Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாக்கு போடலாமா?

பாக்கு போடலாமா?

பாக்கு போடலாமா?

தெ ற்கு ஆசியாவில், சாலையில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் பாசமாக புன்னகைத்தார். செக்கச்செவேலென்று எச்சிலும், கறை படிந்த பற்களும் பளிச்செனத் தெரிந்தன. அந்த எச்சிலை பாதையிலேயே துப்பினார், அது அழியாத கோலத்தை வரைந்தது.

கிழக்கு ஆப்பிரிக்காமுதல், பாகிஸ்தான், இந்தியா, தெற்கு ஆசியா, பாப்புவா—நியூ கினி, மைக்ரோனேசியாவரை கோடிக்கணக்கான ஆட்கள் பாக்கு போடுகிறார்கள். இது உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதம். வியாபாரிகள் தெருக்களிலும் சந்தைகளிலும் ஆங்காங்கே மேஜைகளை விரித்து பாக்கு விற்கிறார்கள். சில நேரங்களில் உதவிக்காக தங்கள் பிள்ளைகளையும் வைத்துக்கொள்கிறார்கள். சில வியாபாரிகள் கடைகளில் வண்ண வண்ண விளக்குகளை எரிய விட்டு, வசீகர உடையில் அழகிகளை நிறுத்தி வைத்து, வாடிக்கையாளர்களை வளைத்துப்போடுகிறார்கள்.

உலகம் முழுவதும் பாக்கு விற்பனையில் கோடிக்கணக்கான பணம் ஒரு வருடத்தில் வசூலாகிறது. சரி, பாக்கு எங்கிருந்து கிடைக்கிறது? ஏன் இத்தனை பேர் அதைப் பயன்படுத்துகிறார்கள்? இதனால் உடலுக்குக் கேடு உண்டா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இந்தப் பழக்கத்தை எப்படி மறக்கலாம்?

வெற்றிலை பாக்கு

பசிபிக் பகுதிகளிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பாக்கு மரங்கள் காணப்படுகின்றன. இந்தப் பாக்கை வெற்றிலையில் வைத்து மடித்து, அதில் சுண்ணாம்பு தடவி மெல்லுவார்கள். சுண்ணாம்பு சேர்ந்ததும் வாயில் போதையைத் தூண்டும் வேதிப்பொருள் சுரக்கும். சிலர் புகையிலை, நறுமணப் பொருள்கள், இனிப்பு எல்லாம் சேர்த்து ருசியை ஏற்றிக்கொள்வார்கள்.

இவையெல்லாம் ஒன்று சேர்ந்தால் வாயில் எச்சில் ஊறும், வாயெல்லாம் சிவப்பாகிவிடும். அதனால், பாக்கு மெல்லுபவர்கள் ஓயாமல் எச்சிலைத் துப்பிக்கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்தபடியே துப்பி, நடந்துசெல்வோர்மீது சிவப்பு வண்ண “ஓவியம்” வரைந்துவிடுவார்கள்!

“மெல்ல மெல்ல” கொன்றுவிடும்!

ஓரல் ஹெல்த் என்ற பத்திரிகை சொல்கிறது: “காலம் காலமாக பாக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, கலாச்சாரத்திலும், மதத்திலும், சமூகத்திலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. பாக்கினால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை என்றே பெரும்பாலோர் நினைக்கிறார்கள். இதை மென்றால் உடலுக்கு ஒரு சுகம், மிதப்பு, விறுவிறுப்பு கிடைக்கும் என்றுகூட சொல்கிறார்கள். . . . ஆனால், இது உடலுக்கு ரொம்பவே கேடு என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.” எப்படி?

பாக்கில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் நம்மை அதற்கு அடிமைப்படுத்திவிடும் என்று போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள். சிலர் ஒரு நாளைக்கு 50 பாக்குகள்வரை மெல்லுகிறார்களாம்! இப்படியே “மெல்ல மெல்ல” பற்களில் கறை படிய ஆரம்பிக்கும், ஈறுகளில் நோய் தொற்று ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்கு வாயின் உட்புற சுவர்களில் சிவப்பு கறை படிந்து, சுருக்கங்கள் ஏற்படும் என்று ஓரல் ஹெல்த் சொல்கிறது. நாளடைவில் வாயின் உட்பகுதி “கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, இறுகிவிடுகிறது.” கடைசியில், ஓரல் சப்மியூக்கஸ் ஃபைப்ரோசிஸ் (Oral Sub mucous fibrosis) என்ற வாய்ப் புற்றுநோயில் முடிவடைகிறது.

