Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தை கேன்சரால் அவதிப்படும்போது...

குழந்தை கேன்சரால் அவதிப்படும்போது...

குழந்தை கேன்சரால் அவதிப்படும்போது...

“நான் அப்படியே உடைஞ்சு போயிட்டேன். என்னால அந்த அதிர்ச்சிய தாங்கிக்கவே முடியல. தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது. என் மகள் ஏற்கெனவே செத்துபோயிட்ட மாதிரி துடிச்சேன், துக்கப்பட்டேன்.”—ஜெயில்டன் தன் மகளுக்கு கேன்சர் இருப்பதை அறிந்தபோது சொன்ன வார்த்தைகள்தான் இவை.

உங்கள் குழந்தைக்கு கேன்சர் இருப்பது தெரியவரும்போது உங்கள் மனம் சுக்குநூறாக உடைந்துவிடும். அதை உங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. உலகம் முழுவதும் எவ்வளவு பிள்ளைகள் கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள்? இன்டர்நேஷனல் யூனியன் அகைன்ஸ்ட் கேன்சர் என்ற அமைப்பின் கருத்துப்படி, “பெரியவர்களோடு ஒப்பிடும்போது சொற்ப சதவீத குழந்தைகளே கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள். என்றாலும், ஒவ்வொரு வருடமும் 1,60,000-க்கும் அதிகமான குழந்தைகள் கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் நாடுகளில், விபத்தினால் மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக கேன்சரால் மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.” உதாரணத்திற்கு, பிரேசிலில் “ஒவ்வொரு வருடமும் 9,000 குழந்தைகளுக்கு கேன்சர் வருவதாக ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது” என்று தேசிய புற்றுநோய் மையம் குறிப்பிடுகிறது.

பிள்ளைக்கு கேன்சர் என்று தெரியும்போது “குடும்பத்தில் உள்ள அனைவருமே மரண அடி வாங்கியதுபோல் உணர்கிறார்கள்” என அட் த பெட்சைட்—த மதர் அன்ட் சைல்ட் கேன்சர் என்ற புத்தகம் சொல்கிறது. பொதுவாக, இதற்கு அறுவை சிகிச்சையோடு கீமோதெரபியோ ரேடியேஷனோ அல்லது இரண்டையுமோ கொடுக்கிறார்கள். அதன் பக்கவிளைவுகளும் வாட்டியெடுக்கிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பெற்றோர் தவிக்கிறார்கள். அதனால் பயம், கவலை, குற்றவுணர்ச்சி, கோபம், இயலாமை போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற வேதனைமிக்க சூழ்நிலையைப் பெற்றோர் எப்படிச் சமாளிக்கலாம்?

மிக முக்கியமாக, அக்கறையான மருத்துவர்கள் அதுபோன்ற பெற்றோருக்கு ஆறுதலாக இருக்க முடியும். “மருத்துவர்கள் சொல்லும் விஷயங்கள் அதிகம் கவலைப்படாமல் இருக்க உதவலாம். அதோடு, பக்கவிளைவுகளை முன்கூட்டியே விளக்கினால் அவர்களுடைய மனதைப் பக்குவப்படுத்தலாம். அந்த வேதனையை ஓரளவு தாங்கிக்கொள்ள இவையெல்லாம் பெற்றோருக்குக் கைகொடுக்கும்” என்று ஒரு மருத்துவர் சொல்கிறார்; இவர் நியு யார்க்கில் பல கேன்சர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை உடைய பெற்றோரும் அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கலாம். அதனால்தான் அப்படிப் பாதிக்கப்பட்ட ஐந்து பெற்றோரை விழித்தெழு! பேட்டி கண்டது. இதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:

ஜெயில்டன் மற்றும் நேயா “எங்க மகளுக்கு ரெண்டரை வயசு இருக்கும்போது, லிம்ஃபோபிளாஸ்டிக் லூக்கேமியா என்ற கேன்சர் இருந்தது தெரியவந்தது.” (இது இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் கேன்சர்.)

