கோபம் கோரமுகம் காட்டுவது ஏன்?
கோபம் கோரமுகம் காட்டுவது ஏன்?
கோபத்திற்கான காரணங்களை விவரிப்பது சிக்கலானது. கோபம் ஏன் வருகிறது என விஞ்ஞானிகளால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், கோபத்தை மூட்டிவிடும் சில விஷயங்கள் இருப்பதாக மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நமக்கு யாராவது அநியாயமோ துரோகமோ இழைத்தால் வெறுத்துப்போகிறோம். வெறுப்பும் எரிச்சலும் முற்றும்போது அது கோபமாக உருவெடுக்கிறது. யாராவது நம்மைக் கேவலமாக, அவமரியாதையாக நடத்தும்போது கோபம் வரலாம். நம்முடைய பெயர், பதவி எல்லாம் பறிபோய் விடுமோ என்ற பயமும்கூட கோபத்தை முடுக்கிவிடலாம்.
என்றாலும், கோபப்படுவதற்கான காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். வயதை, பாலினத்தை, கலாச்சாரத்தைப் பொறுத்தும் அவை மாறுபடலாம். அதுமட்டுமா, கோபப்படும் விதமும் நபருக்கு நபர் வித்தியாசப்படும். சிலருக்கு சீக்கிரத்தில் கோபம் வராது, வந்தாலும் சீக்கிரத்தில் மறந்துவிடுவார்கள். ஆனால், சிலருக்கு சட்டென கோபம் வந்துவிடும்; அதோடு நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில்கூட வன்மத்தை மனதில் தொட்டில் கட்டி வளர்ப்பார்கள்.
சுற்றிச் சூழ இருக்கிற ஆட்களும் கோபக் கனலை ஊதிவிடுகிறார்கள். அதோடு, கோபத்தில் சட்டென நெருப்பாக பற்றியெரிகிறவர்களும் அதிகமாகி வருகிறார்கள். ஏன்? ஒரு காரணம், இன்று எங்கும் காணப்படுகிற ‘நான்,’ ‘எனக்கு’ என்ற மனப்பான்மையே. “கடைசி நாட்களில், . . . மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, . . . அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இன்றைய மக்களின் மனப்பான்மையை இது அப்படியே படம்பிடித்து காட்டுகிறது, அல்லவா?
ஆம், சுயநலம் பிடித்த ஆட்களுக்கு தாங்கள் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றால் உடனே கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இப்படி, கட்டுக்கடங்காமல் கோபம் வருவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
பெற்றோர்போல் பிள்ளை
பிள்ளைகள் பெற்றோரையே பார்த்து பார்த்து வளருவதால் அவர்களுடைய சுபாவம் பிள்ளைகளைத் தொற்றிக்கொள்கிறது. மனநல நிபுணர் ஹாரி எல். மில்ஸ் கூறுகிறார்: “சுற்றும் முற்றும் இருக்கிறவர்கள் கோபப்படுவதைப் பார்த்து சிறு பிள்ளைகளும் கற்றுக்கொள்கிறார்கள்.”
சின்ன விஷயத்திற்கெல்லாம் சிடுசிடுவென எரிந்து விழுகிறவர்கள் மத்தியில் வளருகிற பிள்ளைகள், பிரச்சினைகளைச் சந்திக்கும்போது கோபத்தை வெளிக்காட்ட பழகிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, விஷம் கலந்த தண்ணீரை ஒரு செடிக்கு ஊற்றினால், அது வளர்ந்தாலும் நல்ல பலன்களைத் தராது. கோபமும், விஷம் கலந்த தண்ணீரைப் போன்றது; கோபத்தை ஊற்றி வளர்க்கப்படும் பிள்ளைகள் பெரியவர்களானதும் கோபக்காரர்களாகத்தான் ஆவார்கள்.
நெருக்கடியான நகரங்கள்
1800-ஆம் வருடத்தில், உலக மக்களில் சுமார் மூன்று சதவீதத்தினர் நகரங்களில் வாழ்ந்தார்கள். 2008-ல் அந்த எண்ணிக்கை 50 சதவீதமாக எகிறியது; 2050-க்குள்ளாக 70 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடியான நகரங்களை நோக்கி இப்போது நிறைய பேர் படையெடுப்பதால், மக்களுடைய கோபமும் விரக்தியும் அதிகமாகி வருகிறது. உதாரணத்திற்கு, மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும் பெருநகரங்களில் ஒன்றுதான் மெக்சிகோ நகரம். அங்குள்ள மக்கள் தவியாய் தவிப்பதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெருக்கடி. சுமார் 1.8 கோடி மக்களுக்கும்
60 லட்சம் கார்களுக்கும் தஞ்சமளிக்கிற மெக்சிகோ நகரம், “உலகிலேயே திக்குமுக்காடி நிற்கிற தலைநகரமாய் திகழ்கிறது. ஏனென்றால், எங்கு பார்த்தாலும் ஒரே ட்ராஃபிக் மயமாக இருக்கும்; இதனால், மக்கள் எரிமலையாய் வெடிக்கிறார்கள்” என ஓர் இதழாசிரியர் குறிப்பிடுகிறார்.நெருக்கடியான நகரங்களில் வசிக்கும் மக்கள் கொதிப்படைவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அங்கே சுத்தமான காற்று கிடைக்காது, வீட்டு வசதி இருக்காது, ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருக்கும், கலாச்சார வேறுபாட்டால் அக்கப்போர் நடக்கும், வன்முறை தலைவிரித்தாடும். இப்படி பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் நெருக்குவதால் மக்கள் விரக்தியடைந்து கோபப்படுகிறார்கள், பொறுமை இழந்துவிடுகிறார்கள்.
