Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், தரமான பொழுது போக்கைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு எதையும் செய்ய மாட்டீர்கள். ஏன்? இன்றைய பொழுதுபோக்கில் ஆபாசம், வன்முறை, மாயமந்திரம் எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. கிறிஸ்தவராக இதுபோன்ற பொழுதுபோக்குகளில் நாம் ஈடுபடக்கூடாது. அதேசமயம், நல்ல பொழுதுபோக்குகளும் இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று இப்போது பார்க்கலாமா? a

சினிமா

உங்களுக்கு எந்த மாதிரி சினிமா பிடிக்கும் என்று கீழே ✔ செய்யுங்கள்.

  • ❍ நகைச்சுவை

  • ❍ நாடகம்

  • ❍ அதிரடி/த்ரில்

  • ❍ அறிவியல் ஃபிக்‍ஷன்

  • ❍ மற்றவை

விஷயம் தெரியுமா? இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,000 படங்களுக்கு மேல் வெளியாகிறதாம்! மற்ற நாடுகளோடு ஒப்பிட இது மிக மிக அதிகம்.

எதைத் தவிர்க்கலாம்? பைபிள் வெறுக்கும் விஷயங்களையே நிறைய படங்கள் ஊக்குவிக்கின்றன. சில படங்கள் வன்முறையையும் ஆபாசத்தையும் தத்ரூபமாகக் காட்டுகின்றன, இன்னும் சில படங்கள் மாயமந்திரத்தைச் சித்தரிக்கின்றன. ஆனால், “கடுங்கோபம், சினம், தீய குணம், பழிப்பேச்சு ஆகிய அனைத்தையும் அறவே விட்டுவிடுங்கள்; ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:8) அதுமட்டுமல்ல, மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தச் செயலையும் கடவுள் கடுமையாகக் கண்டிக்கிறார்.—உபாகமம் 18:10-13.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்? “ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமானு திரைவிமர்சனத்த வைச்சே முடிவு பண்ணிடுவேன்.”—ஜெனி. b

“பைபிள் சொல்றபடி நடக்கிறவங்கள தவிர, வேற யாரு சொன்னாலும் அத கேட்டு நான் தீர்மானம் எடுக்க மாட்டேன்.”—கேத்ரீன்.

“தியேட்டர்ல படம் பார்த்துட்டு இருக்கும்போது கதை மோசமா போற மாதிரி தெரிஞ்சா உடனே வெளியே வந்திடுவேன்.”—மரினா.

“படம் பார்க்குறதுக்கு முன்னாடி, அத பத்தி இன்டர்நெட்ல தேடிப் பார்ப்பேன். அப்போ, அந்தப் படத்துல வன்முறை, ஆபாசம், அசிங்கமான டயலாக் எல்லாம் எந்தளவுக்கு இருக்குனு தெரிஞ்சிடும்.”—நட்டாஷா.

ஒரு யோசனை: ஆட்சேபணைக்குரிய விஷயங்கள் எதுவும் இல்லாத படங்கள் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். “பழைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இலக்கிய படைப்புகள்னா இன்னும் விரும்பி பார்ப்பேன்” என்று டீன்-ஏஜ் பெண் சமந்தா சொல்கிறாள்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

‘நான் பார்க்கும் படங்கள் ஆபாசம், வன்முறை, மாயமந்திரம் போன்ற விஷயங்களில் கடவுளுடைய கட்டளையை மீற என்னைத் தூண்டுகிறதா?’

புத்தகம்

உங்களுக்கு எந்த மாதிரி புத்தகம் பிடிக்கும் என்று கீழே ✔ செய்யுங்கள்.

  • ❍ கற்பனை கதை

  • ❍ நிஜ சம்பவம்

  • ❍ பழங்கால இலக்கியம்

  • ❍ மற்றவை

விஷயம் தெரியுமா? அமெரிக்காவில் மட்டுமே, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியாகிறதாம்!

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி சொல்வதை உதறித்தள்ளிவிட்டு, பிரபலமான சினிமா... புத்தகம்... இசை... இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நஷ்டம் உங்களுக்குத்தான், பொழுதுபோக்குத் துறைக்கு இல்லை

எதைத் தவிர்க்கலாம்? படங்களைப் போலவே, நிறைய புத்தகங்களும் பைபிள் வெறுக்கும் விஷயங்களைத்தான் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, சில புத்தகங்கள் ஆபாசத்தை அப்பட்டமாக வர்ணிக்கின்றன; இன்னும் சில புத்தகங்களில் முழுக்க முழுக்க மாயமந்திர விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால், “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:3) மாயமந்திரம் யெகோவாவின் ‘பார்வைக்குப் பொல்லாப்பானது’ என்றும் அது சொல்கிறது.—2 இராஜாக்கள் 17:17.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்? “ஒரு புஸ்தகத்த வாங்கறதுக்கு முன்னாடி, பின்பக்கம் இருக்கிற கதை சுருக்கத்தைப் படிப்பேன், அதுல இருக்கிற அதிகாரங்கள ஒரு பார்வை விடுவேன். தப்புன்ற மாதிரி எதையாவது பார்த்தா அத வாங்கவே மாட்டேன்.”—மேரி.

