Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 1

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 1

இளைஞர் கேட்கின்றனர்

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 1

“வெளிநாட்டுலகூட எனக்கு நண்பர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட பேசறதுக்கு ஈஸியான வழி சோஷியல் நெட்வர்க்தான். கண்காணா தூரத்துல இருந்தாலும் அவங்ககிட்ட என்னால பேச முடியுது.”—சூசன், 17. a

“என்னை கேட்டா, சோஷியல் நெட்வர்க்குன்றதெல்லாம் வேலயத்த வேல. மத்தவங்கள பாத்து பழக சோம்பேறித்தனம் படுறவங்கதான் இதெல்லாம் செய்வாங்க. நேருக்குநேர் பாத்து பேசினாதான் நட்பு நிலைச்சிருக்கும்.”—கிரன், 19.

சோஷியல் நெட்வொர்க்கைப் பற்றி உங்களிடம் கேட்டால் இப்படி ஏதோவொரு பதிலைச் சொல்லலாம். நீங்கள் என்ன சொன்னாலும் சரி, ஒன்று மட்டும் உண்மை: இன்று மக்களின் வாழ்க்கையில் சோஷியல் நெட்வொர்க் பின்னிப் பிணைந்துவிட்டது. b ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஐந்து கோடி ஜனங்களை ரேடியோ 38 வருடங்களில் எட்டியது... தொலைக்காட்சி 13 வருடங்களில் ஈர்த்தது... இன்டர்நெட் நான்கே வருடங்களில் கவர்ந்தது. ஆனால், சோஷியல் நெட்வொர்க் தளமான ஃபேஸ்புக் கடந்த ஒரு வருடத்திற்குள் 20 கோடிக்கும் அதிகமான மக்களை தன்வசம் இழுத்திருக்கிறது.

சரியா, தவறா என்று டிக் செய்யுங்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவது டீன்-ஏஜ் பிள்ளைகள்தான். ___ சரி ___ தவறு

பதில்: தவறு. மிகப் பிரபலமான ஒரு சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் 25 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 2009-ல் எடுத்த கணக்கின்படி 55 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்!

இருந்தாலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். நண்பர்களிடம் பேசுவதற்கு இதுதான் சிறந்த வழி என்று சிலர் நினைக்கிறார்கள். டீன்-ஏஜ் பெண் ஜான்சி சொல்வதைக் கேளுங்கள்: “என்னோட அக்கவுன்ட்டை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வச்சிருந்தேன். ஆனா, ஃபோன்ல எல்லாம் யாருமே என்கிட்ட பேசறதில்ல, வேற வழியில்லாம திரும்பவும் ஆரம்பிச்சேன். சோஷியல் நெட்வொர்க்ல உங்களுக்கு ஒரு அக்கவுன்ட் இல்லனா நீங்க ஒருத்தர் இருக்கீங்கங்கறதையே எல்லாரும் மறந்துடுவாங்க.”

சோஷியல் நெட்வொர்க்கின்மேல் ஏன் இவ்வளவு மோகம்? சுருக்கமாகச் சொன்னால், மற்றவர்களோடு பேசிப்பழக ஆசைப்படுவது மனித இயல்பு. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைப்பதுபோல், சோஷியல் நெட்வொர்க் அதைச் சுலபமாக்கிக் கொடுக்கிறது. சரி, அதில் ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பிக்க அநேகர் ஏன் துடிக்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே கேட்போமா...

1. வசதி.

“எல்லா நண்பர்களயும் ஒரே இடத்துல புடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா, எல்லாரும் ஒரே வெப்சைட்ல இருக்கும்போது ஈஸியா எல்லார்கிட்டயும் பேசலாம்!”—லீமா, 20.

“என்னோட வெப்சைட்ல நான் ஏதாவது மெசேஜ் போட்டேன்னா போதும், ஈ-மெயில் அனுப்புன மாதிரி ஒரே நேரத்துல எல்லா ஃப்ரெண்ட்ஸுக்கும் போயிடும்.”—கிறிஸ்டி, 20.