பணக் கஷ்டம்
உலகின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், மக்கள் கவலையில் விழிபிதுங்கி நிற்கிறார்கள். “உலகெங்கும் 21 கோடிக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்” என 2010-ல் பன்னாட்டு நிதி நிறுவனமும் ஐ.நா. பன்னாட்டு தொழிலாளர் சங்கமும் இணைந்து அளித்த அறிக்கை காட்டுகிறது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட பலரும் வேறு
எந்த ஆதாயமும் இல்லாமல் தவிப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.வேலையில் இருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஐ.நா. பன்னாட்டு தொழிலாளர் சங்கம் சொல்கிறபடி, வேலை சம்பந்தமான பிரச்சினை “கொள்ளை நோய்போல் உலகெங்கும் பரவிவருகிறது.” ஒன்டாரியோவைச் சேர்ந்த நிர்வாக ஆலோசகர் லார்ன் கர்ட்டஸ் சொல்கிறார்: “வேலையில் பிரச்சினை வந்துவிடுமோ வேலை பறிபோய்விடுமோ என்றெல்லாம் மக்கள் பயப்படுகிறார்கள்.” அதனால், “வேலையைத் தக்கவைத்துக்கொள்ள மேலதிகாரிகளிடம், மற்ற வேலையாட்களிடம் தகராறு செய்கிறார்கள்.”
பாரபட்சமும் அநீதியும்
ஓட்டப்பந்தயத்தில் உங்களை மட்டும் காலில் சங்கிலி கட்டிக்கொண்டு ஓடச் சொன்னால் எப்படியிருக்கும்! இனம் அல்லது பின்னணி காரணமாக பாரபட்சத்துடன் நடத்தப்படும்போது நிறைய பேர் இப்படித்தான் உணருகிறார்கள். வேலை, கல்வி, வீடு போன்ற அடிப்படை விஷயங்களுக்கே பாரபட்சம் காட்டி, ஒதுக்கும்போது மக்கள் கொதிப்படைகிறார்கள்.
அநீதியாலும்கூட மக்களின் மனம் நொந்து நூலாகிறது. நாம் எல்லாருமே ஏதாவதொரு சமயத்தில் அநீதியால் அவதிப்பட்டிருக்கிறோம்; அதை நினைத்தாலே மனம் வலிக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஞானியான சாலொமோன் ராஜா இப்படிச் சொன்னார்: “ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், பிரசங்கி 4:1) நீதிக்குத் தட்டுப்பாடும் ஆறுதலுக்கு பஞ்சமும் வந்தால் கோபம் வெள்ளமாய் பாய்ந்து வராதா என்ன?!
அவர்களைத் தேற்றுவாரில்லை.” (பொழுதுபோக்குத் துறை
டிவி மூலமாகவும் மற்ற மீடியாக்கள் மூலமாகவும் காட்டப்படுகிற வன்முறை பிள்ளைகளை எந்தளவு பாதித்திருக்கிறது என்பதை அறிய ஆயிரத்திற்கும் மேலான ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. காமென் சென்ஸ் என்ற மீடியாவை ஆரம்பித்தவரான ஜேம்ஸ் பி. ஸ்டையர் சொல்கிறார்: “படுபயங்கரமான வன்முறை காட்சிகளை பிள்ளைகள் அடிக்கடி பார்ப்பதால், முரட்டுத்தனமாக நடந்துகொள்வதில் தவறில்லை என நினைக்கிறார்கள், மிருகத்தனமான செயல்களை வரவேற்கிறார்கள், இரக்கம் காட்ட யோசிக்கிறார்கள்.”
டிவியில் வன்முறை செயல்களை அடிக்கடி பார்க்கிற இளைஞர்கள் எல்லாருமே பயங்கரமான கேடிகளாகிவிடுவார்கள் என்று சொல்ல முடியாதுதான். என்றாலும், அநியாயத்தைத் தட்டிக்கேட்க வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்ற பாடத்தையே பொழுதுபோக்கு மீடியா புகட்டுகிறது. அதனால், இன்றைய தலைமுறையினருக்கு வன்முறையெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
பேய்களின் செல்வாக்கு
இன்று நிறைய பேர் கோபத்தில் வெறித்தனமாக நடந்துகொள்வதற்குக் காரணம் யார் என்பதை பைபிள் சொல்கிறது. மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், ஒரு கெட்ட தூதன் சர்வவல்ல கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டான். அவனே சாத்தான், எபிரெய மொழியில் அப்பெயரின் அர்த்தம் “எதிர்ப்பவன்,” அதாவது “விரோதி.” (ஆதியாகமம் 3:1-13) பிற்பாடு, அவன் இன்னும் சில தூதர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு கடவுளை எதிர்க்க ஆரம்பித்தான்.
இந்தக் கெட்ட தூதர்கள்தான் பேய்கள்; இவர்கள் பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9, 10, 12) இங்கும் இவர்களுக்கு கொஞ்ச காலமே இருப்பதால் “மிகுந்த கோபத்தோடு” சுற்றித் திரிகிறார்கள். இவர்களை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் இவர்களுடைய செயல்களின் பாதிப்புகளைப் பார்க்க முடிகிறது. எப்படி?
சாத்தானும் அவனுடைய பேய்களும் நம்முடைய பாவ இயல்பைச் சாதகமாகப் பயன்படுத்தி, “சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், வாக்குவாதம், பிரிவினை, . . . போன்ற” காரியங்களைத் தூண்டிவிடுகிறார்கள்.—கலாத்தியர் 5:19-21.
முளையிலேயே கிள்ளியெறியுங்கள்
ஆம், மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைச் செய்யவே படாத பாடுபடும்போது பிரச்சினைகள், பாரங்கள், கவலைகள் என இவையும் நெருக்குவதால் அவர்கள் வெறுப்படைகிறார்கள்.
கோபம் துளிர்த்து வளர்ந்து விருட்சமானால் அதை வெட்டுவது எளிதே அல்ல. அப்படியானால், அதை முளையிலேயே கிள்ளியெறிவது எப்படியென அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (g12-E 03)
[பக்கம் 5-ன் பெட்டி]
கோபத்தின் அபாய எல்லை எது?
▶ கடையில் பொருளை வாங்க காத்துக்கிடக்கையில் கோபம் வந்தால்.
▶ கூட வேலை பார்ப்பவர்களுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டால்.
▶ சில சமயம் இரவில் தூங்காமல் அன்று நடந்த ஒரு விஷயத்தை நினைத்து கோபத்தில் புழுங்கினால்.
▶ உங்களைப் புண்படுத்தியவரை மன்னிப்பது கஷ்டமாக இருந்தால்.
▶ உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்போதுமே கஷ்டமாக இருந்தால்.
▶ அவமானத்தாலும் ஆதங்கத்தாலும் அடிக்கடி கோபம் வந்தால். *
[அடிக்குறிப்பு]
^ MentalHelp.net என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
புள்ளிவிவரம்
உச்சக்கட்ட கோபத்தைப் பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் மென்டல் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் இருந்த சில புள்ளிவிவரங்கள் இதோ:
84% பணியாளர்கள் வேலைப்பளுவால் வெறுப்படைகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தளவு இல்லை.
65% ஆட்களிடம் சக அலுவலர்கள் எரிந்து விழுந்திருக்கிறார்கள்.
45% பணியாளர்கள் வேலை செய்யும்போது சதா சீறிவிழுகிறார்கள்.
கிட்டத்தட்ட 60% பணியாளர்கள் வேலையில் ஏற்படும் டென்ஷனால்தான் விடுப்பு எடுக்கிறார்கள்.
33% பிரிட்டன் குடிமக்கள் அக்கம்பக்கத்தாரிடம் கோபித்துக்கொண்டு பேசுவதே இல்லை.
64% பேர், சாதாரணமாகவே மக்கள் ரொம்ப கோபப்படுகிறார்கள் என்று “நம்புவதாக” அல்லது “உறுதியாய் நம்புவதாக” ஓட்டு போட்டார்கள்.
32% ஆட்கள் தங்களுக்கு சட்டென கோபப்படுகிற ஒரு நண்பரோ குடும்ப அங்கத்தினரோ இருப்பதாகச் சொல்கிறார்கள்.
[பக்கம் 5-ன் படம்]
நீங்கள் கோபத்தில் வெடிப்பதைப் பார்த்தால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்?
[பக்கம் 6-ன் படம்]
கோபத்தையும் முரட்டு குணத்தையும் கட்டிப்போட பொழுதுபோக்குத் துறை கைகொடுக்கிறதா?