Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கார் விபத்துகளைத் தவிர்க்க...

கார் விபத்துகளைத் தவிர்க்க...

கார் விபத்துகளைத் தவிர்க்க...

டயர்களின் ‘க்றீச்’ என்ற சத்தம்... ‘டமார்’ என்று மோதி நொறுங்கும் ஓசை... கண்ணாடி துகள்கள் தூள்தூளாகச் சிதறும் ஒலி... ‘அய்யோ, அம்மா’ என்ற அலறல்... கார் விபத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கும். உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் விபத்தினால் சுமார் 12 லட்சம்பேர் இறந்து போவதாகவும், ஐந்து கோடி பேர் காயம் அடைவதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை செய்கிறது.

இருந்தபோதிலும், பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தால்... சமயோசிதமாகச் செயல்பட்டால்... அநேக விபத்துகளைத் தவிர்க்க முடியும். எப்படி என்று பார்ப்போமா...

ஸ்பீட் லிமிட், சீட் பெல்ட், செல்போன்

சில சாலைகளில் ஸ்பீட் லிமிட், அதாவது வேக வரம்பு, மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால், அந்த வரம்பை மீறி இன்னும் அதிக வேகமாக ஓட்டுவதால் அப்படியொன்றும் சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட முடியாது. 50 கிலோமீட்டர் தூரமுள்ள இடத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் போவதற்கும், 100 கிலோமீட்டர் வேகத்தில் போவதற்கும், மிஞ்சிமிஞ்சிப் போனால் 8 நிமிடம்தான் வித்தியாசம். அப்படி நமக்குக் கிடைக்கும் ஒருசில நிமிடங்கள் முக்கியமா அல்லது நம் உயிர் முக்கியமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

சீட் பெல்ட் போடுவது நம் உயிருக்குத்தான் பாதுகாப்பு. ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஓர் அரசு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு என்ன சொல்கிறது தெரியுமா? 2005 முதல் 2009 வரை அமெரிக்காவில் மட்டுமே 72,000-க்கும் அதிகமானோர் சீட் பெல்ட் போட்டதால் உயிர் பிழைத்தார்களாம். ஆனால், ‘அதுதான் காற்றுப் பை (air bag) இருக்கிறதே, சீட் பெல்ட் வேறு போட வேண்டுமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். காற்றுப் பையோடு சேர்ந்து சீட் பெல்ட்டும் இருந்தால்தான் பாதுகாப்பு. சீட் பெல்ட் போடவில்லை என்றால், காற்றுப் பை இருந்தாலும் அதனால் அந்தளவு பிரயோஜனம் இருக்காது. ஏன், அது ஆபத்தில்கூட கொண்டுபோய்விடலாம். எனவே, எப்போதும் காரில் உட்கார்ந்தவுடனே சீட் பெல்ட் போட மறக்காதீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களுடன் காரில் வருபவர்களையும் போடச் சொல்லுங்கள். இன்னொரு எச்சரிக்கை: கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவதோ மெசேஜ் படிப்பதோ கூடவே கூடாது.

சாலையும் கார் பராமரிப்பும்

சாலைகள் ஈரமாகவோ, புழுதி படிந்தோ, தார் போடாமலோ இருந்தால் டயர்களில் பிடிமானம் (grip) குறைந்துவிடும். அதுபோன்ற சாலைகளில் மெதுவாக ஓட்ட வேண்டும். அப்போதுதான் பிரேக் போடும்போது டயர்கள் வழுக்கிவிடாமல் இருக்கும். பனியால் மூடப்பட்ட சாலைகளில்தான் நீங்கள் எப்போதும் வண்டி ஓட்டுகிறீர்கள் என்றால் பனிக்காலத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட டயர்களைப் பயன்படுத்துவது நல்லது. இந்த டயர்களில் டிரெட் (tread) ஆழமாக இருப்பதால் நல்ல பிடிமானம் கிடைக்கும்.

சாலை சந்திப்புகள்தான் மிக ஆபத்தான இடங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் பாதுகாப்பாக ஓட்டுவதைப் பற்றி ஒரு நிபுணர் கருத்து சொல்கிறார்: சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தவுடனேயே அவசரப்பட்டுப் போகாதீர்கள், கொஞ்சம் காத்திருங்கள். ஏனென்றால், அந்தப் பக்கம் சிவப்பு விளக்கு விழுந்திருந்தும் அதைக் கவனிக்காமல் வருகிற காரின்மீது மோதிவிட வாய்ப்பிருக்கிறது.

காரை நன்கு பராமரிப்பதும் விபத்துகளைத் தவிர்க்க உதவும். கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?! இப்படிப்பட்ட கோளாறுகளைத் தவிர்ப்பதற்காகச் சிலர் தங்களுடைய காரை திறமையான மெக்கானிக்கிடம் கொடுத்து தவறாமல் பராமரித்துக்கொள்கிறார்கள். சிலர் தாங்களாகவே சில பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். எப்படிச் செய்தாலும் சரி, காரை நன்றாக வைத்துக்கொள்ள பழுதுபார்ப்பதும் பராமரிப்பதும் முக்கியம்.

குடித்துவிட்டு ஓட்டினால்...

காரை மிக கவனமாக ஓட்டுபவர் என்று பெயரெடுத்தவர்கூட, குடித்துவிட்டு ஓட்டினால் ஆபத்தை விலைக்கு வாங்குகிறார் என்றே சொல்ல வேண்டும். 2008-ல் அமெரிக்காவில் மட்டுமே 37,000-க்கும் அதிகமானோர் வாகன விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்ததற்குக் காரணம் குடித்துவிட்டு ஓட்டிய டிரைவர்கள்தான். கொஞ்சம் குடிப்பதும்கூட உங்கள் கார் ஓட்டும் திறமையைப் பாதிக்கும். அதனால்தான் அநேகர் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால், கொஞ்சம்கூட குடிக்கக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறாமல் இருப்பது, சீட் பெல்ட் போட்டுக்கொள்வது, காரை நன்றாகப் பராமரிப்பது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்பது போன்றவை உங்கள் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாக்கும். இந்த ஆலோசனைகள் எல்லாம் விபத்துகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவும். ஆனால், அவற்றை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே. (g11-E 07)

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

தூக்கத்தை ‘ஓட்டிவிட்டு’ வண்டியை ஓட்டுங்கள்

“தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுவதும் குடித்துவிட்டு ஓட்டுவதும் ஒன்றுதான் என்பதை மக்கள் மனதில் வைக்க வேண்டும்.” யு.எஸ். நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷனைச் சேர்ந்த அதிகாரி சொன்ன இந்தக் கருத்து, தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுவதால் வரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அப்படியென்றால், எந்தெந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் வண்டி ஓட்டினால் ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்பதைக் கவனிக்கலாமா? a

தெளிவாகப் பார்க்க முடியாமல் இருப்பது, அடிக்கடி கண்களைத் திறந்து மூடுவது அல்லது தூக்கம் சொக்குவது

தூக்கக் கலக்கத்தால் தலை சாய்வது

அடிக்கடி கொட்டாவி விடுவது

எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே புரியாமல் இருப்பது

வழிமாறிப் போய்விடுவது அல்லது ‘சைன் போர்டுகளை’ கவனிக்காமல் போய்விடுவது

சாலையில் தடம் மாறுவது, வேறொரு வாகனத்தை ஒட்டிச் செல்வது, சாலையை விட்டு விலகி ஓரமாகப் போவது

இப்படி ஏதாவது அறிகுறிகள் இருந்தால் வேறு யாரையாவது ஓட்டச் சொல்லுங்கள், அல்லது ஓரமாக நிறுத்திவிட்டு குட்டித் தூக்கம் போடுங்கள். தாமதமாகப் போனாலும் பரவாயில்லை, உங்கள் உயிரும் உங்களோடு பயணம் செய்பவர்களின் உயிரும்தான் முக்கியம்.

[அடிக்குறிப்பு]

a நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.