Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் ஆக வேண்டும்?

உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் ஆக வேண்டும்?

பைபிளின் கருத்து

உங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் ஆக வேண்டும்?

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்?

1. அச்சு அசலாக உங்களைப்போல்.

2. நீங்கள் சொல்வதற்கெல்லாம் எதிராக நடக்கிற அடங்காப்பிடாரியாக.

3. ஞானமான தீர்மானங்களை எடுக்கிற பொறுப்புள்ள நபராக.

நிறையப் பெற்றோரின் பதில் 3. ஆனால், அவர்கள் வளர்ப்பதோ அச்சு அசலாக தங்களைப் போல். தங்களுடைய நெறிமுறைகளைப் பிள்ளைகள்மீது திணிப்பார்கள்; உதாரணமாக, ‘எதிர்காலத்தில் நீ இப்படித்தான் ஆக வேண்டும்’ எனத் தங்களுடைய ஆசையைப் பிள்ளைகள்மீது திணிப்பார்கள். விளைவு? பிள்ளைகளுக்கு இறக்கை முளைத்தவுடன் பெற்றோர் சொல்வதற்கு எதிராகச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வேடிக்கை என்னவென்றால், பெற்றோர் அச்சு அசலாக தங்களைப் போலவே வளர்த்தாலும் பிள்ளைகள் ஆவதென்னவோ அடங்காப்பிடாரிகளாக!

பொம்மலாட்ட பொம்மைகளா?

உங்கள் பிள்ளைகள் ஞானமான தீர்மானங்களை எடுக்கிற பொறுப்புள்ள பிள்ளைகளாய் ஆக வேண்டுமென நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அந்த இலட்சியத்தை எப்படி அடைவீர்கள்? பிள்ளைகளை முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் இந்த இலட்சியம் கண்டிப்பாக எட்டாக்கனிதான். ஏன் என்பதற்கு இரண்டு காரணங்களைப் பார்ப்போமா?

1. பைபிளுக்கு எதிரானது. சொந்தமாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடன்தான் யெகோவா தேவன் மனிதர்களைப் படைத்திருக்கிறார். நல்லதோ, கெட்டதோ அவரவர் வாழ்க்கைப் பாதையை அவரவரே தேர்ந்தெடுக்க மக்களை அனுமதித்திருக்கிறார். உதாரணமாக, காயீன் தன் தம்பி ஆபேலைத் தீர்த்துக்கட்ட கொலைவெறியோடு அலைந்தபோது, யெகோவா அவனை எச்சரித்தார்: “நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்.”—ஆதியாகமம் 4:7.

இங்கே, யெகோவா தேவன் காயீனுக்குத் தெளிவான ஆலோசனையைக் கொடுத்தார்; ஆனால், அதைப் பின்பற்றச் சொல்லி அவனைக் கட்டாயப்படுத்தவில்லை. கோபத்தை அடக்குவதும் அடக்காததும் காயீன் கையில்தான் இருந்தது. இதிலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவே தம்முடைய படைப்புகளை அளவுக்குமீறி கட்டுப்படுத்துவதில்லை என்றால், நீங்களும்கூட உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகளை அளவுக்குமீறி கட்டுப்படுத்தக் கூடாது. *

2. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று. ஒரு வியாபாரி தனது பொருளை வாங்கச் சொல்லி நச்சரிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். ‘வாங்கிக்கோங்க, வாங்கிக்கோங்க’ என அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்தால், எரிச்சலில் ‘வேண்டவே வேண்டாம்’ என்று சொல்வீர்கள். அந்தப் பொருளை எப்படியாவது உங்கள் தலையில் கட்டிவிட அவர் நினைத்தால் அது உங்களுக்குத் தேவையானதாக இருந்தாலும்கூட வாங்க மாட்டீர்கள். அங்கிருந்து இடத்தைக் காலிசெய்தால் போதும் என நினைப்பீர்கள்.

பெற்றோரே, உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள்மீது உங்களது ஒழுக்கநெறிகளை... நம்பிக்கைகளை... லட்சியங்களை... திணித்தீர்கள் என்றால், என்ன ஆகும்? இதையெல்லாம் அவன் ஏற்றுக்கொள்வான் என நினைக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை! சொல்லப்போனால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடக்கலாம். உங்கள் வாலிப பிள்ளை நீங்கள் சொல்லிக்கொடுக்கும் நெறிமுறைகளை வெறுக்க ஆரம்பிக்கலாம். பெரும்பாலும், பெற்றோர் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தும்போது பிள்ளைகள் அடங்காதவர்களாக ஆகிறார்கள். அப்படியானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிள்ளை சிறுவயதில் இருந்தபோது நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதைச் செய்ய வைத்திருப்பீர்கள்; ஆனால், இப்போது அவன் வளர்ந்துவிட்டதால், ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ எனச் சட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக சரியானதை செய்வதுதான் ஞானமானது என அவனுக்குப் புரிய வையுங்கள். உதாரணமாக, நீங்கள் யெகோவாவை வணங்கும் நபராக இருந்தால், கடவுள் தந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது இப்போது கஷ்டமாகத் தெரிந்தாலும்கூட வாழ்நாள் முழுக்க அவன் சந்தோஷமாக வாழ அது கைகொடுக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.—ஏசாயா 48:17, 18.

முன்னுதாரணமாக இருங்கள். உங்கள் பிள்ளை எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். (1 கொரிந்தியர் 11:1) நீங்கள் எந்தெந்த நெறிமுறைகளின்படி வாழ விரும்புகிறீர்கள் என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்துங்கள். (நீதிமொழிகள் 4:11) கடவுளையும் அவரது ஒழுக்கநெறிகளையும் உங்கள் மகன் நேசிக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் அவனுடன் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, ஞானமான முடிவுகளை எடுப்பான்.—சங்கீதம் 119:97; பிலிப்பியர் 2:12.

திறமைகளை விதையுங்கள்

இந்தப் பத்திரிகையின் 2-ஆம் பக்கத்தில் பார்த்தபடி, உங்கள் பிள்ளை வேலை தேடியோ, மணமாகியோ ‘தகப்பனையும் தாயையும் விட்டு’ பிரிகிற அந்த நாள் வரும்; அந்த சமயத்தில், நாட்கள் இவ்வளவு சீக்கிரம் பறந்துவிட்டதே என நீங்கள் நினைப்பீர்கள். (ஆதியாகமம் 2:24) எனவே, உங்கள் பிள்ளை மற்றவர்களை எதிர்பார்க்காமல் தானே எல்லாவற்றையும் செய்துகொள்வதற்கு இப்போதே கற்றுத்தர நினைப்பீர்கள். அப்படியானால், அவன் உங்கள் கூடவே இருக்கும் இந்தச் சமயத்தில் என்னென்ன திறமைகளைக் கற்றுத்தரலாம்? கீழே உள்ளவற்றைக் கவனிப்போம்.

வீட்டு வேலைகளில். அவனுக்குச் சமைக்கத் தெரியுமா? துணிகளைத் துவைத்து இஸ்திரி (iron) போடத் தெரியுமா? அறையைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளத் தெரியுமா? வண்டியைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் தெரியுமா? உங்கள் மகனோ, மகளோ இப்படிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொண்டால், பிற்காலத்தில் தங்கள் வீட்டை நன்றாகப் பராமரிப்பார்கள். “என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்தக் கைகள்தான் வேலை செய்தன” என்று அப்போஸ்தலன் பவுல் பைபிளில் எழுதினார்.—அப்போஸ்தலர் 20:34.

மற்றவர்களுடன் பழகுவதில். (யாக்கோபு 3:17) உங்கள் பிள்ளை மற்றவர்களுடன் நன்றாகப் பழகுகிறானா? சண்டை சச்சரவு வந்தால், அமைதியாகவும் பொறுமையாகவும் அதைத் தீர்த்துக்கொள்கிறானா? மற்றவர்களை மரியாதையோடு நடத்தவும், பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்கவும் அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா? (எபேசியர் 4:29, 31, 32) “எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 2:17.

பண விஷயத்தில். (லூக்கா 14:28) ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள... வரவுக்கேற்ற செலவு செய்ய... கடனாளியாகாமல் இருக்க... அவனுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்களா? அவசியமான பொருட்களை வாங்குவதற்காகப் பணத்தைச் சேமிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? பார்த்ததையெல்லாம் வாங்காமல் இருக்க... உள்ளதை வைத்துத் திருப்தியாக வாழ... அவனைப் பழக்கியிருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 22:7) “நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்” என பவுல் எழுதினார்.—1 தீமோத்தேயு 6:8.

நல்லொழுக்கமாக வாழக் கற்றுக்கொண்ட, நடைமுறையான திறமைகளை வளர்த்துக்கொண்ட இளைஞர்கள்தான் ‘அடுத்தப் பருவத்தில்’ அடியெடுத்து வைக்கத் தயாராகிவிட்டவர்கள். அப்படியானால் பெற்றோரே, பிள்ளை வளர்ப்பில் உங்கள் லட்சியத்தை எட்டிவிட்டீர்களா?—நீதிமொழிகள் 23:24. (g11-E 10)

[அடிக்குறிப்பு]

உங்கள் பதில்?

● பெற்றோராக உங்கள் லட்சியம் என்ன?—எபிரெயர் 5:14.

● வாலிப வயதிலிருக்கும் உங்கள் பிள்ளைகள் பெரியவர்களாகும்போது எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்?—யோசுவா 24:15.

[பக்கம் 25-ன் படங்கள்]

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாய் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்?

அச்சு அசல் . . .

அடங்காப்பிடாரி . . .

பொறுப்புள்ள நபர்