2. நண்பர்கள்.

“அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேரச்சொல்லி யாராவது ஒருத்தர் கேட்டுகிட்டே இருப்பாங்க. எனக்கு எதுலயும் அக்கவுன்ட் இல்ல, அதனால யாரோட லிஸ்ட்லயும் சேர முடியாது.”—நவீனா, 22.

“அக்கவுன்ட்டே ஓபன் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்னு யார்கிட்டயாவது சொன்னா, ‘என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு’-ன்ற மாதிரி பாக்குறாங்க.”—இனியா, 18.

3. மீடியா.

“சோஷியல் நெட்வொர்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இல்லன்னா உங்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டாங்கன்ற எண்ணத்த மீடியாக்காரங்க மக்கள் மனசுல விதைச்சிடுறாங்க. நண்பர்கள் இல்லனா வாழ்க்கையே இல்ல. அதனால, சோஷியல் நெட்வொர்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இல்லன்னா நீங்க சுத்த வேஸ்ட்.”—கத்ரீனா, 18.

4. படிப்பு.

“எங்க டீச்சர்ஸ் எல்லாம் சோஷியல் நெட்வொர்க்ல அக்கவுன்ட் வச்சிருக்காங்க. எங்களுக்கு எப்ப க்விஸ் புரோகிராம் நடக்கும்னு அதுல மெசேஜ் போடுவாங்க. சில நேரத்துல கணக்குல ஏதாவது சந்தேகம்னா எங்க சாரோட வெப் பேஜ்ல எழுதுவேன். அவரு அதுலயே எனக்குச் சொல்லிக்குடுப்பாரு.”—மாயா, 17.

5. வேலை.

“நிறைய பேர் சோஷியல் நெட்வொர்க் மூலமா வேலை எந்த இடத்துல காலியா இருக்குன்னு தெரிஞ்சுக்குறாங்க. அப்படி அவங்களுக்கு வேலையும் கிடச்சிருக்கு.”—ஆஷா, 20.

“என் வேலைக்காக ஒரு நெட்வொர்க் தளம் வச்சிருக்கேன். நான் செஞ்சிட்டிருக்குற கிராஃபிக் டிசைன் ப்ராஜக்ட்ட என்னோட கஸ்டமர்ஸ் எல்லாம் அதுல பாத்துக்குவாங்க.”—டேவிட், 21.

சோஷியல் நெட்வொர்க்கில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்க வேண்டுமா? உங்கள் பெற்றோர்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். c (நீதிமொழிகள் 6:20) வேண்டாம் என்று பெற்றோர் சொன்னால், அவர்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.—எபேசியர் 6:1.

ஒருசில பெற்றோர் பக்குவமடைந்த தங்கள் பிள்ளைகளை சோஷியல் நெட்வொர்க் தளத்தில் ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அதேசமயம், அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக்கொள்கிறார்கள். உங்கள் பெற்றோர் அப்படிச் செய்தால், உங்கள் அந்தரங்கத்தில் அவர்கள் அத்துமீறி நுழைகிறார்கள் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. சோஷியல் நெட்வொர்க் என்பது ஒரு கத்தி மாதிரி; அதில் நன்மையும் ஏராளம் தீமையும் தாராளம்; எனவே, அதை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று பெற்றோர் கவனிப்பதில் தவறில்லை. சோஷியல் நெட்வொர்க்கில் மட்டுமல்ல, பொதுவாக இன்டர்நெட்டில் எதைப் பயன்படுத்தினாலும் ஆபத்து இருக்கிறது. ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால், அந்த ஆபத்துகளில் அகப்படாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

பாதுகாப்பாக “ஓட்டுங்கள்”

