துன்பமே இல்லாத வாழ்க்கை நிச்சயம் வரும்
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:4.
இதைக் கேட்கும்போதே இதயத்திற்கு இதமாக இருக்கிறது, அல்லவா? ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேறுமா? ஆதாமுக்குக் கடவுள் ஆரம்பத்தில் கொடுத்த எச்சரிக்கையை நினைத்துப் பாருங்கள். அவன் கீழ்ப்படியவில்லையென்றால் நிச்சயம் ‘சாவான்’ என்று கடவுள் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 2:17) கடவுள் சொன்னபடியே நடந்தது, ஆதாம் இறந்து போனான். இன்றுவரை அவனுடைய வம்சத்தாரும் துன்பப்பட்டு சாகிறார்கள். கடவுளுடைய வாக்குறுதியை நம்பலாம் என்பதற்கு இதுவே அத்தாட்சி அளிக்கிறது. அப்படியிருக்க, பூமி மீண்டும் பூஞ்சோலையாக மாறும் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதி மட்டும் நிறைவேறாமல் போகுமா?
அதுமட்டுமல்ல, முந்தின கட்டுரையில் கடவுளுக்கு இருக்கும் இரக்கம், அன்பு, நீதி போன்ற குணங்களைப் பார்த்தோம். அந்தக் குணங்கள் நம்மிடமும் இருப்பதால்தான் துன்பங்களுக்கு முடிவுகட்ட நாம் விரும்புகிறோம். அப்படியென்றால், கடவுள் இன்னும் எந்தளவுக்கு விரும்புவார். அதோடு, இன்று உலகத்தில் நடக்கும் சம்பவங்களும், மக்களின் மனப்பான்மையும் கடவுள் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்பார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.— “இவையெல்லாம் எப்போது நடக்கும்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
துன்பங்களைச் சுவடு தெரியாமல் துடைத்தழிக்க யெகோவாவால் மட்டுமே முடியும் என்று எப்படிச் சொல்லலாம்? யெகோவா தம் மகனாகிய இயேசுவைப் பயன்படுத்தி துன்பத்திற்கான ஆணிவேரை வேரோடு பிடுங்கப்போகிறார், அதற்காக அவர் சில ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சொந்தத் தீர்மானம்.
முதல் மனிதனான ஆதாம் செய்த தீர்மானம் முழு மனிதகுலத்துக்கும் கொடிய துன்பங்களைக் கொண்டுவந்தது. “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (ரோமர் 8:22) இதற்குக் கடவுள் தந்த தீர்வை ரோமர் 6:23 விளக்குகிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்; நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லா வாழ்வு.” இந்தத் தீர்வு, நீதியின் சிகரமாய்... இரக்கத்தின் மகுடமாய்... எளிமையின் இலக்கணமாய்... இருக்கிறது.
பரிபூரண மனிதனாகிய இயேசு பாவமே செய்யவில்லை. அவர் கழுமரத்தில் இறந்ததால், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட வழி பிறந்திருக்கிறது. அதனால், புதிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை நமக்குக் கிடைத்திருக்கிறது. அங்கு நமக்குப் பாவம் செய்யும் மனப்பான்மை இருக்காது, எனவே, தவறான தீர்மானங்களை எடுக்க மாட்டோம். மற்றவர்களுக்கு வேண்டுமென்றே கஷ்டம் கொடுப்பவர்களும் அங்கு இருக்க மாட்டார்கள். ஏனென்றால், “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்.”—சங்கீதம் 37:9.
எதிர்பாரா சம்பவங்களும் அபூரணமும்.
கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசுவுக்கு இயற்கைச் சக்திகளை அடக்க வல்லமை இருக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டில், ஒரு சமயம் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் பயணம் செய்தபோது “பலத்த புயல்காற்று வீச ஆரம்பித்தது; அலைகள் எழும்பி படகை மோதிக்கொண்டிருந்தன, படகு தண்ணீரால் நிறைந்துகொண்டே வந்தது.” சீடர்கள் இயேசுவிடம் உதவி கேட்டபோது “அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலை நோக்கி, ‘உஷ்! அமைதியாக இரு!’ என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது.” சீடர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, “காற்றும் மாற்கு 4:37-41.
கடலும் இவருக்கு அடங்கிவிடுகின்றனவே” என்று சொல்லிக்கொண்டார்கள்.—இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது அவருக்குக் கீழ்ப்படிகிற மனிதர்கள் ‘விக்கினமின்றி வாசம்பண்ணி [“பாதுகாப்பாய் வாழ்ந்து,” NW], ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.’ (நீதிமொழிகள் 1:33) இயற்கைப் பேரழிவுகளும்கூட மனிதர்களை அச்சுறுத்தாது... பூமியை யாரும் கெடுக்க மாட்டார்கள்... விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்ட மாட்டார்கள்... இயற்கைச் சக்திகளின் எச்சரிப்புகளை யாரும் அசட்டை செய்ய மாட்டார்கள்... மனிதத் தவறுகளால் வேறெந்த பிரச்சினைகளும் வராது... எதிர்பாராத சம்பவங்களினால் யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள்.
இன்று எதிர்பாராத சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுடைய துன்பங்களை இயேசு தம்முடைய ஆட்சியில் சரிசெய்வார். அவர் பூமியில் வாழ்ந்தபோதே அதைச் செய்துகாட்டினார். “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொன்னார். (யோவான் 11:25) ஆம், இயற்கைப் பேரழிவுகளினால் இறந்துபோன லட்சக்கணக்கான மக்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவரப்போகிறார். அதைச் செய்ய அவருக்கு ஆசையும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது. இதை எப்படி நம்புவது? உயிர்த்தெழுதல் நிச்சயம் நடக்கும் என்பதற்கு அத்தாட்சியாக இயேசு பூமியில் வாழ்ந்தபோதே சிலரை உயிர்த்தெழுப்பி காட்டினார். அவற்றில் மூன்று உயிர்த்தெழுதல்கள் பைபிளில் இருக்கின்றன.—மாற்கு 5:38-43; லூக்கா 7:11-15; யோவான் 11:38-44.
“இந்த உலகத்தை ஆளுகிறவன்.”
“மரணத்திற்கு வழிவகுக்கிற பிசாசை . . . அழிப்பதற்கு” இயேசு கிறிஸ்துவைக் கடவுள் நியமித்திருக்கிறார். (எபிரெயர் 2:14) “இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 12:31) இந்த உலகத்தை தன் இஷ்டப்படி ஆட்டிப்படைக்கும் பிசாசின் கொட்டத்தை அவர் அடக்குவார், அவனுடைய ‘செயல்களை ஒழித்துக்கட்டுவார்.’ (1 யோவான் 3:8) சாத்தானுடைய மனப்பான்மை சிறிதும் எட்டிப்பார்க்காத ஓர் உலகில்... பேராசை, லஞ்சலாவண்யம், சுயநலம் என்று எதுவுமே இல்லாத ஓர் உலகில்... நாம் எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக வாழ்வோம்! (g11-E 07)