Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு விரைவில்!

எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு விரைவில்!

எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு விரைவில்!

உண்ணும் உணவு உடலுக்கு உலை வைக்காமல் இருக்க நீங்கள் நடைமுறையான படிகளை எடுத்தாலும், எல்லாமே உங்கள் கையில் இல்லை. உதாரணமாக, எல்லா உணவுப்பொருள்களையும் வாங்குவதற்குமுன் அல்லது சமைப்பதற்குமுன் உங்களால் சோதித்துப் பார்க்க முடியாது. சில சமயம், வேறு நாடுகளிலிருந்து வரும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்க வேண்டியிருக்கலாம். நீங்கள் வாங்குகிற சில உணவு பொருள்களில் காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றில் உள்ள ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருக்கலாம்.

“உணவினால் பரவும் நோய் தடுப்பு: உலகளாவிய பிரச்சினை” என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் தந்த அறிக்கைபடி இந்தப் பிரச்சினையை “தேசிய அளவில் சரிசெய்ய முடியாது. சர்வதேச அளவில் எல்லாரும் ஒத்துழைத்தால்தான் சரிசெய்ய முடியும்.” ஆம், இது ஒரு உலகளாவிய பிரச்சினை!

இப்படியிருக்க, எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு விரைவில் கிடைக்குமென நாம் ஏன் ஆணித்தரமாகச் சொல்கிறோம் என அநேகர் நினைக்கலாம். ஏனென்றால், “சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய” யெகோவா மனிதர்களின் உணவு பிரச்சினையைச் சரிசெய்யப்போவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (யோசுவா 3:13) உணவினால் நோய்கள் பரவுவதைப் பார்க்கும் அநேகர் ‘கடவுளுக்கு நம்மேல் அக்கறையே இல்லை?’ என்று சொல்லலாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஹோட்டலில் நன்றாக சமைக்கப்பட்ட உணவு, பரிமாறுகிற வெயிட்டரின் கவனக்குறைவால் கெட்டுப்போய்விட்டால் அந்தப் பழியை சமைத்தவர்மேல் போடுவது நியாயமா? இல்லவே இல்லை.

பூமியில் ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் போவதற்குக் காரணம் கடவுள் அல்ல, மனிதர்கள்தான். ஆம், அவர்களுடைய நாச வேலைகள்தான். ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்கப் போவதாக’ கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார்.​—⁠வெளிப்படுத்துதல் 11:⁠18.

சொல்லப்போனால், நாம் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்றே கடவுள் ஆசைப்படுகிறார். அதனால்தான் பூமியை உருவாக்கியபோது, அதில் மரங்களை வளரச் செய்தார். அவை “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான” கனிகளைத் தருகின்றன. (ஆதியாகமம் 2:⁠9) மனிதருக்கு நோய்கள் தொற்ற ஆரம்பித்த பிறகும்கூட, உணவையும் உடலையும் பாதுகாப்பதற்கென்றே சில ஆலோசனைகளைக் கொடுத்தார்.​—⁠“ஆரோக்கியத்திற்கான சட்டங்கள்” என்ற பெட்டியைக் காண்க.

எப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிட வேண்டும் என கடவுள் விரும்புகிறார்? “கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றீர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:​14, 15, பொது மொழிபெயர்ப்பு) அதுமட்டுமா! “அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும்” என்றும் பைபிள் சொல்கிறது.​—⁠ஆதியாகமம் 9:​3, ஈஸி டு ரீட் வர்ஷன்.

எதிர்காலத்தில் கடவுள் என்ன செய்வார்? “நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.” (ஏசாயா 30:​23, பொ.மொ.) ஆம், இன்றைய கதிகலங்க வைக்கும் தலைப்புச் செய்திகளுக்குப் பதிலாக, “எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு!” என்ற செய்தியே அப்போது ஒலிக்கும். (g12-E 06)

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

படைப்பாளர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிற ஒளிமயமான எதிர்காலத்தில் ஆரோக்கியமான உணவு ஏராளமாய் கிடைக்கும்

[பக்கம் 8-ன் பெட்டி]

“ஆரோக்கியத்திற்கான சட்டங்கள்”

இஸ்ரவேல் மக்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சட்டத்தைப் பெற்றார்கள். உணவினால் பரவும் நிறைய வியாதிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அந்தச் சட்டம் அவர்களுக்கு உதவியது. அவற்றில் சில:

● பாத்திரங்களிலோ உணவுப் பதார்த்தங்களிலோ செத்த பிராணிகள் ஏதேனும் விழுந்தால் அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்: “அந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைத் தண்ணீருக்குள் போட்டுவைக்க வேண்டும்; மாலைவரை அது தீட்டாய் இருக்கும்; அதன்பின் சுத்தமாகும்.”​—⁠லேவியராகமம் 11:​31-34, NW.

● தானாய் செத்துப்போன மிருகத்தைச் சாப்பீடாதீர்கள்: “தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்.”​—⁠உபாகமம் 14:⁠21.

● மீதியான உணவை சில நாட்கள் வைத்திருந்து சாப்பிடாதீர்கள்: “மீதியானது மறு நாளிலும் புசிக்கப்படலாம். பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.”​—⁠லேவியராகமம் 7:​16-18.

சுற்றியிருந்த மற்ற தேசத்து மக்கள் பின்பற்றிய சட்டங்களோடு ஒப்பிட, இஸ்ரவேலர் பின்பற்றிய திருச்சட்டத்தில் “ஆரோக்கியமாக வாழ உதவுகிற ஞானமான நடைமுறையான சட்டங்கள் இருக்கின்றன” என ஆச்சரியம் பொங்கச் சொல்கிறார், டாக்டர் ஏ. ரென்டெல் ஷாட், எம்.டி.