பைபிளின் கருத்து
ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்த முடியுமா?
இன்று பல நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் தரும் விளக்கத்திற்கு “நவீன நாளைய புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில்” புது விளக்கம் தர வேண்டும் என அமெரிக்காவில் ஒரு சர்ச்சிலுள்ள தொகுதியினர் சொல்கிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த ஒரு பாஸ்டர் சமீபத்தில் ஓர் ஆணைத் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சர்ச் இந்தப் பழக்கத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் “பைபிளைப் புதிய கண்ணோட்டத்தில் படியுங்கள்” என அவர் சொல்கிறார்.
மறுபட்சத்தில், ஓரினச்சேர்க்கை பழக்கத்தைக் கண்டனம் செய்கிறவர்கள் அந்தப் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்களை அறவே வெறுப்பவர்களென முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனால், ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
பைபிள் என்ன சொல்கிறது?
அந்தப் பழக்கத்தில் ஈடுபடும் ஆட்களை வெறுக்கும்படி பைபிள் சொல்வதில்லை. ஆனால், அந்தப் பழக்கத்தை வெறுக்கும்படித்தான் சொல்கிறது:
“பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.”—லேவியராகமம் [லேவியர்] 18:22, பொது மொழிபெயர்ப்பு.
ஒழுக்கமாக வாழ்வது பற்றி இஸ்ரவேல் மக்களுக்கென்றே பல சட்டங்களைக் கடவுள் கொடுத்தார். அதில் ஒன்றுதான் மேலே பார்த்த இந்தச் சட்டம். ஓரினச்சேர்க்கை பழக்கத்தைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை இது காட்டுகிறது. யூதரோ யூதரல்லாதவரோ யார் அந்தப் பழக்கத்தில் ஈடுபட்டாலும், அது கடவுளுக்கு ‘அருவருப்பானது.’ ஓரினச்சேர்க்கை, முறைகேடான பாலுறவு, மணத்துணைக்கு துரோகம் போன்ற ஒழுக்கங்கெட்ட செயல்களைத் திருச்சட்டம் தடைசெய்தது. ஆனால், இஸ்ரவேலரைச் சுற்றியிருந்த மற்ற தேசத்தார் இந்தப் பழக்கத்தில் ஈடுபட்டு வந்தனர். எனவே, கடவுள் அந்த மக்களைத் தீட்டானவர்களாகக் கருதினார். (லேவியராகமம் 18:24, 25) சரி, கிறிஸ்தவ சபை ஆரம்பமான பிறகு பைபிளின் கருத்து மாறிவிட்டதா? இந்த வசனத்தைக் கவனியுங்கள்:
“இழிவான காமப்பசிக்கு இடமளித்துவிடும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்; அவர்கள் மத்தியிலுள்ள பெண்கள் இயல்பான முறையில் உறவுகொள்வதை விட்டுவிட்டு இயல்புக்கு மாறான முறையில் உறவுகொண்டார்கள். அவ்வாறே, ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவுகொள்வதை விட்டுவிட்டு, ஒருவர்மீது ஒருவர் மோகங்கொண்டு காமத் தீயில் பற்றியெரிந்தார்கள்; ஆண்கள் ஆண்களோடு ஆபாசமாக நடந்து . . . கொண்டார்கள்.”—ரோமர் 1:26, 27.
ஓரினச்சேர்க்கையை பைபிள் ஏன் இயல்புக்கு மாறானது, ஆபாசமானது எனச் சொல்கிறது? ஏனென்றால், இந்த முறையில் உடலுறவு வைத்துக்கொள்ள கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை. ஓரினச்சேர்க்கையின் மூலமாகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இந்தப் பழக்கத்தை பைபிள் எதனுடன் ஒப்பிடுகிறது தெரியுமா? நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வருவதற்குமுன் கீழ்ப்படியாத தேவதூதர்கள் பூமிக்கு வந்து பெண்களுடன் உறவுகொண்டதோடு ஒப்பிடுகிறது. (ஆதியாகமம் 6:4; 19:4, 5; யூதா 6, 7) இந்த இரண்டு விதமான உறவும் கடவுளுடைய பார்வையில் இயல்புக்கு மாறானது.
ஓரினச்சேர்க்கையை ஏன் நியாயப்படுத்துகிறார்கள்?
‘பரம்பரை, வளர்ந்த சூழல், வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் (ஒருவேளை பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம்) போன்ற காரணங்களினால் ஒருவர் ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு அடிமையாகிறார்’ என்று சொல்லி சிலர் இதை நியாயப்படுத்தலாம். ஆனால், என்ன காரணம் சொன்னாலும் அது தவறுதான். ஓர் உதாரணத்தைப் பாருங்கள்: சிலர் மதுபானத்திற்கு அடிமையாவதற்கு பரம்பரை, குடும்ப சூழல் காரணமாக இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலிலிருந்து வந்த ஒருவரை பார்க்கும்போது பொதுவாக எல்லாரும் பரிதாபப்படுவார்கள். அதற்கென்று, அவர் மதுபானத்திற்கு அடிமையாகவே இருந்துவிடும்படி விட்டுவிடுவார்களா? அல்லது என்ன செய்தாலும் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது என்று சொல்வார்களா? நிச்சயம் அப்படிச் சொல்லமாட்டார்கள்.
ரோமர் 7:21-25; 1 கொரிந்தியர் 9:27) அதேசமயம், ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து விடுபட போராடுபவருக்குத் தேவையான உற்சாகத்தையும் நடைமுறை ஆலோசனையையும் பைபிள் அளிக்கிறது.
அதேபோல், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற ஆசையை அடக்க போராடுகிறவர்களை பைபிள் கண்டனம் செய்வதில்லை. அதே சமயத்தில், அந்த ஆசைக்கு அடிபணிந்துவிடுபவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதும் இல்லை. பரம்பரையினாலோ வேறு ஏதாவது காரணத்தினாலோ அதில் ஈடுபடுவதாக சாக்கு சொல்பவர்களைக்கூட அது கண்டனம் செய்கிறது. (கடவுள் என்ன விரும்புகிறார்?
“பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” கடவுளுடைய விருப்பம் என்று பைபிள் நம்பிக்கையூட்டுகிறது. (1 தீமோத்தேயு 2:4) ஓரினச்சேர்க்கை பழக்கத்தை பைபிள் வெறுக்கும்படி சொன்னாலும், அதில் ஈடுபடுகிறவர்களை வெறுக்கும்படி அது சொல்லவில்லை.
இந்தப் பழக்கத்தைக் கடவுள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. “ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று 1 கொரிந்தியர் 6:9, 10-ல் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், 11-ஆம் வசனத்தில் ஆறுதலான ஒரு விஷயத்தை சொல்கிறது: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினாலும் கடவுளுடைய சக்தியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டீர்கள்.”
ஆக, கடவுளுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்று உள்ளப்பூர்வமாக ஆசைப்பட்டவர்கள் ஆரம்ப கால கிறிஸ்தவ சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இன்றும் அதுவே உண்மை. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்பும் நல்மனமுள்ள எல்லாரும், பைபிள் சத்தியங்களுக்கு புது விளக்கம் தராமல் அதில் உள்ளதை அப்படியே கடைப்பிடித்தால் கிறிஸ்தவ சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். (g12-E 01)
உங்கள் பதில்?
● ஓரினச்சேர்க்கை பழக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?—ரோமர் 1:26, 27.
● ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களை பைபிள் வெறுக்கிறதா?—1 தீமோத்தேயு 2:4.
● ஓரினச்சேர்க்கை பழக்கத்திலிருந்து விடுபட முடியுமா?—1 கொரிந்தியர் 6:9-11.
[பக்கம் 29-ன் படம்]
ஓரினச்சேர்க்கையைக் குறித்த கடவுளின் கருத்துக்கு புது விளக்கம் அளிப்பது சரியா?