Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் நண்பராக வயது ஒரு தடையா?

கடவுளின் நண்பராக வயது ஒரு தடையா?

கடவுளின் நண்பராக வயது ஒரு தடையா?

ஓலவி ஜெ. மட்டிலா சொன்னபடி

“கடவுள பற்றி முழுமையா தெரிஞ்சிக்க முடியுமான்னு நீங்க எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?” ஒரு யெகோவாவின் சாட்சி என்னிடம் கேட்ட அந்தக் கேள்வி என்னை யோசிக்க வைத்தது. அப்போது எனக்கு கிட்டத்தட்ட 84 வயது; அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் என நிறைய பிரபலமான ஆட்களையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அந்தத் தள்ளாத வயதில் என்னால் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரோடு நண்பராகவும் முடியுமா?

அ க்டோபர் 1918-ல் பின்லாந்திலுள்ள ஹைவின்காவில் நான் பிறந்தேன். சின்ன வயதிலேயே நான் பண்ணை வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து எல்லாம் வளர்த்தார்கள். அதனால், கஷ்டப்பட்டு உழைக்கக் கற்றுக்கொண்டேன், அதில் எனக்கு ஒரு தனி சந்தோஷம் கிடைத்தது.

சின்ன வயதிலிருந்தே, மேற்படிப்பு படிக்க பெற்றோர் என்னை ஊக்குவித்தார்கள். அதனால், ஸ்கூல் படிப்பு முடித்ததும் நான் வெளியூர் போய் ஒரு காலேஜில் படித்தேன். போட்டி விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினேன்; ஃபின்னிஷ் அத்லெட்டிக் அசோஸியேஷனில் சேர்மனாகப் பணியாற்றிய உர்ஹோ கெக்கனன் என்பவரோடு நட்பு ஏற்பட்டது. அவர் பின்லாந்தின் பிரதம மந்திரி ஆவார் என்றும் பிறகு ஜனாதிபதி ஆவார் என்றும் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுமட்டுமா, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு அரசியலில் பணிபுரிந்த அவர் என்னையும் அரசியலுக்கு இழுத்துவிட்டார்.

பதவியும் புகழும்

பின்லாந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 1939-ல் பகைமை பற்றியெரிந்தது. அதே வருடம் நவம்பர் மாதத்தில் நான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். முதலில், ராணுவ பயிற்சியாளராகச் சேவை செய்தேன்; பிற்பாடு மெஷின்-கன் (எந்திரத் துப்பாக்கி) படைப் பிரிவின் கமாண்டராகப் பணிபுரிந்தேன். பின்லாந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலுள்ள எல்லைப் பகுதியான கரிலியாதான் எங்கள் போர்முனை. 1941-ஆம் வருடம் கோடையில், விபார்க் என்ற ஊருக்கு அருகே போரிடுகையில் வெடிகுண்டிலிருந்து சிதறிய உலோகத் துண்டுகளால் படுகாயமடைந்தேன், ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். இந்தக் காயங்களால் மீண்டும் போரில் ஈடுபட முடியாமல் போனது.

செப்டம்பர் 1944-ல் நான் ராணுவத்திலிருந்து அனுப்பப்பட்டேன். திரும்பவும் காலேஜில் சேர்ந்தேன், போட்டி விளையாட்டுகளிலும் கலந்துகொண்டேன். மூன்று முறை தேசிய அளவில் சாம்பியன் ஆனேன்—இரண்டு முறை தொடர் ஓட்டத்தில், ஒரு முறை தடை ஓட்டத்தில். அதோடு, தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் பட்டப் படிப்பை முடித்தேன்.

இதற்கிடையே, உர்ஹோ கெக்கனன் அரசியலில் பெரும்புள்ளி ஆனார். 1952-ல் அவர் பிரதம மந்திரியாக இருந்தபோது, சீனாவில் தூதுவராகப் பணிபுரியும்படி என்னிடம் கேட்டார். அங்கே நிறைய அரசியல் அதிகாரிகளைச் சந்தித்தேன், சீனாவின் தலைவரான மா சே-துங்கைக்கூட சந்தித்தேன். இவர்கள் எல்லாரையும்விட மிக முக்கியமான ஒருவரையும் சந்தித்தேன்; அவர்தான் பின்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த ஆன்னிக்கி. நவம்பர் 1956-ல் இந்த அழகிய இளம் பெண்ணைக் கரம்பிடித்தேன்.

அடுத்த வருடம், அர்ஜென்டினாவிலுள்ள பின்லாந்து தூதரகத்திற்கு மாற்றப்பட்டேன். அந்த ஊரில்தான் என்னுடைய இரண்டு பையன்களும் பிறந்தார்கள். ஜனவரி 1960-ல் நாங்கள் பின்லாந்துக்குத் திரும்பி வந்துவிட்டோம். அங்கு வந்த பிறகு எங்கள் மகள் பிறந்தாள்.

அரசியல் ஜாம்பவான்களோடு தொடர்பு

அரசியலில் எந்த முன்னனுபவமும் இல்லாதபோதிலும், நவம்பர் 1963-ல் வெளிநாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவியேற்கும்படி ஜனாதிபதி கெக்கனன் என்னிடம் கேட்டுக்கொண்டார். அடுத்த 12 வருடங்களில், நான் ஆறு துறைகளில் அமைச்சராகப் பணிபுரிந்தேன். அதில் இரண்டு முறை வெளியுறவு அமைச்சராக இருந்தேன். அப்போதெல்லாம், உலகப் பிரச்சினைகளை மனிதரால் தீர்க்க முடியும் என உறுதியாக நம்பினேன். ஆனால், மனிதன் பதவிக்காக வெறிபிடித்து அலைவதை போகப் போக நன்றாகப் புரிந்துகொண்டேன். அவநம்பிக்கையாலும் பொறாமையாலும் வந்த தீய விளைவுகளைக் கண்ணாரக் கண்டேன்.—பிரசங்கி 8:9.

அதே சமயத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்காக உண்மையாக உழைக்கிற நிறைய தலைவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தத் தலைவர்களால்கூட சில சமயங்களில் தங்களுடைய லட்சியங்களை எட்ட முடிவதில்லை.

ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்குமான மாநாடு ஹெல்சிங்கியில் 1975-ஆம் ஆண்டு ஒரு கோடை காலத்தில் நடந்தது. அதற்கு 35 மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் வந்திருந்தார்கள். அப்போது, நான் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி கெக்கனனின் முக்கிய ஆலோசகராகவும் இருந்தேன். அந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த எல்லாத் தலைவர்களையும் நான் சந்தித்தேன்.

எனக்குக் கொடுத்த பொறுப்புகளைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அந்தத் தலைவர்களை வரிசைமுறையில் உட்கார வைக்கும் ஒரு விஷயத்திலேயே நான் படாத பாடு பட்டுவிட்டேன். இருந்தாலும், அந்த மாநாடும் சரி அதைத் தொடர்ந்து நடந்த கூட்டங்களும் சரி, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உதவியதாக நினைத்தேன், வல்லரசு நாடுகளுக்கு இடையே இன்னும் நல்லுறவை ஏற்படுத்தியதாக நம்பினேன்.

ஆன்மீகத் தாகம்

நான் 1983-ல் ஓய்வுபெற்றதும் பிரான்சுக்குக் குடிமாறினேன்; அங்குதான் என் மகள் இருந்தாள். அதன் பிறகு, என் வாழ்க்கையில் ஒரு பேரிடி தாக்கியது. நவம்பர் 1994-ல் என் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே வருடத்தில், ஒரு பண முதலீடு நிறுவனத்தில் நான் பார்ட்னராகச் சேர்ந்தேன்; அது ஒரு மோசடி நிறுவனமாக ஆகிவிடும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வாழ்க்கை பூராவும் நல்ல பேர் சம்பாதிக்க பாடுபட்டேன்; ஆனால், யோசிக்காமல் செய்த இந்த ஒரு தவறினால் என் பேரே கெட்டுப்போய்விட்டது.

நான் நிறைய முறை யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள்மேல் எனக்கு மதிப்பு மரியாதை இருந்தது, அவர்கள் கொடுத்த பத்திரிகைகளை வாங்கிக்கொள்வேன். ஆனால், நான் ரொம்ப பிஸியாக இருந்ததால், பைபிள் விஷயங்களைக் கேட்பதற்கு நேரமே கிடைக்கவில்லை. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட புற்றுநோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என் மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தேன். செப்டம்பர் 2002-ல் ஒருநாள் யெகோவாவின் சாட்சி ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேள்வியை அவர் என்னிடம் கேட்டார். அப்போது, ‘கடவுளைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள முடியுமா, அவரோடு நண்பராக முடியுமா?’ என்று யோசித்தேன். எங்கோ மூலையில் கிடந்த என் பைபிளைத் தேடி எடுத்தேன், யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வாரா வாரம் நிறைய பைபிள் விஷயங்களைப் பேச ஆரம்பித்தேன்.

ஜூன் 2004-ல் என் அன்பு மனைவி கண் மூடிவிட்டாள், நான் தனி மரமானேன். பிள்ளைகள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்தான். ஆனாலும், என் மனைவியை என்னால் மறக்க முடியவில்லை. சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. லூத்ரன் சர்ச் பாதிரிகள் இருவரிடம் இதைப் பற்றி கேட்டேன். “இதற்கெல்லாம் பதிலே கிடையாது” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னது எனக்குத் திருப்தியாக இல்லை. அதனால், இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள துடித்தேன்.

நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க படிக்க, என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் திருப்தியான பதில் கிடைத்தது. உதாரணமாக, மரணம் என்பது ஒரு உணர்வற்ற நிலை, அதாவது தூக்கத்தைப் போன்றது என பைபிளிலிருந்து தெரிந்துகொண்டேன்; இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு எழுந்து பூமியில் மனிதராக வாழ்வார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன். (யோவான் 11:25) இது எனக்கு நம்பிக்கை அளித்தது, மனதைத் தேற்றியது.

சீக்கிரத்திலேயே முழு பைபிளையும் வாசித்து முடித்தேன். என்னைக் கவர்ந்த ஒரு வசனம் மீகா 6:8. “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” என்று அது சொல்கிறது. அந்தச் சின்ன வசனத்தில் அத்தனை ஆழமான கருத்து இருப்பதைப் பார்த்து நான் மலைத்துப்போனேன். அதோடு, யெகோவா தேவன் எவ்வளவு அன்பானவர், நீதியானவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

எதிர்கால நம்பிக்கை

கடவுளைப் பற்றி அறிந்துகொண்டபோது, அவர்மீதுள்ள விசுவாசமும் நம்பிக்கையும் அதிகமானது. அவருடன் ஆத்மார்த்தமான நட்பு துளிர்க்க ஆரம்பித்தது! ஏசாயா 55:11-ல் உள்ள வார்த்தைகள் என் மனதைத் தொட்டன; அது இப்படிச் சொல்கிறது: ‘என் வாயிலிருந்து புறப்படும் வசனம் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.’ ஆம், கடவுள் இதுவரை தம் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார், எதிர்காலத்திலும் அப்படியே செய்வார். மனித அரசாங்கங்களாலும் அவர்களுடைய மாநாடுகளாலும் சாதிக்க முடியாதவற்றை அவர் சாதிப்பார். உதாரணத்திற்கு, ‘அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவார்’ என்று சங்கீதம் 46:9 சொல்கிறது.

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொண்டபோது நான் பெற்ற நன்மைகளுக்கு அளவே இல்லை. இயேசுவின் உண்மையான சீடர்களுக்கு அடையாளமே உள்ளப்பூர்வமான அன்புதான்; அதை நான் அங்குதான் நேரில் பார்த்தேன். (யோவான் 13:35) இது தேசம், இனம் என்ற பாகுபாட்டையெல்லாம் கடந்தது, அரசியலிலும் வர்த்தகத்திலும் பார்க்க முடியாதது.

இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு

இப்போது எனக்கு 90 வயதுக்குமேல் ஆகிவிட்டது. ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பது எனக்கு இதுவரை கிடைக்காத மிகப் பெரிய பாக்கியம் என்றே சொல்வேன். என் கேள்விகளுக்கெல்லாம் இப்போது திருப்தியான பதில் கிடைத்துவிட்டது. ஆம், வாழ்க்கையின் நோக்கத்தையும் கடவுளைப் பற்றிய உண்மையையும் தெரிந்துகொண்டேன்.

இந்தத் தள்ளாத வயதிலும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் தவறாமல் செல்ல முடிவதை நினைத்து ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். நான் அரசியல் தலைவர்களோடு பழகியிருக்கிறேன், பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். ஆனாலும், படைப்பாளரான யெகோவா தேவனைப் பற்றி தெரிந்துகொண்டு அவருடைய நண்பனாக இருப்பதுதான் இந்த எல்லா வாய்ப்புகளிலும் எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. அதற்காக அவருக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்; அவருடைய ‘சக வேலையாட்களில்’ ஒருவனாக ஆனதற்கு அவருக்குப் புகழ்மாலை சூட்டுகிறேன். (1 கொரிந்தியர் 3:9) படைப்பாளரான யெகோவா தேவனுடைய நண்பராவதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று அடித்துச் சொல்வேன். (g12-E 01)

[பக்கம் 21-ன் படம்]

ஜனாதிபதி கெக்கெனன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஃபோர்ட்டுடன் 1975-ல் ஹெல்சிங்கி மாநாட்டின்போது

[பக்கம் 21-ன் படம்]

ஜனாதிபதி கெக்கெனன் மற்றும் சோவியத் தலைவர் ப்ரெஷ்னெவ்வுடன்

[பக்கம் 22-ன் படம்]

ஊழியத்தில் எப்போதும் கலந்துகொள்கிறேன்

[பக்கம் 21-ன் படம்]

இடப்பக்கம் கீழே: Ensio Ilmonen/Lehtikuva; வலப்பக்கம் கீழே: Esa Pyysalo/Lehtikuva