Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 2

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 2

இளைஞர் கேட்கின்றனர்

சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 2

உங்களுக்கு முக்கியமானவற்றை வரிசைப்படுத்துங்கள்:

___ அந்தரங்கம்

___ நேரம்

___ நற்பெயர்

___ நட்பு

எதற்கு முதலிடம் கொடுத்தீர்கள்? உங்களுக்கு எது ரொம்ப முக்கியமோ அதற்குத்தானே? ஆனால், சோஷியல் நெட்வொர்க் தளத்தைப் பயன்படுத்தினால், அதற்கு மட்டுமல்ல மற்ற மூன்று விஷயங்களுக்கும்கூட ஆபத்து வரலாம்.

சோஷியல் நெட்வொர்க்கில் உங்களுக்கு ஒரு அக்கவுன்ட் இருக்க வேண்டுமா? உங்கள் பெற்றோர்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். a (நீதிமொழிகள் 6:20) பொதுவாக, இன்டர்நெட்டில் எதைப் பயன்படுத்தினாலும் அதில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. சோஷியல் நெட்வொர்க்கும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, நீங்கள் அக்கவுன்ட் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் பெற்றோர் சொன்னால், அவர்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.—எபேசியர் 6:1.

ஆனால், ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால், அதிலுள்ள ஆபத்துகளில் அகப்படாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? முந்தின கட்டுரையில் உங்கள் அந்தரங்கத்தையும் நேரத்தையும் பற்றிப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் உங்கள் நற்பெயரையும் நட்பையும் பற்றிப் பார்க்கலாம்.

நற்பெயர்

உங்கள் நற்பெயர் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மற்றவர்கள் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு நீங்களே காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு புது கார் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சின்ன கீறல்கூட இல்லாமல் அப்படியே புத்தம்புதிதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதானே ஆசைப்படுவீர்கள்? உங்களுடைய அலட்சியத்தினால் அது விபத்துக்குள்ளாகி நாசமாகிவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்போது, இதேபோல் உங்கள் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்பிருக்கிறது. க்ளாரா என்ற இளம் பெண் சொல்கிறாள்: “கொஞ்சம்கூட யோசிக்காம ஏதோ ஒரு ஃபோட்டோவை போட்டீங்கன்னா... என்ன தோனுதோ அதையெல்லாம் எழுதினீங்கன்னா... உங்க பேர்தான் கெட்டுப்போகும்.” இப்போது, நீங்கள் போடும் புகைப்படம் அல்லது நீங்கள் எழுதுகிற விஷயங்கள் உங்கள் நற்பெயரை எப்படிப் பாதிக்கும் என்று பார்க்கலாம்.

உங்கள் புகைப்படம். “நீங்கள் எப்போதும் ஒழுங்காக நடந்துகொள்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியட்டும்” என்று அப்போஸ்தலன் பேதுரு பைபிளில் எழுதினார். (1 பேதுரு 2:12, கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) சோஷியல் நெட்வொர்க் தளத்தில் எந்த மாதிரியான ஃபோட்டோக்கள் உங்கள் கண்ணில் பட்டிருக்கிறது?

“சில பேரு நேர்ல பார்க்க ரொம்ப டீசன்டா இருப்பாங்க. ஆனா வெப் பக்கத்துல, அவங்க தண்ணி அடிச்ச மாதிரி இருக்கிற ஒரு ஃபோட்டோவ போட்டு வச்சிருப்பாங்க.”—அனிதா, 19.

“கவர்ச்சியா இருக்கற மாதிரி ஃபோட்டோவ சில பொண்ணுங்க போட்டு வச்சிருப்பாங்க. அவங்கள நேர்ல பாக்குறதுக்கும், அந்த ஃபோட்டோவுல பாக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கும்.”—க்ளாரா, 19.

சோஷியல் நெட்வொர்க்கில் (1) கவர்ச்சியாக உடை அணிந்த அல்லது (2) குடித்திருப்பதுபோல் இருக்கிற ஒருவரின் ஃபோட்டோவைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

1 ․․․․․

2 ․․․․․

உங்கள் குறிப்புகள். எபேசியர் 4:29 சொல்கிறது: “கெட்ட [“அசிங்கமான,” இன்டர்நேஷனல் ஸ்டேன்டர்ட் வர்ஷன்] வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.” சோஷியல் நெட்வொர்க்கில் உரையாடும்போது தரக்குறைவான வார்த்தைகள், ஆபாசம், கிசுகிசு எல்லாம் எப்படியோ நுழைந்துவிடுவதை சிலர் கவனித்திருக்கிறார்கள்.