பாக்கு மெல்லுவதால் தொண்டையின் உள்ளே ஓரல் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (oral squamous cell carcinoma) என்ற புற்றுநோயும் ஏற்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் பெரும்பாலான ஆட்களுக்கு இந்தப் புற்றுநோய் இருக்கிறது. தைவானில் இந்தப் புற்றுநோயுள்ளவர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தினர் பாக்கு மெல்லுபவர்கள். அதுமட்டுமல்ல, “தைவானில் கடந்த 40 வருடங்களில் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்திருக்கிறது. அந்த நாட்டில் இறப்பிற்கான 10 முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று” என்று த சைனா போஸ்ட் அறிக்கை செய்கிறது.

மற்ற இடங்களிலும் இதே நிலைமைதான். “பாப்புவா-நியூ கினி மெடிக்கல் சொசைட்டி அறிக்கையின்படி, அங்குள்ள மக்கள் விரும்பி சுவைக்கிற பாக்கு, ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 2,000 ஆட்களுக்கு சமாதி கட்டுகிறது. அதோடு, நிறைய நோய்களையும் பரப்புகிறது” என்று பாப்புவா-நியூ கினி போஸ்ட்-கொரியர் காட்டுகிறது. டாக்டரும் மருத்துவ எழுத்தாளருமான ஒருவர் சொல்கிறார்: “புகை பிடிப்பதால் பல நோய்கள் வருவதுபோல, பாக்கு மெல்லுவதாலும் பல நோய்கள் ஏற்படுகின்றன,” இருதய நோயும் வரலாம்.

பைபிளின் கருத்து

பைபிள் ஒரு மருத்துவ புத்தகம் அல்ல, பாக்கு மெல்லுவது சரியா, தவறா என்று அது நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால், சுத்தமாக, சுகமாக, சந்தோஷமாக வாழ உதவும் ஏராளமான நியமங்கள் அதில் பொதிந்துள்ளன. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்களையும் கேள்விகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

“அன்புக் கண்மணிகளே, . . . உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. தேவபயத்தோடு நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காண்பிப்போமாக.” (2 கொரிந்தியர் 7:1) ‘உங்களுடைய உடலை பரிசுத்தமுள்ள பலியாக அர்ப்பணியுங்கள்.’ (ரோமர் 12:1) ஒருவர் பாக்கு மென்று உடலை அசுத்தப்படுத்தினால், கடவுளுக்கு முன் பரிசுத்தமான நபராக இருக்க முடியுமா?

“[கடவுளாலேயே] நாம் வாழ்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:28) “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்தே வருகின்றன.” (யாக்கோபு 1:17) உயிர் கடவுள் தந்த விலையுயர்ந்த பரிசு. நோயுண்டாக்கும் பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் உயிர் என்ற பரிசை மதிக்கிறார் என்று சொல்ல முடியுமா?

“ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது.” (மத்தேயு 6:24) “எந்தக் காரியத்திற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.” (1 கொரிந்தியர் 6:12) கடவுளுக்குப் பிரியமாக வாழ விரும்பும் ஒருவர் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி, அது தன்னைக் கட்டுப்படுத்த விட்டுவிடுவாரா?

“உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்.” (மாற்கு 12:31) “அன்பு காட்டுகிறவன் சக மனிதருக்குத் தீமை செய்ய மாட்டான்.” (ரோமர் 13:10) கண்ட இடங்களிலெல்லாம் சிவப்பு எச்சிலை துப்பி சுகாதாரத்தைக் கெடுத்து அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஒருவர் மற்றவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

“ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்ற இயற்கை நியதியை யாராலும் மாற்ற முடியாது. (கலாத்தியர் 6:7, 8) கெட்ட பழக்கங்களைப் பின்பற்றினால், கெட்ட விளைவுகளையே அறுவடை செய்வோம். நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்து கடவுள் சொல்கிறபடி வாழ்ந்தால் நிறைய நன்மைகளை அறுவடை செய்வோம், என்றும் சந்தோஷமாகவும் வாழ்வோம்! நீங்கள் நல்லதையே செய்து, கடவுளைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறீர்களா? ஆனால், பாக்கு மெல்லும் பழக்கத்தை உதறித்தள்ளுவது கஷ்டமாக இருக்கிறதா? அநேகருக்குக் கைகொடுத்த சில நடைமுறையான வழிகள் கீழே உள்ளன. ஜெபம் செய்துவிட்டு இவற்றை யோசித்துப் பாருங்கள்.

