Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நேர்மையாக வாழ முடியும்

நேர்மையாக வாழ முடியும்

நேர்மையாக வாழ முடியும்

“வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.”—நீதிமொழிகள் 20:17, பொது மொழிபெயர்ப்பு.

குறுக்கு வழியில் போனால்தான் தொழிலில் வெற்றி பெற முடியுமா? இல்லை. சொல்லப்போனால், நேர்மையற்ற வழியில் போகும்போது தோல்வியே மிஞ்சும். ஏன்? ஏனென்றால், நேர்மையே எப்போதும் வெல்லும், நம்பிக்கையைச் சம்பாதித்து தரும். அதுதான் தொழிலின் நிரந்தர வெற்றிக்கு அச்சாணி.

நம்பிக்கையே ஆதாயம்

நேர்மையானவர் என்று பெயரெடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும். முந்தின கட்டுரையில் பார்த்த ஃப்ரான்ஸ் இதற்கு எடுத்துக்காட்டு. “நான் வேலையில சேர்ந்த புதுசுல மேலதிகாரிகள் என்னோட நேர்மைய, நாணயத்த எனக்கே தெரியாம பல முறை சோதிச்சு பார்த்தாங்க. அதுல ஜெயிச்சுட்டேன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. அதனால, எனக்கு நிறைய பொறுப்பு கொடுத்தாங்க, சலுகைகளும் கொடுத்தாங்க. என்னோட நேர்மைய பாராட்டி வெகுமதியும் கொடுத்தாங்க. என்னோட வேலைய என்னைவிட திறமையா செய்றவங்க இருக்காங்க, என்னைவிட புத்திசாலிங்களும் இருக்காங்க. ஆனா, என்மேல இருக்கிற நம்பிக்கைனாலதான் என்னோட வேலை நிரந்தரமா இருக்குன்னு நினைக்கிறேன்” என்று அவர் சொல்கிறார்.

வேண்டாம் விஷப்பரிட்சை

முந்தின கட்டுரையில் பார்த்த டேவிட் சொல்கிறார்: “சின்ன ஆதாயத்துக்காக சட்டத்தை மீறுறவங்கள நான் பார்த்திருக்கேன். ஆனா, ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகணும்’னு நான் மனசுக்குள்ள நினைச்சுக்குவேன். ஆமா, நேர்மையற்ற வழில போனா என்னைக்காவது ஒருநாள் மாட்டித்தான் ஆகணும். அதனால, கோல்மால் செய்ற கம்பெனிகளோட கான்ட்ராக்டுகள எல்லாம் ஒதுக்கிட்டேன். அந்த கம்பெனிகள்ல சிலது இருந்த இடம் தெரியாம போயிடுச்சு. சில பேருக்கு தண்டனையும் கிடைச்சிருக்கு. என்னோட கம்பெனிக்கு இந்த மாதிரி பிரச்சினை எதுவுமே வந்ததில்ல.”

கென் என்பவர் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கால்நடை பண்ணையை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அதிகாரிகள் கையில் லஞ்சம் கொடுத்து அவர்களை ‘தனியாக கவனித்தால்,’ பண்ணைக்குத் தேவையானதை சீக்கிரமாக இறக்குமதி செய்யவும் வரி கட்டாமல் தப்பிக்கவும் முடியும். ஆனால், கென் அப்படிச் செய்தாரா? அவர் சொல்கிறார்: “மற்ற பண்ணையாளுங்க, எல்லாரும் செய்ற மாதிரி லஞ்சம் கொடுத்து காரியத்த சாதிச்சாங்க. ஆனா, நாங்க எல்லாத்தையும் நேர்மையா செஞ்சோம். அதனால, எங்க பண்ணைக்கு தேவையான எல்லாத்தையும் வாங்குறதுக்கு பத்து வருஷம் எடுத்துச்சு. இருந்தாலும், எங்க நேர்மைக்கு கைமேல பலன் கிடைச்சுது! எப்படின்னா, ருசிகண்ட அதிகாரிங்க அந்த பண்ணையாளுங்ககிட்ட இன்னும் லஞ்சம் கேட்டு தொந்தரவு கொடுத்துட்டே இருந்தாங்க. ஆனா, எங்கள ஒன்னும் பண்ண முடியல.”

பொருளாதார வீழ்ச்சி

தொழில் நஷ்டத்தில் ஓடினால், நேர்மையற்ற வழியில் செல்வதற்கான அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், நேர்மையானவர் என்ற பெயரைச் சம்பாதித்திருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பில் என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அமெரிக்காவில் கட்டுமானத் தொழில் வீழ்ச்சியடைந்த சமயத்தில் இவருடைய கட்டிட தொழிலும் நொடிந்துவிட்டது. “எங்களோட வாடிக்கையாளருங்க நிறைய பேர் லட்சக்கணக்கான பணத்த கொடுக்காம கைகழுவிட்டு போயிட்டாங்க. என்ன செய்றதுனே தெரியாம விழிபிதுங்கி நின்னோம். இதே தொழில நடத்துற ஒருத்தர்கிட்ட வேலை கேட்டு போனேன். ரெண்டே நாள்ல என்னையும் என் கீழ வேலை செய்த நிறைய பேரையும் வேலைல சேர்த்துக்கிட்டாரு. எடுத்த வேலைய நான் நல்லா செஞ்சு கொடுப்பேன், ரொம்ப நேர்மையானவன்னு அவர் என்கிட்ட சொன்னாரு.”

இதுவரை பார்த்த எல்லாமே யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள். தொழிலிலும் சரி வாழ்க்கையிலும் சரி, அவர்கள் பைபிளைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் யாருமே குறுக்கு வழியில் போகவில்லை. நேர்மையாக நடந்தார்கள், அதற்கான பலனைப் பெற்றார்கள்.

சில சமயங்களில் குறுக்கு வழியில் சென்றால் கையில் பணம் பார்க்கலாம். ஆனால், பணம் மட்டும்தான் வெற்றி தருமா? (g12-E 01)

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

நேர்மையானவர் என்று பெயரெடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்

[பக்கம் 7-ன் படம்]

“எடுத்த வேலைய நான் நல்லா செஞ்சு கொடுப்பேன், ரொம்ப நேர்மையானவன்னு அவர் என்கிட்ட சொன்னாரு.”—பில், அமெரிக்கா