“சோஷியல் நெட்வொர்க்ல நாம என்ன வேனும்னா எழுதலாம், யாரும் கேள்வி கேட்க மாட்டாங்கன்னு சில பேர் நினைக்கிறாங்க. நீங்க போடற வார்த்தைங்க எல்லாம் எழுதறதுக்கு தப்பா தெரியாது, அதையே இன்னொருத்தர்கிட்ட சொல்லும்போது ரொம்ப கேவலமா இருக்கும். சில நேரத்துல, நீங்க அவங்ககிட்ட வழியிற மாதிரி, துணிச்சலா பேசற மாதிரி இருக்கும், அசிங்கமாகூட இருக்கும். ஆனால், நிஜமா நீங்க அப்படி நினைச்சி போட்டிருக்க மாட்டீங்க.”—டயானா, 19.

உங்களிடம் ஒரு கேள்வி: சோஷியல் நெட்வொர்க்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று சிலர் ஏன் நினைக்கிறார்கள்?

․․․․․

ஃபோட்டோ போடுவதற்கும், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதுவதற்கும் இவ்வளவு யோசிக்க வேண்டுமா? கண்டிப்பாக. ஜெனி என்ற டீன்-ஏஜ் பெண் சொல்கிறாள்: “ஸ்கூல்ல இதப் பத்தி நாங்க நிறைய பேசியிருக்கோம். வேலைக்கு அப்ளிகேஷன் போடறவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக, முதலாளிங்க நம்ம வெப் பக்கத்த பார்ப்பாங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும்.”

டாக்டர் பி. ஜே. ஃபாக் என்பவரும்கூட வேலைக்கு ஆள் தேடும்போது இதைத்தான் செய்வதாக ஃபேஸ்புக் ஃபார் பேரன்ட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். “ஒருத்தர வேலைக்கு சேர்க்கிறதுக்கு முன்னாடி அவரைப் பத்தி தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கிறேன். . . . ஒருத்தரோட வெப் பக்கம் பாக்கவே கண்றாவியா இருந்துச்சுன்னா அவங்கள வேலைக்கு சேத்துக்க மாட்டேன். என்கிட்ட வேல பாக்கறவர் முன்னபின்ன யோசிக்காம எதையும் பண்றவரா இருக்கக்கூடாதுனு நினைக்கறேன்.”

நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்றால், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் யோசித்துப் பார்க்க வேண்டும். உங்கள் சக வணக்கத்தார் அல்லது வேறு யாராவது உங்கள் வெப் பக்கத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? “எவருக்கும் எவ்விதத்திலும் இடையூறு [“இடறல்,” BSI] உண்டாக்காமல்” இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியதை மனதில் வைத்திருங்கள்.—2 கொரிந்தியர் 6:3; 1 பேதுரு 3:16.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சோஷியல் நெட்வொர்க்கில் ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கிற ஃபோட்டோக்களைப் பாருங்கள். பின்பு, இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இதைப் பார்க்கிறவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? என்னைப் பத்தி மத்தவங்க இப்படித்தான் நினைக்கனும்னு நான் ஆசப்படறேனா? இந்த ஃபோட்டோக்களை என் பெற்றோரோ, கிறிஸ்தவ மூப்பரோ, எனக்கு வேலை கொடுக்கப் போறவரோ பார்த்தா என்ன ஆகுமோனு பயப்படுறேனா?’ கடைசிக் கேள்விக்கு நீங்கள் ஆம் என்று சொன்னால் மாற்றங்களைச் செய்யுங்கள். ஜென்சி (21 வயது) அதைத்தான் செய்தாள்: “நான் போட்ட ஃபோட்டோவைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ மூப்பர் ‘அது அவ்வளவா சரியில்லையேம்மா’னு எங்கிட்ட சொன்னார். அவரு அப்படி சொன்னது ரொம்ப நல்லதா போச்சு. என் பேரு கெட்டுடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான அதை சொன்னாரு.”

அடுத்து, உங்கள் வெப் பக்கத்தில் நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளையும் மற்றவர்கள் எழுதியிருக்கும் குறிப்புகளையும் பாருங்கள். “முட்டாள்தனமான . . . ஆபாசமான” விஷயங்கள் இருந்தால், போனால் போகட்டும் என்று விட்டுவிடாதீர்கள். (எபேசியர் 5:3, 4) ஜெனி (19 வயது) சொல்கிறாள்: “சில நேரத்துல மத்தவங்க எழுதுற குறிப்புல கெட்ட வார்த்தையோ இரட்டை அர்த்தமுள்ள வார்த்தையோ இருக்கலாம். அத நீங்க போடலனாகூட உங்களோட வெப் பக்கத்துல இருக்கறதுனால உங்க பேருதான் கெட்டுப்போகும்.”

