யாருடைய கைவண்ணம்?
குளவி காகித வீடு கட்டும் கட்டிடக் கலைஞர்
● இந்தக் குளவிகளைக் கட்டிடக்கலை நிபுணர்கள் என்று சொல்லலாம். எப்படி?
கவனியுங்கள்: இவை பல அறைகளை உடைய கூட்டைக் கட்டிப் பராமரிக்கின்றன; தாங்களே தயாரித்த விசேஷ பேப்பரைக் கொண்டு அதைக் கட்டுகின்றன. * காய்ந்த செடிகொடிகள், சிதைந்த மரத்துண்டுகள், வேலிகள், மரக் கம்பங்கள், கட்டுமான சாதனங்கள் என்று தேடிப்போய் நார்களை எடுத்து வருகின்றன. அந்த நார்களில் இருக்கும் செல்லுலோஸை நன்றாக மெல்லுகின்றன. பிசுபிசுப்பான, புரதச் சத்து மிகுந்த உமிழ்நீரும் அதோடு சேர்ந்துகொள்கிறது. அந்தக் கலவையை வைத்து கூட்டைக் கட்டுகின்றன; காய்ந்ததும் லேசான அதேசமயத்தில் உறுதியான பேப்பர் கூடு உருவாகிவிடும். அந்தப் பேப்பருக்கு ஒரு விசேஷ தன்மை உண்டு; வெப்பத்தை வெளியிடவும் முடியும், உள்வாங்கவும் முடியும். இதனால் குளிர்காலத்தில் கூட்டில் இருக்கும் முட்டைகள் கதகதப்பாக இருக்கும்.
இந்தக் குளவிகள் மரக்கூழை “வாய் நிறைய நிறைய” அரைத்து கூட்டைக் கட்டுகின்றன. இது தண்ணீர் புகாத, காகிதக் குடைபோல் இருக்கும். இதன் அறைகள் அறுங்கோண வடிவில் உள்ளதால் வலுவாகவும் விசாலமாகவும் இருக்கும். அதிக மழை பெய்யும் இடங்களில் வசிக்கும் குளவிகள் இந்தக் கலவையில் உமிழ்நீரை அதிகமாகச் சேர்க்கின்றன, அதனால் ஈரத்தை உறிஞ்சாத கூடுகளைக் கட்ட முடியும். அதோடு, கூட்டைத் தொங்கவிடுவதற்கு ஏற்ற, கொஞ்சம் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. மரத்தண்டுகளின் கீழே கூட்டைத் தொங்கவிடுகின்றன. பேப்பர் கூடு கட்டும் இந்த வகைக் குளவிகளால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால், பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளால் காற்று, நீர், நிலம் எல்லாம் மாசுபடுகிறது.
கட்டிடக்கலைஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்தக் குளவி தயாரிக்கும் கலவையின் ரகசியத்தைக் கூர்ந்து ஆராய்கிறார்கள். லேசான, உறுதியான, உடைந்துபோகாத, சுற்றுச்சூழலுக்குத் தீங்கற்ற கட்டிடப் பொருள்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரண்டே இரண்டு மணல் துகள் அளவு மூளையை வைத்துக்கொண்டு, பேப்பர் தயாரித்து கூடு கட்டும் கட்டிடக்கலையை இது தானாகவே கண்டுபிடித்திருக்குமா? அல்லது வேதியல் நுணுக்கத்தையும், கட்டுமானத் திறமையையும் ஒருவர் அதற்குக் கொடுத்திருப்பாரா? (g12-E 02)
[அடிக்குறிப்பு]
^ பேப்பர் கூடு கட்டும் குளவிகளில் பல இனங்கள் உள்ளன. கூட்டிலிருக்கும் அறைகளில் அவை முட்டையிடுகின்றன. முட்டை பொரிந்து புழுக்கள் வெளிவரும்.