Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனப்பதற்ற நோயால் வாடுவோருக்கு உதவ...

மனப்பதற்ற நோயால் வாடுவோருக்கு உதவ...

மனப்பதற்ற நோயால் வாடுவோருக்கு உதவ...

“பயத்திலும் கவலையிலும் குழப்பத்திலும் என் மனசு படபடனு அடிக்கும், உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டி சில்லுனு ஆயிடும், மூச்சு வாங்கும்.”—இஸபெல்லா, மனப்பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர், 40 வயதைத் தாண்டியவர்.

மனப்பதற்றம் என்பது “ஒருவித பய உணர்வு.” உதாரணத்திற்கு, வெறிநாய் துரத்திக்கொண்டு வந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது? பயமும் நடுக்கமும் உங்களைக் கவ்வியிருக்கும். அந்த நாய் போன பிறகும் கொஞ்ச நேரத்திற்கு பயம் அப்படியே இருக்கும், இல்லையா? இதுதான் மனப்பதற்றம். ஆனால், மனப்பதற்ற நோய் என்பது என்ன?

கவலைப்படுவதற்கு அவசியம் இல்லாதபோதும் மனப்பதற்றம் நீடித்தால் அதுதான் மனப்பதற்ற நோய். “ஒரு வருடத்தில் . . . 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள சுமார் நான்கு கோடி அமெரிக்க மக்கள் மனப்பதற்ற நோயால் அவதிப்படுகிறார்கள்” என்று ஐ.மா. தேசிய மனநல நிறுவனம் (NIMH) சொல்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இஸபெல்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைப்போல் தீரா மனப்பதற்றத்தால் அவதிப்படுவோருக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தாரும் ரொம்பவே பாதிக்கப்படலாம். ஆனால், ஓர் ஆறுதலான செய்தி! “மனப்பதற்ற நோயைப் போக்க சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, இந்த நோயிலிருந்து குணமடைந்து சுகமாக, சந்தோஷமாக வாழ புதிய சிகிச்சை முறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்” என்று NIMH வெளியிடும் பிரசுரம் குறிப்பிடுகிறது.

மனப்பதற்ற நோயால் வாடுவோருக்கு குடும்பத்தாரும் நண்பர்களும்கூட உதவலாம். எப்படி?

கைகொடுக்கும் சில வழிகள்

ஆதரவாக இருங்கள்: மோனிக்கா என்பவர் ‘பொதுவான மனப்பதற்ற’ நோயாலும் ‘மன அதிர்ச்சி’ நோயாலும் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய கஷ்டத்தை அவர் சொல்கிறார்: “மனசுக்குள்ள நான் படும் அவஸ்தைய யாரும் புரிஞ்சிக்கிறதே இல்ல.”

இப்படி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற பயத்தில் நிறைய பேர் தங்களுடைய பிரச்சினையைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. இதனால் குற்றவுணர்வில் கூனிக்குறுகிப் போகிறார்கள். இது, மனப்பதற்றத்தை இன்னும் கூட்டிவிடும். எனவே, குடும்பத்தாரும் நண்பர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ரொம்பவே முக்கியம்.

நோயைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்: நெருக்கமாகப் பழகுபவர்கள் கண்டிப்பாக அந்த நோயைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அது குடும்பத்திலுள்ள ஒருவராக அல்லது உயிர் நண்பராக இருக்கலாம்.

எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்துங்கள்: முதல் நூற்றாண்டில் மிஷனரியாகச் சேவை செய்த பவுல், கிரேக்க நகரமான தெசலோனிக்கேயாவில் இருந்த நண்பர்களை இப்படி உற்சாகப்படுத்தினார்: “நீங்கள் . . . எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:11) இதை வார்த்தைகளிலும் பேசும் விதத்திலும் காட்டலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நண்பரை நெஞ்சார நேசிக்கிறோம் என்பதைச் செயலில் காட்ட வேண்டும், அவர்களிடம் ஜாடைமாடையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

யோபு என்பவருக்கு மூன்று போலி நண்பர்கள் இருந்தார்கள். இவருடைய பெயரில் ஒரு பைபிள் புத்தகம் உள்ளது. அதில் இந்த நண்பர்களைப் பற்றி வாசித்திருப்பீர்கள். தான் செய்த தவறுகளை யோபு மூடி மறைக்கப் பார்க்கிறார் என்றும் அவர் படுகிற கஷ்டங்களுக்கு அதுதான் காரணம் என்றும் அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.

அதனால்தான் அவர்களை “தொல்லைதரும் தேற்றரவாளர்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (யோபு 16:2NW) அவர்கள் உண்மையில் வெந்துபோயிருந்த யோபுவின் மனதில் வேல் பாய்ச்சினார்கள்! அவர்களைப் போல் இல்லாமல், பாதிக்கப்பட்டோரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேளுங்கள். உங்களுடைய மனதிற்கு தோன்றியபடியெல்லாம் பேசாமல், அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்த்து பேசுங்கள். அரைகுறையாக கேட்டுவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

ஆக, மனப்பதற்ற நோயால் அல்லல்படுவோர் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். அவர்கள் உணர்ச்சிகளைக் கொட்ட வழிவிடுங்கள். அப்போதுதான் அவர்கள் மனதுக்குள் எப்படியெல்லாம் புழுங்குகிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நம்பிக்கையோடு நலமாக வாழ உதவவும் முடியும்! (g12-E 03)