மறுபடியும் ஒரு கேள்வி: நீங்கள் போடுகிற புகைப்படங்கள் அல்லது எழுதுகிற குறிப்புகள் உங்கள் நற்பெயரைக் கெடுத்துவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்வீர்கள்?

․․․․․

நட்பு

திரும்பவும் கார் உதாரணத்திற்கு வரலாம். முன்பின் தெரியாதவரைக்கூட உங்கள் காரில் ஏற்றிக்கொள்வீர்களா? அதேபோல், ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால், உங்கள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வீர்களா? யாரை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்வீர்கள்?

“சிலபேருக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கிறதுதான் ஒரே லட்சியம். ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக மதிப்பு ஜாஸ்தியாகும்னு அவங்க நினைப்பாங்க. அதனால, அவங்களுக்கு சுத்தமா தெரியாதவங்களகூட ஃப்ரெண்டா சேத்துக்குவாங்க.”—ஆயிஷா, 16.

“சோஷியல் நெட்வொர்க் மூலமா பழைய ஃப்ரெண்ட்ஸ்கூட திரும்பவும் பழகுறதுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், சில நேரத்துல அவங்ககூட பழகாம இருக்கிறதுதான் நமக்கு நல்லது.”—ஷாலினி, 25.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு யோசனை: நோட்டமிடுங்கள், களையெடுங்கள். உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டைப் பாருங்கள். தேவைப்பட்டால், அதில் மாற்றம் செய்யுங்கள். ஒவ்வொரு பெயரையும் பார்க்கும்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

1.நேர்ல பழக இவங்க எப்படிப்பட்டவங்க?’

2. ‘இவங்களோட வெப் பக்கத்துல எந்தமாதிரி ஃபோட்டோக்களை, குறிப்புகளை போட்டிருக்காங்க?’

3. ‘இவங்ககூட பழகறதால நான் எந்தெந்த விஷயங்கள்ல முன்னேறியிருக்கிறேன்?’

“நான் ஒவ்வொரு மாசமும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட பாப்பேன். சில பேர் போடற ஃபோட்டோஸோ, எழுதற குறிப்புகளோ ஒருமாதிரி இருந்துச்சுன்னா... அவங்க எனக்கு முன்னபின்ன தெரியாதவங்களா இருந்தா... என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கிடுவேன்.”—இமயா, 17.

ஒரு யோசனை: “கொள்கை” வைத்துக்கொள்ளுங்கள். நேரில் பார்த்துப் பழகும்போது நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பீர்கள். அதேபோல், நெட்வொர்க்கிலும் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் யாரையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்... யாரோடு எல்லாம் சேரலாம்... என உங்களுக்கென்று சில கொள்கைகளை வைத்துக்கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 15:33) இளம் பெண் லாராவும் இதைத்தான் செய்கிறாள்: “எனக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன். எனக்கு ஒருத்தர தெரியலனா, அவங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர மாட்டேன். அவங்க வெப் பக்கத்துல எனக்குப் பிடிக்காத மாதிரி ஏதாவது இருந்துச்சுன்னா என்னோட லிஸ்ட்லேந்து அவங்கள ‘டெலீட்’ பண்ணிடுவேன். திரும்பவும் கேட்டாகூட சேத்துக்க மாட்டேன்.” வேறு சிலர்கூட இதேபோல் சில கொள்கைகளை வைத்திருக்கிறார்கள்.

“கண்டவங்ககூட எல்லாம் ‘ஃப்ரெண்டா’ ஆயிட மாட்டேன். இல்லனா பின்னாடி நான்தான் பிரச்சினைல மாட்டிப்பேன்.”—சூசன், 21.

“எங்கூட ஸ்கூல்ல படிச்ச சிலபேரு, அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர சொல்லி கேட்டாங்க. நான் அதுக்கு ஒத்துக்கல. ஏனா, ஸ்கூல்ல படிக்கும்போதே அந்தப் பசங்களோட எல்லாம் அதிகமா பழகக்கூடாதுன்னு நினைச்சேன். இப்பப்போய் ஏன் புதுசா ஃப்ரெண்டாகனும்.”—அலெக்ஸ், 21.

நீங்கள் என்னென்ன “கொள்கைகளை” வைக்கப்போகிறீர்கள்?

․․․․․ (g11-E 08)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! பத்திரிகை எந்தவொரு நெட்வொர்க் தளத்தையும் பயன்படுத்தலாம் என்றோ பயன்படுத்தக் கூடாது என்றோ சொல்வதில்லை. கிறிஸ்தவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது பைபிள் நெறிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 1:5, 19.

[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]

ஒரு பைபிள் பழமொழி: “திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்.”—நீதிமொழிகள் 22:1, பொது மொழிபெயர்ப்பு

[பக்கம் 20-ன் பெட்டி]

பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

இந்தக் கட்டுரையையும் முந்தின கட்டுரையையும் உங்கள் பெற்றோரோடு சேர்ந்து படியுங்கள். இன்டர்நெட்டினால் வரும் ஆபத்துகளிலிருந்து (1) உங்கள் அந்தரங்க விவரங்களை (2) உங்கள் நேரத்தை (3) உங்கள் நற்பெயரை (4) உங்கள் நட்பை எப்படிப் பாதுகாக்கலாம் எனக் கலந்துபேசுங்கள்.

[பக்கம் 21-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

இன்டர்நெட்டைப் பற்றி உங்களைவிட உங்கள் பிள்ளைகளுக்கு நிறையவே தெரிந்திருக்கலாம். ஆனால், உங்களைப்போல யோசித்து முடிவெடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் இருக்காது. (நீதிமொழிகள் 1:4; 2:1-6) இன்டர்நெட்-பாதுகாப்பு நிபுணர் பெரீ ஆஃப்டாப் இதை ஒத்துக்கொள்கிறார்: “பிள்ளைகள் புதிய புதிய தொழில்நுட்பத்தைக் கரைத்துக் குடித்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்தவர்கள் பெற்றோர்தான்.”

சமீப காலமாக, சோஷியல் நெட்வொர்க் பிரபலமடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு உங்கள் டீன்-ஏஜ் பிள்ளை பக்குவமடைந்து விட்டானா? நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வண்டி ஓட்ட... வங்கியில் அக்கவுன்ட் வைத்துக்கொள்ள... கிரெடிட் கார்டு பயன்படுத்த... உங்கள் பிள்ளையை அனுமதிக்கும்போது அவன் ஆபத்தில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது; அதுபோலவே, சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்போதும் ஆபத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதிலுள்ள ஒருசில ஆபத்துகள் என்ன?

அந்தரங்கம். தங்களைப் பற்றித் தேவையற்ற தகவல்களைப் போடுவதால் வரும் பின்விளைவுகளை அநேக பிள்ளைகள் புரிந்துகொள்வதில்லை. வீட்டு முகவரி... பள்ளியின் பெயர்... வீட்டில் இருக்கும் நேரம்... வெளியில் போகும் நேரம்... என்று அவர்கள் போடும் தகவல்களால் ஆபத்து அழையா விருந்தாளியாக உங்கள் குடும்பத்தைத் தேடி வரலாம்.

என்ன செய்யலாம்? உங்கள் பிள்ளைக்குச் சின்ன வயதில் சாலையைப் பத்திரமாகக் கடக்கக் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள், எனவே இன்டர்நெட்டைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொடுங்கள். அந்தரங்கம் அம்பலமாகிவிடாமல் பார்த்துக்கொள்வதைப் பற்றி முந்தின கட்டுரையில் வந்துள்ள தகவல்களை வாசித்துப் பாருங்கள். ஜனவரி 2009, விழித்தெழு!-வில் பக்கங்கள் 12-17-ஐயும் படித்துப் பாருங்கள். பிறகு, அந்த விஷயங்களை உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையோடு கலந்து பேசுங்கள். “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்” எப்படி வளர்த்துக்கொள்வது என்று சொல்லிக்கொடுங்கள்; இன்டர்நெட்டில் கவனமாக இருக்க அது அவர்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 3:21, NW.

நேரம். கவனமாக இல்லையென்றால் சோஷியல் நெட்வொர்க்கிற்கு நாம் அடிமையாகிவிடலாம். “நான் அக்கவுன்ட் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள அதுக்கு அடிமையா ஆயிட்டேன். அதுல இருக்குற ஃபோட்டோஸ் பாக்குறது, மெசேஜ் படிக்கறதுன்னு மணிக்கணக்கா அது முன்னாடியே உக்காந்துட்டிருக்கேன்” என்று 23 வயது ரோஷன் சொல்கிறார்.