“வளர வளர நான் நல்லா யோசிச்சு தீர்மானம் எடுக்கக் கத்துக்கிட்டேன். என் மனசாட்சி சொல்றத கேட்கறதுதான் நல்லதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். படிச்சிட்டிருக்கிறப்போ அது நல்ல புஸ்தகம் இல்லனு தெரிஞ்சதுன்னா, உடனே மூடி வச்சிடுவேன். ஏன்னா, அதெல்லாம் கடவுளுக்குப் பிடிக்காது.”—சஹானா.

ஒரு யோசனை: வெவ்வேறு புத்தகங்களைப் படித்து பாருங்கள். “இந்தக் காலத்து நாவல்களைவிட அந்தக் காலத்து இலக்கிய புஸ்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுல இருக்குற வார்த்தை ஜாலங்கள்... ஒரு கதாப்பாத்திரத்தை பற்றி விளக்குற முறை... கதையை நகர்த்துற விதம்... எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்” என்கிறாள் 17 வயது லாரா.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

‘நான் படிக்கும் புஸ்தகங்கள் கடவுள் வெறுக்கிற பழக்கங்களில் ஈடுபட என்னை ஊக்குவிக்கின்றனவா?’

இசை

உங்களுக்குப் பிடித்த இசையை கீழே ✔ செய்யுங்கள்.

  • ❍ ராக்

  • ❍ பழைய பாடல்கள்

  • ❍ கிராமிய பாடல்கள்

  • ❍ பாப்

  • ❍ ரீ-மிக்ஸ்

  • ❍ மற்றவை

விஷயம் தெரியுமா? நான்கு முக்கிய இசை நிறுவனங்கள் சேர்ந்து, ஒரு வருடத்திற்கு சுமார் 30,000 ஆல்பங்களை வெளியிடுகிறதாம்!

எதைத் தவிர்க்கலாம்? சினிமாவையும் புத்தகங்களையும் போலவே இசையும் இன்று தரக்குறைவாகப் போய்க்கொண்டிருக்கிறது. அசிங்கமான பாடல் வரிகளும், அப்பட்டமான காட்சிகளும் உங்களுடைய பாலியல் ஆசைகளைத் தூண்டிவிடும். (1 கொரிந்தியர் 6:18) “இன்னைக்கு இருக்குற நிறைய பாட்டும் இசையும் பைபிள் நெறிகளுக்கு விரோதமா நடக்க நம்மள தூண்டுது. இப்போ வர்ற பாடல்கள்ல உள்ள தாளம் உடலைக் குலுக்கி தளுக்கி ஆட வைக்குது” என்று சொல்கிறாள் 21 வயது லீமா.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்? “‘முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் நான் வச்சிருக்கிற மியூசிக் லிஸ்டை பார்த்தா என்ன நினைப்பாரோன்னு பயப்படுறேனா’னு என்னையே கேட்டுக்குவேன். அத வைச்சு எந்த மாதிரி பாட்டுகள கேட்கலாம்னு முடிவு பண்ணுவேன்.”—லியன்னா.

ஒரு யோசனை: வெவ்வேறு இசைகளைக் கேட்டுப் பாருங்கள். “தரமான பாரம்பரிய பாடல்கள்னா எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்து நானும் அதக் கேட்பேன். நான் இப்போ அந்த மாதிரி பாரம்பரிய இசையையும் பியானோவையும் கத்துக்கிட்டு இருக்கேன். இசை உலகத்துல கத்துக்க எவ்ளோ விஷயம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்!” என்கிறார் ராபர்ட் என்ற டீன்-ஏஜர். (g11-E 11)

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

‘நான் கேட்கும் இசை பாலியல் ஆசைகளை அடக்க எனக்கு உதவுகிறதா இல்லை தூண்டிவிடுகிறதா?’

அதிகம் தெரிந்துகொள்ள...

இளைஞர் கேட்கும் கேள்விகள் —பலன் தரும் விடைகள், பகுதி 2-ல் (ஆங்கிலம்), அதிகாரம் 31-ஐயும், 1996 விழித்தெழு! 9/22 பக்கம் 21-23-ஐயும் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

 

a ஒரு குறிப்பிட்ட சினிமாவைப் பார்ப்பது, புத்தகத்தைப் படிப்பது, பாடலைக் கேட்பது சரி என்றோ, தவறு என்றோ விழித்தெழு! பத்திரிகை சொல்வதில்லை. கடவுளுடைய நெறிகளின்படி தீர்மானம் எடுக்க, உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.—சங்கீதம் 119:104; ரோமர் 12:9.

b இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.