Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 3

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 3

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 3

பிள்ளைகளுக்கு டீன்-ஏஜ் பருவம் வந்துவிட்டால்... பெற்றோருக்கு நிறையப் பிரச்சினைகள் வரிசை கட்டிவிடுகிறது. இந்தப் பருவம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளுக்கும் குழப்பமானதுதான். இதை வெற்றிகரமாகக் கடந்துசெல்ல உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்? உலகெங்கும் உள்ள சில பெற்றோர் கொடுக்கும் டிப்ஸைக் கேட்போமா...

மாற்றங்கள்

“என் பையன் சின்ன வயசுல இருந்தப்ப நான் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காம செய்வான். ஆனா, டீன்-ஏஜ் வயசுல என் பேச்சுக்கு மரியாதையே கொடுக்க மாட்டான். நான் சொல்றதுக்கெல்லாம் எதிர்த்துப் பேசுவான். நான் சொன்ன விதம் சரியில்லன்னு விதண்டாவாதம் பண்ணுவான்.”—ஃபிராங்க், கனடா.

“என் பையன் முன்னாடி எல்லாம் வாய மூடவே மாட்டான், பேசிகிட்டே இருப்பான். இப்பெல்லாம் நான்தான் கேள்வி மேல கேள்வி கேட்க வேண்டியிருக்கு. அதுவும் ஒரு கேள்விக்கு அவன் வாயில இருந்து பதில் வர வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.”—பிரான்சஸ், ஆஸ்திரேலியா.

“பொறுமைதான் ரொம்ப முக்கியம். சில நேரத்துல பிள்ளங்ககிட்ட அப்படியே எரிஞ்சு விழனும்போல இருக்கும், ஆனா அமைதியா, நிதானமா பேசுறதுதான் எப்பவுமே நல்லது.” —ஃபலீஷா, ஐக்கிய மாகாணம்.

பேச்சுத்தொடர்பு

“சில நேரத்துல என் மகள் தன் மேல தப்பே இல்லன்னு சாதிப்பா. நான் ஏதோ அவள சும்மா சும்மா குத்தம் சொல்றதா நினைப்பா. அதனால, அவமேல எனக்கு அன்பு இருக்குனு அப்பப்ப சொல்லிகிட்டே இருப்பேன். ‘நீ நல்லா இருக்கனும்னுதான் இதெல்லாம் சொல்றேன்னு’ அவகிட்ட சொல்லுவேன்.”—லீசா, ஐக்கிய மாகாணம்.

“சின்ன வயசுல என் பசங்க என்கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்க, எல்லாத்தையும் ஒன்னுவிடாம ஒப்பிச்சிடுவாங்க. அதனால, அவங்க மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. இப்ப அவங்கள நல்லா புரிஞ்சிக்கவும், அவங்களை ஒரு ஆளா மதிக்கிறேன்னு காட்டவும் முயற்சி எடுக்கிறேன். அவங்க மனசுல இருக்கறத வெளில கொண்டு வர்றதுக்கு அதுதான் ஒரே வழி.”—நன்ஹீ, கொரியா.

“டீன்-ஏஜ் பசங்ககிட்ட ஒரு விஷயத்தை செய்யாதன்னு சொன்னா மட்டும் போதாது, ஏன், எதுக்கு-ன்னு காரணங்களையும் சொல்லனும். அவங்க மனசை தொடற மாதிரி பேசனும். அவங்க மனசுல இருக்கறத வெளில கொண்டு வரனும்னா, அவங்க என்ன சொன்னாலும் நாம பொறுமையா கேக்கனும். சில சமயம் நமக்குப் பிடிக்காத எதையாவது சொன்னாகூட காதுகொடுத்து கேக்கனும்.”—டாலீலா, பிரேசில்.

“என் மகள் ஏதாவது தப்பு பண்ணிட்டா, மத்தவங்க முன்னாடி கண்டிக்க மாட்டேன். தனியா இருக்கும்போதுதான் சொல்வேன்.”—எட்னா, நைஜீரியா.