என்ன செய்யலாம்? ஏப்ரல்-ஜூன், 2011 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையா?” என்ற கட்டுரையை உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசியுங்கள். முக்கியமாக, பக்கம் 18-ல் உள்ள “நான் சோஷியல் நெட்வர்க்கிங்-சைட்டுக்கு அடிமைப்பட்டிருந்தேன்” என்ற பெட்டியை வாசியுங்கள். பிறகு, அவற்றைப் பற்றி கலந்து பேசுங்கள். ‘பழக்கவழக்கங்களில் மிதமிஞ்சிப்போகக்’ கூடாது, இன்டர்நெட்டிற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி அதற்குள் மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிள்ளையின் மனதில் பதிய வையுங்கள். (1 தீமோத்தேயு 3:2) சோஷியல் நெட்வொர்க் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைப் புரிய வையுங்கள்.

நற்பெயர். ‘ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லவனா கெட்டவனா என்று வெளிப்படுத்த முடியும்.’ இது பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 20:11, ஈஸி டு ரீட் வர்ஷன்) சோஷியல் நெட்வொர்க்கில் பிள்ளைகள் போடும் விஷயங்களை வைத்தும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா எனத் தெரிந்துகொள்ளலாம். அதோடு, சோஷியல் நெட்வொர்க் என்பது ஒரு பொது இடத்தைப் போன்றது. எனவே, அதில் பிள்ளைகள் போடும் தகவல்கள் அவர்களுடைய நற்பெயரை மட்டுமல்ல, முழு குடும்பத்தின் நற்பெயரையும் நாசமாக்கிவிடும்.

என்ன செய்யலாம்? வெப் பக்கத்தில் நாம் போடும் தகவல்கள், நாம் எப்படிப்பட்டவர்கள் எனக் காட்டும் என்பதை டீன்-ஏஜ் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள். நாம் போடும் அனைத்து விவரங்களும் நிரந்தரமாக இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். டாக்டர் குவன் சர்ஜின் என்பவர் சைபர்சேஃப் புத்தகத்தில் இதைத்தான் சொல்கிறார்: “இன்டர்நெட்டில் போடும் விவரங்களை முழுவதுமாக அழிக்க முடியாது என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது மகா கஷ்டம். ஆனால், அதைத்தான் முக்கியமாக அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் அடிக்கடி இப்படிச் சொல்லலாம்: ஒருவரிடம் நேரில் பேசுவதற்குத் தயங்கும் விஷயங்களை ஆன்லைனில் பேசக் கூடாது.”

நட்பு. “பொதுவா டீன்-ஏஜ் பசங்க மத்தவங்க முன்னாடி பெரிய ஆளா காட்டிக்கனும்னுதான் நினைப்பாங்க. அதனால, யாருனே தெரியாதவங்களகூட, ஏன் ஒழுக்கங்கெட்டவங்களகூட ‘ஃப்ரெண்டா’ ஏத்துக்குவாங்க” என்கிறாள் 23 வயது டான்யா.

என்ன செய்யலாம்? நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தனக்கென்று ஒரு “கொள்கை” வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். அக்சிலியா (22 வயது) தன் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் நண்பர்களின் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என ஒரு கொள்கை வைத்திருக்கிறாள். “எனக்கு ஒருத்தர தெரியலனா... ஒருத்தர நேரா பாத்ததில்லனா... அவங்கள ‘ஃப்ரெண்டா’ சேத்துக்க மாட்டேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரிஞ்சவங்க எல்லாம் எனக்கு ‘ஃப்ரெண்டா’ ஆயிட முடியாது.”

சுனில், ஜூலி என்ற தம்பதி தங்களுக்கென்று ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் மகளுடைய வெப் பக்கத்தைப் பார்க்கிறார்கள்; அவள் போடும் விஷயங்கள், அவளுடைய நண்பர்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்கிறார்கள். “அவளோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல எங்க பேரையும் சேத்துக்க சொன்னோம். ஏன்னா, சோஷியல் நெட்வொர்க்கல அவ யார்கூட எல்லாம் பேசுறாளோ அவங்கள எல்லாம் வீட்டுக்கே கூட்டிட்டு வந்த மாதிரி. அதனால அவங்க யாருனு நாம தெரிஞ்சிக்கிறது முக்கியம்” என்கிறார் ஜூலி.

[பக்கம் 19-ன் படம்]

அலட்சியமாக ஓட்டினால் கார் நாசமாகிவிடும், அதேபோல உங்கள் வெப் பக்கத்தில் மோசமான ஃபோட்டோவைப் போட்டால்... அசிங்கமான குறிப்புகளை எழுதினால்... உங்கள் நற்பெயர் நாசமாகிவிடும்

[பக்கம் 20-ன் படம்]

முன்பின் தெரியாத ஒருவரை காரில் ஏற்றிக்கொள்வீர்களா? நெட்வொர்க்கில் மட்டும் ஏன் யாரோ ஒருவரை ஃப்ரெண்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?