ஒருவகையில் பார்த்தால் இன்டர்நெட் பயன்படுத்துவதும் கார் ஓட்டுவதும் ஒன்றுதான். லைசன்ஸ் வைத்திருக்கும் எல்லாருமே கவனமாக ஓட்டுவார்கள் என்று சொல்ல முடியாது. அஜாக்கிரதையாக... அலட்சியமாக... ஓட்டியதால் நிறையப் பேர் பயங்கரமான விபத்துகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இன்டர்நெட் விஷயத்திலும் இதுவே உண்மை. சிலர் கவனமாக “ஓட்டுகிறார்கள்,” சிலர் கண்டபடி “ஓட்டுகிறார்கள்.” நீங்கள் ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருக்கிறார்களா? அப்படியென்றால், இன்டர்நெட்டில் இந்த ஆபத்தான இடத்தில்கூட கவனமாக ‘ஓட்டுவீர்கள்’ என்று உங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சரி, நீங்கள் எப்படி “ஓட்டுகிறீர்கள்?” உங்கள் ‘சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள்பவராக’ நிரூபித்திருக்கிறீர்களா?—நீதிமொழிகள் 3:21, ஈஸி டு ரீட் வர்ஷன்.

சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நான்கு விஷயங்களை நாம் பார்க்கலாம். அவற்றில் அந்தரங்க விவரங்கள், நேரம் இரண்டையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நற்பெயர், நட்பு இரண்டையும் பற்றி அடுத்த கட்டுரையில் படிக்கலாம்.

அந்தரங்கம்

சோஷியல் நெட்வொர்க்கிற்கு போவதே எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளத்தானே. அதனால், யாரும் அந்தரங்கத்தைப் பற்றியே யோசிப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகப் போட்டுவிடுகிறார்கள். ஆனால், உங்கள் அந்தரங்க விவரங்கள் அம்பலமாகிவிட இதில் வாய்ப்பிருப்பதால் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.

உதாரணமாக, உங்கள் கையில் எக்கச்சக்கமான பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை நடுரோட்டில் கடைபரப்பிவிட்டு நண்பர்களோடு அங்குமிங்கும் உலாவுவீர்களா? அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், திருடர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதுபோல் ஆகிவிடுமே! நீங்கள் புத்திசாலியாக இருந்தால் யாருக்கும் தெரியாத இடத்தில்தானே மறைத்து வைப்பீர்கள்.

உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்கள்தான் அந்தப் பணம். இப்போது கீழே உள்ள விஷயங்களில் எதையெல்லாம் முன்பின் தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பதை டிக் செய்யுங்கள்.

___ வீட்டு முகவரி

___ ஈ-மெயில் முகவரி

___ பள்ளியின் பெயர்

___ எப்போது வீட்டில் இருப்பேன்

___ வீட்டில் யாருமே இல்லாத நேரம்

___ என் புகைப்படங்கள்

___ என்னுடைய கருத்துகள்

___ எனக்குப் பிடித்தவை

மற்றவர்களோடு கலகலப்பாகப் பேசிப்பழகுவதில் நீங்கள் நம்பர் ஒன்னாக இருந்தாலும், மேலே உள்ளவற்றில் சில விஷயங்களையாவது முன்பின் தெரியாதவர்களிடம் மறைக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், நிறைய டீன்-ஏஜ் பிள்ளைகள் ஏன், பெரியவர்கள்கூட தங்களை அறியாமலேயே இந்த விவரங்களை அந்நியர்களுக்கு அம்பலப்படுத்துகிறார்கள்! இந்த ஆபத்தில் அகப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்த உங்கள் பெற்றோர் அனுமதித்தால் அதில் இருக்கும் பிரைவஸி செட்டிங்ஸ் பற்றி நன்கு தெரிந்துகொண்டு, பிறகு பயன்படுத்துங்கள். ஏனென்றால், அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் பயன்படுத்தும்போது உங்களைப் பற்றிய விவரங்கள் வெளியே கசிந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்த வெப் தளத்தில் உள்ள டீஃபால்ட் செட்டிங்ஸ், உங்களுக்கே தெரியாமல் நிறைய பேர் உங்களுடைய வெப் பக்கத்தைப் பார்க்க அனுமதித்துவிடலாம், தங்கள் கருத்துகளை எழுதவும் அனுமதிக்கலாம். அதனால்தான், ஆலிஸ் என்ற இளம் பெண் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மட்டும் தன் வெப் பக்கங்களைப் பார்க்கும்படி செட் செய்திருக்கிறாள். “என்னோட நண்பர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க, அவங்க எல்லாரையும் எனக்குத் தெரியாது. அவங்க எல்லாம் என்னை பத்தி படிக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல.”

