இளைஞர் கேட்கின்றனர்
பைபிளை ஆர்வத்தோடு படிப்பது எப்படி?
ஏன் பைபிளைப் படிக்க வேண்டும்? இப்படி யோசித்துப் பாருங்கள்:
ஒரு புதையலைக் கண்டுபிடிக்க பைபிள் உங்களுக்கு உதவும். அதிகமாக விற்பனையாகும் இந்தப் புத்தகம்...
● எப்போதுமே சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித்தரும்
● நடந்து முடிந்த... நடக்கப் போகும்... விஷயங்களைச் சொல்லித்தரும். இதையெல்லாம் வேறு எங்கேயும் தெரிந்துகொள்ள முடியாது
● உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்ளவும் இன்னும் சிறந்த மனிதராய் ஆகவும் உதவும் *
பை பிளைப் படிக்க அதிக முயற்சி தேவை. அப்படிச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! உங்களைப் போன்ற மற்ற இளைஞர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டுமா? பின்வரும் பக்கங்களை வெட்டி, மடித்து வைத்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்பதில் தங்களுக்கிருந்த தடைகளை எப்படித் தாண்டினார்கள், என்ன பலன்களைப் பெற்றார்கள் என்பதை அதில் பார்க்கலாம்.
“ஒவ்வொருதருக்கும் பிரயோஜனமான எதாவது ஒரு விஷயம் பைபிள்ல இருக்கும். வாழ்நாள் முழுதும் படிச்சாலும் புதுசு புதுசா கத்துக்கிட்டே இருக்கலாம்!”—வெற்றி. * (g12-E 02)
“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
^ இதைத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உதவுவார்கள். அவர்களைத் தொடர்புகொள்ள பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதி அனுப்பவும்.
^ இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 13, 14-ன் பெட்டி/படங்கள்]
எப்படிப் படிப்பது
தடைக்கல்: படிக்கப் பிடிக்காது
“ஒரு மணிநேரமா உக்காந்து படிச்சிட்டே இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது.”—லீனா.
தடைக்கல்லைத் தாண்ட... தூண்டுதல் அவசியம்
பைபிளைப் படிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். கடவுளோடு நண்பராகலாம்... உலகில் நடக்கும் தலைகீழ் மாற்றங்களுக்குக் காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்... நல்ல நல்ல குணங்களை வளர்க்கலாம்... இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்!
“பைபிள் படிக்கிறத, ஒரு வேலையா அல்லது ஸ்கூல் பாடமா நினைச்சு படிக்காதீங்க. ஆனா, நல்ல நண்பரான யெகோவாகிட்ட இன்னும் நெருக்கமாகுறதுக்கு கிடைச்ச ஒரு வாய்ப்பா நினைச்சு செய்யுங்க.”—பெத்தானி.
“பைபிளை படிக்கும்போது யெகோவாவோட நீங்க தனியா பேசுறீங்க. உங்க அப்பா அம்மா இருக்கும்போது மட்டும் ஒருத்தர்கிட்ட நீங்க பேசுறீங்கன்னா, அவர் உங்க அப்பா அம்மாவுக்கு ஃப்ரெண்டா, இல்ல உங்க ஃப்ரெண்டா? நீங்களே தனியா பைபிள் படிச்சாதான் யெகோவாவை உங்க ஃப்ரெண்டா ஆக்கிக்க முடியும்.”—பியாங்கா.
மறந்துவிடாதீர்கள்: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய வார்த்தைகள். அவை கற்பிப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், தவறுகளைச் சரிசெய்வதற்கும், எப்படி வாழ வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பதற்கும் பயனுள்ளவையாக இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) ஆம், பைபிள் உங்களுக்கு இந்த விதங்களிலும் உதவும்!
“படிக்கிறதுனால எனக்கு என்ன நன்மை கிடைக்குங்கிறத எப்பவும் மனசுல வச்சிப்பேன். என்கிட்ட ஏதாவது குறை இருக்கிற மாதிரி தோனிச்சின்னா, அத கண்டுபிடிச்சி சரி பண்றதுக்காகவே பைபிள் படிப்பேன்.”—மாற்க்.
யோசிப்பதற்கு:
பைபிளைப் படிக்க எது உங்களைத் தூண்டுகிறது?
தடைக்கல்: “போர்” அடிக்கும்
“10 நிமிஷத்துக்கு மேல படிச்சா எனக்கு போர் அடிச்சிடும்; 20 நிமிஷத்துக்கு மேல படிச்சேன்னா வேற எதையாவது யோசிக்க ஆரம்பிச்சிடுவேன். 30 நிமிஷத்துக்கு மேல போச்சினா போதும் போதும்னு ஆயிடும்!”—ஆலிஸன்.
தடைக்கல்லைத் தாண்ட... புதுசு புதுசா யோசியுங்கள்
நீங்கள் எதைப் படித்தாலும் சரி, எப்படிப் படித்தாலும் சரி, எங்கு இருந்து படித்தாலும் சரி படிக்கும்போது உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்துங்கள்.
“நேரம் ஒதுக்கி உங்களோட கேள்விகளுக்கு பதில்களைத் தேடுங்க. உங்க மனசுல இருந்த கேள்விக்கு பதில் கிடைச்சுதுனா, திருப்தியாவும் இருக்கும், சந்தோஷமாவும் இருக்கும்.”—ரிச்சர்ட்.
“ஏதாவது ஒரு சம்பவத்தை பத்தி படிக்கும்போது, அதை கற்பனை பண்ணி பாருங்க. அந்த சம்பவத்தில வர முக்கியமான ஒருத்தரா அல்லது அத பார்த்துட்டு இருக்கிற ஒருத்தரா உங்கள வச்சி பாருங்க. அந்த சம்பவம் அப்படியே உங்க கண் முன்னால நடக்குற மாதிரி நினைச்சிக்கோங்க.”—ஸ்டீவன்.
“அனுபவிச்சு படிங்க. தோட்டத்துல காத்தாட உக்காந்து, ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சிட்டே படிங்க. நொறுக்குத்தீனி சாப்பிட்டுட்டே படிக்கிறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். யாருக்குத்தான் பிடிக்காது?”—அலெக்சாண்ட்ரா.
மறந்துவிடாதீர்கள்: “போர்” அடிப்பதும் அடிக்காததும் ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அதனால், “படிக்கிறது போர் அடிக்கும்” என்று சொல்லாமல் “எனக்கு போர் அடிக்கும்” என்று சொல்லுங்கள். பைபிள் படிப்பது எந்தளவு முக்கியமானது என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியும், படிப்பின் மேல் பிடிப்பும் வளரும்.—நீதிமொழிகள் 2:10, 11.
“போர் அடிக்கும்னு நீங்க நினைச்சா போர் அடிக்கும்தான். அத ஜாலியா மாத்திக்கிறது உங்க கையிலதான் இருக்கு.”—வானஸா.
யோசிப்பதற்கு:
பைபிள் படிக்கும்போது போர் அடிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
தடைக்கல்: நேரமே இல்லை
“எனக்கு பைபிள் படிக்க ரொம்ப பிடிக்கும், ஆனா ரெக்கை கட்டி பறக்குற இந்த வாழ்க்கைல, உக்காந்து படிக்க நேரத்தை கண்டுபிடிக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு!”—மரியா.
தடைக்கல்லைத் தாண்ட... முக்கியமானவற்றிற்கு முதலிடம்
பெரியவர்களாக வளரும்போது “மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள” கற்றுக்கொள்வதும் அவசியம். —பிலிப்பியர் 1:10.
“நேரம் என்னைத் தேடி வராது, நான்தான் நேரத்தை தேடிப் போகணும்னு என் அம்மா எனக்கு புரிய வச்சாங்க. பைபிளை படிக்க ஆர்வத்தை வளர்த்துகிட்டேன், அப்புறம் நானாவே நேரத்தை ஒதுக்க ஆரம்பிச்சேன்.”—நத்தான்யா.
“நான் வளர வளர பைபிள் படிக்கிறதுக்காக அட்டவணை போட கத்துக்கிட்டேன், என்ன வேலை இருந்தாலும் சரி ஒழுங்கா படிச்சிடுவேன்.”—யாமினி.
“பொழுதுபோக்குக்கு முதலிடம் கொடுக்காம பைபிள் படிக்கிறதுக்கு முதலிடம் கொடுத்தா, கண்டிப்பா சந்தோஷமா படிக்கலாம். அதுக்கப்புறம் எந்த குற்ற உணர்வும் இல்லாம ஜாலியா பொழுத போக்கலாம்.”—டயானா.
மறந்துவிடாதீர்கள்: எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கவில்லை என்றால் மிக முக்கியமானதைச் செய்ய உங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடும். அப்படி நடக்கக்கூடாதென்றால், நீங்கள் முந்திக்கொள்ளுங்கள். படிப்பதற்கென்று முன்கூட்டியே நேரத்தை ஒதுக்குங்கள்.—எபேசியர் 5:15, 16.
“நான் ஹை ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கிறதுனால, படிக்க, எழுதனு தலைக்கு மேல வேலை இருக்கும்! ஆனாலும், என் அட்டவணையில பைபிள் படிப்புக்கு முதலிடம் கொடுக்குறேன்.”—ஜோயல்.
யோசிப்பதற்கு:
எப்படிப்பட்ட படிப்பு அட்டவணையை நீங்கள் போடலாம்?
[பக்கம் 13-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் நண்பர்கள் தரும் டிப்ஸ்
சகரியா—உங்க அப்பா அம்மா அல்லது மற்றவங்க எத படிக்கிறாங்களோ அதையே நீங்களும் படிக்காதீங்க. இது தனிப்பட்ட படிப்பு, உங்களுக்கு என்ன தேவையோ அததான் நீங்க படிக்கணும்.
கேரன்—கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிங்க. 5 நிமிஷம் படிச்சாலும் பரவாயில்லை, ஆனா தினமும் படிங்க. அப்புறம் மெது மெதுவா 10 நிமிஷம்... 15 நிமிஷம்னு கூட்டிட்டே போங்க. போகப்போக நீங்களே ரொம்ப ரசிச்சி படிக்க ஆரம்பிச்சிடுவீங்க.
டயானா—சின்ன சின்ன விஷயங்கள்கூட படிப்பை சுவாரஸ்யமா ஆக்கும். கலர் கலரா பேனா, அழகான நோட்புக் அல்லது கம்ப்யூட்டர்ல ‘தனிப்பட்ட படிப்பு’-ங்கற பெயர்ல ஒரு ஃபைல்... இதையெல்லாம் படிக்கும்போது வச்சிக்கோங்க.
ஜோயல்—எனக்கு பிடிச்ச விஷயத்த பத்தி படிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. என்ன சுத்தி ஒரே சத்தமா இருந்தா என்னால படிக்கவே முடியாது, அமைதியா இருக்கணும்.
[பக்கம் 12-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வெட்டுங்கள்
மடியுங்கள்