கோபத்தைக் கட்டுக்குள் வைக்க...
கோபத்தைக் கட்டுக்குள் வைக்க...
இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் “வடிகால் தேடுதல்” என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். துன்பதுயரங்கள் நிறைந்த நாடகத்தைப் பார்ப்பதால் ஏற்படும் மன இறுக்கத்தைப் போக்குவது பற்றி விவரிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். மன இறுக்கத்தைப் போக்கிவிட்டால் புத்துணர்ச்சி பெறுவோம் என்பதே அதன் அர்த்தம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆஸ்திரிய நாட்டு நரம்பியல் நிபுணர் ஸிக்மன்ட் ஃப்ரோட் இதே போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார். கோபத்தை மனதுக்குள் பூட்டி வைத்தால் பிற்பாடு ஹிஸ்டீரியா போன்ற மனநல கோளாறுகள் ஏற்படும் என்று அவர் சொன்னார். கோபத்தை அடக்காமல் அதை வெளிக்காட்ட வேண்டும் என்பதே அவருடைய கருத்து.
ஆராய்ச்சியாளர்கள் சிலர் 1970-களிலும் 1980-களிலும் வடிகால் தேடுதல் என்ற இந்தக் கொள்கையைச்
சோதித்துப் பார்த்தார்கள். ஆனால், அதை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் காரல் டாவ்ரஸ் என்ற மனநல நிபுணர் இவ்வாறு எழுதினார்: “வடிகால் தேடுதல் என்ற கொள்கையைக் குழிதோண்டி புதைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வன்முறையைப் பார்ப்பது (அல்லது ‘அதைக் கையிலெடுப்பது’) விரோதத்தை விரட்டிவிடும் என்ற கருத்துக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.”மற்றொரு மனநல நிபுணர் கேர்ரி ஹான்க்கன்ஸ் கூறுகிறார்: “வடிகால் தேடுதல் என்ற கொள்கையின்படி உங்கள் கோபத்தையெல்லாம் கொட்டும்போது அந்தக் கோபம் இன்னும் ஒருபடி மேலே ஏறுமே தவிர கீழே இறங்காது என ஆராய்ச்சி காட்டுகிறது.” ஆம், மனநல நிபுணர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துகள் இருப்பது உண்மைதான். ஆனால், நிறைய பேர் பைபிள் தரும் ஞானமான ஆலோசனையிலிருந்து பயனடைந்திருக்கிறார்கள்.
“கோபத்தை விலக்கு”
கோபத்தை அடக்குவதைப் பற்றி சங்கீதக்காரன் தாவீது மிக அழகாக பைபிளில் விவரித்திருக்கிறார்: “கோபத்தை விலக்கு, உக்கிரத்தை விட்டுவிடு, எரிச்சல்கொள்ளாதே, அது தீங்கு செய்வதற்கே ஏதுவாகும்.” (சங்கீதம் 37:8, திருத்திய மொழிபெயர்ப்பு) விபரீதமாக ஏதாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பிற்பாடு வருந்துவதற்கு பதிலாக ‘எரிச்சல்கொள்ளாமல்’ இருப்பதே மேல். “எரிச்சல்கொள்ளாதே” என்று சொல்வது ரொம்பச் சுலபம், ஆனால், செய்வது ரொம்பக் கஷ்டம். உங்களுக்கு கைகொடுக்கும் மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.
கோபத்தின் கடுமையைத் தணிக்க
கோபத்தைத் தணிக்க, உங்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள். வாய்க்கு வந்ததையெல்லாம் ஒப்பித்துவிடாதீர்கள். ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு, கடைசியில் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போகும்போது இந்த பைபிள் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.”—நீதிமொழிகள் 17:14.
ஜாக் என்பவருக்கு தன் முரட்டு கோபத்தை அடக்க இந்த வசனம்தான் உதவியது. அவருடைய அப்பா மூக்குமுட்ட குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவார். ஜாக்கும் வளர்ந்த பிறகு ஒரு முரட்டு காளையாகி விட்டார். “கோபம் வந்துவிட்டால், எனக்கு நெருப்புல நிற்கிற மாதிரி இருக்கும். வாய்க்கு வந்தபடி பேசிவிடுவேன், கலாட்டா செய்வேன்” என்று அவர் சொல்கிறார்.
ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும் ஜாக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். கடவுளுடைய உதவியோடு கோபத்தை அடக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டார். தன்னோடு வேலை செய்பவர் கன்னா பின்னா என்று திட்டும்போது எப்படி உணருவார் என சொல்கிறார்: “என் உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இருக்கும். அவன் கழுத்த பிடிச்சு கீழே தள்ளிடலாம்னு தோணும்.”
உணர்ச்சிவசப்படாமல் அமைதியாய் இருக்க ஜாக்குக்கு எது உதவியது? “‘யெகோவாவே அமைதியா இருக்க எனக்கு உதவுங்க’னு ஜெபம் செய்தது ஞாபகமிருக்கு. அப்போ, முதல் தடவையா என் மனசு அப்படியே அமைதியாச்சு, அந்த இடத்திலிருந்து நடையைக் கட்டினேன்.” அவர் தொடர்ந்து பைபிள் படித்தார். நிறைய நேரம் ஜெபம் செய்தார், நீதிமொழிகள் 26:20 போன்ற பைபிள் வசனங்களை தியானித்துப் பார்த்தார். “விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்” (பொது மொழிபெயர்ப்பு) என்று அந்த வசனம் சொல்கிறது. இப்படியாக, அவர் கோபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினார்.
அமைதியாய் இருக்க
“மன அமைதி உடல் நலம் தரும்” (நீதிமொழிகள் 14:30, பொ.மொ.) இந்த அடிப்படை பைபிள் சத்தியத்தைப் பின்பற்றும்போது நம் உடலும் உள்ளமும் ஆன்மீகமும் நலம் பெறும். அமைதியாய் இருக்க உதவும் சில எளிய முறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்; அடிக்கடி கோபப்படுவதைக் குறைக்க அவை உதவும். வேலைப் பளு, கவலை, அல்லது வேறுபல பொறுப்புகளால் வரும் கோபத்தைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்:
● மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளிவிடுவது ஒரு சிறந்த முறை; கோபத்தின் கடுமையைச் சட்டென குறைக்க இது கைகொடுக்கும்.
● மூச்சை இழுத்து விடுவதோடு, “போனா போகட்டும்,” “விட்டிடு,” “அமைதியா இரு” போன்ற வார்த்தைகளை மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
● உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தில் மூழ்கிவிடுங்கள். வாசிப்பது, பாட்டு கேட்பது, தோட்டத்தைப் பராமரிப்பது போன்றவற்றில் மனதை செலுத்துங்கள்.
● தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள்.
அதிகமாய் எதிர்பார்க்காதீர்கள்
கோபத்தை மூட்டிவிடும் ஆட்களை அல்லது விஷயங்களை அறவே தவிர்ப்பது முடியாத விஷயம்; ஆனால், உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளலாமே! இதற்கு, நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்ற வேண்டியிருக்கலாம்.
அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறவர்கள்தான் அதிகமாகக் கோபப்படுகிறார்கள். ஏன்? யாராவது ஒருவர் அல்லது ஒரு விஷயம் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டால் ஏமாற்றமடைந்து சட்டென கோபப்படுவார்கள். ஆனால், இந்த வசனத்தை நினைவில் வைப்பது கோபத்தை விட்டொழிக்க உதவும்: “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை; . . . எல்லா மனிதர்களும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள்.” (ரோமர் 3:10, 12) ஆகவே, நாமோ மற்றவர்களோ தவறே செய்யக்கூடாது என எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நம்மிடமோ மற்றவர்களிடமோ அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காமல் இருப்பது ஞானமானது. “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) ஆம், “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.” (பிரசங்கி 7:20) ஆகவே, நம்மை தவறே செய்யாதவராகக் காட்டிக்கொள்ள முயன்றால், நம் வாழ்க்கையில் வெறுப்பும் கோபமும்தான் சதா தலைதூக்கும்.
மனிதர்கள் தவறு செய்யும் இயல்பு உடையவர்கள், அதனால்தான் நாம் அடிக்கடி கோபப்படுகிறோம். ஆனால், கோபத்தை எப்படி வெளிக்காட்டுகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (எபேசியர் 4:26) ஆம், கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்களுடைய உணர்ச்சிகளை, சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே பயன் தரும் விதத்தில் வெளிக்காட்டலாம். (g12-E 03)
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
அமைதியாய் இருக்க...
இழுத்து மூச்சுவிடுங்கள்
பிடித்த விஷயங்களில் மூழ்கிவிடுங்கள்
உடற்பயிற்சி செய்யுங்கள்