Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மணவாழ்வில் வெற்றி காண

மணவாழ்வில் வெற்றி காண

பைபிளின் கருத்து

மணவாழ்வில் வெற்றி காண

“கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார். . . . ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்.’ . . . எனவே, கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.”—மத்தேயு 19:4-6, சொன்னவர் இயேசு கிறிஸ்து.

திருமணம் என்பது “ஆயிரம் காலத்து பயிர்” என்ற கருத்து மாறி “ஒரு நாள் கூத்து” என்று ஆகிவிட்டது. இன்று அநேக தம்பதிகள் அழகும் கவர்ச்சியும் இருக்கும்வரை அல்லது பிரச்சினைகள் முளைக்கும்வரைதான் சேர்ந்து வாழ்கிறார்கள். சில சமயம் சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக்கூட பிரிந்துவிடுகிறார்கள், ஏன், விவாகரத்துவரை போய்விடுகிறார்கள். பாவம், இவர்கள் நடுவில் சிக்கி தவிப்பவர்கள் பிள்ளைகள்தான். இந்தப் பேரிடியால் அவர்கள் மனமுடைந்து போகிறார்கள்.

பைபிளை ஆழமாகப் படிப்பவர்கள் இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், நாம் வாழும் இந்த “கடைசி நாட்களில்” மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என பைபிளில் பல வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, குடும்ப உறவுக்குத் தூண்களாக இருக்கும் குணங்களெல்லாம், அதாவது ஆத்மார்த்தமான அன்பு, உண்மைத்தன்மை, பந்தபாசம் எல்லாம் இற்றுப்போய்விடும் என்றும் பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) திருமணத்தைப் பற்றிய மக்களுடைய கருத்து மாறிவருவதையும் அதனால் குடும்பங்கள் ஆட்டங்காண்பதையும் பார்க்கும்போது உங்களுக்குக் கவலையாக இருக்கிறதா? திருமண பந்தத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா?

அப்படியென்றால், பைபிள் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதிலுள்ள காலத்தால் அழியாத ஆலோசனைகள் அநேக தம்பதிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இப்போது, திருமணத்தைக் கட்டிக்காக்க உதவும் ஐந்து பைபிள் நியமங்களை மட்டும் நாம் பார்ப்போம். a

மணவாழ்வில் வெற்றி காண ஐந்து வழிகள்

(1) இது ஒரு புனித பந்தம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இயேசுவும் நம் படைப்பாளரான யெகோவா தேவனும் திருமணத்தை ஒரு புனித பந்தமாகப் பார்க்கிறார்கள் என்பதை இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. பழங்காலத்தில் வாழ்ந்த சில ஆண்களைக் கண்டித்து கடவுள் கொடுத்த அறிவுரை இதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் இளம் பெண்களை திருமணம் செய்துகொள்வதற்காக தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவர்களிடம் கடவுள் சொன்னார்: “நீ இளம் வயதில் மணமுடித்த உன் மனைவியோடு செய்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டாய். அவள் உன்னுடைய துணை; அவளுக்கு உண்மையாய் இருப்பதாக கடவுள்முன் நீ ஒப்பந்தம் செய்தாய். இருந்தாலும் அந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டாய்.” அதன் பிறகு இந்த வலிமையான வார்த்தைகளை யெகோவா சொன்னார்: “தன் மனைவிக்கு இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்பவனை நான் வெறுக்கிறேன்.” (மல்கியா 2:14-16, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) திருமணத்தை கடவுள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவர் கவனிக்கிறார்.

(2) பொறுப்புள்ள கணவராக இருங்கள். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களைப் பற்றி முடிவான தீர்மானம் எடுக்க ஒருவர் தேவை. இந்தப் பொறுப்பை பைபிள் கணவர்களுக்கு அளிக்கிறது. ‘கணவன் தன் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்’ என்று எபேசியர் 5:23 சொல்கிறது. அதற்காக, மனைவியிடம் கொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும்படி பைபிள் சொல்வதில்லை. தானும் தன் மனைவியும் “ஒரே உடலாக” இருப்பதை கணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், மனைவியை மதிக்க வேண்டும், குடும்பத்தில் தீர்மானம் எடுக்கையில் அவளுடைய கருத்தையும் கேட்க வேண்டும். (1 பேதுரு 3:7) ஆக, ‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பதே பைபிள் கொடுக்கும் அறிவுரை.—எபேசியர் 5:28.

(3) ஆதரவு தரும் மனைவியாக இருங்கள். மனைவி தன் கணவனுக்கு ‘ஏற்ற துணையாக’ இருப்பாள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 2:18) திருமண பந்தத்தை பலப்படுத்த உதவும் குணங்களை அவள் காட்டுவாள். ஏட்டிக்குப்போட்டியாக இருக்க மாட்டாள். குடும்பத்தின் சமாதானத்தைக் கட்டிக்காக்க உறுதுணையாக இருப்பாள். “மனைவிகளே, . . . உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்” என்று எபேசியர் 5:22 சொல்கிறது. ஆனால், ஏதோவொரு விஷயத்தில் கணவருடைய கருத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்? அப்போது, அவள் தன் கருத்தைச் மரியாதையோடு எடுத்துச் சொல்ல வேண்டும். கணவர் தன்னிடம் ஒரு விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பாளோ அதேபோல் அவளும் தன் கருத்தைச் சொல்ல வேண்டும்.

(4) எதார்த்தமாக இருங்கள், பிரச்சினைகளை எதிர்பாருங்கள். யோசிக்காமல் பேசும் வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், பணப் பிரச்சினைகள், கொடிய வியாதி, பிள்ளை வளர்ப்பில் பிரச்சினைகள் போன்றவை மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு தடைக்கற்களாக இருக்கலாம். அதனால்தான் “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் வெளிப்படையாகச் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28) ஆனால் இந்த உபத்திரவங்கள், அதாவது பிரச்சினைகள் உங்கள் பந்தத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சொல்லப்போனால், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசிப்பது மட்டுமல்லாமல் பைபிளிலுள்ள ஞானமான ஆலோசனைகளையும் கடைப்பிடித்தால் இதுபோன்ற பிரச்சினைகளைச் சுலபமாகத் தீர்த்துவிடலாம். குடும்பத்தில் வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போதிய ஞானம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற அவர் அவனுக்கும் கொடுப்பார்” என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 1:5.

(5) ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். திருமண பந்தத்தை முறிக்கும் முக்கிய எதிரிகளில் ஒன்றுதான், பாலியல் முறைகேடு, அதாவது துணை அல்லாதவரோடு கள்ளத்தொடர்பு கொள்வது. இந்தக் காரணத்திற்காக மட்டுமே விவாகரத்து செய்வதைக் கடவுள் ஏற்றுக்கொள்வார். (மத்தேயு 19:9) “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காமல் இருங்கள்; ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) துணை அல்லாதவரோடு உறவுகொள்ள வேண்டும் என்ற ஆசைக்கு அணைபோட தம்பதிகள் என்ன செய்யலாம்? “கணவன் தன்னுடைய மனைவிக்குச் செலுத்த வேண்டிய கடனைச் [தாம்பத்தியக் கடனை, அடிக்குறிப்பு] செலுத்த வேண்டும்; அதேபோல், மனைவியும் தன்னுடைய கணவனுக்குச் செலுத்த வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 7:3, 4.

இந்த ஐந்து நியமங்களைப் படித்த பிறகும் சிலர், “இதையெல்லாம் கேட்க நல்லா இருக்கு, ஆனா இந்தக் காலத்துக்கு ஒத்துவருமா” என்று யோசிக்கலாம். ஆனால், இது எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்பதே உண்மை. சொல்லப்போனால், வாழ்க்கையின் எல்லா விஷயத்திலும் கடவுளின் அறிவுரையை நாடும் நபர் எப்படி இருப்பார் என்று பைபிள் சொல்கிறது: ‘அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும், அதாவது வெற்றி பெரும்.’ (சங்கீதம் 1:2, 3) ஆம், திருமண வாழ்விலும் வெற்றி நிச்சயம்! (g11-E 11)

[அடிக்குறிப்பு]

a இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரிகையின் துணை பத்திரிகையான காவற்கோபுரத்தின் ஜூலை-செப்டம்பர் 2011 இதழைப் பாருங்கள்.

உங்கள் பதில்?

● விவாகரத்தைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?—மல்கியா 2:14-16.

● மனைவியைக் கணவன் எப்படி நடத்த வேண்டும்?—எபேசியர் 5:23, 28.

● மணவாழ்வில் வெற்றி காண யாருடைய ஞானமான அறிவுரைகள் உதவும்?—சங்கீதம் 1:2, 3.