Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்டர்நெட் மோசடி மோசம் போகாதீர்கள்!

இன்டர்நெட் மோசடி மோசம் போகாதீர்கள்!

இன்டர்நெட் மோசடி மோசம் போகாதீர்கள்!

அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் வசிக்கும் வில்லியம் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ஒரு ஈ-மெயில் வந்தது. இன்டர்நெட் சேவையை அளிக்கும் நிறுவனத்திலிருந்து அது வந்ததாக அவர் நினைத்தார். அவருடைய ‘பில்’ பற்றிய விவரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக அந்த ஈ-மெயில் சொன்னது. உடனே அதில் இணைக்கப்பட்டிருந்த படிவத்தில் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து பதில் ஈ-மெயில் அனுப்பினார். அவருக்குத் தெரியாமலேயே அந்த விவரங்கள் எல்லாம் சிவா என்ற ஒரு ஏமாற்றுப்பேர்வழியிடம் சென்றுவிட்டது. அவன் நியு யார்க்கில், குயின்ஸ் நகரைச் சேர்ந்தவன். அடுத்த நாளே வில்லியமின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இன்னும் நிறைய பேரை ஏமாற்றுவதற்கு அவன் ஒரு பிரிண்டரை வாங்கினான். வில்லியமிற்கு அனுப்பியதைப் போலவே லட்சம் மெயில்களை சிவா அனுப்பியிருந்தான். சுமார் நூறு அப்பாவிகள் இதற்கு பலிகடா ஆகியிருப்பதாகத் துப்பறியும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 56 வயது பெண்மணி ஆன்லைனில் ஒருவரைக் காதலித்தார். அவர் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு இன்ஜினியர் என்று நினைத்தார். அவர் கேட்கும்போதெல்லாம் அந்தப் பெண்மணி பணத்தை வாரியிறைத்தார். இப்படி 47,000 டாலரை [இந்திய மதிப்பில் சுமார் 24,52,000 ரூபாய்] பறிகொடுத்தார். பிறகுதான் அந்த ஆள் நைஜீரியாவில் வசிக்கும் 27 வயது வாலிபன், சரியான மோசடிக்காரன் என்று தெரியவந்தது. a

இன்டர்நெட் மோசடி இன்று சாதாரண விஷயமாகிவிட்டது. கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் என்ற பத்திரிகையில் “2010-ல் நெட் நிலவரம்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை சொன்னது: “இன்டர்நெட் மோசடி நாளுக்குநாள் எகிறிக்கொண்டே போகிறது. அதன் வாடிக்கையாளர்கள் பல கோடி ரூபாயைப் பறிகொடுத்திருக்கிறார்கள். கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் நெட்டில் வைரஸின் தாக்குதலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் வீட்டில் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்துகிற 40 சதவீதத்தினர் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர், நெட்டில் உலாவும் இன்னும் ஏராளமான வைரஸுகளைப் பற்றி புகார் செய்திருக்கிறார்கள்.” இதுபோன்ற மோசடிக்காரர்களின் கைவரிசைகள் சிலவற்றை முதலில் பார்ப்போம், பின்பு அந்த மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கயவர்களின் கைவரிசைகள்

மோசடிக்காரர்கள் ஈ-மெயில் அனுப்பித்தான் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். வில்லியமிற்கு வந்த ஈ-மெயில் ஒரு ஃபிஷ்ஷிங் ஈ-மெயில். தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போலத்தான் இது. அவர்கள் அனுப்பும் மெயில் உண்மையிலேயே ஓர் அங்கீகாரம் பெற்ற வெப் தளத்திலிருந்து வருவது போல் இருக்கும். ஆனால், அது ஒரு தூண்டில். அந்த மெயில் மூலமாக ஒருவருடைய பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண், வங்கி கணக்கு போன்றவற்றை நாசுக்காக அபகரித்துவிடுவார்கள். ஈ-மெயில் எக்ஸ்ட்ராக்டர் (e-mail extractor) என்ற கம்ப்யூட்டர் புரோகிராமை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் உங்கள் ஈ-மெயில் முகவரியைக் கறந்துவிடுவார்கள்.

சில ஃபிஷ்ஷிங் ஈ-மெயில்கள் தந்திரமானவை. அதில் உங்கள் தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றில்லை, வெறுமனே திறந்தாலே போதும், உடனே ஸ்பை சாஃப்ட்வேர் உங்கள் கணினிக்குள் ஊடுருவிவிடும். இது உங்கள் கணினியின் செயல்பாட்டை எல்லாம் பதிவு செய்துவிடும். இந்த வகை புரோகிராமில் சில, படு உஷாரானவை. கீபோர்ட்டில் உங்கள் விரல் அசைவுகளைப் படித்தே உங்களுடைய பாஸ்வேர்டையும் தனிப்பட்ட விவரங்களையும் மோசடிக்காரர்களிடம் தெரிவித்துவிடும். இன்னும் சில புரோகிராம்கள் உங்களை மோசடி வெப் தளத்திற்கு இழுத்துச் சென்றுவிடும். இதுபோன்ற மோசடி வலையில் சிக்காமல் இருக்க ஏதாவது வழி இருக்கிறதா?

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களுக்கு வரும் ஈ-மெயில்களில் சந்தேகமளிக்கும் இணைப்புகள் (Links) இருந்தால் அதைத் தொடாதீர்கள். இதன் மூலமாக ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் என்ற சாஃப்ட்வேர் உங்கள் கணினிக்குள் ரகசியமாகப் புகுந்துவிடும். மோசடிக்காரர்கள் உங்களுக்குத் தெரியாமலே கணினிக்குள் நுழைவதற்குப் பின்வாசலைத் திறந்து வைத்துவிடும். கருத்து பரிமாற்ற தளங்கள், ஆபாச வெப் தளங்கள், முன்பின் தெரியாத தளத்திலிருந்து சாஃப்ட்வேர்களை அளிக்கும் வெப் தளங்கள், சோஷியல் நெட்வொர்க் தளங்கள், ஆகியவற்றின் மூலமும் மோசடிக்காரர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக ஸ்பை சாஃப்ட்வேரை திணிக்கிறார்கள். அதோடு, ‘உங்களுக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு’ என்பது போல் ஆசை காட்டி மோசம் போக்கும் ஈ-மெயில்களுக்குப் பதில் அனுப்பாதீர்கள்.

சில சமயம், “உங்கள் கணினியில் வைரஸ்! பாதுகாக்க இங்கே கிளிக் செய்யுங்கள்,” “இலவச ஸ்கிரீன்சேவர் வேண்டுமா, இங்கே கிளிக் செய்யவும்” போன்ற துணுக்குச் செய்திகள் உங்கள் கணினியில் வரலாம். தப்பித்தவறி கிளிக் செய்தால் ஸ்பை சாஃப்ட்வேர் அதன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிடும்.

இன்டர்நெட் மூலமாக வேலை தேடுகிறீர்கள் என்றால், ஜாக்கிரதை! மோசடிக்காரர்கள் போலி ஆன்லைன் தளங்களின் மூலம் உங்களிடம் “பதிவு கட்டணம்” வசூலித்துவிடலாம்; பணம் சம்பந்தமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையும் அபகரித்துவிடலாம்.

இப்போதெல்லாம் இன்டர்நெட் கொள்ளையர்கள் ரொம்ப கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு கம்பெனிகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணினிகளில் உள்ள தகவல்தளங்களை (databases) கொள்ளையடிக்கிறார்கள். ஜனவரி 2007-ல் அமெரிக்காவில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடியின் கணினிகளுக்குள் சில கயவர்கள் அத்துமீறி நுழைந்தார்கள். அதில் பதிவாகியிருந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் விவரங்களை, கிரெடிட் கார்ட் தகவல்களைக் கையாடினார்கள். நைஜீரியாவில் இதேபோல் சைபர் திருடர்கள் பல வங்கிகளிலுள்ள கணினியின் தகவல்தளங்களுக்குள் நுழைந்து 15 லட்ச வாடிக்கையாளர்களின் அடையாள எண்களைத் திருடினார்கள்; ஏடிஎம்-லிருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக அப்படிச் செய்தார்கள். இப்போதெல்லாம் ஆன்லைன் கருப்பு சந்தையே கொடிகட்டி பறக்கிறது! அதில் தில்லுமுல்லு செய்யும் தொழிலாளிகளும் சைபர் திருடர்களும் தாங்கள் திருடிய கிரெடிட் கார்ட் விவரங்களையும் வாடிக்கையாளர்களைப் பற்றிய முழு விவரத்தையும் மற்றவர்களுக்கு விற்கிறார்கள். (g12-E 01)

[அடிக்குறிப்பு]

a இன்டர்நெட்டில் டேட்டிங் செய்வதால் வரும் ஆபத்தை பற்றி விழித்தெழு! பத்திரிகை எச்சரித்துள்ளது. மே 8 2005 பக்கங்கள் 12-14-ஐயும், ஜூன் 8 2005 பக்கங்கள் 22-24-ஐயும் பாருங்கள்.

[பக்கம் 11-ன் பெட்டி]

ஃபிஷ்ஷிங் ஈ-மெயில்: பார்ப்பதற்கு அங்கீகாரம் பெற்ற வெப் தளத்திலிருந்து வந்ததுபோல் தோன்றுகிற இந்த ஈ-மெயில் ஒருவருடைய பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண், வங்கி கணக்கு போன்றவற்றை நாசுக்காக அபகரித்துவிடும்

ஸ்பை சாஃப்ட்வேர்: உங்கள் கணினியின் செயல்பாட்டை எல்லாம் பதிவு செய்துவிடும் ஒரு புரோகிராம்

ட்ரோஜன் ஹார்ஸ்: எந்தக் கெடுதலும் செய்யாதது போல் தோன்றுகிற, கணினியின் பாதுகாப்புச் சுவரை மீறி நுழைந்துவிடுகிற ஒரு புரோகிராம்

[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]

ஏமாற வேண்டாம்

மோசடி வலையில் சிக்காமல் இருக்க சில வழிகள்:

1 உங்களுடைய கம்ப்யூட்டர் ஃபயர்வால்-ஐ (firewall) எப்போதும் ‘ஆன்’ செய்தே வைத்திருங்கள். அதோடு ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன்ஸ், வைரஸை தடுக்கும் சாஃப்ட்வேர் ஆகியவற்றைத் தவறாமல் அப்டேட் செய்யுங்கள்.

2 உங்கள் கோப்புகளுக்குத் தவறாமல் பேக்-அப் எடுங்கள், அந்த நகல்களைப் பத்திரமாக வையுங்கள்.

3 நன்கு யோசித்து செயல்படுங்கள். இன்டர்நெட்டில் வரும் எல்லா தகவலையும் நம்பிவிடாதீர்கள். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது.

4 பேராசை வேண்டாம். (லூக்கா 12:15) “இலவசம்” என்று ஏதாவது விளம்பரம் வந்தாலோ வெப் தளங்கள், மிக மலிவான விலையில் பொருள்களை விற்றாலோ ஜாக்கிரதை! அது ஒரு ஃபிஷ்ஷிங் வெப் தளமாக இருக்கலாம்.

5 தேவையற்ற ஈ-மெயில்கள் வந்தால் உஷார்! அதோடு உடனுக்குடன் பரிமாறும் மெசேஜுகள் வந்தால், முக்கியமாக ஏதாவது இணைப்புகளுடன் வந்தால் ஜாக்கிரதையாய் இருங்கள். அதேபோல், உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், உதாரணத்திற்கு உங்கள் பாஸ்வேர்ட்-ஐ சரிபார்க்கும்படி கேட்டால் கவனமாய் இருங்கள்.—நீதிமொழிகள் 11:15.

6 மற்றவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்துங்கள். அவ்வப்போது உங்கள் பாஸ்வேர்ட்-ஐ மாற்றுங்கள். எல்லா அக்கவுண்டுக்கும் ஒரே பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தாதீர்கள்.

7 கிரெடிட் கார்ட் அல்லது வங்கி பற்றிய தகவல்களை அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான வெப் தளங்களுக்கு மட்டுமே கொடுங்கள்.

8 வெப் முகவரியைப் பிழையில்லாமல் டைப் செய்யுங்கள். முக்கியமாக வங்கி போன்ற நிதி நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பும்போது கவனமாய் இருங்கள். ஒரு எழுத்து மாறினால்கூட அது போலி வெப் தளத்திற்குச் சென்றுவிடலாம்.

9 முக்கியமான விவரங்களை ரகசிய பாதுகாப்பு இணைப்புகள் (encrypted connections) மூலமாக அனுப்புங்கள். உதாரணமாக, கிரெடிட் கார்ட் விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை அப்படி அனுப்புங்கள். வேலை முடிந்தவுடன் அந்த வெப் தளத்தைவிட்டு வெளியே வந்துவிடுங்கள்.

10 கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி ஸ்டேட்மென்டுகளை அடிக்கடி சரி பாருங்கள். அதில் ஏதாவது தவறான விவரங்கள் இருந்தால் உடனே அந்த வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.

11 பாதுகாப்பற்ற வயர்லெஸ் (Wi-Fi) இணைப்புகளைப் பயன்படுத்தினால் ஜாக்கிரதை! சைபர் ஆசாமிகள் உங்களைப் பற்றிய விவரங்களைத் திருடிவிடலாம், அல்லது மோசடி வெப் தளத்திற்கு உங்களை வழிநடத்திவிடலாம்.

12 “பாஸ்வேர்ட்-ஐ நினைவில் வைக்க வேண்டுமா?” என்ற கேள்விக்கு வேண்டாம் என்று பதிலளியுங்கள். ட்ரோஜன் புரோகிராம் உங்கள் பாஸ்வேர்ட்-ஐ கையாடிவிடும்.