Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அநியாயத்தின் ஆணிவேர்

அநியாயத்தின் ஆணிவேர்

அநியாயத்தின் ஆணிவேர்

இன்று மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் துல்லியமாக விவரித்திருக்கிறது. ‘கடைசி நாட்களில், சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, . . . நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக இருப்பார்கள்.’​—⁠2 தீமோத்தேயு 3:​1-4.

இதுபோன்ற குணங்கள் இன்று சர்வ சாதாரணமாகி வருகிறது என்பதை யாராவது மறுப்பார்களா? பேராசை, பாரபட்சம், சமுதாயத்தை சீரழிக்கும் குணங்கள், ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு என பல வடிவங்களில் இந்த குணங்கள் வெளிப்படுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

பேராசை. “பெருசா ஆசைப்படுங்க,” “ஆசைக்கு அணைபோடாதீங்க” என்று சொல்லி கேட்டிருப்போம். இது கேட்க நன்றாக இருந்தாலும், ஆபத்தானது! பேராசை பெருநஷ்டம்!! பொய்கணக்கு, திடீர் பணக்காரர் ஆகும் திட்டங்கள், கணக்குவழக்கில்லாமல் கடன் வாங்குவது-கொடுப்பது இதற்கெல்லாம் ஆணிவேரே பேராசைதான். இதன் விளைவாக ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியால் அநேகர் நொடிந்து, ஒடிந்து போயிருக்கிறார்கள். சிலர் இதில் சிக்கி பாதிக்கப்படுவதற்குக் காரணம் பேராசைதான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையும் வீட்டையும் ஏமாந்து பறிகொடுத்தவர்கள்.

பாரபட்சம். பாரபட்சம் பார்க்கும் மக்கள் மற்றவர்களைப் பற்றி தப்புக்கணக்கு போடுவார்கள். இனம், நிறம், அந்தஸ்து, மதம், ஆண்-பெண் பேதம் என்று காரணம் காட்டி அவர்களை ஓரங்கட்டுவார்கள். தென் அமெரிக்க நாடு ஒன்றில் நடந்த கொடுமையை ஐக்கிய நாட்டு சங்கத்தின் ஒரு குழு கண்டுபிடித்தது. இன வேறுபாட்டினாலும் ஏழை என்பதாலும் ஒரு சுகாதார மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபின் இறந்துவிட்டாள். சில இடங்களில், அநியாயம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. பாரபட்சத்தின் உச்சக்கட்டமாக ஒரு இனமே துரத்தப்பட்டிருக்கிறது, ஏன், இனப்படுகொலைகளும் நடந்திருக்கிறது.

சமுதாயத்தைச் சீரழிக்கும் குணங்கள். சமூக விரோத செயல்களைப் பற்றிய கையேடு என்ற ஆங்கில புத்தகத்தின் சுருக்க உரை சொல்கிறது: “சமுதாயத்தைச் சீரழிக்கும் குணங்களால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பறிபோகிறது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சீரழிக்கப்படுகின்றன. வன்முறையும் பகையும் இன்று அந்தளவு அதிகமாக இருப்பதால், எதிர்கால சரித்திராசிரியர்கள் 20-ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தை ‘விண்வெளி சகாப்தம்’ என்றோ ‘தகவல் யுகம்’ என்றோ சொல்ல மாட்டார்கள், ‘சமூக சீர்கேட்டு யுகம்’ என்றே சொல்வார்கள். ஆம், சமுதாயம் தனக்கு எதிராகவே போரிட்டுக்கொள்கிற காலம் இது.” இந்தப் புத்தகம் 1997-ல் அச்சடிக்கப்பட்டது, இன்றுவரை நிலைமை மாறவே இல்லை.