இன்னொரு பக்கம், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் பேசுவதற்கு மட்டுமே இந்த சோஷியல் நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தினாலும்கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 21 வயது கேத்தி சொல்வதைக் கேளுங்கள்: “நண்பர்கள்கிட்டயிருந்து பதில் வரலனா பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும். அதனால, நண்பர்கள் பதில் அனுப்பனுங்கறதுக்காக நம்பள பத்தி மத்தவங்ககிட்ட சொல்லக்கூடாத விஷயங்களகூட பந்தி வைக்க ஆரம்பிச்சுடுவோம்.

இதை எப்போதும் நினைவில் வையுங்கள்: இன்டர்நெட்டில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் முழுக்க முழுக்க அந்தரங்கமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏன்? க்வென் ஷர்ஜன் ஒகீஃப் என்ற பெண், சைபர்சேஃப் என்ற தன் புத்தகத்தில் இதைப் பற்றி எழுதினாள்: “பெரிய வெப் சைட்ஸ் எல்லாம் தங்களுடைய தகவல்களை (databases) ‘பேக்-அப் காப்பி’ எடுத்து வைத்திருக்கின்றன. இன்டர்நெட்டில் நாம் போடும் தகவல்களை நாம் டெலீட் செய்தாலும், எங்கேயோ ஒரு இடத்தில் அதன் காப்பி கண்டிப்பாக இருக்கும். அது எங்குமே இருக்காது என்று நினைப்பது முட்டாள்தனம்.”

நேரம்

உங்கள் அந்தரங்கத்தை மட்டுமில்லை உங்கள் நேரத்தையும்கூட ஏராளமான பணத்தோடு ஒப்பிடலாம். அப்படியென்றால், உங்கள் நேரத்தை பட்ஜெட் போடுவது முக்கியம். (பிரசங்கி 3:1) சோஷியல் நெட்வொர்க்கில் மட்டுமில்லை, இன்டர்நெட்டில் நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும் சரி, உங்கள் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிட வேண்டும். ஆனால், அதுதான் ஒரு பெரிய சவால். d

“‘ஒரே ஒரு நிமிஷம் பாக்கலாம்’னுதான் உட்காருவேன். ஆனா ஒரு மணிநேரமானாலும் அந்த இடத்த விட்டு அசஞ்சிருக்க மாட்டேன்.”—ஆன்ஜலீனா, 18.

“நான் அதுக்கு அடிமையா இருந்தேன். தினம் ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்துடுவேன். என்னோட வெப் பக்கங்கள்ல நான் எழுதின விஷயங்கள பத்தி மத்தவங்க என்ன சொல்லியிருக்காங்க, அவங்களோட வெப் பக்கங்கள்ல என்ன எழுதியிருக்காங்கன்னு மணிக்கணக்கா பாத்துக்கிட்டிருப்பேன்.”—தாரா, 16.

“என்னோட செல்போன்லயே வெப்-சைட் கனக்‍ஷென் இருக்கு. அதனால, ஸ்கூலுக்கு போகும்போது, திரும்பி வரும்போது, ஸ்கூல்ல-ன்னு எப்ப பாத்தாலும் அத நோண்டிகிட்டே இருப்பேன். வீட்டுக்கு வந்ததும் கம்ப்யூட்டர்ல போய் உக்காந்துடுவேன். நான் அதுக்கு அடிமை ஆகியிருந்தேன்னு புரிஞ்சது. ஆனா அத நிறுத்த எனக்கு இஷ்டமில்ல.”—ரீட்டா, 17.

சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்த உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால், தினமும் அதில் இவ்வளவு நேரம்தான் செலவிட வேண்டும் என்று ஒரு எல்லைக்கோட்டைப் போட்டுக்கொள்ளுங்கள். பிறகு, அதைப் பின்பற்றுகிறீர்களா என அவ்வப்போது பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, சோஷியல் நெட்வொர்க்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறீர்கள் என்பதைத் தினமும் எழுதி வைத்து மாதக்கடைசியில் எடுத்துப் பாருங்கள். நீங்கள் போட்டிருந்த எல்லைக்கோட்டைத் தாண்டாமல் இருக்கிறீர்களா என்று பாருங்கள். உங்கள் நேரம் பணத்தைப் போன்றது என்பதை நினைவில் வையுங்கள். சோஷியல் நெட்வொர்க் உங்கள் நேரத்தை எல்லாம் ஏப்பமிட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதைவிட முக்கியமான எவ்வளவோ விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன!—எபேசியர் 5:15, 16; பிலிப்பியர் 1:10.

சில இளைஞர்கள் எல்லைக்கோட்டை மீறாமல் இருப்பதற்காக சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேரிடம் பேசுவோமா...

“என் அக்கவுன்ட்டை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வச்சிட்டேன். அதனால எக்கச்சக்கமா நேரம் கிடச்சது, ரொம்ப ‘ரிலாக்ஸா’ இருந்துச்சு. இப்போ திரும்பவும் அந்த அக்கவுன்டை ஓபன் பண்ணியிருக்கேன். ஆனா, எல்லை மீறாம பாத்துக்குறேன். இப்பெல்லாம் அடிக்கடி இன்டர்நெட் பக்கம் போறதில்ல. சில நேரத்துல அத சுத்தமா மறந்துடறேன். திரும்பவும் எல்லை மீறறேன்னு தெரிஞ்சதுன்னா மறுபடியும் அக்கவுன்ட்ட நிறுத்தி வச்சிடுவேன்.”—ஆலிஸ், 19.

“அப்பப்ப நெட்வொர்க்கிங் சைட்டுக்கு முழுக்கு போட்டுடுவேன். இரண்டு மூனு மாசத்துக்கு நிறுத்தி வச்சுட்டு அப்பறம் திரும்பவும் ஆரம்பிப்பேன். எப்பெல்லாம் அதுல நேரத்த வீணாக்குறேன்னு தோனுதோ அப்பெல்லாம் இதேமாதிரி நிறுத்தி வச்சிடுவேன். ஆனா, முன்ன மாதிரி எப்பவும் அதே வேலயா கிடக்கிறதுல்ல. தேவப்படுறப்ப மட்டும் பயன்படுத்துறேன்.”—அருணா, 22.

சோஷியல் நெட்வொர்க்கின் சுயரூபம்

சோஷியல் நெட்வொர்க்கைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள இந்தக் கேள்விக்குப் பதிலை ✔ செய்யுங்கள்.

சோஷியல் நெட்வொர்க்கின் முக்கியக் குறிக்கோள்?

() ___ வியாபாரம்.

() ___ சோஷியல் க்ளப்.

() ___ பொழுதுபோக்கு.

நீங்கள் எதில் டிக் செய்திருந்தாலும் சரி, வியாபாரம் என்பதே சரியான பதில். நம்ப முடியவில்லையா? ஆனால், அதுதான் உண்மை. சோஷியல் நெட்வொர்க்கின் நோக்கமே முழுக்க முழுக்க வியாபாரம்தான். லாபம் சம்பாதிப்பதே, அதுவும் விளம்பரத்தின் மூலம் லாபம் சம்பாதிப்பதே அதன் குறிக்கோள். சோஷியல் நெட்வொர்க்கிற்கும் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ஒரு தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்தத் தளத்திற்கு மதிப்பு கூடுகிறது. அதில் அவர்கள் விவரங்களை எழுத எழுத, அதைப் படிப்பதற்காக நிறைய பேர் அந்தத் தளத்திற்குள் நுழைகிறார்கள். இப்படி நிறைய பேர் அதில் வரும் விளம்பரங்களைப் பார்க்கிறார்கள். எனவே, ஒரு நபர் சோஷியல் நெட்வொர்க்கை எத்தனை முறை பயன்படுத்துகிறாரோ அத்தனை அதிகமாக விளம்பரங்களைப் பார்க்கிறார்.

இப்போது தெரிகிறதா? நீங்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடும்போதும் சரி உங்களைப் பற்றிய தகவல்களை நிறையப் பேர் படிக்கும்போதும் சரி, விளம்பரதாரர்களும் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள், அந்தத் தளமும் லாபம் சம்பாதிக்கிறது. எனவே, சோஷியல் நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் அந்தரங்கம் அம்பலமாகிவிடாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் நேரத்தை அது கொள்ளையடித்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் பொறுப்பு. (g11-E 07)

சோஷியல் நெட்வொர்க்கால் உங்கள் நற்பெயரும் நட்பும் பாதிக்கப்படுமா? இந்தக் கேள்விக்கான பதில் அடுத்த கட்டுரையில்...

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b சோஷியல் நெட்வொர்க் என்பது ஒரு வெப் தளம். இந்த வெப் தளத்தில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நண்பர்களோடு எப்போது வேண்டுமானாலும் உரையாட முடியும்.

c விழித்தெழு! பத்திரிகை எந்தவொரு நெட்வொர்க் தளத்தையும் பயன்படுத்தலாம் என்றோ பயன்படுத்தக் கூடாது என்றோ சொல்வதில்லை. கிறிஸ்தவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது பைபிள் நெறிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 1:5, 19.

d கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஏப்ரல்-ஜூன், 2011 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையா?” என்ற கட்டுரையைக் காண்க. முக்கியமாக, பக்கம் 18-ல் “நான் சோஷியல் நெட்வர்க்கிங்-சைட்டுக்கு அடிமைப்பட்டிருந்தேன்” என்ற பெட்டியைப் பார்க்கவும்.

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

ரேடியோ 38 வருடங்களில் ஐந்து கோடி ஜனங்களை எட்டியது

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

சோஷியல் நெட்வொர்க் தளமான ஃபேஸ்புக் கடந்த ஒரு வருடத்திற்குள் 20 கோடிக்கும் அதிகமான மக்களை தன்வசம் இழுத்திருக்கிறது

[பக்கம் 17-ன் பெட்டி]

உங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

பிரைவஸி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி உங்கள் பெற்றோருடன் பேசுங்கள். எந்தெந்த விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லக்கூடாது? ஏன்? இன்டர்நெட்டில் நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும் சரி, எந்தத் தகவல்களைப் போடுவது ஆபத்தானது? அதோடு, நேருக்கு-நேர் பேசுவதாக இருந்தாலும் ஆன்லைனில் பேசுவதாக இருந்தாலும் அளவுக்கு மீறிப்போகாமல் இருக்க உதவும் ஆலோசனைகளையும் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள். எந்த விஷயத்திலாவது நீங்கள் மாற வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அதையும் சொல்லச் சொல்லுங்கள்.

[பக்கம் 16-ன் படம்]

சோஷியல் நெட்வொர்க்கில் நீங்கள் எழுதும் தகவல்களை முன்பின் தெரியாதவர்கள்கூட பார்க்க வாய்ப்பு இருக்கிறது

[பக்கம் 17-ன் படம்]

நேரம் பணத்தைப் போன்றது. எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் செலவழித்துவிட்டீர்கள் என்றால், தேவைப்படும்போது பாக்கெட்டில் ஒன்றுமே இருக்காது