“சில நேரத்துல நான் என் பையன்கிட்ட பேசிகிட்டே வேலையும் செஞ்சிட்டிருப்பேன். அவன் பேசறத ஒழுங்கா கவனிக்க மாட்டேன். ஒருவேளை, அதனாலதான் அவன் என்கிட்ட அதிகமா பேசறதில்லன்னு நினைக்கிறேன். இனிமே, என் பையனும் நானும் பேசும்போதெல்லாம் நல்லா கவனிச்சு கேட்க நான் முயற்சி பண்ணனும், அப்பதான் அவன் மனசுல உள்ளத தயங்காம சொல்வான்.” —மிர்யம், மெக்சிகோ.

சுதந்திரம்

“பிள்ளைங்களுக்கு சுதந்திரம் கொடுத்தா கெட்டுப் போய்டுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கும். ஆனா, இதனால அப்பப்ப பிரச்சினை வரும். இதை பத்தி அவங்ககிட்ட வெளிப்படையா பேசுவேன். இந்த விஷயத்துல நான் ஏன் பயப்படுறேன்னு அவங்ககிட்ட தெளிவா சொல்வேன், அவங்களுக்கு ஏன் நிறைய சுதந்திரம் வேணும்னு அவங்க சொல்வாங்க. அவங்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கு, அதேசமயம் எந்தெந்த விஷயங்கள்ல கட்டுப்பாடுகளும் இருக்குன்னு எங்களுக்குள்ள ஒரு முடிவுக்கு வருவோம்.”—எட்வன், கானா.

“என் பையன் ஒரு ‘பைக்’ வேணும்னு கேட்டான். எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அதனால, அவன நல்லா திட்டினேன். அத வாங்குறதுனால என்னென்ன பிரச்சினை வரும்னு வரிசையா அடுக்கிட்டே போனேன், அவன ஒரு வார்த்தை கூட பேசவிடல. இதனால அவனுக்கு கோபம் வந்து, அத வாங்கியே தீரனும்னு ஒத்த கால்ல நின்னான்! அதனால அந்தப் பிரச்சினைய வேற விதமா அணுகினேன். பைக் வாங்குறதுல என்ன ஆபத்து... எவ்ளோ செலவாகும்னு யோசிச்சு பார்க்க சொன்னேன். ‘லைசன்ஸ்’ ‘இன்ஷ்யூரன்ஸ்’ எல்லாம் எப்படி வாங்கனும், வருஷா வருஷம் அதுக்காக என்னன்ன செய்யனும்னு தெரிஞ்சுக்க சொன்னேன். சபையில இருக்கிற முதிர்ச்சி உள்ளவங்ககிட்ட ஆலோசனை கேட்க சொன்னேன். அவன்கிட்ட ரொம்ப கடுமையா நடந்துக்கறதுக்கு பதிலா அவனோட விருப்பங்கள வெளிப்படையா சொல்ல சொல்றதுதான் ரொம்ப நல்லதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்படி செஞ்சதுனால அவன் நல்ல முடிவு எடுக்க உதவ முடிஞ்சது.—ஹேயங், கொரியா.

“பிள்ளைங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் வச்சிருந்தோம், அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமா சுதந்திரமும் கொடுத்தோம். கட்டுப்பாடுகளை எந்தளவுக்கு மீறாமல் இருந்தாங்களோ அந்தளவுக்கு இன்னும் சுதந்திரம் கொடுத்தோம். ‘உங்களுக்கு இன்னும் சுதந்திரம் கொடுக்கனும்னுதான் எங்களுக்கு ஆசை, ஆனா அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்லுவோம். கட்டுப்பாடுகள அவங்க மீறிட்டாங்கன்னா கண்டிப்பா தண்டனையும் கொடுப்போம்.”—டாராட்டே, பிரான்சு.

“நான் வைக்கிற வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கனுன்றதுல கண்டிப்பா இருப்பேன். அதேசமயம், சொல்றத கேட்டு நடந்தாங்கன்னா, அவங்களுக்கு சுதந்திரமும் கொடுப்பேன். உதாரணமா, சில நேரத்துல அவங்க கொஞ்சம் ‘லேட்டா’ வரதுக்கு ‘ஓகே’ சொல்வேன். ஆனா எங்கிட்ட கேட்காமலேயே ‘லேட்டா’ வந்தாங்கன்னா, அதுவும் இரண்டு மூனு தடவ அப்படி பண்ணாங்கன்னா கண்டிப்பா தண்டனை கொடுப்பேன்.”—ஈல்கன், கொரியா.

“ஒருத்தர் ஆபீஸ்ல எந்தளவு கீழ்ப்படிஞ்சு பொறுப்பா நடந்துக்குறாரோ, அந்தளவு முதலாளிகிட்ட சலுகை கிடைக்கும். அதேமாதிரி எங்க பையன் எந்தளவு கீழ்ப்படிஞ்சு பொறுப்பா நடந்துக்குறானோ அந்தளவு அவனுக்கு படிப்படியா சுதந்திரம் கொடுப்போம். ஆபீஸ்ல பொறுப்பா நடந்துக்கலனா அதோட பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும், அதேமாதிரிதான் எங்க பையனுக்கு நாங்க கொடுத்திருக்கிற சுதந்திரத்தை அவன் சரியா பயன்படுத்தலனா ஏற்கெனவே கொடுத்த சுதந்திரத்தை குறைச்சுடுவோம்னு அவனுக்குத் தெரியும்.”—ரமான், மெக்சிகோ. (g11-E 10)

[பக்கம் 22-ன் சிறுகுறிப்பு]

“எப்படி வாழ வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள், வாழ்நாள் முழுவதும் அவர்கள் அதை மறக்க மாட்டார்கள்.”—நீதிமொழிகள் 22:6, குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்

[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]

டைரி

“டீன்-ஏஜ் பிள்ளைங்கள வளர்க்கறது ஒரு ஆனந்தமான அனுபவம்”

ஜோசப்: என்னோட பெரிய பொண்ணுங்க இரண்டு பேரும் டீன்-ஏஜ்ல இருக்காங்க. அவங்க சொல்றதை நல்லா கவனிச்சு கேட்கறதும், அவங்களோட கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்குறதும் முக்கியம்னு எனக்கு நல்லா புரியுது. என்மேல தப்பு இருந்தா அத உடனே ஒத்துக்குவேன், அவங்ககிட்ட பேசும்போது மரியாதையோட பேசுவேன். இதனால எந்த விஷயமா இருந்தாலும் பிள்ளைங்க என்கிட்ட தயங்காம பேசறாங்க. சுருக்கமா சொன்னா, டீன்-ஏஜ் பிள்ளைங்கள வளர்க்கறது ஒரு ஆனந்தமான அனுபவம். கடவுள் தந்த பைபிள் இந்த விஷயத்துல ஒரு நல்ல வழிகாட்டியா இருக்குது. அதுக்காக நாங்க அவருக்கு ரொம்ப நன்றி சொல்றோம்.

லிசா: எங்க பெரிய பொண்ணு டீன்-ஏஜரா ஆனபிறகு, அவளுக்கு இன்னும் நிறைய கவனம் கொடுக்க வேண்டியிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப நேரம் அவகூட உட்கார்ந்து பேசுவேன், அவ பேசறத கேட்பேன், அவளோட பயத்தைப் போக்கி தைரியம் சொல்வேன். எங்க பிள்ளைங்க மனசுல என்ன இருந்தாலும் அத தாராளமா எங்ககிட்ட சொல்லலாம்னு நானும் என் கணவரும் அவங்ககிட்ட சொல்லியிருக்கோம். அவங்களோட உணர்ச்சிகளுக்கு நாங்க மதிப்பு கொடுப்போம்னும் சொல்லியிருக்கோம். யாக்கோபு 1:19-ல சொல்லியிருக்கிற மாதிரி “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க” முயற்சி பண்றேன்.