ஊழல். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஓர் அறிக்கையின்படி, சுமார் ஏழு வருட காலப்பகுதியில் மாநில சுகாதார நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட (அன்றைய மதிப்பின்படி) 4 பில்லியன் அமெரிக்க டாலரில் (சுமார் 22,340 கோடி ரூபாய்) 81 சதவீத பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. த பப்ளிக் மேனேஜர் பத்திரிகை சொல்கிறது: “மாநிலத்திலுள்ள மருத்துவமனை, க்ளினிக், சுகாதார மையம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய” தொகை செலவிடப்படாமல் இருந்தது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு. ”20 வருடங்களில் இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. . . . அடிமட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரின் வருமானத்தைவிட, உயர்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரின் வருமானம் 12 மடங்கு அதிகம்” என்று டைம்ஸ் ஆஃப் இன்டியா சொல்கிறது. பிபிஸி நியூஸ் இன்டியா இவ்வாறு சொல்கிறது: “உலகிலேயே இந்தியாவில்தான் அதிக ஏழைகள் இருக்கிறார்கள்.” உலக மக்கள்தொகையில் சுமார் 140 கோடி பேரின் ஒரு நாள் கூலி 1.25 அமெரிக்க டாலர் (சுமார் 70 ரூபாய்) அல்லது அதற்கும் குறைவு. அதோடு உலகம் முழுதும் 25,000 குழந்தைகள் தினமும் வறுமையால் சாகிறார்கள்.

அநியாயத்திற்கு தீர்வு உண்டா?

1990-க்குள் ஒரு குழந்தைகூட ஆஸ்திரேலியாவில் வறுமையில் வாடாது என்று அதன் பிரதம மந்திரி 1987-ல் வாக்குக் கொடுத்தார். ஆனால், அது நடக்கவே இல்லை. ஏன்தான் அப்படி சொன்னேனோ என்று அந்தப் பிரதம மந்திரி பிற்பாடு வருத்தப்பட்டார்.

ஒரு மனிதனுக்கு பணம், பலம், செல்வாக்கு என எது இருந்தாலும் சரி, அவனும் ஒரு சாதாரண மனிதன்தான். அவனால் அநியாயத்தை ஒழித்துக்கட்ட முடியாது. ஏன், அவனும் அநியாயத்தை எதிர்ப்படுவான், அவனுக்கும் வயதாகும், இறந்தும் போவான். இதைப் பார்க்கும்போது பைபிளிலுள்ள இரண்டு வசனங்கள் நம் ஞாபகத்திற்கு வருகிறது:

“தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே [மனுஷனாலே] ஆகிறதல்ல.”​—⁠எரேமியா 10:⁠23.

“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”​—⁠சங்கீதம் 146:⁠3.

இந்த வசனங்களில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டால், மனித முயற்சிகள் கைகூடாமல் போவதைப் பார்த்து வருத்தப்பட மாட்டோம். அப்படியானால், அநியாயத்தை ஒழித்துக்கட்டவே முடியாதா? கண்டிப்பாக முடியும்! இந்தத் தொடர் கட்டுரையின் கடைசி கட்டுரையில் பார்க்கப்போவது போல் நீதியான உலகம் வெகு விரைவில் உதயமாகப்போகிறது. ஆனால், அப்படியொரு உலகம் வரும்வரை நாம் என்ன செய்யலாம்? நம் சிந்தனையும் செயலும் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எல்லா விஷயங்களிலும் நான் மற்றவர்களிடம் நீதியாக நடந்துகொள்கிறேனா? எந்தெந்த விஷயத்தில் நான் மாற்றம் செய்ய வேண்டும்?’ அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். (g12-E 05)

[பக்கம் 10, 11-ன் படங்கள்]

1. சீனாவில் இனவெறி கலவரத்தில் ஈடுபட்டவனை போலீஸ் கைது செய்கிறது

2. இங்கிலாந்திலுள்ள லண்டன் நகரில் கடையை அடித்து நொறுக்கி திருடுகிறார்கள்

3. வறுமையின் கோர முகத்தில் சிக்கியவர்கள்​—⁠ருவாண்டா அகதிகள் முகாம்

[படங்களுக்கான நன்றி]

இடப்பக்கம் மேலே: © Adam Dean/Panos Pictures; மேலே நடுவில்: © Matthew Aslett/Demotix/CORBIS; வலப்பக்கம் மேலே: © David Turnley/CORBIS