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

மனப்பதற்ற நோய்களின் வகைகள்

மனப்பதற்ற நோய்களைப் பற்றி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரும் நெருக்கமான நண்பர்களும் புரிந்துகொள்வது முக்கியம். மனப்பதற்ற நோயின் ஐந்து வகைகளைக் கவனியுங்கள்:

அச்ச நோய்—இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த இஸபெல்லாவின் நோய்க்கு மனதை உலுக்கிய விஷயங்கள் மட்டுமே காரணம் அல்ல. “திரும்பவும் இதே மாதிரி நடந்துடுமோனு நினைச்சு பயப்படுவேன்” என்று அவர் சொல்கிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் மனதில் பீதியை ஏற்படுத்திய இடங்களுக்குப் போகவே விரும்ப மாட்டார்கள். சிலர், பயந்துபோய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பார்கள், அல்லது தங்களுக்கு நம்பிக்கையானவருடன் மட்டுமே வெளியில் போவார்கள். இஸபெல்லா சொல்கிறார்: “நான் தனியா இருந்தாலே போதும் பயந்து செத்துடுவேன். அம்மா என்கூட இருந்தா பயப்பட மாட்டேன்; அவங்க மட்டும் பக்கத்துல இல்லன்னா அவ்வளவுதான்.”

கட்டுப்படுத்த முடியாத மனப்பிராந்தி—இந்தப் பிரச்சினையுள்ள ஒருவருக்கு, “என் கையெல்லாம் அழுக்கா இருக்கு” என்ற எண்ணம் வந்தாலே போதும் கைகளைத் திரும்பத் திரும்ப கழுவிக்கொண்டே இருக்க மனம் தூண்டும். ரேனன் சொல்கிறார்: “நான் முன்னாடி செய்த தவறுகளைப் பற்றி ஓயாம யோசிச்சுப் பார்ப்பேன், அத ஒவ்வொரு கோணத்துல ஆராய்ந்து பார்ப்பேன். அதனால மனசுக்குள்ள எப்பவும் போராட்டமா இருக்கும்.” முன்பு செய்த தவறுகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல அவர் மனம் துடிக்கும். ஆறுதலாக நாலு வார்த்தை யாராவது சொல்ல மாட்டார்களா என்று ரேனன் எப்போதும் நினைப்பார். மருத்துவரின் உதவியால் அதைக் கட்டுப்படுத்தினார். *

மன அதிர்ச்சி கோளாறு—கொடுமை அல்லது மிரட்டல் காரணமாக மனதளவில் ஏற்படும் பாதிப்புதான் மன அதிர்ச்சி கோளாறு. இந்த பாதிப்பு உள்ளவர்கள் எளிதில் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள், சிடுசிடுவென எரிந்துவிழுவார்கள், எதையும் யோசிக்க முடியாமல் குழம்பிப்போவார்கள், முன்பு ஆர்வமாகச் செய்த விஷயங்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள், மற்றவர்களிடம், முக்கியமாக அன்பாக பழகியவர்களிடம் பாசம்காட்ட மாட்டார்கள். சிலர் முரடர்களாகிவிடுவார்கள், தாக்கவும் ஆரம்பிப்பார்கள். மன அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவத்தை நினைவுபடுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள்.

சமூக பயம், அல்லது சமூக மனப்பதற்ற நோய்—இந்தப் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் எதிர்ப்படுகிற ஆட்களிடம் பழகுவதற்கே ரொம்பப் பயப்படுவார்கள். எல்லோரும் தன்னையே பார்ப்பதாக, தான் செய்வதையே உற்று கவனிப்பதாக, தன்னைத் தவறாக எடைபோடுவதாக நினைப்பார்கள். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருந்தால், பல நாட்களுக்கு முன்பே அல்லது பல வாரங்களுக்கு முன்பே கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்தக் கவலையால் வேலையில், பள்ளியில், சாதாரண விஷயங்களில்கூட அவர்களால் சரிவர கவனம் செலுத்த முடியாது. மற்றவர்களிடம் ஃபிரெண்ட்ஷிப் வைத்துக்கொள்ளவும் முடியாது.

பொதுவான மனப்பதற்ற நோய்—முன்பு நாம் பார்த்த மோனிக்காவுக்கு இந்தப் பிரச்சினைதான். கவலைப்படுவதற்கு காரணமே இல்லாவிட்டாலும் ஏதேதோ நடந்துவிட்டதுபோல் நினைத்து கவலைப்படுவார். இந்த நோய் உள்ளவர்கள் ஆரோக்கியம், பணம், குடும்பம், வேலை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை வரப்போவதாக நினைத்து அளவுக்குமீறி கவலைப்படுவார்கள். ஒரு நாளை எப்படி ஓட்டுவது என்ற எண்ணமே அவர்களை கவலையில் ஆழ்த்திவிடும். *

[அடிக்குறிப்புகள்]

^ விழித்தெழு! எந்தவொரு மருத்துவ சிகிச்சையையும் சிபாரிசு செய்வதில்லை.

^ இந்தக் குறிப்புகள் எல்லாம் ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தின் சுகாதார மற்றும் மனித சேவை இலாகா வெளியிட்ட பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

[பக்கம் 24-ன் படம்]

‘எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்துங்கள்’