பாக்கை மறக்க மூன்று வழிகள்

1. தூண்டுதல். ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமென்றால், அது உடலுக்குக் கெடுதலா இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது, எப்படியாவது அதை விட்டுவிட வேண்டும் என்ற தூண்டுதல் அவசியம். பாக்கு மெல்லுவது, புகைப்பது, குடிப்பது எல்லாம் உடலுக்குக் கேடு என்று நன்றாகத் தெரிந்திருந்தும் நிறைய பேர் அதையெல்லாம் செய்கிறார்கள். அந்தப் பழக்கத்தை விட்டுவிட உங்களுக்குத் தூண்டுதல் வர வேண்டும் என்றால் படைப்பாளரைப் பற்றியும் அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் பைபிளை ஆராய்ந்து படிக்க வேண்டும். எபிரெயர் 4:12 சொல்கிறது: “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது.”

2. கடவுளின் உதவி. “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எல்லாரும் பெற்றுக்கொள்வார்கள், தேடுகிற எல்லாரும் கண்டடைவார்கள், தட்டுகிற எல்லாருக்கும் திறக்கப்படும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக்கா 11:9, 10) உதவிக்காகவும் பலத்திற்காகவும் மனதார மன்றாடுகிறவர்களுக்கு உண்மைக் கடவுளான யெகோவா கண்டிப்பாக பதிலளிப்பார். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று 1 யோவான் 4:8 சொல்கிறது. இந்த அன்பை ருசித்த கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு.”—பிலிப்பியர் 4:13.

3. மற்றவர்களின் உதவி. நல்லவர்களோடு பழகினால் நல்லவர்களாவீர்கள், கெட்டவர்களோடு பழகினால் கெட்டவர்களாகிவிடுவீர்கள். இதைத்தான் நீதிமொழிகள் 13:20 சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” எனவே நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். யெகோவாவின் சாட்சிகளில் சிலர் முன்பு பாக்கு மென்றவர்கள்தான். ஆனால், கிறிஸ்தவ நண்பர்களோடு பழகியதால்... பைபிளை ஆராய்ந்து படித்ததால்... பாக்கை அடியோடு மறக்க முடிந்தது. (g12-E 02)

[பக்கம் 18, 19-ன் பெட்டி/படங்கள்]

பாக்கை மறந்தவர்கள்

பாக்கு மெல்லும் பழக்கத்தைக் கைவிட்ட சிலரை விழித்தெழு! பத்திரிகை பேட்டி எடுத்தது. அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:

நீங்க ஏன் பாக்கு மெல்ல ஆரம்பிச்சீங்க?

பாலின்: பாப்புவா-நியூ கினியில ஒரு தீவுல நாங்க இருக்கோம். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப அப்பா-அம்மாகிட்டருந்து பாக்கு மெல்ல கத்துக்கிட்டேன். இது எங்க கிராமத்தோட பாரம்பரிய பழக்கம்.

பெற்றி: எனக்கு இரண்டு வயசு இருக்கும்போது அப்பா பாக்கு சாப்பிட கொடுத்தாங்க. வளர்ந்த பிறகு, பாக்கு மரம் மாதிரி எப்பவும் நிறைய பாக்கு வச்சிருப்பேன்! காலையில எழுந்திருச்சதும் முதல் வேலையா பாக்கு போடுவேன். அந்தளவு அதுக்கு அடிமையாயிட்டேன்.

வன்-ஜங்: 16 வயசிலேர்ந்து பாக்கு போட ஆரம்பிச்சேன். பாக்கு போடறது ஒரு ஃபேஷனா இருந்தது. பெரிய ஆளா காட்டிக்கிறதுக்காகவும் பாக்கு போட்டாங்க. மத்தவங்க என்னை ஃப்ரெண்டா ஏத்துக்கணும்னு நினைச்சி நானும் போட்டேன்.

ஜீயல்-லியன்: வயிற்று பிழைப்புக்காக பாக்கு விற்றேன். சரக்கு நல்லதா இருக்கான்னு பார்க்கறதுக்காக சாப்பிட ஆரம்பிச்சேன். அப்பறம் என்னால அத விடவே முடியல.

பாக்கு பழக்கத்துனால என்னென்ன பாதிப்பு வந்தது?

ஜீயல்-லியன்: பல், உதடு, வாயெல்லாம் இரத்த கலர்ல கறை படிஞ்சிருக்கும். முன்னாடி எடுத்த ஃபோட்டோவ பார்க்க எனக்கே பிடிக்கல. அப்போ என் உதட்டுல வந்த புண்ணால இன்னும் கஷ்டப்படுறேன்.

பாலின்: அடிக்கடி வாய்ப்புண், குமட்டல், வயிற்றுப்போக்கு எல்லாம் வரும்.

பெற்றி: நான் வெறும் 35 கிலோதான் இருந்தேன். என் வயசுக்கும் உயரத்துக்கும் அது ரொம்ப கம்மி. பல்லெல்லாம் அசிங்கமா இருக்கும், அத சுத்தம் பண்றதுக்காக ஸ்டீல் நாரால தேய்ப்பேன்.

சாம்: அடிக்கடி வயிற்றுப்போக்கு வரும், பல் ஈறும் கெட்டுப்போச்சு. ஸ்டீல் நாரால பல்ல சுத்தம் பண்ணுவேன், அப்பவும் சுத்தமாகாது. இப்போ எனக்கு ஒரே ஒரு பல்லுதான் இருக்கு!

பாக்கு போடறத ஏன் விட்டீங்க?

பாலின்: பைபிள்ல 2 கொரிந்தியர் 7:1-ல ‘உடலிலிருந்து எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்’-னு படிச்சேன். எனக்கு உயிர் கொடுத்த கடவுள சந்தோஷப்படுத்தறதுக்கு பாக்கு போடுற பழக்கத்த எப்படியாவது விட்டுடணும்னு தீர்மானிச்சேன்.

சாம்: யெகோவா தேவனோட நெருக்கமா இருக்கணும்னு நினைச்சேன். அதனால, பாக்கு போடனுங்ற ஆசைய கட்டுப்படுத்த சக்தி கொடுங்கனு ஜெபம் செஞ்சேன். யெகோவா எனக்கு உதவுனாங்க. இப்போ கிட்டத்தட்ட 30 வருஷமா பாக்கு போடறதே இல்ல.

ஜீயல்-லியன்: “பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்”-னு பைபிள்ல படிச்சேன். (யாக்கோபு 4:8) இது என் மனசுல சுருக்குனு குத்திச்சு. பாக்கு போடுறதுனால வர்ற கெடுதல் என்னன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் பாக்கு போட்டா, மத்தவங்களுக்கு விற்றா தப்புதானே? என் உடலையும் கடவுளோடுள்ள என் உறவையும் கெடுக்குற அந்தப் பழக்கத்த விடனும்னு உடனே முடிவு பண்ணினேன்.

அந்தப் பழக்கத்தை மறந்ததுனால ஏதாவது நன்மை கிடைச்சுதா?

வன்-ஜங்: மத்தவங்க என்னை ஃப்ரெண்டா ஏத்துக்கணும்னுதான் பாக்கு போட ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப யெகோவாவே எனக்கு ஃப்ரெண்டா கிடச்சிட்டாங்க, கிறிஸ்தவ சபையிலயும் நிறையா ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க.

சாம்: ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். யெகோவாகிட்டயும் நல்ல உறவு இருக்கு. இப்பெல்லாம் பாக்கு வாங்கி பணத்த வீணாக்காம, குடும்பத்தை நல்லா பார்த்துக்கிறேன்.

பாலின்: இப்ப நான் எதுக்கும் அடிமை இல்லை, சுத்தமா இருக்கேன். என் பல்லெல்லாம் பளிச்சுனு பலமா இருக்கு. பாக்கு தோல், எச்சில் கறைனு இல்லாம வீடும் தோட்டமும் ரொம்ப அழகா இருக்கு.

பெற்றி: சுத்தமான மனசாட்சியோட ஆரோக்கியமா இருக்கேன். இப்போ நான் டீச்சரா வேலை செய்றேன், முழு நேரமா கடவுளுக்கு சேவையும் செய்றேன்.

[படங்கள்]

பெற்றி

பாலின்

வென்-சங்

ஜியாவோ -லியன்

சாம்

[பக்கம் 17-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தொடர்ந்து பாக்கு மென்றால் கொடிய வியாதிகள் வரும்

வெற்றிலையில் மடித்த பாக்கு

கறைபடிந்த பற்களும் நோய்தொற்றிய ஈறுகளும்

ஓரல் சப்மியூக்கஸ் ஃபைப்ரோசிஸ்

[பக்கம் 17-ன் படம்]

ஓரல் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா