ஒரு காலம்’ இருப்பதுபோல், கேட்கவும் ஒரு காலம் இருக்கிறது. (பிரசங்கி 3:7) அப்படியென்றால், நீங்களோ மற்றவர்களோ பேசும்போது உங்கள் பிள்ளை கவனமாகக் கேட்பதற்கு எப்படிச் சொல்லித் தரலாம்? உங்கள் சொற்களைவிட செயல்கள்தான் அதிகமாகப் பேசும். எனவே, உங்கள் பிள்ளைகளோ மற்றவர்களோ பேசும்போது, அதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்களா?

சின்னஞ்சிறுசுகளால் ரொம்ப நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. சட்டென்று அவர்களுடைய கவனம் சிதறிவிடும். அதுபோன்ற சமயங்களில் அவர்களிடம் பேசுவது பெரிய சவால்! அது உங்களுடைய பொறுமைக்குச் சோதனையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம் என்பதால் உங்கள் குழந்தையைக் கூர்ந்து கவனியுங்கள். எப்படிப் பேசினால் அவன் கேட்பான் என்று கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு, பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் சொல்கிறார்: “என் மகளிடம் நான் எதையாவது சொன்ன பிறகு, ‘நான் என்ன சொன்னேன்னு சொல்லு?’ எனக் கேட்பேன். இப்படி கேட்கிறதனால அவ வளர வளர நான் சொல்றத நல்லா காதுகொடுத்துக் கேட்க ஆரம்பிச்சிருக்கா.”

இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது, “நீங்கள் கேட்கிற விதத்திற்குக் கவனம் செலுத்துங்கள்” என்று சொன்னார். (லூக்கா 8:18) பெரியவர்களே இதைச் செய்ய வேண்டும் என்றால் சிறு பிள்ளைகள், அவசியம் செய்ய வேண்டும்!

‘ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்’

“ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:13) தாராளமாக மன்னிக்கும் குணத்தை பிள்ளையின் மனதில் சிறுவயதிலேயே பயிரிட முடியும். எப்படி?

கேட்கும் கலையில் எப்படியோ அப்படியே மன்னிக்கும் கலையிலும் உங்களுடைய முன்மாதிரியே முக்கியம்! நீங்கள் மற்றவர்களை எந்தளவு மன்னிக்கிறீர்கள் என்பதைப் பிள்ளைகள் பார்க்க வேண்டும். ரஷ்யாவைச் சேர்ந்த மரினா இப்படித்தான் கற்றுத்தருகிறார். அவர் சொல்கிறார்: “மத்தவங்களோட தவறுகளை மன்னிக்க, விட்டுக்கொடுத்து போக, சின்ன விஷயத்துக்கெல்லாம் புண்படாம இருக்க, நானும் என் கணவரும் முயற்சி செய்றோம். இந்த விஷயத்தில எங்க பிள்ளைங்களுக்கு நாங்க நல்ல முன்மாதிரியா இருக்க பார்க்கிறோம். . . . நான் எதாவது தப்பு செய்திருந்தா என் பிள்ளைங்ககிட்ட மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன். என் பிள்ளைங்களும் இப்படி இருக்கனும்னுதான் ஆசைபடறேன்.”

பிள்ளைகள் பெரியவர்களாய் ஆக ஆக பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் மன்னிக்கும் குணமும் அதிகம் தேவைப்படும். எனவே, உங்கள் பிள்ளைகள் மற்றவர்கள்மீது கரிசனை காட்டவும், தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளவும் பிஞ்சு பருவத்திலேயே பயிற்றுவியுங்கள். அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சொத்துகளிலேயே விலைமதிக்க முடியாத சொத்து இதுதான். வாழ்வில் நவரத்தினங்களாய் ஜொலிக்க அது அவர்களுக்கு கைகொடுக்கும்.

“நன்றியுள்ளவர்களாய் இருங்கள்”

‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். இன்று அநேகர், “சுயநலக்காரர்களாக” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 2) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். எனவே, நன்றி காட்ட உங்கள் பிஞ்சுக் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்க இதுவே சரியான சமயம். “நன்றியுள்ளவர்களாய் இருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—கொலோசெயர் 3:15.

உங்கள் பிள்ளைகள் சிறு வயது முதலே நல்ல பண்புகளையும் மற்றவர்கள்மீது அக்கறையையும் காட்ட கற்றுக்கொள்ள முடியும். எப்படி? பெற்றோர் என்ற ஆங்கில இதழுக்குப் பேட்டி அளித்தபோது டாக்டர் கைல் ப்ருயட் சொன்னார்: “நன்றி காட்டும் குணத்தை உங்கள் பிள்ளையின் மனதில் பதியம் போடுவதற்குச் சிறந்த வழி, வீட்டில் நீங்கள் தாராளமாக ஒருவருக்கொருவர் நன்றி சொல்ல பழகுவதே. குடும்பத்தில் மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன உதவிகளுக்கும், அவர்கள் காட்டுகிற கரிசனைக்கும் மனதார நன்றி சொல்லுங்கள். . . . இதை உங்கள் பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுங்கள்.”

பிரிட்டனில் வசிக்கும் ரிச்சர்ட் இதைச் செய்யத்தான் கடினமாக உழைக்கிறார்: “ஸ்கூல் டீச்சர்ஸ், தாத்தா-பாட்டின்னு எங்ககிட்ட யாரெல்லாம் ரொம்ப கனிவா நடந்துக்கிறாங்களோ அவங்களுக்கு நன்றி காட்ட நானும் என் மனைவியும் பிள்ளைங்களுக்குச் சொல்லிக்கொடுப்போம். . . . நாங்க யார் வீட்டுக்காவது விருந்துக்குப் போனா அவங்களுக்கு ஒரு ‘தாங்க்யூ கார்ட்’ வாங்கி அதுல எங்க பிள்ளைகளையும் ஏதாவது எழுத சொல்வோம், இல்லன்னா ஏதாவது வரைய சொல்வோம்.” மற்றவர்களிடம் அன்பையும் நன்றியையும் காட்டினால் பிள்ளைகள் நெடுநாளைய நட்பை, நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வார்கள்.

“தண்டியாமல் விடாதே”

எந்தவொரு செயலுக்கும் பின்விளைவு இருக்கும் என்பதைப் பிள்ளைகள் வளர வளர தெரிந்துகொள்வது அவசியம். வீட்டில் மட்டுமல்ல பள்ளியிலும் சமுதாயத்திலும் உள்ள அதிகாரத்திற்குப் பதில்சொல்ல வேண்டும் என்பதைப் பிள்ளைகள் சிறுவயதிலேயே தெரிந்துவைத்திருக்க வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம் என்பதைப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். (கலாத்தியர் 6:7) எப்படி?

“தண்டியாமல் விடாதே” என்று பைபிள் பெற்றோரிடம் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:13) பிள்ளையிடம், ‘நீ இந்த தப்பு பண்ணினா இந்த தண்டனைக் கொடுப்பேன்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். சொன்னபடி செய்யத் தயங்காதீர்கள். அர்ஜென்டினாவைச் சேர்ந்த நார்மா என்ற தாய் சொல்கிறார்: “சொன்ன தண்டனையைக் கொடுக்கனும். எக்காரணத்த கொண்டும் அதை மாத்தக் கூடாது. இல்லன்னா சூழ்நிலையை தங்களுடைய இஷ்டத்துக்கு மாத்திக்க பிள்ளைங்க முயற்சி செய்வாங்க.”

கீழ்ப்படியவில்லை என்றால் என்ன தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் முன்னதாகவே பிள்ளைக்கு சொல்லுங்கள். அதை அவர்கள் நன்கு புரிந்துகொண்டார்களா என்று பாருங்கள். அப்படிச் செய்தால், பிள்ளை தவறு செய்தபிறகு நீங்கள் அவர்களிடம் கத்தி கூப்பாடு போடுவதைத் தவிர்க்கலாம். அதுமட்டுமல்ல, என்ன கட்டுப்பாடுகளைப் பெற்றோர் வைத்திருக்கிறார்கள், அதை மீறினால் என்ன தண்டனை கொடுப்பார்கள், தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற மாட்டார்கள் என்பதைப் பிள்ளைகள் தெரிந்துவைத்திருந்தால் அதை மீறிப்போக கொஞ்சம் யோசிப்பார்கள்.

நீங்கள் கொடுக்கும் தண்டனையினால் பிள்ளைகள் திருந்த வேண்டுமா? அதை ஒருநாளும் கோபத்தோடு கொடுக்காதீர்கள். “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், . . . உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:31) நீங்கள் ஒருபோதும் பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது. அவர்கள் உடலிலோ மனதிலோ தழும்பு ஏற்படும் அளவிற்கு தண்டிக்கக் கூடாது.

பிள்ளை உங்களுடைய பொறுமையைச் சோதிக்கும்போது கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. நியுஜிலாந்தைச் சேர்ந்த பீட்டர் சொல்கிறார்: “இத சொல்றது ரொம்ப ஈஸி, செய்றது ரொம்ப கஷ்டம். ஆனா ஒன்னு, பிள்ளைங்க செய்ற தப்புக்குத்தான் பெற்றோர் தண்டனை கொடுக்குறாங்க, அவங்களுடைய கோபத்த கட்டுப்படுத்த முடியாததால இல்லன்றது பிள்ளைகளுக்குப் புரியுனும்.”

பிள்ளைகள் வாழ்நாள் முழுக்க பயனடையத்தான் பெற்றோர் தண்டனை கொடுக்கிறார்கள் என்பதை பீட்டரும் அவருடைய மனைவியும் தங்களுடைய பிள்ளைகளுக்குப் புரியவைக்கிறார்கள். “பிள்ளைங்க எவ்வளவு பெரிய தப்ப செய்திருந்தாலும் சரி, அவங்கள கூப்பிட்டு அவங்க செய்த தப்ப பத்திசொல்லாம, இனிமே அவங்க எப்படி நடந்துக்கனும்னு சொல்லுவோம்” என்கிறார் பீட்டர்.

‘நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்’

தம்முடைய மக்களுக்குக் கொடுக்கவிருந்த தண்டனையைக் குறித்து கடவுள் இப்படிச் சொன்னார்: “உங்களை நான் அளவுக்கு மீறி தண்டிக்க மாட்டேன்.” (எரேமியா 46:28, NW) உங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்கு ஏற்ற அளவு தண்டனையை, நியாயமான தண்டனையைத் தந்தால்தான் அது பலன்தரும். பிள்ளைகளும் செய்த தவறை உணர்வார்கள். ‘நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்’ என்று கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார்.—பிலிப்பியர் 4:5.

பிள்ளைகளுடைய சுயமரியாதையைத் தாக்கும் விதத்தில் நீங்கள் அவர்களைக் கண்டிக்கக் கூடாது. நீங்கள் நியாயமானவர்கள் என்பதற்கு இதுவும் அத்தாட்சி அளிக்கும். இத்தாலியில் வசிக்கும் சாண்டி என்ற அப்பா சொல்கிறார்: “நான் என் மகனையோ மகளையோ எப்பவும் மட்டம்தட்டி பேச மாட்டேன். அவங்க ஒரு தப்பு செய்தா, அத ஏன் செய்தாங்க, எதுக்கு செய்தாங்கன்னு தெரிஞ்சிக்க பார்ப்பேன். அப்புறம் அத சரிசெய்ய முயற்சி செய்வேன். மத்தவங்க முன்னாடி அவங்கள திட்டமாட்டேன், ஏன் என்னுடைய மத்த பிள்ளைங்க முன்னாடிக்கூட திட்டமாட்டேன். அதோட, தனியா இருக்கும்போதும் அவங்களோட குறைகளை விமர்சிக்க மாட்டேன், அத மத்தவங்க முன்னாடியும் தம்பட்டம் அடிக்க மாட்டேன்.”

நியாயமாக இருப்பதுதான் ஞானமானது என்று முன்பு பேசிய ரிச்சர்டும் ஒத்துக்கொள்கிறார்: “பிள்ளைங்க ஒவ்வொரு முறை தப்பு செய்யும் போதும் தண்டனையை அதிகப்படுத்திட்டே போகக் கூடாது. அதுமட்டும் இல்ல, நீங்க தண்டனை கொடுத்துட்ட பிறகு சும்மா சும்மா அத சொல்லி குத்திக்காட்டிட்டே இருக்கவும் கூடாது.”

பிள்ளைகளை வளர்ப்பது லேசுப்பட்ட விஷயம் இல்லை. அதற்குக் கடின உழைப்பும் சுயதியாகமும் தேவை. இப்படிச் செய்தால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். இதைத்தான் ரஷ்யாவைச் சேர்ந்த எலன்னாவும் சொல்கிறார்: “என் மகனோட நிறைய நேரம் செலவழிக்கனும்னு நான் ஒரு பகுதி-நேர வேலையைத் தேடிக்கிட்டேன். இதுக்கு என் பங்குல நிறைய முயற்சி தேவைப்பட்டது, சம்பளமும் குறைவாதான் கிடைக்குது. ஆனா என் பையனோட நேரம் செலவழிக்கிறதனால அவன் சந்தோஷமா இருக்கிறத என்னால பார்க்க முடியுது. அதோட, நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸா ஆகியிருக்கிறோம். இதெல்லாம் பார்த்தா, நான் செய்த தியாகம் ஒன்னுமே இல்லன்னு தோனுது.” (g11-E 10)

[பக்கம் 11-ன் படம்]

சிறு வயது முதலே மற்றவர்கள்மீது அக்கறை காட்ட பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியும்

[பக்கம் 12-ன் படம்]

பிள்ளைகளுடைய சுயமரியாதையைத் தாக்கும் விதத்தில் நீங்கள் அவர்களைக் கண்டிக்கக் கூடாது