எவ்வளவு காலம் சிகிச்சை கொடுத்தாங்க?

“அவளுக்கு கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் கீமோதெரபி கொடுத்தாங்க.”

அதனால ஏற்பட்ட பக்கவிளைவுகள் என்ன?

“எப்போ பாத்தாலும் வாந்தி எடுத்துகிட்டே இருப்பா. தலைமுடி எல்லாம் கொட்டி போச்சு. பல்லுல இருக்குற இனாமல் எல்லாம் கருப்பா மாறிடிச்சி. மூனு தடவ நிமோனியா வந்துச்சு.”

அதைப் பாக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

“ஆரம்பத்துல நாங்க ரொம்ப பயந்துட்டோம். அவ செத்துடுவான்னு நினைச்சோம். ஆனா, அவ கொஞ்சம் கொஞ்சமா தேறுனத பார்த்தப்போ நல்லா ஆயிடுவான்ற நம்பிக்கை வந்துச்சு. இப்ப அவளுக்கு ஒன்பது வயசு ஆகப்போகுது.”

அந்த அதிர்ச்சியை உங்களால எப்படிச் சமாளிக்க முடிஞ்சுது?

“யெகோவா தேவன் மேல நாங்க வச்சிருந்த நம்பிக்கைதான் எங்கள தாங்கி பிடிச்சுது. 2 கொரிந்தியர் 1:3, 4-ல பைபிள் சொல்ற மாதிரி, ‘எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதலா’ இருந்தார். எங்களோட கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் எங்கள ஆலமரமா தாங்குனாங்க. எங்களுக்கு அப்பப்போ கடிதம் எழுதினாங்க, போன் பண்ணாங்க, எங்களுக்காக ஜெபம் செஞ்சாங்க. பண உதவிகூட செஞ்சாங்க. என் மகள் வேற ஊர்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியிருந்தது; அப்போ அங்கிருந்த யெகோவாவின் சாட்சிங்க நாங்க தங்குறதுக்கு எல்லா வசதியும் செஞ்சுகொடுத்தாங்க. அதுமட்டும் இல்ல, ஒவ்வொருத்தரா மாத்தி மாத்தி வந்து எங்கள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போனாங்க. அவங்க செஞ்சதுக்கெல்லாம் நாங்க எவ்வளவு நன்றியா இருக்குறோம்ன்னு வெறும் வார்த்தையால சொல்ல முடியாது.”

லூயிஸ் மற்றும் ஃபாபியானா “1992-ல எங்க பன்னிரெண்டு வயசு பொண்ணுக்கு கருப்பை கேன்சர் இருந்தது தெரியவந்தது. அது ரொம்ப வேகமா பரவுற ஒரு அரிய வகை கேன்சர். அப்போ அவளுக்கு 11 வயசுதான்.”

அத கேட்டப்ப உங்களுக்கு எப்படி இருந்தது?

“ஆரம்பத்துல நாங்க நம்பவே இல்ல. எங்களால ஜீரணிக்கவே முடியல.”

என்ன சிகிச்சை கொடுத்தாங்க?

“அறுவை சிகிச்சையோட சேர்த்து கீமோதெரபியும் கொடுத்தாங்க. அந்த சமயத்துல அவ பட்ட வேதனைய பாக்க எங்களுக்கு மனசுலயும் தெம்பில்ல, உடம்புலயும் தெம்பில்ல. ரெண்டு தடவ அவளுக்கு நிமோனியா வந்தது. இரண்டாவது தடவ வந்தப்ப அவ சாகற அளவுக்கு போயிட்டா. அதோட அவ உடம்புல ‘பிளேட்லெட்டும்’ ரொம்ப கம்மியா இருந்தது. அதனால மூக்குல இருந்தும் தோல்ல இருந்தும் அப்பப்ப இரத்தம் வரும். மருந்து சாப்பிட்டதால இந்த பிரச்சினை கொஞ்சம் குறைஞ்சுது.”

எவ்வளவு நாள் சிகிச்சை கொடுத்தாங்க?

“அந்த கட்டிய எடுத்து பையாப்ஸிக்கு அனுப்பினதுல இருந்து கடைசியா கொடுத்த கீமோதெரபி வரைக்கும் கிட்டத்தட்ட ஆறு மாசம் எடுத்தது.”

உங்க மகளுக்கு இருந்த வியாதிய பத்தியும் கொடுத்த சிகிச்சைய பத்தியும் அவ எப்படி உணர்ந்தா?

“ஆரம்பத்துல என்ன நடக்குதுன்னு அவளுக்கு தெரியல. ‘உன் வயித்துல சின்ன கட்டி இருக்கு. அத ஆபரேஷன் பண்ணி எடுக்கனும்’ன்னு டாக்டரு அவகிட்ட சொன்னாங்க. கடைசில அவளே புரிஞ்சுகிட்டா. ‘எனக்கு கேன்சரா அப்பா?’ன்னு கேட்டா. எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியல.”

கண்ணு முன்னாடி உங்க மகள் கஷ்டப்படுறத பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

“ஒவ்வொரு நிமிஷமும் நாங்க பட்ட வேதனை இருக்கே அப்பப்பா... அத விவரிக்கவே முடியாது. அதுவும், கீமோதெரபி கொடுக்குறதுக்காக நர்ஸுங்க அவ கையில நரம்பு தேடுவாங்க, அந்தச் சமயத்துல அவ பேசாம அவங்களுக்கு ஒத்துழைப்பா; அத பார்க்கும்போது எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வரும். அப்போ நான் ‘பாத்ரூமுக்கு’ போய் ‘ஓ’-ன்னு அழுது ஜெபம் பண்ணுவேன். ஒருநாள் இத என்னால சுத்தமா தாங்க முடியல. ‘யெகோவாவே, என் மகளுக்கு பதிலா நான் வேணா செத்துப்போயிடுறேன்’-ன்னு ஜெபம் பண்ணேன்.”

இதை எப்படி தாங்கிக்கிட்டீங்க?

“முக்கியமா, எங்க கிறிஸ்தவ சகோதர சகோதரிங்க எங்களுக்கு பக்கபலமா இருந்தாங்க. சிலர் வெளிநாட்டுல இருந்தெல்லாம் போன் பண்ணி பேசுனாங்க. ஒரு சகோதரர் என்னோட பைபிளை எடுத்துட்டு வர சொன்னாரு. அப்புறம் சங்கீத புத்தகத்துல இருந்து ஆறுதலான சில வசனங்களை வாசிச்சு காட்டினாரு. எனக்கும் என் மனைவிக்கும் அதுதான் தேவையா இருந்தது. நாங்க ரொம்ப உடைஞ்சு போயிருந்த சமயம் அது. ஏன்னா, அந்த நேரத்துலதான் என் மகள் சிகிச்சையினால ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தா.”

ரோஸ்மேரி “என் மகளுக்கு நாலு வயசு இருந்தப்ப ஒரு வகை லுகீமியா கேன்சர் அவளுக்கு இருந்தது தெரிஞ்சுது.”

அத கேட்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?

“அத என்னால நம்பவே முடியல. உதவிக்காக கடவுள்கிட்ட இராத்திரி பகலா அழுது அழுது ஜெபம் செஞ்சேன். இவ இப்படி இருக்குறத பாத்து என்னோட பெரிய பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டா. அதனால, அவள என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன்.”

உங்க மகளுக்கு என்னென்ன பக்கவிளைவுகள் வந்தது?

“தினமும் அவளுக்கு கீமோதெரபி கொடுத்ததுனால அவ உடம்புல இரத்தம் குறைஞ்சுடுச்சி அதனால, அவளுக்கு இரும்பு சத்துள்ள மாத்திரைகளையும் எரித்திரோபொய்ட்டீ-னையும் டாக்டர் கொடுத்தாங்க. அவளுடைய இரத்த அளவை எப்பவும் குறையாம பார்த்துக்க வேண்டியிருந்தது. அவளுக்கு அப்பப்போ வலிப்பு வேற வந்துச்சு.”

எவ்வளவு காலம் சிகிச்சை கொடுத்தாங்க?

“தொடர்ந்து 28 மாசம் அவளுக்கு கீமோதெரபி கொடுத்தாங்க. அந்த சமயத்துல அவ தலைமுடியெல்லாம் கொட்டிடுச்சி. ரொம்ப குண்டாயிட்டா. அவ எப்பவும் ஜோக் அடிச்சிட்டிருப்பா. அதனால இதையும் ஜாலியா எடுத்துக்கிட்டா. கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சித்தான் அவ பூரணமா குணமாயிட்டான்னு டாக்டருங்க சொன்னாங்க.”

இந்தக் கஷ்டமான சூழ்நிலையை உங்களால எப்படிச் சமாளிக்க முடிஞ்சுது?

“நானும் என் மகளும் சேர்ந்து அடிக்கடி ஜெபம் செய்வோம். பைபிள் காலங்கள்ல வாழ்ந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் எப்படி பல கஷ்டங்களை சகிச்சாங்கன்னு படிப்போம். அதோட மத்தேயு 6:34-ல சொல்ற மாதிரி நாளைக்காக கவலைப்படாமல் இருக்க முயற்சி செஞ்சோம். எங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவும் எங்களுக்கு ஆறுதலா இருந்தாங்க. டாக்டர்கள் நர்ஸுகள் கூட உதவியா இருந்தாங்க, ஏன்னா அவங்க இந்த மாதிரி நிறைய பேர பாக்கிறாங்க இல்ல.”

கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு குழந்தையை உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை உங்கள் குடும்பத்திலேயே யாராவது அப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அப்படியென்றால், மேலே பார்த்தவர்களுடைய அனுபவம் உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுடைய துக்கம் இயல்பானதுதான். “அழ ஒரு காலமுண்டு” என்று பைபிளும் சொல்கிறது. (பிரசங்கி 3:4) எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஜெபத்தைக் கேட்கிற’ உண்மைக் கடவுளான யெகோவா, நம் மனதில் உள்ளதை கொட்டும்போது நிச்சயம் கேட்பார்... ஆறுதல் அளிப்பார்.—சங்கீதம் 65:2. (g11-E 05)

[பக்கம் 23-ன் பெட்டி]

மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பைபிள் வசனங்கள்

“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இன்றைய தினத்தைக் குறித்து மட்டும் யோசியுங்கள்.”—மத்தேயு 6:34, கன்டெம்ப்ரரி இங்லீஷ் வர்ஷன்.

“நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக. அவரே கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள். எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.”—2 கொரிந்தியர் 1:3, 4.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

“அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

ஓர் அன்பான ஏற்பாடு

யெகோவாவின் சாட்சிகளுக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவினர், மருத்துவமனைக்கும் நோயாளிகளுக்கும் ஒரு பாலமாக இருக்கிறார்கள், ஒருவருக்கொருவர் நன்கு ஒத்துழைக்க உதவுகிறார்கள். ‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற பைபிள் கட்டளைக்கு மதிப்பு கொடுக்க விரும்பும் நல்ல மருத்துவர்களைக் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சியாக இருக்கும் நோயாளிகளுக்கு உதவுகிறார்கள்.—அப்போஸ்தலர் 15:20.

[பக்கம் 23-ன் படம்]

நேயா, ஸ்டெஃபானி மற்றும் ஜெயில்டன்

[பக்கம் 23-ன் படம்]

லூயிஸ், அலைன் மற்றும் ஃபாபியானா

[பக்கம் 23-ன் படம்]

அலைன் மற்றும் ரோஸ்மேரி