விக்டோரியா: என் அம்மாதான் எனக்கு ‘பெஸ்ட் ஃபிரென்ட்.’ எங்க அம்மா மாதிரி இனிமையா, கரிசனையா நடந்துக்குற யாரையும் நான் பார்த்ததே இல்ல. எல்லாரையும் ரொம்ப அன்பா, அக்கறையா கவனிச்சுக்குவாங்க. எங்க அம்மாவுக்கு நிகர் எங்க அம்மாதான்.

ஒலிவியா: எங்க அப்பா எங்கள கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவாரு. அவருக்குப் பரந்த மனசு. மத்தவங்களுக்கு உதவனும்னா, எங்களுக்கே இல்லன்னாலும் குடுத்துடுவாரு. எப்ப சீரியஸா இருக்கனும், எப்ப ஜோக் அடிக்கனும்னு அவருக்கு நல்லா தெரியும். அப்பான்னா அவர மாதிரிதான் இருக்கனும். எனக்கு அவரு அப்பாவா கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்!

“எங்களுக்கு சலிப்பு தட்டினதே இல்லை!”

சன்னி: எங்க பொண்ணுங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நாங்க எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து அதை பத்தி பேசுவோம். எங்க மனசுல இருக்கற எதையும் மறைக்காம வெளிப்படையா பேசுவோம். எந்த முடிவானாலும், பைபிள் நெறிமுறைகளை மனசுல வைச்சுதான் எடுப்போம். எங்க பிள்ளைங்க ஆன்மீக முதிர்ச்சி உள்ளவங்களோட பழகறதுக்கு நானும் இனெஸும் உதவி செய்வோம். எங்க நண்பர்கள் எல்லாம் அவங்களுக்கும் நண்பர்கள், அவங்க நண்பர்கள் எல்லாம் எங்களுக்கும் நண்பர்கள்.

இனெஸ்: நாங்க எப்பவும் ஏதாவது செய்திட்டே இருப்போம். அதுவும் குடும்பமா செய்வோம். நாங்க யெகோவாவின் சாட்சிகள். அதனால ஊழியத்துக்கு போறது... தனியா பைபிள் படிக்கிறது... குடும்பமா பைபிள் படிக்கிறது-ன்னு பிஸியா இருப்போம். அதோட ராஜ்ய மன்றம் கட்டுறது, பேரழிவு நிவாரண வேலை மாதிரி வாலண்டியர் சேவையும் செய்வோம். அதேசமயத்துல அப்பப்ப ஜாலியாவும் பொழுதை போக்குவோம். எங்களுக்கு சலிப்பு தட்டினதே இல்லை!

கெல்சி: நாங்க பேசும்போது எங்க அப்பா பொறுமையா கேட்பாரு. ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி எங்க எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்பாரு. எனக்கு ஏதாவது பிரச்சினைன்னா எங்க அம்மாகிட்ட மனசுவிட்டு பேசுவேன், நான் சொல்றதை எல்லாம் அவங்க நிதானமா கேட்பாங்க.

சமன்தா: எங்க அம்மா என்மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க, நான்னா அவங்களுக்கு உயிருன்னு எனக்குத் தெரியும். இயல்பாவே அவங்க என்கிட்ட அப்படித்தான் நடந்துக்குவாங்க. நான் எப்ப பேசினாலும் கவனமா கேட்பாங்க, என்மேல ரொம்ப அக்கறை வச்சிருக்காங்க. எங்களுக்குள்ள இருக்குற ‘ஃபிரெண்ட்ஷிப்ப’ எதுக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

[படங்கள்]

கமேரா குடும்பம்: ஜோசப், லிசா, விக்டோரியா, ஒலிவியா, இசபெல்லா

சபதா குடும்பம்: கெல்சி, இனஸ், சன்னி, சமன்தா

[பக்கம் 22-ன் படம்]

பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஓரளவு சுதந்திரம் தருவதோடு, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும்