Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நேர்மைக்கு வரும் சவால்கள்

நேர்மைக்கு வரும் சவால்கள்

நேர்மைக்கு வரும் சவால்கள்

“நேர்மையா தொழில் நடத்துறதெல்லாம் அந்த காலம். இப்போ எல்லாம் நேர்மையா இருக்க எவ்வளவு முயற்சி செஞ்சாலும் அது முடியவே முடியாது.”—ஸ்டீவன், அமெரிக்கா

இவருடைய கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? குறுக்கு வழியில் ஆதாயம் தேடினால் தற்சமயத்துக்குப் பலன் கிடைக்கும் என்பது உண்மைதான். அதனால், நேர்மையாய் நடக்கிறவர்களுக்குக்கூட குறுக்கு வழியில் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. எப்படி?

நமக்குள்ளேயே வரும் ஆசை. இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால், இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்புகள் கிடைத்தால், யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? அதனால்தான் யாராவது லஞ்சம் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்வதற்கு வாய் வருவதில்லை.

● “என்னோட கம்பெனி சார்பா கான்ட்ராக்ட்டுகள கொடுக்கறதுதான் என்னோட வேலை. அப்போ, எல்லாப் பக்கத்துல இருந்தும் லஞ்சம் நீட்டுவாங்க. சும்மா கிடைக்கிற பணத்தை வேண்டானு சொல்றது ரொம்ப கஷ்டம்.”—ஃப்ரான்ட்ஸ், மத்திய கிழக்கு.

பெரும் லாபம் ஈட்ட வேண்டிய கட்டாயம். சமீப வருடங்களில் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அநேக தொழில் நிறுவனங்கள் அதைச் சமாளிக்கப் போராட வேண்டியுள்ளது. அதோடு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது; தேசிய அளவிலும் உலகளவிலும் போட்டா போட்டி போட வேண்டியுள்ளது. அதனால், முதலாளிகளும் மானேஜர்களும் எதிர்பார்க்கிற லாபத்தை ஈட்டித் தருவதற்கு, குறுக்கு வழியில் போவதைத் தவிர வேறு வழியில்லை எனப் பணியாளர்கள் நினைக்கிறார்கள்.

● “எங்களுக்கு வேற வழி தெரியல. . . . வாங்கலன்னா, கம்பெனிய இழுத்து மூட வேண்டிய நிலைம வந்திருக்கும்.”—ரைன்ஹார்ட் ஸிக்காசெக், லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டவர்.—த நியு யார்க் டைம்ஸ்.

மற்றவர்களின் வற்புறுத்தல். சில சமயம், கூட வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்கும்படி சொல்வார்கள், சிலர் கட்டாயப்படுத்துவார்கள்.

● “நாங்க கான்ட்ராக்ட் எடுத்திருந்த ஒரு பெரிய கம்பெனியோட மானேஜர் என்கிட்ட வந்து, எனக்குக் கிடைக்கிற லாபத்துல ஒரு பாகத்த அவருக்கு லஞ்சமா கொடுக்கலன்னா, அவரோட கான்ட்ராக்ட் இனி கிடைக்காதுன்னு சொன்னாரு.”—யோஹான், தென் ஆப்பிரிக்கா.

கலாச்சாரம். சில கலாச்சாரங்களில், வியாபார நடவடிக்கைகளின்போது பரிசுகளைக் கொடுப்பது வழக்கம். பரிசு எவ்வளவு பெரியது, எந்தச் சூழ்நிலையில் கொடுக்கப்பட்டது என்பதை வைத்து, ஒரு கம்பெனி நேர்மையானதா இல்லையா என்று சொல்லிவிடலாம். இன்னும் பல நாடுகளில், அதிகாரிகள் சிலர் கையில் லஞ்சம் வைத்தால்தான் தங்கள் கடமையைச் செய்வார்கள். யாரையாவது விசேஷமாகக் கவனிக்க வேண்டியிருந்தால் அதற்கான காசையும் கூசாமல் வாங்கிக்கொள்கிறார்கள்.

● “சில நேரத்துல எது லஞ்சம் எது டிப்ஸுனு கண்டுபிடிக்கிறது கஷ்டம்.”—வில்லியம், கொலம்பியா.

சூழ்நிலை. வறுமையில் வாடுகிற அல்லது சட்டம், ஒழுங்கு எல்லாம் சீர்கெட்டு கிடக்கிற நாடுகளில் வாழ்கிறவர்கள்தான் லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற இடங்களில் திருடாமல், மற்றவர்களை ஏமாற்றாமல் வாழ்கிறவர்களை ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என மக்கள் சொல்லலாம்.

● “நாம மாட்டிக்காதவரைக்கும், லஞ்சம் வாங்குறதுல தப்பே இல்ல. இதெல்லாம் சாதாரண விஷயம், வாங்காம இருக்கவே முடியாதுனு பொதுவா மக்கள் நினைக்கிறாங்க.”—தாமஸ், காங்கோ கின்ஷாசா.

நேர்மைக்கு ஏற்பட்ட கதி

லஞ்சம் வாங்குவதற்கான ஆசை எந்தளவுக்குத் தொற்றியிருக்கிறது? ஆஸ்திரேலியாவில் கம்பெனி மானேஜர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, லஞ்சமும் ஊழலும் “தவறுதான், ஆனால் அதைத் தவிர்க்க முடியாது” என்று 10-ல் 9 பேர் நினைக்கிறார்கள். கம்பெனியின் லாபத்திற்காக நேர்மை போன்ற நல்ல குணங்களைக்கூட அடகு வைக்கத் தயாராய் இருப்பதாக அந்த ஆய்வின்போது அவர்கள் சொன்னார்கள்.

ஆனாலும், இப்படிக் குறுக்கு வழியில் போகிறவர்கள் தங்களை நேர்மையானவர்களென சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களால் எப்படி இந்த மாதிரி வேஷம்போட முடிகிறது? ஜர்னல் ஆஃப் மார்க்கெட்டிங் ரிசர்ச் சொல்கிறது: “ஜனங்கள் லாபம் பார்ப்பதற்காக எந்தளவு முடியுமோ அந்தளவு நேர்மையற்ற வழியில் செல்கிறார்கள்; அதே சமயத்தில் தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்ள எந்தளவு முடியுமா அந்தளவு போராடுகிறார்கள்.” இவர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக, தங்களுடைய நேர்மையற்ற போக்கை நியாயப்படுத்த பார்க்கிறார்கள், சாக்குப்போக்கு சொல்கிறார்கள், மழுப்புகிறார்கள்.

உதாரணத்திற்கு, ‘இதெல்லாம் லஞ்சம் கிடையாது, சும்மா ஒரு அன்பளிப்பு, டிப்ஸ், உதவி அவ்வளவுதான்’ என்று சொல்லி மழுப்புகிறார்கள். அதேபோல், ‘இது பொய்யோ ஏமாத்து வேலையோ இல்ல, கெட்டிக்காரத்தனம்’ என்று சொல்கிறார்கள்.

மற்றவர்களோ நேர்மைக்கு வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஒரு நிதி நிறுவனத்தில் வேலைபார்க்கிற டாம் சொல்கிறார்: “நேர்மைய பற்றி மக்களோட கண்ணோட்டமே மாறிடுச்சு. மாட்டிக்காம இருக்கிறவரைக்கும் எந்தத் தப்புமே, தப்பு இல்லனு நினைக்கிறாங்க.” ஒரு கம்பெனியில் முன்பு நிர்வாகியாக இருந்த டேவிட் சொல்கிறார்: “லஞ்சம் வாங்கி மாட்டிக்கிற ஒருத்தர குற்றவாளியா பார்க்கிறாங்க. மாட்டிக்கலைன்னா அவரை கெட்டிக்காரன்னு சொல்றாங்க.”

குறுக்கு வழியில் போனால்தான் வெற்றி பெற முடியும் என்றுகூட நிறைய பேர் சொல்கிறார்கள். பல காலமாக தொழிலதிபராய் இருக்கிற ஒருவர் சொல்கிறார்: “மக்களுக்கு போட்டி மனப்பான்மை இருக்கிறதால, ‘காரியம் நடக்க என்ன வேணும்னாலும் செய்யலாம்’னு சொல்றாங்க.” இது சரியா? அல்லது லஞ்சம் வாங்குவதில் தப்பில்லை என சொல்கிறவர்கள் உண்மையில் ‘தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்களா’? (யாக்கோபு 1:22) நேர் வழியில் செல்வதால் வரும் நன்மைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (g12-E 01)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“நேர்மைய பற்றி மக்களோட கண்ணோட்டமே மாறிடுச்சு. மாட்டிக்காம இருக்கிறவரைக்கும் எந்தத் தப்புமே, தப்பு இல்லனு நினைக்கிறாங்க”

[பக்கம் 5-ன் படம்]

குறுக்கு வழியில் போனால்தான் வெற்றி பெற முடியும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள்