Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்பம் எப்போதுதான் தீருமோ?

துன்பம் எப்போதுதான் தீருமோ?

கியோவின் கண்ணீர் கதையைக் கேளுங்கள். அவருடைய அப்பா இன்னொருவருடைய சோளக்காட்டில் மாடுகளை மேயவிட்டதற்காகக் கொல்லப்பட்டார். பிற்பாடு, அவருடைய அம்மாவும் இரண்டு சகோதரிகளும் கம்போடியாவின் கமெர் ரூஷ் இயக்கத்தாருடைய போராட்டத்தில் கொல்லப்பட்டார்கள். பின்னர், கியோவின் காலை ஒரு கண்ணிவெடி பதம் பார்த்தது. உதவிக்காக 16 நாட்கள் காட்டிலேயே காத்துக்கிடந்தார். கடைசியில் தன் காலையே இழந்தார். “நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கனும்” என்று கியோ கதறினார்.

துன்பம் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. இயற்கைப் பேரழிவுகள், வியாதிகள், ஊனம், கட்டுக்கடங்காத குற்றச்செயல்கள் போன்றவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். மனிதநல அமைப்புகள் மனிதர்களுக்கு வரும் துன்பங்களைத் தடுக்கவும், துடைக்கவும் ஓயாமல் பாடுபடுகின்றன. ஆனால், அவர்களுடைய முயற்சிகள் பலித்திருக்கிறதா?

உதாரணமாக, பசிப்பட்டினியைத் துடைத்தழிப்பதற்கான முயற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். டோரான்டோ ஸ்டார் என்ற செய்தித்தாளின்படி, இயற்கைப் பேரழிவுகளினால் அநேகர் உணவில்லாமலும், வீடில்லாமலும் தவிக்கிறார்கள். “பசியைப் போக்க இந்த அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளுக்கு, அதிகரித்து வரும் வன்முறை தடைக்கல்லாய் இருக்கிறது” என்று அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.

அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள், மருத்துவ நிபுணர்கள் எல்லாரும் துன்பத்தைப் போக்க தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள். ஆனால், எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் போடப்பட்ட திட்டங்களால் ஏழ்மையை விரட்ட முடியவில்லை. தடுப்பூசிகள், மருந்துகள், நவீன அறுவை சிகிச்சைகள் எல்லாம் இருந்தாலும் வியாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. கொடூரமான குற்றச்செயல்களை அடக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகளும், சமாதானப்படை வீரர்களும் திணறுகிறார்கள். அவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன.

அப்படியானால், ஏன் இவ்வளவு துன்பம்? மனிதர்கள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பைபிளில் ஆறுதலான பதில்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கானோர் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தப் பதில்களை நாமும் பார்க்கலாம். (g11-E 07)